சினிமா
தொடர்கள்
Published:Updated:

“விஜய் தேவரகொண்டா ஞானி மாதிரி!”

 ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷ்மிகா மந்தனா

2016-ல் கன்னடத்தில் அறிமுகம், 2018-ல் தெலுங்கு அறிமுகம், 2019-ல் தமிழ் அறிமுகம் என அடுத்தடுத்து அசரடிக்கிறார், ராஷ்மிகா மந்தனா.

அக்கட தேசத்து அழகிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், இவரைக் கொண்டாடித் தீர்க்கின்றனர் கோலிவுட் இளைஞர்கள். இவரின் ‘இன்கேம் இன்கேம்’ பாடலுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. 90’ஸ் மற்றும் 2கே கிட்ஸின் டிரீம் கேர்ள் லிஸ்ட்டில் இருக்கும் ராஷ்மிகாவிடம் ஒரு ஜாலி சாட்!

“ ‘டியர் காம்ரேட்’ அனுபவம் எப்படி இருந்தது?”

“ ‘டியர் காம்ரேட்’ படம் ரொம்ப நல்ல அனுபவத்தைக் கொடுத்துச்சு. நாம நடிக்கிற கேரக்டரை எப்படித் தாங்கணும், இந்தக் கேரக்டருக்குன்னு இருக்கிற அடையாளங்கள் என்ன, நமக்குள்ளே அந்தக் கேரக்டரைக் கொண்டுவர என்ன பண்ணணும், இப்படி நிறைய கத்துக்கிட்டேன். வீட்டுல எப்படி இருப்போமோ, அப்படிதான் இந்தப் படத்துல இருக்கணும்னு டைரக்டர் பாரத் சார் சொல்லிட்டார். அதனால, படத்துல எல்லாக் கேரக்டரும் நம்ம வீட்டுப் பொண்ணு, பையன் மாதிரி யதார்த்தமா இருக்கும். இந்தப் படத்துல கிரிக்கெட் பிளேயரா நடிச்சிருக்கேன். ஆரம்பத்துல எனக்கு பேட்டிங்கூட பண்ணத் தெரியல. ஆறு மாசம் டிரெய்னிங் கொடுத்தாங்க. ஆனா, அந்தக் காட்சி படத்துல ஐந்து நிமிடம்கூட வராததுதான் கொஞ்சம் வருத்தம்.

 “விஜய் தேவரகொண்டா ஞானி மாதிரி!”

கிரிக்கெட் கத்துக்கிட்ட பிறகு, கிரிக்கெட் பிளேயர்ஸ் மீது மரியாதை அதிகமாகிடுச்சு. இந்த உலகக் கோப்பை அரை இறுதியில தோனி ரன் அவுட் ஆனப்போ, அழுதுட்டேன்னா பார்த்துக்கோங்க!”

“ ‘கிரிக் பார்ட்டி (கன்னடம்)’, ‘சலோ (தெலுங்கு)’, கார்த்தியுடன் நடிக்கும் தமிழ்ப் படம்... மூன்று மொழியிலும் இந்த முதல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?”

“ ‘Fresh Face 2014’-ல் நான் டைட்டில் வின்னர். அப்போ, என் புகைப்படங்கள் எல்லா மீடியாவுலேயும் வந்தது. அதைப் பார்த்துட்டுதான் ‘கிரிக் பார்ட்டி’ வாய்ப்பு கிடைச்சது. நடிப்பு எனக்குப் பழக்கமே இல்லை. சும்மா முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு போனேன். ஆனா, அங்கே நிறைய கத்துக்கிட்டேன். அந்தப் படம் ஹிட்டாகிடுச்சு. அதுக்குப் பிறகு தெலுங்குல ‘சலோ’ வாய்ப்பு. ஒவ்வொரு மொழியிலும் அறிமுகமாகிற படத்துல நம்ம கேரக்டர் ரொம்ப முக்கியம். அது சரியா அமைஞ்சாலே பாதி வெற்றி தான். ரெண்டு மொழியிலும் காலேஜ் பொண்ணா நடிச்சது என் கரியருக்கு ரொம்ப உதவியா இருந்தது. ‘கீத கோவிந்தம்’ என்னை எல்லோருக்கும் அடை யாளப்படுத்தியது. அதுக்குப் பிறகு, தமிழில் கார்த்தி சார்கூட நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சு, இப்போ நல்லபடியா ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு.”

“சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி உங்க கனவு என்னவா இருந்தது?”

“நான் சைக்காலஜி, ஜர்னலிசம் படிச்சிருக்கேன். படிச்சுக்கிட்டு இருக்கும்போதே சினிமாக்குள்ளே வந்துட்டேன். படிச்ச துறையிலேயே இருந்திருந்தா, நிச்சயம் நான் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட் ஆகியிருப்பேன். இல்லைனா, அப்பாவோட பிசினஸைப் பார்த்துக்கிட்டு அவருக்கு சப்போர்ட்டா இருந்திருப்பேன்.”

“ ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ரெண்டு படங்களிலும் விஜய் தேவரகொண்டாகூட நடிச்சிருக்கீங்க. ஸ்பாட்ல அவர் எப்படி?”

