கட்டுரைகள்
Published:Updated:

“அஜித்தானே உங்களுக்கு இஷ்டம்னு விஜய் கிண்டல் பண்ணுவார்!’’

மீனா
பிரீமியம் ஸ்டோரி
News
மீனா

பயோபிக் படங்களில் நடிப்பது மீனாவின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று. ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த பிறகு, அந்த ஆசை இன்னும் கூடியிருக்கிறது

திரைப்பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மீனா. குழந்தை நட்சத்திரமாக லைக்ஸ் அள்ளி, முன்னணி நடிகையாகக் கோலோச்சி, ரீ-என்ட்ரியிலும் கலக்கிக்கொண்டிருப்பவரிடம், ‘எப்படி இருக்கு இந்த சக்சஸ் டிராவல்..?’ என்றால், அழகுக் கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார்.

“சினிமாவுல இத்தனை வருஷம் இருப்பேன், இத்தனை படங்கள்ல நடிப்பேன்னு கனவுலயும் நினைச்சதில்ல. கல்யாணத்துக்கு அப்புறமும், எனக்குக் குழந்தை பிறந்த பிறகும், இனி பட வாய்ப்புகள் வராதுன்னுதான் நினைச்சேன். ஆனா, ‘த்ரிஷ்யம்’ மாதிரி நல்ல ஆஃபர்ஸ் வர்றது எனக்கே வியப்புதான். 40 வருஷ ஜர்னியைத் திரும்பிப் பார்க்கிறப்போ, ஆச்சர்யமும் பெருமையும் கலந்த சந்தோஷமா இருக்கு” என்றவர், தான் நடிக்க முடியாமல்போன சினிமா வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

“அஜித்தானே உங்களுக்கு இஷ்டம்னு விஜய் கிண்டல் பண்ணுவார்!’’

“அப்போதைய பரபரப்பான ஓட்டத்துல, கதை கேட்டுட்டு நான் நடிக்க முடியாமப்போன படங்கள் நிறைய. ‘தேவர் மகன்’ ஷூட்டிங்ல கலந்துகிட்டேன். ஆனா, கால்ஷீட் பிரச்னையால தொடக்கத்துலயே நான் விலகினதால, அந்த ‘பஞ்சவர்ணம்’ ரோல்ல ரேவதி மேம் நடிச்சாங்க. அதுக்காக அவங்களுக்கு தேசிய விருது கிடைச்சப்போ, அந்தப் படத்துல எப்படியாச்சும் நாம நடிச்சிருக்கணும்னு தோணுச்சு.

ஒரு ஆக்ஸிடென்ட்டுக்கு அப்புறமா அஜித் கம்பேக் கொடுத்த நேரம் அது. ‘வாலி’ படத்துல கமிட் ஆகிட்டு, என்னால நடிக்க முடியல. எனக்குப் பதிலா சிம்ரன் நடிச்சாங்க. இளைஞர்கள் மத்தியில சிம்ரனுக்கு அந்தப் படம் பெரிய வரவேற்பைக் கொடுத்துச்சு. அஜித்கூட பல படங்கள்ல ஜோடியா நடிச்சிருந்தாலும், ‘வாலி’ படம் எனக்குப் பெரிய மிஸ்ஸிங்தான். நெகட்டிவ் ரோல்ல நடிக்கணும்ங்கிறது எனக்கு ரொம்ப கால ஆசை. அதுக்கேத்தமாதிரி, ‘படையப்பா’ நீலாம்பரி ரோல்ல நடிக்கிற ஆஃபர் வந்தப்போ செம சர்ப்ரைஸா இருந்துச்சு. அந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிட்டேன்!

நான் ஹீரோயினா நடிச்ச பீரியட்ல விஜய், அரவிந்த்சுவாமிகூட மட்டும்தான் என்னால நடிக்க முடியல. நாலு படங்கள்ல பேச்சுவார்த்தையெல்லாம் முடிஞ்ச பிறகும் விஜய்கூட என்னால நடிக்க முடியாமப்போச்சு. ‘நான் அப்போ அப்கம்மிங் ஹீரோன்னுதானே என்கூட நீங்க நடிக்கல... அஜித்தானே உங்களுக்கு இஷ்டம்?’னு விஜய் என்னைக் கிண்டல் பண்ணுவார். சிரிச்சுக்கிட்டே அவரை காம்ப்ரமைஸ் பண்ணுவேன். சினிமாவுல எனக்கு நிறைவேறாத இந்த ஆசை, என் பொண்ணுக்குச் சுலபமா நிறைவேறிடுச்சு. நடிக்க வந்த புதுசுலயே விஜய், அரவிந்த்சுவாமி ரெண்டு பேர்கூடவும் நைனிகா நடிச்சுட்டா. இப்படி நான் தவறவிட்ட படங்கள் பத்தியும், அதோட பின்னணிக் கதைகளையும் சொன்னா, நேரம் போறதே தெரியாது... அத்தனை கதைகள் இருக்கு!” - கொஞ்சம் ஆதங்கம் எட்டிப்பார்க்கிறது.

பயோபிக் படங்களில் நடிப்பது மீனாவின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று. ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த பிறகு, அந்த ஆசை இன்னும் கூடியிருக்கிறது. “இதுவரைக்கும் நான் எங்கயுமே சொல்லாத இந்த விஷயத்தைப் பத்திப் பேச இப்பதான் சரியான வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சிரிப்புடன் தொடந்தார்.

“அஜித்தானே உங்களுக்கு இஷ்டம்னு விஜய் கிண்டல் பண்ணுவார்!’’

“ஏதாச்சும் ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னு ரொம்ப காலமா ஆசை. ஜெயலலிதா மேம் கதையில நடிக்கிற வாய்ப்பு வந்தா, டபுள் ஓகே சொல்லிடலாம்னு நினைச்சேன். அது நடக்கல! இந்திரா காந்தி மேம் ரோல்ல நடிக்க ஆசைப்பட்டு, அதுவும் நடக்காம போச்சு. நான் நடிக்க ஆசைப்படுற பயோபிக் ரோல்ல இன்னொருத்தர் நடிச்சுடுறாங்க.

நான் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சப்பவே ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படிச்சு வியந்தேன். அந்த நாவலை படமாவோ, சீரியலாவோ எடுத்தா, ‘நந்தினி’ ரோல்ல நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதனால, ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுக்கப்படுற தகவல் வந்ததிலேருந்து அந்தப் படத்தைப் பத்தின அப்டேட்ஸ் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் காட்டினேன். அழகு, நடிப்புன்னு மொத்தக் கதையிலயும் ‘நந்தினி’ கேரக்டர் பெரிய பில்லரா இருந்துச்சு. இத்தனை வருஷத்துல எத்தனையோ படங்களை மிஸ் பண்ணியிருந்தாலும், ‘இந்த கேரக்டர் நாம பண்ணியிருந்திருக்கலாமே’ன்னு என்னைப் பொறாமைப்பட வெச்சது ஐஸ்வர்யா ராய் நடிச்ச ‘நந்தினி’ ரோல் மட்டும்தான்” - கண்கள் விரிய சொல்கிற மீனா, ‘த்ரிஷ்யம் 3’ படத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறார்.