வருடம் 1988. வடசென்னையில் உள்ள ஒரு திரையரங்கம். அந்தத் திரைப்படத்தின் ஆல்பம் ஏற்கெனவே பயங்கரமாக ‘ஹிட்’ ஆகியிருந்தது. எனவே படத்தில் வரும் முதல் பாடலுக்காகக் கூட்டம் ஆவலுடன் காத்திருந்தது. பாடலின் இசைத்துணுக்கு ஆரம்பித்த அடுத்த கணம், ஒட்டு மொத்த திரையரங்கமும் பரவசத்துடன் எழுந்து ஆட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அது குத்துப் பாடலோ அல்லது ஹீரோ எண்ட்ரி பாடலோ கூட அல்ல. மல்டிபிளெக்ஸ் கலாசாரம் இன்னமும் உருவாகியிருக்காத அந்தக் காலகட்டத்தில் அதன் விதை போல இருந்தது அந்தப் படமும் பாடல்களும். அத்தனை நவீனம். அத்தனை ஸ்டைல். அந்தத் தலைமுறை இளைஞர்களின் இளமைக் கனவுகளைக் கச்சிதமாகப் பிரதிபலித்த திரைப்படமாக அது இருந்தது.
அந்தப் படம் – அக்னி நட்சத்திரம். ஒலித்த பாடல் – 'ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...'
பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தைப் பார்த்து விட்டு இயக்குநராகும் உத்வேகத்தில் கிராமத்திலிருந்து பல இளைஞர்கள் கிளம்பியதைப் போல, மணிரத்னத்தின் ‘நாயகன்’ திரைப்படம், பல நகரத்து இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியமைத்ததில் மணிரத்னத்தின் பங்கு கணிசமானது. அதிலும் ‘நாயகன்’ திரைப்படம் உருவாக்கிய தாக்கத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல இளைஞர்களிடம் இயக்குநர் கனவை விதைத்த படம்.

‘நாயகன்’ படத்தின் தாக்கம், அதற்குக் கிடைத்த பலத்த வரவேற்பு, அங்கீகாரம் போன்றவை காரணமாக மணிரத்னத்தின் அடுத்த படம் எப்படியிருக்கும் என்பதைக் காணப் பலருக்கும் ஆவல் இருந்திருக்கும். அதுவே ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் மீது பயங்கர ஆவலை ஏற்படுத்தியது. ஆனால் மணிரத்னம் உருவாக்கியதிலேயே குறைவான கதையம்சம் கொண்டது மற்றும் மசாலாத்தன்மை நிறைந்திருந்த படம் எதுவென்று கேட்டால் அது ‘அக்னி நட்சத்திரம்’தான். ஆனால் இதன் புதுமையான, வித்தியாசமான, இளமை ததும்பும் ‘மேக்கிங்’ காரணமாக வரவேற்பைப் பெற்றது.
‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடித்திருந்த நேரம். அடுத்த உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பித்து ஒரு பகுதி படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இடையில் வந்ததுதான் ‘நாயகன்’ படத்தை இயக்கும் வாய்ப்பு. கமல் என்னும் தங்க முட்டை கிடைத்தது. இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதில் சிரமம் இருந்ததால், அக்னி நட்சத்திரத்தை ஒத்திப் போட்டு விட்டு ‘நாயகனில்’ கவனம் செலுத்தினார். நாயகன் முடிந்தவுடன், அதாவது ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு ‘அக்னி நட்சத்திரத்தை’ மீண்டும் கையில் எடுத்து உருவாக்கி முடித்தார். மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட மகத்தான கூட்டணி, இளைய தலைமுறைக்கு ஏற்றவாறான ஒரு திரைப்படத்தைப் புத்துணர்ச்சி குறையாமல் தந்திருந்தது.
