
படங்கள்: ஷீமர் ரூஸ்வெல்ட்
ரோகிணி... தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத திரைக் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படு பிஸியாக இயங்கிவருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன், நானி, ராம்சரண் போன்ற முன்னணி ஹீரோக்களுக்குச் செல்ல அம்மா. ‘விட்னஸ்’ திரைப்படத்தில் மலக்குழியில் மரணித்த தன் மகனுக்காக நீதி வேண்டிப் போராடிய ரோகிணியின் குரல், ஒட்டுமொத்தச் சமூகத்தையும் கேள்வி கேட்டது. மலையாளப் பட ஷூட்டிங்கிற்காகக் கேரளா புறப்பட்டுக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.
`` ‘விட்னஸ்’ மாதிரி உங்களை மையப்படுத்தின, சமூகத்துக்குத் தேவையான கதைகள் உங்களை நோக்கி வரும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும்?’’
“இந்த மாதிரியான நம்பிக்கையை நான் இளம் இயக்குநர்களுக்குக் கொடுக்கிறேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘ரோகிணி தைரியமா பண்ணுவாங்க, இதை ஒரு வேலையா மட்டும் நினைக்கமாட்டாங்க’ன்னு அவங்களுக்குத் தெரிஞ்சு என்கிட்ட கதையை எடுத்துட்டு வர்றாங்க. நான் சமூகம் சார்ந்து நிறைய கருத்துகளைப் பேசுறேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஓர் அரசியல் இருக்கும். அப்படி என் அரசியலைத் தெரிஞ்சவங்க, அவங்களுடைய பயணத்துல என்னை இணைச்சுக்க விரும்புறாங்க. அதனாலதான், சமூகம் சார்ந்த படங்கள் எனக்கு வருதுன்னு நினைக்கிறேன்.”
`` ‘விட்னஸ்’ படத்துக்குக் கிடைச்ச வரவேற்பு எப்படி இருந்தது?’’
“இது கவனிக்கப்படும்னு நினைச்சோம். ஆனா, நாங்க நினைச்சதைவிட அதிகமாகவே மக்கள்கிட்ட சென்றடைஞ்சிருக்கு. ‘விட்னஸ்’ கவனிக்கப்படணும், ஒரு உரையாடலைத் தொடங்கணும்னு இயக்குநர் தீபக் தீர்க்கமா இருந்தார். அது நடந்திருக்கு. அதிகாரத்துல இருக்கிறவங்களுக்கு நினைவுபடுத்துறோங்கிறதைத் தாண்டி, மக்களுடைய கவனத்துக்குப் போய், நாம என்ன செஞ்சுக்கிட்டிருக்கோம்னு பலரையும் யோசிக்க வெச்சிருக்கு இந்தப் படம். அந்த வகையில, கலைக்கான வேலையை ‘விட்னஸ்’ நல்லாவே செஞ்சிருக்குது.”

``தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்துல வேலை செஞ்சுக்கிட்டிருக்கீங்க. அந்தந்த ஊர் சினிமாவுக்குத் தகுந்த மாதிரி, எப்படி உங்களை மாத்திக்கிறீங்க?’’
“ஒரு ஆர்ட்டிஸ்டா எல்லாமே ஒண்ணுதான். ஒரு கேரக்டர்ல இருந்து விடுபட்டு வேறொரு கேரக்டர்ல நம்மளைப் பொருத்திப் பார்த்துக்கிறதுக்கு வேண்டுமானா கொஞ்சம் நேரம் தேவைப்படுமே தவிர, மொழிக்கு இல்லை. தெலுங்கு என் தாய்மொழி, தமிழ் என்னை வளர்த்த மொழி, மலையாளம் ஒரு நடிகையா என்னை நானாக்கிய மொழி. மூணு மொழிகளுமே எனக்கு எழுதப் படிக்கத் தெரியும். அதனால, ஸ்கிரிப்ட்டைப் படிச்சதுமே தயாராகிடுவேன். எல்லோரும் என்கிட்ட எதிர்பார்க்கிறது நல்ல பர்ஃபாமென்ஸ். அதுக்குத் தகுந்த கேரக்டர்கள் கொடுக்குறாங்க. அதைத்தான் என் இத்தனை வருஷ உழைப்புக்குக் கிடைச்சிருக்கிற மரியாதையா பார்க்கிறேன்.”
