பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம்: அடுத்த சாட்டை

Yuvan, Athulya Ravi
பிரீமியம் ஸ்டோரி
News
Yuvan, Athulya Ravi

கல்விமுறையில் உள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு சொல்லும் முயற்சியாக `சாட்டை’, `அடுத்த சாட்டை’ என அடுத்தடுத்து சாட்டையைச் சுழற்றுவது சல்யூட்.

ள்ளியில் சுழற்றிய `சாட்டை’யைக் கல்லூரிக்கும் எடுத்து வந்தால் அது `அடுத்த சாட்டை.’

நீதிக்கதைகளையும், காலண்டர் பொன்மொழிகளையும், உத்வேக வார்த்தை களையும் எந்நேரமும் பாக்கெட்டில் வைத்திருக்கும் கல்லூரி விரிவுரையாளராக சமுத்திரக்கனி. கையில் சாதிக் கயிற்றையும், மூளையில் சாதி வெறியையும் நிரப்பிக்கொண்டு அலையும் அதே கல்லூரியின் முதல்வர் தம்பி ராமையா. இந்த இருவரால் கல்லூரிக்குள் நடக்கும் தர்ம, அதர்ம யுத்தத்தில், மாணவர்களுடன் கைகோத்து, அதர்மத்தைத் துடைத்தெறிந்து, சமுத்திரக்கனி சிஸ்டத்தை எப்படி சரிசெய்கிறார் என்பதே கதை!

திரையில் தோன்றும் நேரமெல்லாம் திறன்மேம்பாட்டு வகுப்பெடுப்பவர்போல் அறிவுரைகளை அள்ளித்தெளிக்கிறார் சமுத்திரக்கனி. சினிமாவில் அறிவுரைகள், நற்கருத்துகள் சொல்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதை மட்டுமே படம் முழுக்கச் செய்வது நிச்சயம் வரவேற்கத்தக்கதல்ல. தம்பி ராமையா, எதுகை மோனையாகப் பேசிப் பல இடங்களில் எரிச்சல் வரவைக்கிறார்; சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். அதுல்யா ரவி, யுவன், ஸ்ரீராம், கௌஷிக் சுந்தரம் ஆகியோர் கல்லூரி மாணவர்களாக வருகிறார்கள். யாருக்கும் நடிப்பில் அரியர் இல்லை.

அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை

கல்லூரிக்குள் தலைவிரித்தாடும் சாதிக்கொடுமை, மாணவனின் பிணத்தை வைத்துப் பணம் பறிக்கும் சாதிய இயக்கங்களின் கேடுகெட்ட அரசியல், கேள்வித்தாளில் நடக்கும் குளறுபடிகள் என இன்றைய கல்விநிலையங்களில் நடக்கும் பிரச்னைகளைக் கடைசித்தமிழனுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் பேசியதற்காக ‘அடுத்த சாட்டை’க்குப் பெரிய பூங்கொத்து. அதேசமயம் மாணவர்களுக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவியைக் கொடுத்துவிட்டு மாணவிக்கு மட்டும் சுகாதாரத்துறையை ஒதுக்குவது, கறுப்பாக, தாடியுடன் வரும் மாணவரை ஸ்கார்லர்ஷிப் வாங்குபவராகக் காட்டுவ தெல்லாம் பொதுப்புத்தி பின்புத்தி!

கல்விமுறையில் உள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு சொல்லும் முயற்சியாக `சாட்டை’, `அடுத்த சாட்டை’ என அடுத்தடுத்து சாட்டையைச் சுழற்றுவது சல்யூட். இயக்குநர் எம்.அன்பழகனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள். ஆனால், அனைத்தையுமே காட்சி மொழியில் சொல்லாமல் வசனங்களாக மட்டுமே கடத்துவதுதான் படத்தின் பலவீனம். வெறும் அறிவுரைகளால் மட்டுமே எல்லோரையும் திருத்திவிடுவதெல்லாம் யதார்த்தமில்லை.

Yuvan, Athulya Ravi
Yuvan, Athulya Ravi

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், `வேகாத வெயிலுல’ பாடலும் அதன் காட்சியமைப்பும் உருக்கம். ராசாமதியின் ஒளிப்பதிவில் நெருடல்கள் இல்லை. நிர்மலின் படத்தொகுப்பு, ஓக்கே.

இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம்தான். ஆனால், வெறும் பாடமாக மட்டுமே இருப்பது ஏமாற்றம்!