ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
Published:Updated:

“நடிகர்களுக்கு இல்லாத அந்தப் பாகுபாடு, நடிகைகளுக்கு மட்டும் ஏன்?!” - நடிகை சாந்திப்ரியா

சாந்திப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்திப்ரியா

2004-ல் அவர் தவறினதுக்குப் பிறகு, வெளியிடங்களுக்குப் போக மனசில்லாம ஒன்றரை வருஷமா வீட்டுலயே முடங்கினேன். டிப்ரெஷன்ல தவிச்சேன். ‘

அம்பிகா - ராதா, ராதிகா - நிரோஷா வரிசை யில் 80-களில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா - சாந்திப்ரியாவும் பிரபலமான வர்கள். பானுப்ரியாவுக்கு அறிமுகமே தேவை யில்லை. அவரின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தாண்டி பாலி வுட்டிலும் பெயர் எடுத்தவர். மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மறுபடி நடிக்க வந்திருக்கும் சாந்திப்ரியாவிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. தமிழ், இந்தி உட்பட நான்கு மொழிகளில் தயாராகும் சரோஜினி நாயுடுவின் பயோபிக் கில், சரோஜினி நாயுடுவாக நடிக்கிறார். 28 ஆண்டுகள் கழித்து நடிக்கும் அந்த ரீ-என்ட்ரி சினிமா வாய்ப்பிலிருந்தே உரை யாடலைத் தொடங்கினார்.

 `எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில்...
`எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில்...

“குழந்தைப் பருவம், இளமைக்காலம் உட்பட மூணு காலகட்டமா சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையைப் படமாக்குறாங்க. அதுல, 35 – 75 வயது காலகட்டத்துல நான் நடிக்கிறேன். சரோஜினி நாயுடு, உத்தரப் பிரதேசத்துல ஆளுநரா இருந்திருக்காங்க. அது சம்பந்தமான காட்சிகள்லேருந்து நான் நடிக்கப்போறேன். வேகமான நடை, பற்கள் தெரியாத சிரிப்பு, ஃபேஷன் விஷயத்துல ஆர்வமா இருந்தது, ஆங்கிலப் புலமை, துணிச்சலான முடிவெடுக்கும் திறன்னு சரோஜினியின் தனித்துவங்கள் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்துச்சு” என்பவர், இந்தி, மராத்தி, குஜராத்தி உட்பட எட்டு மொழிகள் தெரிந்தவர்.

கலகலப்பும் சுறுசுறுப்புமாக இயங்கிய சாந்திப்ரியாவை, அவரின் காதல் கணவரும் இந்தி நடிகருமான சித்தார்த் ரேவின் மறைவு புயலாகத் தாக்கியிருக்கிறது. அதன்பிறகு, மன அழுத்தத்திலிருந்து மீண்டதை முதன் முறையாக மனம்விட்டுப் பேசினார்.

“2004-ல் அவர் தவறினதுக்குப் பிறகு, வெளியிடங்களுக்குப் போக மனசில்லாம ஒன்றரை வருஷமா வீட்டுலயே முடங்கினேன். டிப்ரெஷன்ல தவிச்சேன். ‘நீ குழந்தை களை அழைச்சுகிட்டு எங்களோடு வந்திடு’னு எங்கம்மா சொன்னாங்க. மறுப்பு சொல்லிட்டு, என் பிள்ளைகளைச் சுயமா வளர்க்கணும்னு உறுதியா இருந்தேன். அப்போதான் ‘Gladrags’ பத்திரிகை நடத்தின திருமதிகளுக் கான அழகிப் போட்டியில கலந்துகிட்டேன்.