``மூன்று மொழிகளிலும் அதிக அம்மா கேரக்டரில் நடிச்சுட்டிருக்கீங்க. ஒரு அம்மா கேரக்டர் உங்களுக்கு வரும்போது எதெல்லாம் இருந்தா ஓகே சொல்றீங்க?’’
“அம்மாங்கிறது பொதுவான ஒரு கேரக்டர் கிடையாது. ‘விட்னஸ்’ அம்மா ஒரு மாதிரி இருக்கும். ‘அலா வைகுந்தபுரமுலோ’, ‘பாகுபலி’, ‘ரங்கஸ்தலம்’னு ஒவ்வொரு அம்மா கேரக்டருடைய பின்னணியும் வெவ்வேறா இருக்கும். அதனால, வெவ்வேற அம்மா கேரக்டர்களாதான் பார்க்கிறேன். எனக்கு வர்ற வாய்ப்புகள்ல, இந்தக் கதாபாத்திரத்தினால கதையில ஏதாவது ஒரு மாற்றம் நிகழுதான்னு மட்டும்தான் பார்ப்பேன். அது சின்ன போர்ஷனா இருந்தாலும் பரவாயில்லை. ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூ’னு ஒரு மலையாளப் படம். அதுல எனக்கு ஒரே ஒரு சீன்தான். அதே மாதிரி, ‘நந்தலாலா’வுல ரெண்டு சீன், ஒரு பாட்டு. அந்த அம்மாவைப் பார்த்து ஒரு அடி அடிக்கணும்ங்கிறதுதான் கதையே. ஆனா அங்க வந்து பார்த்தா, அவங்க நிலையே வேற. இந்த மாதிரி அழுத்தமான கேரக்டர்கள் வந்தால் தவறவிடவே மாட்டேன். நல்ல கேரக்டர்கள்தான் எனக்கான சிறந்த ஊதியம்.”
``வெகுளியான அம்மா கேரக்டர்னா இவங்க, அழுது ரொம்ப எமோஷனாகுற அம்மா கேரக்டர்னா இவங்கன்னு சினிமா சிலரை ஸ்டீரியோடைப் பண்ணுது. அதுக்குள்ள சிக்கிக்காம இருக்கிறதே பெரிய சவால்தான். எப்படி சாத்தியமாகுது?’’
‘‘எனக்கு வந்திருக்கிற வாய்ப்புகள் அப்படி. அந்த வகையில நான் பாக்கியசாலி. இன்னொரு விஷயம், மற்ற மொழிப் படங்கள்ல நான் நடிக்கிறதையும் இயக்குநர்கள் கவனிக்கிறாங்க. உதாரணத்துக்கு, மலையாளத்துல ‘கப்பி’ன்னு ஒரு படம். அதுல நான் ஃப்ராக் போட்டுக்கிட்டு வீல் சேர்ல உட்கார்ந்திருக்கிற கிறிஸ்தவ அம்மா. 14 வயசுப் பையன் என்னைக் குளிப்பாட்டி விட்டு, பவுடர் பூசிவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுவிட்டு அப்படி அக்கறையா கவனிச்சுக்குவான். அந்தப் படமே எனக்கும் அவனுக்குமானதுதான். அப்புறம், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூ’வுல வர்ற அம்மா. என்னை இப்படியும் பார்க்க வைக்கலாம்னு இதுமாதிரியான படங்கள் இயக்குநர்களுக்கு உணர்த்துதுன்னு நினைக்கிறேன். அந்த வகையில, என்னைப் புதுப்பிக்க வெச்சுக்கிட்டே இருக்கிற என் இயக்குநர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.’’
``நிறைய பண்ணிட்டீங்க. இன்னும் இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கணும்னு ஆசையிருக்கா?’’
‘‘எனக்கு உளவுத்துறை அதிகாரி மாதிரியான ஒரு கேரக்டரோ அல்லது ஒரு காட்டுக்குள்ள வாழுற, தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டிருக்கிற, பழங்குடி மக்களுக்காகப் போராடுகிற போராளியாகவோ நடிக்கணும்னு ஆசை. என்னால நல்லா பண்ண முடியும்னு நினைக்கிறேன்.’’

