
- ரம்யா பாண்டியன் பரவசம்
‘ஜோக்கர்', ‘ஆண் தேவதை', ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' எனப் பல தமிழ்ப் படங்களில் ரம்யா பாண்டியனைப் பார்த்திருந்தாலும், ‘பிக்பாஸ்’, ‘குக்கு வித் கோமாளி’ எனச் சின்னத்திரையிலும் அனைவருக்கும் பரிச்சயமானவர். ரம்யா பாண்டியனின் புது போட்டோஷூட் என்றால் அதுதான் இணையத்தில் அன்றைய ஹாட்டாபிக். அந்த அளவுக்கு போட்டோஷூட்களை பிரபலமாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இப்போது மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லி செரியின் இயக்கத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் நடித்து மலையாளத் திரையுலகில் தடம் பதித்திருக்கிறார். அதற்கான புரொமோஷனுக்கு வந்தவரிடம் ஒரு ஜாலி சாட்...

நீங்க ஆரம்பத்துல நிறைய விழாக்களைத் தொகுத்து வழங்கியிருக்கீங்க. அதுதான் சினிமாவுக்கு வர காரணமா இருந்ததா?
‘‘நான் ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது சந்தானம் சார் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல சொல்ற மாதிரி, நிறைய எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்தான் பண்ணிட்டு இருப்பேன். பாடுறது, ஆடுறது, ஆங்கரிங் பண்ணுறதுன்னு நிறைய சம்பவங்கள் பண்ணியிருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டியில டிகிரி படிக்கும்போது, கலை நிகழ்ச்சிகள்ல பர்ஃபாமென்ஸும் பண்ணுவோம். நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு நடத்தவும் செய்வோம். அப்போ சினிமா பிரபலங்களை காலேஜுக்குக் கூட்டிட்டு வர்றது செம கெத்தான விஷயமா இருக்கும். அப்போ ‘வில்லு' படம் வந்த சமயம். விஜய் சாரையும் எங்க சித்தப்பா அருண் பாண்டியன் அவர்களையும் கூட்டிட்டு வந்தோம். அந்த மாதிரி ஸ்டேஜ்ல ஆங்கரிங் பண்ணியிருக்கேன். ஆனா, இதுதான் சினிமாவுக்கு வர காரணம்னு சொல்லமுடியாது. நான் காலேஜ் படிக்கும்போதெல்லாம் சினிமாவுக்கு வரணும்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. அதுதான் உண்மை.
நான் நடிக்கணும்னு ஆசைப்பட்டு பண்ணலை. நண்பர்கள் வட்டத்துல இருந்து இந்த வாய்ப்பு வந்தது. ‘உங்களுக்கு போட்டோஜெனிக் முகமா இருக்கு. இந்த ஷார்ட் பிலிம்ல நடிக்கிறீங்களா?'ன்னு கேட்டாங்க. நானும் அந்த நட்புக்காக ஓகே சொன்னேன். அப்போ நான் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். அதுல நான் அழற சீன் இருந்தது. அப்போ இந்த க்ளிசரின் பத்தியெல்லாம் தெரியாமல் நானே எதையோ நினைச்சு நினைச்சு அழுதேன். அதை என் நண்பர் ஷெல்லிதான் எடுத்தார். அந்த ஷார்ட் பிலிமை நான் பார்க்கும்போதுதான், எனக்குள்ள ஆசை வந்தது. அது அப்படியே பேஷனா மாறிடுச்சு.’’

