சினிமா
Published:Updated:

அகிலன் - சினிமா விமர்சனம்

அகிலன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அகிலன் - சினிமா விமர்சனம்

கிரேன் ஆபரேட்டர் பாத்திரம் ஏற்றிருக்கும் ஜெயம் ரவிதான் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கிச் சுமக்கும் கிரேனாக இருக்கிறார்.

கடல் வணிகம், அதன் கறுப்பு முகமான கடத்தல் தொழில், எல்லாவற்றுக்கும் களமான துறைமுகம் இவற்றை சர்வதேச அரசியலின் பின்னணியில் சிந்திப்பவனே ‘அகிலன்.'

துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராகப் பணிபுரியும் அகிலன், கடத்தல் தொழில் செய்யும் ஹரீஷ் பேரடியின் அடியாளாகவும் இருக்கிறார். துறைமுக அதிகாரிகளைக் கைக்குள் போட்டும் கண்ணில் மண்ணைத்தூவியும் எப்படிப்பட்ட கடத்தலையும் நிகழ்த்திவிடும் அகிலனுக்கு நேர்மை, ஒழுக்கம், விசுவாசம் என்று எதிலும் நம்பிக்கையில்லை. முழுக்க இருண்ட முகம் காட்டும் அகிலனுக்கு இன்னொரு முகம் இருக்கிறது, அகிலனின் உண்மையான நோக்கம் என்ன, அதைச் சாதிக்க முடிந்ததா என்பதைச் சொல்கிறது கதை.

அகிலன் - சினிமா விமர்சனம்
அகிலன் - சினிமா விமர்சனம்

கிரேன் ஆபரேட்டர் பாத்திரம் ஏற்றிருக்கும் ஜெயம் ரவிதான் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கிச் சுமக்கும் கிரேனாக இருக்கிறார். மரைன் இன்ஜினீயர் நந்தன் (அப்பா ஜெயம் ரவி) பாத்திரத்தைவிட அதிரடி முரட்டுத்தனம், புத்திசாலித்தனமான சாதுர்யம் இரண்டும் கொண்ட அகிலன் பாத்திரத்தில்தான் அதிகம் கவர்கிறார். அடியாளின் காதலி பெண் இன்ஸ்பெக்டராக பிரியா பவானி சங்கர். யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசிய உறவில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் எல்லா இடங்களிலும் இருவரும் சேர்ந்து சுற்றும் ‘ரகசியம்' மட்டும் நமக்கு விளங்கவேயில்லை. பிரியா பவானி சங்கருக்குத் திரைப்படத்தில் பத்து சதவிகிதம்கூட பங்கு இல்லை என்றாலும் இன்னொரு நாயகி தான்யா ரவிச்சந்திரனுக்கு ஒரு சதவிகிதம்கூட பங்கு இல்லை என்பதை நினைத்து ஆறுதலடையலாம். ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா என்று முதன்மையாக மூன்று வில்லன்கள் இருந்தாலும் எல்லோரையும் எளிதில் ஏமாற்றிவிடுகிறார் ஹீரோ. சிராக் ஜானி, மதுசூதனன் ராவ் இருவரும் கவர்கிறார்கள்.

அகிலன் - சினிமா விமர்சனம்
அகிலன் - சினிமா விமர்சனம்

துறைமுகத்தையே சுற்றிச்சுழலும் விவேக் ஆனந்தின் கேமரா பிரமாண்டத்தை அள்ளிவந்திருக்கிறது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை கவரும் அளவுக்குப் பாடல்கள் ஈர்க்கவில்லை. இதுவரை துறைமுகத்தை மையப்படுத்தி இவ்வளவு டீட்டெய்லிங்காகப் படம் வந்ததில்லை என்ற வகையில் இயக்குநர் எஸ்.கல்யாண கிருஷ்ணனின் முயற்சி பாராட்டத்தக்கது. தொழிற்சங்கத் தலைவருக்கு ஜனநாதனின் பெயரை வைத்ததுடன் அவர் இறுதிச்சடங்குக் காட்சியில் வீரவணக்கம் செலுத்தித் தன் குருநாதருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அசால்ட்டாக அகிலன் ஒரு கப்பல் அதிகாரியைச் சுட்டுவிட்டு வருகிறார். அதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை. தமிழன்னை என்ற சேவைக்கப்பல் என்பது புதிய உத்தி. ஆனால் தொடர்ச்சியாக உலகில் பசியால் வாடும் மக்களுக்கு உணவைக் கொண்டுசெல்ல அடிப்படை என்ன, அதற்காக அகிலன் கொலை, கடத்தலில் ஈடுபடுவது சரியா என்று பல கேள்விகளும் துறைமுகக் கப்பல்களைவிட அதிகம் வரிசைகட்டி நிற்கின்றன.

புதிய கதைக்களம் என்றாலும் நேர்த்தியற்ற திரைக்கதை, எளிதில் யூகிக்கத்தக்க பிளாஷ்பேக், லாஜிக் ஓட்டைகளால் இலக்கை எட்டாமல் திணறுகிறான் அகிலன்.