`` ‘விராட பர்வம்’ படத்துல நீங்க குரல் கொடுத்த நந்திதா தாஸுடைய கேரக்டர் கிட்டத்தட்ட இந்தப் போராளி கதாபாத்திரம்தான். டப்பிங் பேசும்போது, இந்தக் கேரக்டர் நமக்குக் கிடைச்சிருக்கலாமேன்னு தோணுச்சா?’’
“இயக்குநர்களுடைய பார்வையை நாம எப்படி மாத்தமுடியும்? அவர் அந்த அழுத்தமான கதாபாத்திரத்துல நந்திதா தாஸைப் பார்த்திருக்கிறார். நந்திதாவுக்குத் தெலுங்கு தெரியாது. நாம கஷ்டப்பட்டுதான் அவங்களை டயலாக் பேச வைக்கணும்னு இயக்குநருக்கு நல்லாவே தெரியும். மெளனங்கள் பேசப்படணும். பேசப்படும் மெளனங்களுக்காகத்தான் முகங்கள் தேவைப்படுது இயக்குநர்களுக்கு. அந்த மெளனங்களுக்கு என்ன மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்கிறோமோ, அதுதான் இயக்குநர்களின் தேர்வா இருக்கு. அதனால நந்திதா, இயக்குநர் வேணு உடுகுலாவுடைய தேர்வு. அவங்களுக்கான குரலா நான் இருக்கலாம்னு அவர் நினைச்சதுதான் எனக்கான வெற்றி. அதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.’’
``பாலிவுட்ல இருந்து வாய்ப்புகள் வந்திருக்கா?’
‘‘ரெண்டு மூணு வாய்ப்புகள் வந்தது. ஒரு படத்துல ஒரு ஹோம் மினிஸ்டர் கேரக்டர்னு சொன்னாங்க. நான் இங்க எதிர்பார்க்கிற மாதிரிதான் அங்கேயும் எதிர்பார்க்கிறேன். நாம நடிக்கிற ஒரு கேரக்டர், அந்தக் கதையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும். அதனால, நான் பண்ணலை. ஒரு வெப் சீரிஸ்ல நடிக்க 35 நாள் கால்ஷீட் கேட்டாங்க. அவ்ளோ நாள் தொடர்ந்து தரமுடியலை. இந்தியில நடிக்கணும்னு விருப்பமிருக்கு. ஆனா, அந்த மொழியைக் கொஞ்சம் கத்துக்கிட்டுப் பண்ணினா நல்லாருக்கும்னு பார்க்கிறேன்.’’
``பல ஹீரோக்களுக்கு நீங்க அம்மாவா நடிச்சிருந்தாலும் நானிகூட நடிக்கும்போது கொஞ்சம் ஸ்பெஷலா தெரியுது. அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கறீங்க?’’
“நானியுடைய வளர்ச்சியைத் தொடர்ந்து பக்கத்திலிருந்து பார்த்துக்கிட்டிருக்கேன். அவருடைய வெற்றி, என் சொந்த உறவுடைய வெற்றி மாதிரி தோணும். அவர் தயாரிச்ச முதல் படமான ‘ஆவ்!’ படத்துல நடிச்சிருந்தேன். அது தேசிய விருது வாங்கியிருக்கு. அவங்க அக்கா இப்போ ‘மீட் க்யூட்’னு ஒரு ஆந்தாலஜி இயக்குனாங்க. அதையும் நானிதான் தயாரிச்சார். அதுலயும் நான் இருந்தேன். இந்த மாதிரி அவருடைய எல்லா முயற்சிகளிலும் நான் இருந்திருக்கேன். நாம ஒரு விஷயம் பண்ணும்போது, அதுல நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க இருக்கணும்னு நினைப்போம்ல... அந்த மாதிரி உணர்வு அது. நாங்க ரெண்டு பேரும் எங்கேயாவது பார்த்தா, ரொம்ப எக்ஸைட்டாகி கட்டிப் பிடிச்சுப் பேசிக்க மாட்டோம். ஆனா, மனசுக்குள்ள பாசம் இருக்கும். நாங்க ரெண்டு பேரும் ஃப்ரேம்ல சும்மா உட்கார்ந்திருந்தாலே அம்மா - பையன் மாதிரி அவ்ளோ யதார்த்தமா இருக்குன்னு இயக்குநர்கள் சொல்வாங்க. அதுக்கு மனசுல இருக்கிற பாசம்தான் காரணம்னு நினைக்கிறேன். தொழிலைத் தாண்டி எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு.