‘அக்னி நட்சத்திரம்’ – சகோதர யுத்தத்தின் உஷ்ணம்
விஸ்வநாத் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்குப் பிறந்தவன் கௌதம். இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகனும் மகளும். (அசோக், மல்லிகா) மனைவிகள் இருவரும் மௌனமாகச் சண்டையிட்டு ஒருவரையொருவர் தவிர்த்துக் கொள்கிறார்கள். மிக அமைதியாக நிகழும் சக்களத்திச் சண்டை. ஆனால் இதற்கு மாறாக இரண்டு மகன்களும் எலியும் பூனையும் போலப் பார்த்த இடத்தில் எல்லாம் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். இந்த விரோதமும் குரோதமும் ஊதுவத்தி புகை போலப் படம் முழுவதும் கமழ்ந்து கொண்டே இருக்கிறது.

இரு துருவங்களாகப் பிரிந்திருக்கும் இந்தக் குடும்பங்கள் ஒன்று சேர ஒரு பொதுக் காரணி வேண்டுமல்லவா? அப்படியாக ஒரு வில்லன் வருகிறார். அவரின் மூலம் நேர்மையான அப்பாவிற்கு ஆபத்து வருகிறது. அப்புறம் என்ன? ‘இரண்டு கைகள் நான்கானால்’... என்று இரண்டு மகன்களும் ஒன்று சேர்ந்து வில்லனை அழிக்க... சுபம்.
ஏற்கெனவே சொன்னபடி மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே கதையம்சம் குறைவாக இருக்கிற படம் இது. மிகச் சிறந்த பாடல்கள், நேர்த்தியான ஒளிப்பதிவு, சுவாரஸ்யமாக அடுக்கப்பட்ட காட்சிகள், துள்ளலான நடனங்கள், வசனங்கள் போன்றவற்றின் மூலம் ஒரு நல்ல கேளிக்கைப் படமாகத் தந்திருந்தார் மணிரத்னம். அது கமர்ஷியல் சினிமாவாகவே இருந்தாலும் கூட அதன் தரத்திற்கு எத்தனை மெனக்கெட வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.
இதிகாச கர்ணனின் பாத்திரத்திற்கு நிகரான ‘அசோக்’
அசோக் ஆக கார்த்திக். அவரை மிக மிக ஸ்மார்ட்டான தோற்றத்தில் காட்டியிருக்கும் படங்களில் ஒன்று இது. இரண்டாவது மனைவியின் பிள்ளையாக இருந்தாலும் இவரைத்தான் முதலில் காட்டுகிறார்கள். ஒரு Illegitimate Child-ன் அத்தனை மன அவஸ்தைகளையும் அடையாளச் சிக்கல்களையும் திறமையாக நடித்துக் காட்டியிருக்கிறார் கார்த்திக். சாலையைக் கவனக்குறைவாக அசோக் கடக்கும் போது, எதிரே வரும் கார் காரன், தற்செயலாக ஒரு கெட்ட வசையை எடுத்து விட, கையில் கைக்குட்டையைச் சுற்றிக் கொண்டு கார் கண்ணாடியை உடைத்து அவனை எச்சரிக்கிறான் அசோக். மற்றவர்களை விடவும் அந்த வசை அவனை ஆழமாகப் பாதிக்கிறது என்பதை ‘நச்’ என்று உணர்த்தும் காட்சி அது.

“அந்த வீட்டுக்கு நான் போக மாட்டேன்” – படத்தில் கார்த்திக் அடிக்கடி சொல்லும் வசனம் இது. ஆனால் சந்தர்ப்பச் சூழல் காரணமாக ‘பெரிய வீட்டிற்கு’ போக வேண்டிய கட்டாயம் அடிக்கடி நேரும். அங்கு விழுங்க நேரும் அவமதிப்புக் கசப்புகளை தன் முகபாவத்தால் கார்த்திக் வெளிப்படுத்தும் காட்சிகள் சிறப்பானது. இதிகாச கர்ணனின் பாத்திரத்திற்கு நிகரான மன உளைச்சலைக் கொண்ட பாத்திரம் ‘அசோக்’.
