கட்டுரைகள்
Published:Updated:

டைரக்டர் பிரியாமணி

பிரியாமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியாமணி

எங்க அம்மா லதா கைலாஷை எல்லாருக்குமே நேஷனல் லெவல் பேட்மின்டன் பிளேயர்னுதான் தெரியும். ஆனா, தெரியாத ஒரு விஷயம், எங்க அப்பா வாசுதேவ் மணியும் ஸ்போர்ட்ஸ் மேன்தான்

“நான் சினிமாவுக்கு வந்து இருபது வருஷம் ஆகப்போகுது. தமிழ்ல பாரதிராஜா சாரோட ‘கண்களால் கைது செய்’ல தான் அறிமுகமானேன். அப்ப சினிமாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுப்பார். அப்படியே பண்ணிடுவேன். நடிக்க வர்றதுக்கு முன்னாடி என் பெயர் பிரியா மட்டும்தான். நான் பிரியாமணி ஆனது தனிக்கதை. அப்ப பாரதிராஜா சார் ஹீரோயின்கள்னாலே ‘ஆர்’ வரிசையில் பெயர்கள் ராசியா இருந்துச்சு. ராதிகா, ராதா, ரதின்னு எல்லாருமே சக்சஸ் ஹீரோயின்ஸா பெயரெடுத்தாங்க. அதனால பாரதிராஜா சார்கிட்ட என் பெயரையும் ‘ஆர்’ வரிசையில் வைக்கச் சொல்லிக் கேட்டேன்.

என் அப்பா பெயரையும் சேர்த்து நானே ரித்திகா மணின்னு ஒரு பெயரையும் செலக்ட் பண்ணி வச்சிருந்தேன். ஜோசியர்கிட்டேயும் அந்தப் பெயர் ஒர்க் அவுட் ஆகுமான்னு கேட்டு வச்சிருந்தேன். இதைப் பத்தி அப்ப பாரதிராஜா சார்கிட்ட சொன்னதும், ‘உன்னோட பெயரே நல்லாத்தானே இருக்கு, பிரியாமணின்னு வச்சுக்கலாமே’ன்னு சொன்னார். எனக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இப்படித்தான் நான் பிரியாமணி ஆனேன்’’ - கலகலக்கிறார் பிரியாமணி. இப்போது அவர் கன்னடத்தில் நடித்திருக்கும் ‘DR.56’ தமிழில் வருகிறது. அதன் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசினேன்.

டைரக்டர் பிரியாமணி

‘DR.56’ல உங்க கெட்டப் கம்பீரமா இருக்கே..?

‘‘சி.பி.ஐ ஆபீஸராச்சே! தானாகவே ஒரு கம்பீரம் வந்திடும். ‘DR.56’ மெடிக்கல் மாஃபியாவைப் பேசும் க்ரைம் த்ரில்லர். படத்தின் இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா கதை சொல்லும் போதே ரொம்ப பிரமிச்சேன். கன்னடம், தமிழ்னு ரெண்டு மொழிகளிலும் படமாக்கினாங்க. என் கல்யாணத்துக்குப் பிறகு நான் ஒப்புக்கொண்ட படம் இது. ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ படங்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அமைத்த விக்ரம் மோர் ஸ்டன்ட்ஸ் இதிலும் பேசப்படும்.’’

உங்களோட அம்மா நேஷனல் லெவல் பேட்மின்டன் பிளேயர்.. நீங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி உங்களுக்கும் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருந்ததா?

‘‘எங்க அம்மா லதா கைலாஷை எல்லாருக்குமே நேஷனல் லெவல் பேட்மின்டன் பிளேயர்னுதான் தெரியும். ஆனா, தெரியாத ஒரு விஷயம், எங்க அப்பா வாசுதேவ் மணியும் ஸ்போர்ட்ஸ் மேன்தான். அவர் கிரிக்கெட் வீரர். ரஞ்சி டிராபி போட்டிகள்ல ஆடியிருக்கார். அப்ப கேரளா கிரிக்கெட் அணியில் இருந்திருக்கார். நானும் மாவட்ட அளவில் பேட்மின்டன் போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன். அப்புறம், எனக்கு சினிமா ஆசை வந்ததால விளையாட்டை விட்டாச்சு. அம்மா, அப்பா திருவனந்தபுரத்தில் இருந்தாலும் சென்னையிலும் உறவுக்காரங்க இருந்தாங்க. எங்க அத்தை மால்குடி சுபா பிரபல பாடகியாக இருந்ததால, அவங்க வழியா எல்லாருக்கும் என்னையும் எளிதா தெரிய ஆரம்பிச்சிடுச்சு.’’

டைரக்டர் பிரியாமணி

எப்படிப் போகுது திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை?

‘‘சுவாரசியமா இருக்கு வாழ்க்கை. என் கணவரும் சரி, அவங்க குடும்பமும் சரி, எனக்கு ரொம்ப உறுதுணையா இருக்காங்க. வீட்டுல இருந்தால் மேக்கப் பக்கம் போகமாட்டேன். வீட்டைத் துடைச்சு, எல்லாத்தையும் நேர்த்தியா அடுக்கி வீட்டை ரொம்ப சுத்தமா வச்சிக்குவேன். ஆனா, சமைக்க மாட்டேன்...”

உங்க 20 வருஷ சினிமாப் பயணத்தில் இன்னமும் கத்துக்காமல் இருக்கிறது என்ன?

‘‘டெக்னாலஜிதான். இப்பக்கூட எந்த லென்ஸ் இருந்தால், என்ன ஆங்கிள்ல ரிசல்ட் வரும்னு தெரியாது. தொழில்நுட்பங்கள் கத்துக்கணும். ஆனாலும் எனக்கு டைரக்‌ஷன்ல ஆர்வம் இருக்கு. கேமராவிற்குப் பின்னாடியும் ஒர்க் பண்ண ரெடியா இருக்கேன். நீங்க உடனே டைரக்டர் ஆகிறார் பிரியாமணின்னு தலைப்பு வச்சிடாதீங்க. (வச்சாச்சே!) எதிர்காலத்துல எனக்கு டைரக்‌ஷன் சான்ஸ் கிடைச்சா, கண்டிப்பா யோசிப்பேன்!’’