கட்டுரைகள்
Published:Updated:

``போன் ஆப் மூலமாவே தமிழ் கத்துக்கிட்டேன்'' - `அயோத்தி' ப்ரீத்தி

அஞ்சு அஸ்ரானி, ப்ரீத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சு அஸ்ரானி, ப்ரீத்தி

என் அப்பாவும் அண்ணனும் பிசினஸ்மென். `அயோத்தி'ல வரும் என் அம்மா கேரக்டரோட பிரதிபலிப்புதான் என் நிஜ அம்மா. அன்பான குடும்பம்

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான `அயோத்தி' திரைப்படம், விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கோலிவுட்டுக்குப் புதுவரவு. இளமைத் துடிப்பையும், முதிர்ச்சியான நடிப்பையும் தன் முதல் தமிழ்ப் படத்திலேயே சிறப்பாக வெளிப்படுத்தியவரிடம் பேசினோம்.

குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், வசிப்பது ஹைதராபாத்தில். ஆனால், தமிழிலும் சரளமாகப் பேசுபவர், ``வணக்கம். எப்படி இருக்கீங்க?'' என்று அழகுத் தமிழில் அறிமுகத்திலேயே ஆச்சர்யப்படுத்தினார்.

``நான் ஸ்கூல் படிக்கிறப்பவே ஹைதராபாத்ல குடியேறிட்டோம். `அயோத்தி' படத்துல எனக்கு அம்மாவா நடிச்ச அஞ்சு அஸ்ரானி, என் நெருங்கின சொந்தம். அவங்க தெலுங்குல பல படங்கள்ல நடிச்சிருக்காங்க. என் சின்ன வயசுல அஞ்சு அக்காவும் நானும் ஒண்ணாவே சுத்துவோம். அவங்க மூலமாதான் சினிமா உலகம் பத்தி ஓரளவுக்குத் தெரிஞ்சுகிட்டேன். டென்த் முடிச்சதுமே தெலுங்கு சினிமால நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஸ்கூல், காலேஜ் படிச்சுகிட்டே, நடிக்கவும் செஞ்சேன். இதுவரைக்கும் பத்து படங்கள்ல நடிச்சிருக்கேன்.

ப்ரீத்தி
ப்ரீத்தி

எனக்குப் பலதரப்பட்ட மொழிகள்ல நடிக்கணும்னு ஆசை. அதனால, கூடுமானவரைக்கும் புதுப்புது மொழிகள் கத்துக்க ஆர்வம் காட்டுவேன். நடிப்புதான் கரியர்னு முடிவெடுத்த பிறகு, தமிழ் சினிமால முகம் காட்டாம இருந்தா நல்லாருக்குமா? போன் ஆப் மூலமாவே தமிழ் கத்துக்கிட்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி உட்பட எட்டு மொழிகள் எனக்குத் தெரியும். வருஷா வருஷம் ஒரு புது லாங்குவேஜ் கத்துக்கணும்ங்கிற கொள்கையை உறுதியோடு கடைப்பிடிக்கிறேன்''

- க்யூட்டாகச் சொல்கிறார் ப்ரீத்தி.

தமிழ் சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?

`` `அயோத்தி' படத்துல நான் நடிச்ச கேரக்டருக்கு கிட்டத்தட்ட 40 பேரை ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணியிருக்காங்க. ஆனா, யாருமே செலக்ட் ஆகலை. டைரக்டர் மந்திரமூர்த்தி சார்கிட்டேருந்து எனக்கு அழைப்பு வந்துச்சு. ஸ்கிரீன் டெஸ்ட் முடிஞ்சதும், அடுத்த வாரமே ஷூட்டிங் போலாம்னு சொன்னாங்க. அந்தப் படத்துல நான் வட இந்தியப் பெண்ணா நடிச்சிருப்பேன். அதுக்கேத்த மாதிரி என் முக சாயலும் இருந்தது எனக்கு ப்ளஸ்ஸா அமைஞ்சது. நான் நடிச்ச படங்களை தியேட்டர்ல பார்க்கிறதோடு, ரசிகர்கள்கிட்ட ஃபீட்பேக் கேட்கிறதை வழக்கமா செய்வேன். `அயோத்தி' படத்தைச் சென்னையில் பார்த்தேன். படம் முடிஞ்சதும் ரசிகர்கள்கிட்ட பேசினேன். ஒவ்வொருத்தரோட பாராட்டுகளும் என்னைத் திக்குமுக்காட வெச்சது.''

உங்க அக்கா அஞ்சு அஸ்ரானியோடு சேர்ந்து நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?

``நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். அவங்க எனக்கு நிஜத்துலயும் அம்மா மாதிரிதான். அதே பாண்டிங்ல அம்மா - மகளா சினிமால நடிச்சப்போ, உணர்வுகளைச் சுலபமா கனெக்ட் பண்ண முடிஞ்சது. தமிழ்ல எனக்கு இது முதல் படம்ங்கிறதால, `அயோத்தி' டீம்ல பெரிசா பழக்கமில்லாதவங்கதான் அதிகமா இருந்தாங்க. அதனால, பேச்சுத்துணையாவும், நிறைய விஷயங்கள்ல எனக்கு சப்போர்ட்டிவ்வாவும் அக்கா உதவினாங்க.''

அஞ்சு அஸ்ரானி, ப்ரீத்தி
அஞ்சு அஸ்ரானி, ப்ரீத்தி

உங்க பர்சனல் உலகம் எப்படியானது?

``என் அப்பாவும் அண்ணனும் பிசினஸ்மென். `அயோத்தி'ல வரும் என் அம்மா கேரக்டரோட பிரதிபலிப்புதான் என் நிஜ அம்மா. அன்பான குடும்பம். பேட்மின்ட்டன், கிடார், சிங்கிங், டான்ஸ்னு பல துறைகளில் எனக்கு ஆர்வம் உண்டு. டிராவல் பண்ணப் பிடிக்கும். புதுப்புது இடங்களை நேர்ல பார்த்து ரசிக்க ஆசைப்படுவேன். நடிப்புத் திறமையை முழுமையா வெளிப்படுத்துற மாதிரி வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும். ரசிகர்களுக்குப் பிடிச்ச ஆர்ட்டிஸ்ட்டா பேர் வாங்கணும். இப்போதைக்கு என் உலகம், ஆசை எல்லாமே இதுதான்!''