
காமெடி ரூட்டா, சீரியஸ் ரூட்டா என்பதில் பெருங்குழப்பம் அடைந்திருக்கிறார் இயக்குநர்
லோக்கல் போலீஸிடம் முறுக்கி க்கொண்டு, பெட்டி கேஸ்களை டீல் செய்யும் மாடர்ன் துப்பறிவாளனிடம் ஒரு பெரிய கேஸ் மாட்டினால் என்ன நடக்கும் என்பதே ‘ஏஜென்ட் கண்ணாயிரம்.'
ஜமீன்தார் ஒருவரின் இரண்டாம் தாரத்து மகனான சந்தானம், கிராமத்தில் குடும்பத்தை விட்டுவிட்டு, நகரத்தில் துப்பறியும் ஏஜென்சி ஒன்றைக் கவலைக்கிடமாக நடத்திவருகிறார். அம்மா இறந்துவிட, அப்பாவும் ஓடிவிட, குடும்பச் சொத்துப் பிரச்னையால் சந்தானம் அந்தக் கிராமத்தில் சில வாரங்கள் தங்க நேரிடுகிறது. அங்கேயும் தன் பெட்டிக் கடை டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பெட்டி கேஸ்களை டீல் செய்பவர், லோக்கல் போலீஸுக்கும் எதிரியாகிப் போகிறார். ரயில்வே டிராக்கில் கிடக்கும் அனாதைப் பிணங்கள் என்று ஒரு பெரிய கேஸ் அவரைத் தேடிவர, அதற்குப் பின்னாலிருக்கும் குற்றத்தை, குற்றவாளிகளை எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பதே கதை.

2019-ல் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியான தெலுங்குப் படமான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா'வை மாற்றங்களோடு தமிழுக்கு இறக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா. ‘ஐ ஆம் ஏஜென்ட் கண்ணாயிரம்... ஃபீஸ் ரெண்டாயிரம்!' என கோட் சூட், தொப்பி என லோ பட்ஜெட் ஷெர்லாக் ஹோம்ஸாக சந்தானம். சில இடங்களில் கவுன்ட்டர் காமெடி, பல இடங்களில் சீரியஸ் முகம் என இரட்டைக் குதிரைச் சவாரியில் சற்று தடுமாறியிருக்கிறார். அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் நடிப்பில் பாஸ் மார்க் பெற்றாலும் காட்சியமைப்புகளில் இருக்கும் செயற்கைத்தனம் அவர் நடிப்பின் வீரியத்தையும் குறைத்திருக்கிறது.
நாயகி ரியா சுமனுக்கு ஆவணப்படம் எடுத்துக்கொண்டே சந்தானத்துக்குத் துணையாக நிற்கும் பாத்திரம். அதில் காதல் இல்லை என்பது ஆறுதலான விஷயம். புகழ், ரெடின் கிங்ஸ்லி என இருவர் இருந்துமே காமெடியை சந்தானத்தின் டிடெக்டிவ் பூதக்கண்ணாடியை வாங்கித்தான் தேடவேண்டியிருக்கிறது. ஜமீன்தார் குரு சோமசுந்தரத்துக்குப் பெரிதாக வேலையில்லை.
ஒளிப்பதிவாளர்கள் தேனி ஈஸ்வர் - சரவணன் ராமசாமி இருவரின் உழைப்பும் மர்மக் கதைக்குத் தேவையான இரவுக் காட்சிகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கின்றன. பாடல்கள் இல்லாத படத்தில் யுவனின் ஒப்பாரி ராப்பும், பின்னணி இசையும் ஓகே ரகம்.

காமெடி ரூட்டா, சீரியஸ் ரூட்டா என்பதில் பெருங்குழப்பம் அடைந்திருக்கிறார் இயக்குநர். ‘பிணங்களின் கைரேகைகளை எடுத்து விற்பது' என்ற ஒன்லைன் புதுமையாக இருந்தாலும் அந்த ஐடியாவைத் திரைக்கதையாக மாற்றுகையில் அந்த சுவாரஸ்யம் காணாமல்போயிருக்கிறது. மிகப்பெரிய குற்றம், திடீர் திருப்பங்கள் என்பதாக இரண்டாம் பாதி சென்றாலும் அதில் எங்குமே நம்பகத்தன்மை இல்லை.
ரீமேக்கில் மாற்றங்கள் செய்யலாம், ஆனால் அது ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிய படத்தை சுமார் மார்க் வாங்க வைத்துவிடக்கூடாது. இந்த ஏஜென்ட்டுக்குக் கண்கள் ஆயிரம் இருந்தும் தடுமாறியிருப்பது அங்கேதான்!