ஒரு துறைமுகத்தின் செயற்பாடுகளையும் அதன் கறுப்பு பக்கங்களையும், த்ரில்லர் மோடில் திரைக்கதை அமைத்துச் சொல்ல `முயன்றிருக்கிறார்' இயக்குநர் எஸ்.கல்யாண கிருஷ்ணன். அதில் அவர் வெற்றி பெற்றாரா?
தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சட்டவிரோதமாகக் கப்பல் கன்டெய்னர்களில் மறைத்து, சென்னை துறைமுகத்திலிருந்து உலக நாடுகளுக்குக் கடத்தும் தாதாவான ஹரீஷ் பேரடிக்கு, அடியாளாகவும், துறைமுகத்தின் கிரேன் ஆபரேட்டராகவும் பணியாற்றி வருகிறார் அகிலனான ஜெயம் ரவி. இந்தச் சட்டவிரோத கடத்தலின் சர்வதேச தாதாவாக இருக்கும் கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதோடு, ஹரீஷ் பேரடியை அழித்து இந்தியப் பெருங்கடலின் தனி ராஜாவாக மாற வேண்டும் என்பதே ஜெயம் ரவியின் குறிக்கோள். அந்தக் கனவு நிறைவேறியதா, அவரின் உண்மையான குறிக்கோள்தான் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.
அகிலனாக ஜெயம் ரவி பொருந்திப்போகிறார். முரடனாக, புத்திசாலியாக, நல்லெண்ணம் கொண்டவராக, அதே சமயம் வெளியே அப்படித் தெரியாதவராக, தன் கதாபாத்திர ஸ்கெட்ச்சுக்கான பணியைக் குறையின்றி செய்திருக்கிறார். ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், சிராக் ஜானி என நாயகனுக்கு எதிராக நிற்கும் மூன்று பேரும் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதிலும், சிராக் ஜானி நேர்மையான காவல் அதிகாரியாகத் தனித்து தெரிகிறார். பிரதான வில்லனாகச் சித்திரிக்கப்படும் தருண் அரோரா, விரல் விட்டு எண்ணும்படியான காட்சிகளே வருகிறார். பிரியா பவானிசங்கர், தான்யா ராஜேந்திரன் என இரு கதாநாயகிகளும் பேருக்கு மட்டும்தான். கதையில் எந்தவித தாக்கத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. இவர்கள் தவிர, மதுசூதன் ராவ், சாய் தமிழ், மைம் கோபி எனப் பலரும் வந்து போகிறார்கள்.
மொத்த படமுமே துறைமுகத்திற்குள்ளும், கடலுக்குள்ளும் மட்டுமே நடக்கிறது. முதற்பாதியில், துறைமுக நடைமுறைகள், சரக்குக் கப்பல்களில் கன்டெய்னர் அடுக்கும் முறைகள், தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ளோரின் பணிகள் எனப் புதிய கதைக்களத்தின் வழியாகத் திரைக்கதை நகர்கிறது. ஒரு சராசரி அடியாள், ஒரு தாதாவாக மாறச் செய்யும் புத்திசாலித்தனமான முயற்சிகள், ஆக்ஷன் சாகசங்கள், சம்பிரதாய காதல் காட்சிகள் எனப் பழகிய ரூட்டுதான் என்றாலும், வித்தியாசமான கதைக்களத்தால் அவை ரசிக்கும்படியாக மாறுகின்றன. அதேநேரம், புதுமையான காட்சிகளோ திருப்பங்களோ இல்லாததால், சிறிது நேரத்திலேயே அந்தப் புதிய கதைக்களமும் அலுப்புத்தட்டத் தொடங்கிவிடுகிறது.
முதற்பாதியில், ஒரு மையத்தை நோக்கி ஓடுவது போலத் திரைக்கதை இருந்தாலும், இரண்டாம் பாதியில் சகட்டுமேனிக்கு இலக்கற்றுச் செல்கிறது படம். ஒரு டாஸ்க், அதன் முடிவு, பின்னர் ஒரு டாஸ்க், அதன் முடிவு எனக் கோர்வையற்று, துண்டு துண்டாகப் பயணிக்கும் காட்சிகளால், படத்தோடு பெரிதாக ஒன்ற முடியவில்லை. இரண்டாம் பாதியில் வரும் கதாநாயகனுக்கான பின்கதையும் ஒரு 'பாரம்பரிய பிளாஷ்பேக்' வகையறாதான். ஒரு சர்வதேச குற்றவாளியைச் சட்டவிரோதமாக கன்டெயினரில் மறைத்துக் கடத்த கதாநாயகன் எடுக்கும் முயற்சிகளும், அது படமாக்கப்பட்ட விதமும் ஒரு நல்ல ட்ரீட். இவ்வகையில், ஆங்காங்கே சில ட்ரீட்கள் மட்டுமே கவனிக்க வைக்கின்றன.