நானி கதைகளைத் தேர்ந்தெடுக்கிற விதம் பிரமாதமா இருக்கு. ஜாலியா ஒரு படம் பண்ணுறார். திடீர்னு ‘ஷியாம் சிங்கா ராய்’ன்னு வந்து நிற்கிறார். யாரும் எதிர்பார்க்காத பயங்கரமான சேஞ்ச் ஓவர். அடுத்த படமே, ‘அன்டே சுந்தரனிக்கி.’ இந்தப் படத்துல அவருடைய கேரக்டரை அவர் கையாண்ட விதம் அவ்ளோ ஆச்சர்யமா இருந்தது. இப்போ ‘தசரா’ன்னு ஒரு படம் நடிச்சுட்டு இருக்கார். அதுல அவருடைய போஸ்டர் பார்க்கவே பயங்கரமா இருந்தது. உழைப்புதான் நானியின் வெற்றி. எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்து தெலுங்கு சினிமாவுல ஜெயிச்சவர். அதனால, பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கார். அது மிகப்பெரிய விஷயம். சிரஞ்சீவி சாருக்குப் பிறகு, நானிதான் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து நல்ல இடத்துக்கு வளர்ந்திருக்கிறார்.’’
``சமீபமா உங்களை இம்ப்ரஸ் பண்ணுற ஹீரோயின்கள் யார்?’’
“சாய் பல்லவி, நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, லிஜோமோல் ஜோஸ், மலையாளத்துல தர்ஷனானு நிறைய பேர் இருக்காங்க. சாய் பல்லவியுடைய ஒரு ஷாட்கூட ஏனோதானோன்னு இருக்காது. பிரமாதமா நடிக்கிறாங்க. கதையை இவங்க மூலமா சொல்றதுக்கு இயக்குநர்களுக்குக் கொடுக்கிற நம்பிக்கைதான் இவங்க வெற்றி. ரொம்ப நல்ல டான்ஸராகவும் ரொம்ப நல்ல பர்ஃபாமராகவும் இருக்கிறது ரொம்ப அரிதான விஷயம். அதை அழகா பண்ணுறாங்க. அதே மாதிரி ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த கேரக்டர்ல நடிச்சாலும் அந்த கேரக்டராதான் தெரிவாங்களே தவிர, அவங்க தெரியமாட்டாங்க. அது சாதாரண விஷயம் கிடையாது. அதை முதல் படத்துல இருந்தே பண்ணிக்கிட்டிருக்காங்க. அது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.’’
``நீங்க இயக்கின ‘அப்பாவின் மீசை’ எப்போ எதிர்பார்க்கலாம்? அடுத்த படத்துக்கான வேலைகள் ஆரம்பிச்சிட்டீங்களா?’’
“அந்தப் படத்தை யாராவது வாங்கி ரிலீஸ் பண்ணமாட்டாங்களான்னு காத்திட்டிருக்கேன். இப்போ ஓ.டி.டி வந்துட்டதால, அவங்ககிட்டயும் பேசிக்கிட்டிருக்கோம். சீக்கிரம் வெளியாகும்னு நம்புறேன். அடுத்த படத்துக்கான கதை எல்லாம் முடிச்சுட்டேன். நிறைய படங்கள் நடிச்சுக்கிட்டிருக்கிறதால டைரக்ஷன் தள்ளிப்போகுது. இந்த வருஷமே என் இரண்டாவது படத்துக்கான அறிவிப்பு வரும். சமூகத்தால ஏற்படுத்தப்பட்டிருக்கிற சில விஷயங்கள் ஒரு வாழ்க்கையில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குதுங்கிறதுதான் கதை. தவிர, அரசியல் சார்ந்த கதைகளும் இருக்கு. பொழுதுபோக்கு அம்சத்துக்குள்ள போய்தான் இந்த விஷயங்களைச் சொல்லணும்னு நினைக்கிறேன். உதாரணத்துக்கு, மலையாளத்துல வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மாதிரி. ஆடியன்ஸ் கொடுக்கிற ரெண்டு மணி நேரத்துல அவங்களை எண்டர்டெயின் பண்ணி கதைக்குள் இழுத்து, அப்புறம் நாம சொல்ல வேண்டியதைச் சொல்லணும்.”