சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”

சுனைனா
பிரீமியம் ஸ்டோரி
News
சுனைனா

சின்ன வயசுல இருந்தே நான் ஸ்டார் மூவீஸ், ஸ்டார் வேர்ல்டு இதெல்லாம் அதிகமா பார்ப்பேன். என் அண்ணா, அக்கா மூலமா அப்போதிலிருந்தே நிறைய இங்கிலீஷ் சீரிஸ் பார்க்க ஆரம்பிச்சேன்.

கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் சினிமா, வெப் சீரிஸ் என சுனைனா செம பிஸி. சமீபத்தில் தெலுங்கில் `ராஜராஜ சோரா' என்ற சூப்பர்ஹிட் படத்தில் யதார்த்தமாக நடித்திருந்தார். தற்போது மலையாளப் படக்குழுவுடன் சேர்ந்து `ரெஜினா' என்ற படத்தை முடித்திருக்கிறார். கைவசம் நான்கைந்து படங்கள், வெப் சீரிஸ்கள் என சைலன்ட்டாக தன் கரியரைச் செதுக்கிவரும் சுனைனாவிடம் பேசினேன்.

“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”

`` `ரெஜினா' படத்துடைய போஸ்டர் பயங்கரமா இருந்தது. இதுல உங்களுடைய கேரக்டர் என்ன?’’

``இந்தப் படத்துல என்னுடைய கேரக்டர் பெயர்தான் `ரெஜினா.' சிம்பிள் ஹவுஸ் வொய்ஃப். அவளைச் சுத்தி சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். அதை ரெஜினா எப்படிக் கையாண்டு அதுல இருந்து வெளியே வர்றாங்கிறதுதான் படம். அவள் அந்த சாதாரண சூழலை எதிர்கொள்ளும் விதம் பிரமாதமா இருக்கும். கதை படிக்கும்போதே அந்த உலகத்துக்குள் போன உணர்வைக் கொடுத்தது. என்னுடைய கேரக்டரை சூப்பரா ஸ்கெட்ச் பண்ணியிருக்கார், இயக்குநர் டாமின் டி செல்வா. இதுல வேலை செஞ்சிருக்கிற டெக்னீஷியன்கள், நடிகர்கள் பலர் மலையாள சினிமாத்துறையைத் சேர்ந்தவங்க. அவங்களுடைய ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல், கதை, திரைக்கதையை அணுகும் விதம் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு. அவ்ளோ உழைக்கிறாங்க. படம் பார்க்கும்போது பயங்கர எங்கேஜிங்கா இருக்கும். என் கரியர்ல அடுத்த கட்டமா இருக்கும்.

டைரக்டர் டாமின் நான் நடிச்ச `சில்லுக்கருப்பட்டி' படத்தைப் பார்த்திருக்கார். அவருக்கு நான் நடிச்சது பிடிச்சிருந்திருக்கு. என்னால `ரெஜினா'வா மாற முடியும்னு நம்பியிருக்கார். அப்படித்தான் என்னை அணுகிக் கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதே சமயம் பயமாவும் இருந்தது. சில போர்ஷன்கள் ஷூட் பண்ணும்போது நான் ரொம்ப எமோஷனாகிட்டேன். கன்டன்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தது. அதனால, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு நான்கு மொழிகள்ல வெளியிட பிளான் பண்ணியிருக்கோம்.''

“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”
“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”

``இப்போ எல்லோரும் ஓ.டி.டி கலாசாரத்துக்கு வர்றாங்க. நீங்க 2018-லயே ஓ.டி.டி, வெப் சீரிஸ்னு இறங்கிட்டீங்களே?’’

``சின்ன வயசுல இருந்தே நான் ஸ்டார் மூவீஸ், ஸ்டார் வேர்ல்டு இதெல்லாம் அதிகமா பார்ப்பேன். என் அண்ணா, அக்கா மூலமா அப்போதிலிருந்தே நிறைய இங்கிலீஷ் சீரிஸ் பார்க்க ஆரம்பிச்சேன். சினிமா, சீரிஸ் எல்லாத்துக்கும் வேலை ஒண்ணுதான். வெளியாகுற தளம்தான் வேறு. இந்தப் புரிதல் ஆரம்பத்திலேயே எனக்கு இருந்தது. `நிலா நிலா ஓடி வா' சீரிஸுக்காக இயக்குநர் நந்தினி என்னை அணுகும்போது, அவங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருந்தது. காரணம், நான் ரொம்ப எக்ஸைட்டாகி ஓகே சொல்லிட்டேன். அதுக்கு முன்னாடி அவங்க மத்த ஆர்டிஸ்ட்கள்கிட்ட பேசும்போது, ஓ.டி.டி, சீரிஸ் எப்படி சரியா இருக்கும்னு பயந்திருக்காங்க. நான் கமிட்டாகி ஷூட் பண்ணிட்டு இருக்கும்போது, எனக்குத் தெரிஞ்சவங்க நிறைய பேர் கால் பண்ணி, `என்னங்க சீரியல் பண்றீங்களாமே, ஏன்?'னு கேட்டாங்க. `இல்லைங்க. இது வெப் சீரிஸ்'ன்னு அவங்களுக்குப் புரிய வெச்சேன். அந்த வெப் சீரிஸ்தான் தென்னிந்தியாவில் வெளியான முதல் வெப் சீரிஸ்னு நினைக்கிறேன். அதுக்குப் பிறகு, நான்கைந்து வெப் சீரிஸ்கள் நடிச்சிட்டேன். அதுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சது. மத்தவங்களைவிட கொஞ்சம் அட்வான்ஸா யோசிச்சிருக்கோம்னு சந்தோஷமா இருக்கு.''