பயங்கர கிளாமரா போட்டோஷூட் பண்ணி இன்ஸ்டாவுல பதிவிடுறீங்க. ஆனா, ரொம்ப யதார்த்தமான கிராமத்துப் பெண் கதாபாத்திரங்கள்ல நடிக்கிறீங்க. இந்த மாற்றம் எப்படி?
‘‘இதுவரைக்கும் ரொம்ப மாடர்னா கொஞ்சம் கிளாமரஸான கேரக்டர்கள் அமையலை. இனிமே, அது நடக்கும்னு நினைக்கிறேன். எனக்கும் நிறைய லுக்ல படங்கள் பண்ணணும்னு ஆசை. ஒரே மாதிரி லுக்ல படங்கள் பண்ணினா, எனக்கும் போரடிக்கும். பார்க்கிறவங்களுக்கும் போரடிக்கும். ஆனா, ‘நண்பகல் நேரத்து மயக்கம்' மாதிரி ஒரு டீம்ல இருக்கிறதையே நான் பெருமையா நினைக்கிறேன். அதனால, எந்த கேரக்டர்னாலும் நடிக்க ரெடி!’’
‘நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திற்கான வாய்ப்பு ‘ஜோக்கர்' பார்த்துட்டுதான் கமிட் பண்ணினாங்களா?
‘‘மம்மூட்டி சார் என்னை ‘ஜோக்கர்' படத்துல பார்த்துட்டு உடனே வேறொரு படத்துல நடிக்க வைக்கணும்னு நினைச்சிருக்கார். அப்போ ‘ஜோக்கர்'ல இன்னொரு ஹீரோயினா நடிச்ச காயத்ரியைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அதை மம்மூட்டி சார் இப்போ என்கிட்ட ‘You missed that opportunity'ன்னு சொன்னார். சரி அப்போ மிஸ் பண்ணினதை இப்போ பிடிச்சிட்டோம்னு தோணுச்சு. இந்தப் படம் எனக்கு அமைய ‘ஜோக்கர்' படம் ஒரு காரணமா இருந்திருக்கலாம். நான் இயக்குநர் லிஜோ ஜோஸ் சார்கிட்ட, ‘நீங்க பெரிய இயக்குநர். மம்மூட்டி சார் நடிக்கிறார். உங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருந்திருக்குமே. என்னை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?'ன்னு கேட்டேன். ‘நீங்கதான் இந்த கேரக்டருக்கு ரொம்ப சரியா பொருந்தியிருந்தீங்க'ன்னு சொன்னார். இதுல என் கேரக்டர் பெயர் பூங்குழலி. மம்மூட்டி சாருடைய மனைவி. நிறைய வசனங்கள் இல்லாமல் எமோஷன்ல பர்ஃபாம் பண்ணக்கூடிய கேரக்டர். மம்மூட்டி சார்கூட நடிச்சது ரொம்ப சந்தோஷம். செம ஹியூமர் சென்ஸ் இருக்கிற நபர். நானே நிறைய மொக்கை ஜோக் சொல்லுவேன். ஆனா, மம்மூட்டி சார் என்னைவிட அதிகமா சொல்வார். ஒரு படத்துடைய ஷூட்டிங் முடியுதுனா, மம்மூட்டி சார் எல்லாருக்கும் மலபார் பிரியாணி செஞ்சு தருவாராம். அந்த மாதிரி இந்தப் படம் முடியும்போது, மம்மூட்டி சார் பிரியாணி செஞ்சு பரிமாறினார். அதெல்லாம் மறக்க முடியாத மொமன்ட்..!’’

மலையாளத்துல பெரிய ஹீரோவோட நடிச்சுட்டீங்க. தமிழ்ல எப்போ எதிர்பார்க்கலாம்?
‘‘தமிழ்ல பெரிய ஹீரோ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. அது லீடு ரோல் இல்லை. நல்ல முக்கியத்துவம் இருந்திருந்தால் லீடு ரோல் இல்லைனாலும் நிச்சயம் பண்ணியிருப்பேன். நான் வாய்ப்பு வந்தா நடிக்கிற பொண்ணு. அதனால, நீங்க வாய்ப்பு கொடுக்கிறவங்ககிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டாதான் சரியா இருக்கும்.’’
நீங்க ரைபிள் ஷூட்டிங் பண்ணுற போட்டோக்களை பதிவிட்டிருந்தீங்க. அதுல எப்படி ஆர்வம்?
‘‘2டி ராஜசேகர் சார் மூலமா ரைபிள் ஷூட்டிங் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்த முறை ரேஞ்சுக்குப் போகும்போது சொல்லுங்கன்னு சொல்லிருந்தேன். அவர் கூப்பிடும்போது என்னால சென்னையில போகமுடியலை. திருச்சிக்கு ஒரு ஈவென்டிற்காகப் போயிருந்தேன். அப்போ நான் இன்ஸ்டாகிராம்ல போட்டிருந்த போஸ்டைப் பார்த்துட்டு, ‘நானும் திருச்சியிலதான் இருக்கேன். இங்க ரைபிள் ஷூட்டிங் போட்டி நடந்துட்டு இருக்கு. வர்றீங்களா?'ன்னு கேட்டார். அப்போதான் அங்க போய் அவர் சொல்லிக்கொடுக்கிற மாதிரி ஷூட் பண்ணினேன். அப்போ எடுத்த போட்டோவைத்தான் நான் ரொம்ப சந்தோஷமா பதிவிட்டிருந்தேன்.’’

ஷூட்டிங் இல்லாதபோது, உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்?
‘‘நல்லா தூங்குவேன். டயட் ஃபாலோ பண்ணுறதுல ரொம்ப கவனமா இருப்பேன். யோகா, வொர்க் அவுட் மிஸ் பண்ண மாட்டேன். ஃபேமிலியா படம் பார்ப்போம். நிறைய ஷாப்பிங் பண்ணப் பிடிக்கும்.’’