“நடிகர்களுக்கு  இல்லாத அந்தப் பாகுபாடு,  நடிகைகளுக்கு மட்டும் ஏன்?!” - நடிகை சாந்திப்ரியா

‘நடிகையா பேர் எடுத்துட்டு, நீ இந்தப் போட்டியில ஏன் கலந்துக்கிறே?’னு பலரும் கேட்டாங்க. ஆனா, அந்த நெருக்கடியான மனநிலையிலேருந்து என்னை மீட்டெடுக்க, அந்தப் போட்டி உதவும்னு நம்பினேன். அதுல, நான் மாடலிங் செய்ய என் பசங்களும் சப்போர்ட் பண்ணாங்க. இந்தியா முழுக்க கலந்துகிட்ட 6,000 போட்டியாளர்கள்ல ‘டாப் 10’-ல இடம்பிடிச்சேன். அதுக்கப்புறமா, ‘எல்லாம் கடந்து போகும்’ங்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுச்சு. வெளியுலகத்துல பழைய படி நடைபோட ஆரம்பிச்சேன். சீரியல்ல நடிச்சேன்; சுயமா என் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுகிட்டேன்” கடினமான சூழலிலிருந்து தன்னை மீட்டெடுத்தவர், தன் மகன்களுக்குத் தந்தையாகவும் மாறியிருக்கிறார்.

“அப்போ என் பசங்க சுபமும் சிஷ்யாவும் ஸ்கூல் படிச்சுகிட்டிருந்தாங்க. என்னதான் நான் பாசமா இருந்தாலும், அப்பாவின் துணையை பசங்க தேடினாங்க. அதைச் சரி செய்யுறதுதான் எனக்குக் கடினமா இருந்துச்சு. அடிக்கடி பசங்களை அவுட்டிங் கூட்டிட்டுப் போய், என் விருப்பம், உடல்நலப் பிரச்னைகள், பெண்ணா நான் எதிர்கொள்ளும் சவால்கள்னு எல்லாத்தையும் அவங்களுக்குப் புரிய வெச்சேன். செக்ஸ் எஜுகேஷன் பத்தியும் பக்குவமா பேசினேன். அதன்பிறகு, இப்போ வரை ஒளிவுமறைவில்லாம பசங்க எல்லா விஷயங்களையும் என்கிட்ட பேசுறாங்க...” சிங்கிள் பேரன்ட் சவால்களைச் சொல்பவரின் மகன்கள் இருவரும் இந்தி சினிமாவில் பணியாற்றுகின்றனர்.

 மகன்களுடன்...
மகன்களுடன்...

பல மொழி சினிமாவிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிறப் பாகுபாட்டை, பாலி வுட்டில் எதிர்கொண்டிருக்கிறார் சாந்திப்ரியா. அதுகுறித்துப் பேசியவர், “பாலிவுட்டுல நான் தொடர் ஹிட்ஸ் கொடுத்துகிட்டிருந்த நிலையில, ‘இக்கே பே இக்கா’ படத்துல அக்‌ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்தேன். அப்போ அவர் என் நிறத்தைக் கிண்டலா பேசினார். அந்த வார்த்தைகளை ‘டேக் இட் ஈஸி’யா என்னால கடந்துபோக முடியலை. கொஞ்சம் அழுதேன். எங்கம்மா நம்பிக்கை கொடுத்தாங்க. அப்புறமா, என் உடலை நான் நேசிக்க ஆரம்பிச்சேன்.

‘யாருக்காகவும் என்னை நான் மாத்திக் கவோ, வருத்தப்படவோ தயாரில்லை’னு தைரியமா சொல்ல ஆரம்பிச்சேன். சினிமாவுல என் அக்காவும் இதே பிரச்னையை எதிர் கொண்டாங்க. அவ்ளோ ஏன்... ஸ்கூல் படிக்கிறப்போ என் பசங்ககூட நிறப் பாகு பாட்டை எதிர்கொண்டிருக்காங்க.

கறுப்பாவும் உடல் பருமனுடனும் இருக்கிற எத்தனையோ நடிகர்கள் நெடுங்காலமா புகழுடன் நடிச்சுகிட்டுத்தானே இருக்காங்க? அப்போ தோற்றத்தை வெச்சு நடிகை களுக்கு மட்டும் ஏன் பாகுபாடுகள் பார்க்கப் படுது?

 அக்கா பானுப்ரியாவுடன்...
அக்கா பானுப்ரியாவுடன்...

‘என் தோற்றம் இதுதான். நான் கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பேன்னு நம்பிக்கையிருந்தா வாய்ப்பு கொடுங்க; இல்லைனா பரவாயில்லை’ன்னு பெண்கள் உறுதியா இருந்தா, படிப்படியா மாற்றத்தை உருவாக்கலாம்” என உடைத்துப் பேசுகிறார் சாந்திப்ரியா.