அரசு அதிகாரிகளையே சாதாரணமாகக் கொல்லும் கதாநாயகன், ஏன் சாதாரண வில்லனோடு இப்படி மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார், சர்வதேச கடத்தல் மன்னனாக இருக்கும் பிரதான வில்லன் கபூர், எப்படி ஒரு கிரேன் ஆபரேட்டரை நம்பிக்கொண்டு இருக்கிறார், கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கும், காவல்துறை அதிகாரியான பிரியா பவானிசங்கருக்கும் இருக்கும் காதல் உறவு எப்படி யாருக்குமே தெரியாமல் இருக்கிறது என சில லாஜிக் ஓட்டைகளும் எட்டிப் பார்க்கின்றன. சர்வதேச கடத்தல் மன்னன் என்ற பில்டப்புடன் அறிமுகமானாலும் வீடியோ கால் பேசுவதைத் தவிர அவர் வேறு எதுவுமே செய்யவில்லை என்பது நெருடல்.
“குற்ற உணர்ச்சி, நன்றி, விஸ்வாசம், கற்பு, ஒழுக்கம் இதெல்லாம் நம்ம சமூகம் நம்மள அடிமையாக்க உருவாக்கி வச்சுருக்கு”, “பங்குச் சந்தையில இருந்து சராசரி மனுசன் வாங்குற வெங்காயம் வரைக்கும் பொருளோட விலையைத் தீர்மானிக்கிறது சீ ட்ராஃபிக் (Sea Traffic) தான்" போன்ற வசனங்கள், ஒரு வெங்காய கன்டெயினர் எப்படி, வெங்காய விலையைத் தீர்மானிக்கும் மறைமுக காரணியாகவுள்ளது என்பதை விளக்கும் காட்சிகள் போன்றவை பேச வேண்டிய அரசியல். அதேபோல, சர்வதேச பொருளாதாரத்தில் துறைமுகங்கள் வகிக்கும் பங்களிப்பையும் வசனங்களால் சிறப்பாக எடுத்துரைக்கின்றனர். ஆனால், அது வசன அளவில் மட்டுமே நின்றுவிட்டது சறுக்கல்.

`தமிழன்னை' கருணைக்கப்பல் என்பது ஒரு புதுமையான கான்செப்ட் என்றாலும் எப்படி அதைத் தொடர்ந்து இயக்க முடியும், அதற்கான உணவுப்பொருள்களை எப்படிச் சேகரிப்பார்கள், அதற்கான பொருளாதாரம், அகிலன் என்ற ஒரு தனிநபரால் இது சாத்தியமா என்று பல கேள்விகள் எழுகின்றன. என்னதான் துறைமுக ஊழியர், செல்வாக்கு உள்ள அடியாள் என்றாலும் ஜெயம் ரவி நினைக்கும்போதெல்லாம் துறைமுகத்தில் நுழைந்து அதிகாரிகளைக் கொல்வது உட்பட எல்லா வேலைகளையும் எளிதாகச் செய்வது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஒரு துறைமுகத்தினுள் சரக்குக் கப்பல்களுக்கு இடையே மொத்த படத்தையும் படமாக்கி, பிரமிப்பை வரவழைத்ததற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும், ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம் உட்பட மொத்த டெக்னிக்கல் குழுவையும் பாராட்டலாம். குறிப்பாகப் பழைய கப்பல், கப்பலின் உள்ளே வரும் காட்சிகள் என அனைத்துக்கும் மெனக்கெட்டிருக்கிறது கலை இயக்கக் குழு. ஆனால், சில காட்சிகள் கன்டென்ட்டாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் அவை வெறும் பிரமாண்ட ஷாட்டுகளாக மட்டுமே சுருங்கிப் போகின்றன. விறுவிறுப்பான காட்சிகளுக்கு உதவிய என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, அக்காட்சிகளுக்கான தொடக்கப் பகுதிகளில் கைகொடுக்காமல் போகிறது.
சாம்.சி.எஸ்ஸின் இசையில் வரும் ஒரு தொடக்கப் பாடலும், ஒரு கரோக்கி பாடலும் பெரிதாக ஈர்க்காமல் தேவையில்லாமல் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கடலில் தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போல, மொத்த படத்தையும் தன் பின்னணி இசையால் நிரப்பியிருக்கிறார் சாம்.சி.எஸ். ரிப்பீட்டாகும் தீம் இசை, பல இடங்களில் நம் காதுகளுக்கு வலியை மட்டுமே தருகிறது.
சர்வதேச கடத்தல் மாஃபியாவையும், உணவு அரசியலையும், துறைமுகங்களின் மறுபக்கத்தையும் ஒரு கமெர்ஷியல் படத்தில் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், கோர்வையற்ற திரைக்கதையால் பொறுமையைச் சோதிக்கும் ஒரு ஆக்ஷன் படமாக இது மாறிவிட்டதால், இந்த `அகிலன்' அகிலத்தையும் ஆளவில்லை, நம் மனங்களையும் ஆளவில்லை.