சினிமா
தொடர்கள்
Published:Updated:

“துயரத்திலிருந்து மீளவே மேக்னா நடிக்கிறாள்!”

மேக்னா ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மேக்னா ராஜ்

நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தற்போதுதான் அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறாள் மேக்னா.

``மேக்னா எங்களுக்கு ஒரே செல்லப் பொண்ணு. அவ பிறந்த பிறகுதான், கஷ்டங்கள் எல்லாம் போனது. சொந்த வீடும் வாங்கினோம். எங்களுடைய அதிர்ஷ்டமே அவதான். எங்க மாப்பிள்ளையான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சின்ன வயசுலயே இறந்த வேதனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு, திரும்ப நடிக்க வந்திருக்கா. அதற்கு, எல்லோரும் கொடுத்த சப்போர்ட்தான் காரணம். அவளைப் பழையபடி பார்க்கிறது சந்தோஷமா இருக்கு” என்று நடிகை மேக்னா ராஜ் குறித்து கண்கலங்கி, நெகிழ்ச்சியோடு பேசுகிறார் அவரின் அப்பா, நடிகர் சுந்தர் ராஜ்.

கே.பாலசந்தரின் ‘தப்புத் தாளங்கள்’ படத்தில் அறிமுகமாகி ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுக்கள்’ படங்கள் மூலம் 70 டு 80களில் பரிச்சயமானவர் சுந்தர் ராஜ். கன்னடத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர். இவர் மனைவி பிரமிளா ஜோஷி, விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் நாயகி. கன்னடத்திலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்த நட்சத்திர தம்பதியரின் சினிமாப் பயணம், மகள் மேக்னா ராஜின் வாழ்க்கை, ரீ-என்ட்ரி குறித்துப் பேசுகிறார் சுந்தர் ராஜ்.

சுந்தர் ராஜ்
சுந்தர் ராஜ்

‘‘மேக்னா ராஜும் பேரனும் எப்படி இருக்கிறார்கள்?’’

‘‘நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தற்போதுதான் அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறாள் மேக்னா. பாதிப்பு அவளுக்குத்தானே? அந்த வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்கிறது. மகனுக்காக வாழ நினைக்கிறாள். மீளாத் துயரத்திலிருந்து மீளவே மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாள். ஒரு படத்தில் டபுள் ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறாள். பேரன் ராயன்தான் எங்களோட உயிர். எங்க மாப்பிள்ளையை இழந்த துக்கம், எப்போதுமே எங்களை விட்டுப் போகாது. அதையும் தாண்டி, மாப்பிள்ளை இல்லாத பிரிவின் வலியை பேரன் ராயன்தான் போக்குறான். ‘தாத்தா... தாத்தா'ன்னு ஒட்டிக்கிறான். மாப்பிள்ளைக்கு தற்போது பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. அவர் எல்லோரையும் சமமா நடத்துவார். பேரனையும் அப்படித்தான் வளர்ப்போம்.’’

‘‘நீங்கள், மனைவி, மகள் எனக் குடும்பமே கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். அந்த நினைவுகள் குறித்து?’’

‘‘என் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தவர். சிறு வயதிலேயே பெங்களூர் போயிட்டோம். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால பி.வி.காரந்த் நாடகக்குழுவில் இணைந்து நடித்து வந்தேன். அந்த நாடகக்குழு, இந்தியா முழுக்க பிரபலமானது. ஒருமுறை சென்னையில் நாடகம் நடத்தியபோது, பாலசந்தர் சார், கமல்ஹாசன், அனந்து பார்த்துள்ளனர். என்னை நடிக்க வைக்கணும்னு பாலசந்தர் சாருக்கு அப்பவே தோணியிருக்கு. ‘தப்புத் தாளங்கள்' படம் எடுக்க ஆரம்பிச்சதும் என்னைத் தேடி பெங்களூர் வந்துட்டார். மூணு நாள்கள் எனக்காக உட்லண்ட்ஸ் ஹோட்டலில் காத்திருந்தார். அப்போதெல்லாம் போன் கிடையாது. ஒரு வழியாக தகவல் கிடைத்து அவரைப் போய்ப் பார்த்தேன். எனக்கு அப்படியே புல்லரிச்சுப் போச்சு. என்கிட்ட நல்ல பேன்ட், சட்டை கூட கிடையாது. ஒழுங்காத் தலைகூட வாரல. ஒரு சி.ஐ.டி ஏஜென்ட் பார்ப்பதுபோல பார்த்துவிட்டு, ‘நாடகத்துல ரொம்ப நல்லா பண்ணுனீங்க. ‘தப்புத் தாளங்கள்'னு ஒரு படம் எடுக்கப்போறேன். ரஜினி - சரிதா நடிக்கிறாங்க. நீங்க வில்லனா நடிக்கணும்’ என்றவரிடம் நான் தமிழில் பேசினேன். அதைப் பார்த்து ஷாக் ஆகி, ‘உனக்கு தமிழ் வருமாய்யா’ என்று கேட்டார். ‘நான் திருச்சிக்காரன்’ என்றேன். மீண்டும் ஆச்சர்யப்பட்டு, ஒரு பெரிய தொகையை செக்காகக் கொடுத்தார். என் வாழ்க்கையில அதிகமாப் பார்த்த பணம் அதுதான்.