“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”
“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”

`` `சமர்' படத்துக்குப் பிறகு, விஷால்கூட `லத்தி' படம் நடிச்சிட்டிருக்கீங்க. எப்படிப் போய்க்கிட்டிருக்கு?’’

``ரொம்ப ஜாலியா போய்க்கிட்டிருக்கு. சமீபமா, எந்த செட்லயும் இவ்வளவு ஜாலியா பேசிச் சிரிச்சு வேலை செய்யலை. சமர் படத்துல விஷால் சார்கூட நடிச்சிருந்ததால், இது புது செட் மாதிரி தெரியலை. பாலசுப்ரமணியெம் சார்தான் ஒளிப்பதிவாளர். `நீர்ப்பறவை' படத்துல நானும் சாரும் வொர்க் பண்ணியிருக்கோம். எல்லோரையும் ஏற்கெனவே நல்லா தெரியும்ங்கிறதனால ரொம்ப கம்ஃபர்ட்டபுளா இருந்தது. இதுல நான் விஷால் சாருக்கு மனைவியா நடிச்சிருக்கேன். தொணதொணன்னு பேசிக்கிட்டு துறுதுறுன்னு இருக்கிற மிடில் கிளாஸ் பெண். பர்சனலா நான் அவ்வளவா பேசமாட்டேன். அதனால, இந்தக் கேரக்டர் கொஞ்சம் சேலஞ்ஜிங்கா இருந்தது. எனக்கும் விஷால் சாருக்குமான போர்ஷன் ரொம்ப க்யூட்டா இருக்கும்.''

“நான்தான் வெப் சீரிஸ்ல ஃபர்ஸ்ட்!”

`` `சில்லுக்கருப்பட்டி' அமுதினி கேரக்டர் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அந்தப் படம் உங்க கரியர்ல எந்த அளவுக்கு முக்கியமா அமைஞ்சிருக்கு?’’

``அதுதான் பெரிய டர்னிங் பாய்ன்ட். விதவிதமான கேரக்டர்கள்ல நடிக்கப் பிடிக்கும். அதுல `சில்லுக்கருப்பட்டி' அமுதினி எப்போவும் ஸ்பெஷல்தான். என் நிஜ கேரக்டருக்கும் அதுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை. ஹலிதா எனக்குக் கொடுத்த ஸ்கிரிப்ட்டைப் படிக்கும்போது, வசனங்கள் பிரமாதமா இருந்தது. எனக்கும் சமுத்திரக்கனி சாருக்குமான விவாத சீன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் ஓகே சொல்லிட்டேன். ஆனா, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லோரும் `இந்தக் கதையில நடிக்க வேண்டாம். ஒரு குழந்தைக்கு அம்மா கேரக்டர்னாலே வேண்டாம். இதுல மூணு குழந்தைகளுக்கு அம்மானா வேண்டவே வேண்டாம். மார்க்கெட் என்னாகிறது?'ன்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ இது சூப்பரா வொர்க்கவுட்டாகும்னு தோணிக்கிட்டே இருந்தது. படம் ஹிட்டாகுதோ இல்லையோ இதை நான் பண்ணணும்னு நினைச்சேன்; பண்ணிட்டேன். மக்கள் அவ்வளவு ரசிச்சாங்க. நான் பேசுற வசனங்களுக்கு தியேட்டர்ல க்ளாப்ஸ், விசில் பறந்தது. இந்தப் படம் சரியா போகாமல் இருந்திருந்தாலும் எனக்கு இப்படியொரு கேரக்டர்ல நடிச்சேன்னு சந்தோஷமாதான் இருந்திருக்கும். இப்போ எனக்கு நிறைய வாய்ப்புகள் வரக் காரணம் சில்லுக்கருப்பட்டிதான்.''

``அடுத்து என்னென்ன படங்கள்?’’

`` `தொடுவானம்'னு ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். நாற்பது குழந்தைகள் நடிச்சிருக்காங்க. ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்க. நானியின் அக்கா டைரக்‌ஷன்ல `மீட் க்யூட்'னு ஒரு படம் ரெடியா இருக்கு. அடுத்ததாகவும் ஒரு வெப் சீரிஸ் நடிக்கப்போறேன்.''