“ ‘அர்ஜுன் ரெட்டி’ அளவு கடந்த ரசிகர்களை அவருக்குக் கொடுத்திருக்கு. ‘அர்ஜுன் ரெட்டி’ கேரக்டருக்கும் அவரோட ஒரிஜினல் கேரக்டருக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது. ‘அர்ஜுன் ரெட்டி’யா அவரைப் பார்த்துட்டு, ‘கீத கோவிந்தம்’ ஸ்பாட்ல அவர்கிட்ட பேச கொஞ்சம் பயமாதான் இருந்தது. அப்புறம் அவரே என்கிட்ட வந்து பேசினார். அப்போதான், அவர் எப்படின்னு தெரியவந்தது. ஆனா, அவர்கூட இருந்தா செம போர் அடிக்கும். நான்தான் எதையாவது பேசிக்கிட்டே இருப்பேன்.

 “விஜய் தேவரகொண்டா ஞானி மாதிரி!”

அவர்கிட்ட இருந்து ‘ம்ம்’ ரியாக்‌ஷனைத் தவிர வேறெதுவும் வராது. முடியைக் கலைச்சு விடுறது, கிள்ளுறதுன்னு அவரைத் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பேன். அவர் ஞானி மாதிரி அமைதியா உட்கார்ந்திருப்பார். எல்லாப் பெண்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். அப்படியான கேரக்டர் அவர்.”

“ ‘கீத கோவிந்தம்’ படத்துல வர்ற கீதா - கோவிந்த், ‘டியர் காம்ரேட்’ படத்துல வர்ற பாபி - லில்லி... ரெண்டு ஜோடிக்கும் என்ன வித்தியாசம்?”

“அந்தப் படத்துல பார்த்த ஜோடியை, இந்தப் படத்துல பார்க்கக் கூடாதுன்னு முடிவெடுத்தே இயக்குநர் கதை எழுதுன மாதிரி இருந்தது. கீதாவோட குணங்கள் எதுவும் லில்லிகிட்ட இருக்காது. கோவிந்த் குணங்கள் எதுவும் பாபிகிட்ட இருக்காது. இந்த ரெண்டு படத்துக்குப் பிறகு, இனி எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் பண்ணமுடியும்னு நம்பிக்கை வந்திருக்கு.”

“ ‘இன்கேம் இன்கேம்’ பாடல்ல நீங்க புடவை கட்டுற மாதிரி கட்டிக்கிட்டு நிறைய பெண்கள் ‘டிக் டாக்’ வீடியோ பதிவிட்டிருந்தாங்க. அதையெல்லாம் பார்த்தீங்களா?”

“ராஷ்மிகாவை எல்லா மக்களுக்கும் இப்போ தெரியுதுன்னா, அதுக்கு இந்தப் பாடல் முக்கியமான காரணம். அந்தப் பாட்டுல வர்ற மாதிரி பலபேர் ‘டிக் டாக்’ல வீடியோ பண்ணினதைப் பார்க்கும்போது, சந்தோஷமா இருந்தது. ரொம்ப அழகா பண்ணினாங்க. சில வீடியோ செம காமெடியாவும் இருந்தது.”

“கடந்த மூன்று வருடத்துல உங்க வாழ்க்கை மாறியிருக்கு. இந்தப் பயணம் எப்படியிருக்கு?”

“நான் பார்த்து ரசிச்ச ஆள்களுடன் பழகுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, பர்சனலா எந்த மாற்றத்தையும் நான் உணரல. மக்களுக்கு என்னைத் தெரியுது, அவ்ளோதான். யாராவது என்கிட்ட போட்டோ எடுக்கணும்னு சொன்னாங்கன்னா, எனக்கே சந்தேகம் வந்துடும். ‘நான் உங்க ரசிகை’னு சொல்வாங்க. ‘அப்படியா, என் முதல் படம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்’னு கேட்டுடுவேன். என்னை ஒரு பிரபலமா நான் பார்க்கல. பிடிச்ச விஷயங்களை மட்டுமே செய்ற ஒரு ஜாலியான பொண்ணாதான் என்னை நான் நினைச்சுக்கிறேன்.”

“உங்க சினிமா கரியருக்குக் குடும்பம் எந்தளவுக்கு உறுதுணையா இருக்கு?”

“அப்பா அம்மா என்கிட்ட சொல்றது இது மட்டும்தான், ‘உனக்குப் பிடிச்சதைப் பண்ணு. ஆனா, ரொம்ப கேர்ஃபுல்லா இரு.’ எனக்கு ஏழு வயசுல ஒரு தங்கை இருக்கா. அவளுக்கு மூணு வயசாகும்போது நான் நடிக்க வந்துட்டேன்.

 “விஜய் தேவரகொண்டா ஞானி மாதிரி!”

ஆரம்பத்துல நான் வீட்டுக்குப் போறப்போ எல்லாம் என்னை ஒரு கெஸ்ட்டுன்னுதான் அவ நினைச்சா. அதுக்குப் பிறகுதான், அவளுக்கு நான் அக்கான்னு புரியவெச்சேன். இப்போ, நாங்க ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம்.”

“யார் என்ன கேட்டாலும் பதில் போடுற அளவுக்கு சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கீங்களே!”

“பலபேர் என்மேல வெச்சிருக்கிற அன்பை சோஷியல் மீடியா மூலமா வெளிப்படுத்துறாங்க. அவங்களாலதான் நான் இந்த இடத்துல இருக்கேன்.

 “விஜய் தேவரகொண்டா ஞானி மாதிரி!”

அதனால, எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சோஷியல் மீடியா மூலமா அவங்ககிட்ட பேசி என் அன்பைப் பரிமாறிக்கிறேன்.”