‘தப்புத் தாளங்கள்' படத்தைப் பார்த்துவிட்டு மகேந்திரன் சார், ‘உதிரிப்பூக்கள்' படத்தில் வாத்தியார் ரோல் கொடுத்திருந்தார். அவரது ‘பூட்டாத பூட்டுக்கள்' படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ருத்ரய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு ‘கரையெல்லாம் செண்பகப்பூ' எனத் தமிழில் 15 படங்கள் வரை நடிச்சிருக்கேன். கன்னடத்தில் 200 படங்களுக்குமேல் நடித்துவிட்டேன்.

பாலசந்தர் சார் மாதிரி ஒரு இயக்குநர் அறிமுகப்படுத்தவேதான், இன்று நான் ஒரு நடிகனாகவே உள்ளேன். அவருடைய கடைசிக் காலங்கள்வரை இருவரும் நல்ல தொடர்பில் இருந்தோம். எப்போது பெங்களூர் வந்தாலும் என் வீட்டுக்கு வராமல் போனதில்லை. 2008-ல் நானும் மகள் மேக்னாவும் சென்னை வந்தப்போ சாரைப் பார்த்தோம். அப்போது, ‘கிருஷ்ணலீலை படத்துல நடிக்கிறியா’ன்னு கேட்டபோது, மகள் ஓகே சொல்லிட்டா. என்னை மட்டுமல்ல, என் மகளையும் அவர்தான் அறிமுகப்படுத்தினார். மனைவி பிரமிளாவையும் ‘தப்புத் தாளங்கள்' படத்தில், அவர்தான் அறிமுகப்படுத்தினார். எங்க குடும்பத்தோட முதல் மரியாதை எப்போதுமே அவருக்குத்தான்.’’

மேக்னா ராஜ்
மேக்னா ராஜ்

‘‘தப்புத் தாளங்கள் படத்தில் ரஜினி, கமல்ஹாசனுடன் நடித்தீர்களே... தொடர்பில் இருக்கிறீர்களா?’’

‘‘இப்போதும் நல்ல நட்பில்தான் இருக்கிறேன். ரஜினி எங்கு பார்த்தாலும், ‘ஏன்யா இப்படி பெருத்துட்டீங்க. உடம்பைப் பார்த்துக்குங்க. நல்லா உடற்பயிற்சி செய்ங்க’ன்னு சொல்லி அக்கறையுடன் நலம் விசாரிப்பார். கமல், சாருஹாசன், சுஹாசினி என அனைவருடனும் நல்ல நட்பு உள்ளது. இப்போதும் சரிதா பெங்களூர் வந்தால், எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுதான் செல்வார்.’’

‘‘எந்தப் பெற்றோரும் தங்கள் மகள் வாழ்க்கைத் துணையை இழந்து நிற்பதை விரும்ப மாட்டார்கள். மேக்னாவின் மறுமணம் குறித்து நினைத்ததுண்டா?’’

‘‘மேக்னா இப்போது மறுமணம் குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. மேக்னா எந்த முடிவு என்றாலும் யோசித்துதான் எடுப்பாள், அவசரப்படமாட்டாள். மகள் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். பேரனுடன் தனியாக இருந்தாலும் சரி, மறுமணம் செய்துகொள்கிறேன் என்றாலும் சரி, மகளின் முடிவுக்கு ஆதரவாக இருப்போம். மருமகன் சிரஞ்சீவி குடும்பத்தினரும் மேக்னாவின் எதிர்காலத்தின் மீது அக்கறை வைத்திருக்கிறார்கள். ‘இப்படியே இருக்காதம்மா, லைஃப்ல செட்டில் ஆகணும்' என்று சொல்கிறார்கள். சிரஞ்சீவியின் பாட்டிதான் மேக்னாவுக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க. சமீபத்தில் அவங்க இறந்துட்டாங்க. குறிப்பா சிரஞ்சீவியின் மாமா நடிகர் அர்ஜுன் எந்தக் கஷ்டம் வந்தாலும் உடனுக்குடன் பேசுவார். உண்மையிலேயே ஜென்டில்மேன் அவர்.’’