
ஐவர்
நடிகை வர்ஷா பொல்லம்மா தன் வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் பற்றிப் பகிர்கிறார் இங்கே...
அம்மா ஷாந்தி
என் வாழ்க்கையில முக்கியமான முதலிடம் என் அம்மாவுக்குத்தான். குழந்தைக்கு அம்மா கொடுக்கும் அன்பை வேறு யாராலும் தர முடியாது. அம்மா என்கிறதைத் தாண்டி அவங்க எனக்கு நல்ல தோழியும்கூட. அம்மா சமையல்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அம்மா இப்பவும் எனக்கு ஊட்டிதான் விடுவாங்க. ஆனா, இப்போ நிறைய ஷூட்டிங் போறதுனால, ரெண்டு பேருமே வெளியில் சாப்பிட வேண்டியதா இருக்கு!

ஒரு ரசிகர்
‘பிகில்’ வெளியான நேரம் ஒரு ரசிகர் இப்படி மெசேஜ் பண்ணியிருந்தார், ‘என்னுடைய அம்மா ரொம்ப திறமையானவங்க. ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு அவங்களுடைய திறமையை வெளிப்படுத்திக்கவே முடியலை. அம்மாவின் கனவுகளை சப்போர்ட் பண்ண வீட்ல யாரும் இல்லை. இந்த விஷயம் ‘பிகில்’ படத்துல உங்க போர்ஷன் பார்த்ததுக்குப் பிறகு என்னை ரொம்ப யோசிக்க வைச்சது. எனக்குக் கல்யாணம் ஆன பிறகு என் மனைவியின் கனவுகளையும் ஆசைகளையும் மதிக்கணும்... புரிஞ்சுக்கணும். இந்த ரோல்ல நடிச்சதுக்கு நன்றி.’ இந்த மெசேஜைப் படிச்சதும் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

ரோஷிணி
அம்மாவுக்கு அடுத்து என் பெஸ்ட் ஃபிரெண்டு ரோஷிணிதான். பேசுறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். காலேஜ்ல படிக்கிறப்ப எனக்கு சரியான ஃப்ரெண்டு கிடைக்கல. அப்படியொரு சூழலில் கிடைச்சவதான் ரோஷிணி. அவளுக்கும் பேசுறதுன்னா ரொம்பவே பிடிக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து பயங்கரமா சேட்டை பண்ணுவோம். எனக்கு அவங்கம்மா சமையலும், அவளுக்கு எங்கம்மா சமையலும் ரொம்பவும் பிடிக்கும்.

விஜய் சேதுபதி
மறக்கமுடியாதவர் விஜய் சேதுபதி சார். ‘96’ பட நேரத்துல, ‘நம்மகிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காம அன்பை மட்டுமே தரக் கூடியவங்க ரசிகர்கள். அது இந்த புரொஃபஷன்ல மட்டும்தான் நடக்கும். இது எப்பவுமே நம்ம மைண்டுல இருக்கணும்’னு சொன்னார். இதை எப்பவுமே நான் மனசுல வெச்சிப்பேன்.

இயக்குநர் பிரேம்குமார்
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்கள் வந்துட்டு இருக்கறதுக்கு முக்கிய காரணம் ‘96’ படத்துல இயக்குநர் பிரேம் எனக்கு கொடுத்த வாய்ப்புதான். பிரேம் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகம் கோபப்படமாட்டார். அதனாலயே எந்த டென்ஷனும் இல்லாம என்னுடைய பெஸ்ட்டைக் கொடுக்க முடிஞ்சது.