சினிமா
Published:Updated:

முகவரி தொலைத்த கிராமத்தின் கதை

அதர்வா
பிரீமியம் ஸ்டோரி
News
அதர்வா

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் சிக்குண்டு அடையாளமற்றுப் போயிருந்த ஒரு கிராமத்தின் கதைதான் இந்த ‘அட்ரஸ்’ படம்.

”ரொம்ப நாளா என் மனசுக்குள் ஊறிக்கிடந்த கதை இது. முதலில் எடுத்த படத்தின் சாயல் துளியும் இல்லாமல் அடுத்த படம் எடுக்கறதுதான் இயக்குநருக்கு அழகு.

இராஜமோகன்
இராஜமோகன்

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் சிக்குண்டு அடையாளமற்றுப் போயிருந்த ஒரு கிராமத்தின் கதைதான் இந்த ‘அட்ரஸ்’ படம். நானெல்லாம் இங்கிலீஷ் படம் பார்த்து வந்தவன் இல்லை. ‘சினிமா அறிவு’ன்னு ஒரு சங்கதி சொல்லுவாங்கல்ல... அதெல்லாம் சுத்தமா எனக்குக் கிடையாதுங்க. என் அண்ணன் எங்களுக்குக் கதை கதையாய் சொல்வார். எந்தத் திக்கிலிருந்து அவர்கிட்டே கதை கொட்டிக்கொண்டே இருக்குன்னு தெரியாமல் அதிசயமா இருக்கும். நமக்கு வாழ்க்கைதான் சினிமா. எதிரே பார்க்கிற ஒவ்வொருத்தரிடமும் ஒரு கதை இருக்கு. அவர்கிட்ட ஒன்றிப்போய் ‘என்ன, சொல்லு’ன்னு கேட்டால், கரகரன்னு கையைப் பிடிச்சுக்கிட்டு ஒரு கதை சொல்லிடுவார். அந்தா இந்தான்னு அலைபாய்ஞ்சு ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’னு ரெண்டு படங்கள் செய்தேன். இப்ப இந்த அட்ரஸ். இதுதாங்க என் கதைச்சுருக்கம்” எளிமையாகப் பேசுகிறார் இயக்குநர் இராஜமோகன்.

முகவரி தொலைத்த கிராமத்தின் கதை

`` ‘அட்ரஸ்’ படம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாச் சொல்லுங்க...’’

“1956-ல மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கும்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு அட்ரஸைத் தொலைத்த கிராமத்துக்கு மீண்டும் அந்தஸ்தும் தகுதியும் கிடைத்ததா என்பதே கதை.

நாகரிகங்கள் எதுவும் எட்டிப் பார்க்காத அந்த கிராமத்துக்குப் போக வர குதிரை, கழுதைச் சவாரி மட்டுமே இருக்கு. அதுவும் இல்லாதவங்களுக்கு நடை மட்டும்தான். அந்த ஊர் எப்படி இந்த ரெண்டு மாநிலங்களையும் தன் செயலால் திரும்பிப் பார்க்க வெச்சுதுன்னு கதை சொல்லி யிருக்கோம். நாம் குரல் எழுப்பாத வரைக்கும் ஜனநாயகம் காது கொடுக்காமத்தான் இருக்கும். செவிப்பறை கிழியும் வரைக்கும் சத்தம் போட்டாதான் வேண்டியது கிடைக்கிற நிலைமை இருக்கு. அதுவரைக்கும் ரோடு கிடைக்க, தண்ணீர் வர, புள்ளைங்க படிக்க ஸ்கூலுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் அல்லாடற அவலம்தான் இருக்கு. எனக்கு சினிமான்னா நிச்சயம் சமூகத்தைப் பார்த்து கொஞ்சமாவது கேள்வி கேட்கணும். துளி வலியாவது கதையில வேணும். அப்படி ஒரு சினிமா செய்யறதுதான் நமக்கு கௌரவம். ஒரு வாழ்க்கையைக் குறுக்குவெட்டா எடுத்து வெச்சுரணும். அப்படி ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கையை உள்ளபடியே எடுத்து வெச்சிருக்கேன்.”

முகவரி தொலைத்த கிராமத்தின் கதை

``அதர்வாவின் நடிப்பு பற்றிச் சொல்லுங்க...’’

“அவங்க அப்பாவையே எனக்கு நல்லாத் தெரியும். என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். தம்பி அதர்வா பிரமாதமாக இதில் நடித்துக் கொடுத்தார். நல்ல நடிப்போடு அப்பாவுக்குத் தெரிந்தவர்னு ஒரு பிரியம் கூட சேருதா... அதுவே படத்தில தெரியுது. கேரக்டருக்கு பெரிய உயிர் தந்திருக்கார். அப்புறம் இசக்கி பரத், தியா பூஜா சவேரின்னு இருக்காங்க. என் படத்தில் கதைதான் ஹீரோ. அது அதர்வாவுக்கே தெரியும். அப்படித்தான் மத்தவங்க எல்லோருமே கேரக்டர்களில் பொருந்தி இருக்காங்க. நாங்க ஷூட்டிங் நடத்திய வெள்ளக்கவி கிராமம் அவ்வளவு அழகு. அந்த ஊருக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு யாரும் போறதில்லை. அவ்வளவு தூரம் அந்த மண்ணை நேசிக்கிறாங்க. அவ்வளவு செழுமை இருந்தும் அந்த ஊரில் ஒரு வசதியும் இல்லை. ஆனால் ஒரு வாய் சோறு சாப்பிட்டுட்டு அந்த ஊரின் அழகை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம். இப்படி அடையாளமே தெரியாமல் ஒதுங்கிக்கிடக்கும் மக்களை சினிமாவாகக் காட்டினதில் சந்தோஷம்.”

முகவரி தொலைத்த கிராமத்தின் கதை
முகவரி தொலைத்த கிராமத்தின் கதை

``இதில் பெரும் சிரமம் தருகிற மலைப்பகுதிகள், கிராமம்னு நிறைய வேலையிருக்கே!’’

“நான் விஜய் மில்டனின் உதவியாளர். கேமராவைப் புடிச்ச உடனே அவர்கிட்டே கத்துக்கிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வந்திருச்சு. நானே ஒளிப்பதிவும் செய்திட்டேன். மெரினா, மூக்குத்தி அம்மன் படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபால கிருஷ்ணன்தான் இந்தப் படத்திற்கும் மியூசிக். தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தங்கமான மனுஷன். இப்படி திறமையும் நேர்மையும் கொண்ட மனிதர்களின் உழைப்புதான் இந்த ‘அட்ரஸ்’ படத்துக்கான முகவரி.”