தல, தளபதி அளவிற்கு இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் இருதுருவ நடிகர்களின் வரிசையில் கார்த்திக் – பிரபுவும் இருந்தார்கள். இருவருமே ‘பிரபல நடிகரின் மகன்’ என்கிற சொகுசான வழியில் சினிமாவிற்குள் வந்துவிட்டாலும் தங்களின் தனித்தன்மை மற்றும் திறமை காரணமாக நீடித்து நின்றார்கள். அசிஸ்டென்ட் கமிஷனர் என்கிற ஃபிட் லுக்கில் புஷ்டியான பிரபுவைப் பொருத்திப் பார்ப்பது சற்று கடினமான காரியமாக இருந்தாலும், தனது கம்பீரமான நடிப்பால் அதைச் சமன் செய்தார். பெரும்பாலும் கார்த்திக்கை முறைத்துக் கொண்டே இருப்பதில் இவரது நேரம் கழிகிறது. அமலாவிடமும் அதே மாதிரி இருக்க எப்படித்தான் மனது வந்ததோ?! கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, தன் சொந்த அம்மாவே வந்து நிற்கும் போது, அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே கையெழுத்து வாங்கும் காட்சி, பிரபுவின் சிறந்த நடிப்பிற்கு ஓர் உதாரணம்.
"என்ன அசிஸ்டென்ட் கமிஷனர் சார்... தள்ளிட்டு வந்துட்டீங்களா?”
மணிரத்னத்தின் நாயகிகள் எப்போதுமே துள்ளலானவர்கள். அறிமுகமில்லாத இளைஞனிடம் “ஓடிப் போலாமா?" என்று துடுக்காகக் கேட்டு அதிர வைப்பார்கள். அதே சமயத்தில் இயல்பானவர்கள். உள்ளுக்குள் உறுதியானவர்கள். இந்தப் படத்தில் அமலா வரும் காட்சிகள் எல்லாம் இளமைத் திருவிழாதான். திருட்டு தம் அடிக்க முயன்று, பிரபுவிடம் மாட்டிக் கொள்ளும் முதல் காட்சியிலேயே நம் மனதைத் திருடி விடுகிறார். “என்ன அசிஸ்டென்ட் கமிஷனர். தள்ளிட்டு வந்திட்டியா?" என்று கார்த்திக்கின் நண்பர்கள் கிண்டலடிக்கும் அதே வசனத்தை, பிரபுவிடம் இவரும் கேட்பது குறும்பான காட்சிகளுள் ஒன்று.

நிரோஷா இந்தப் படத்தில்தான் அறிமுகம். குட்டிச் சுவரில் விட்டேற்றியாகச் சாய்ந்தபடி நண்பர்களிடம் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் கார்த்திக்கிடம், வம்படியாக காரை நிறுத்தி விட்டு, உதட்டைச் சுழித்து ‘ஐ லவ் யூ’ என்று பின்னணி இசையுடன் சொல்லுமிடம் அதகளம். “ஹே... யாருப்பா இந்தப் புள்ள?!” என்று அப்போதைய விடலைகள் அரண்டு போனார்கள். அப்படியொரு ஸ்டைலிஷான தோற்றம். சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல் இருந்தவரை, மணிரத்னம் படம் என்பதால் ராதிகாதான் வற்புறுத்தி நடிக்க வைத்தாராம். ‘டாக்... டாக்...’ என்று கார்த்திக்கின் மிடில் கிளாஸ் வீட்டிற்குள் நுழைந்து “அசோக்... நான் கர்ப்பமா இருக்கேன்... என்னைக் கை விட்டுடாத” என்று சொல்லி விட்டு அதே டாக் டாக் நடையில் வெளியேறுவது பட்டாசான காட்சி.
தன்னைப் போலவே நிரோஷாவின் பின்னணியும் அடையாளச் சிக்கல் கொண்டது என்பதை உணரும் கார்த்திக் நெகிழ்வது ஒரு நல்ல காட்சி. ‘ஒரு பூங்காவனம்’ என்கிற பாடலை அதன் இனிமைக்காக என்பதைத்தாண்டி நிரோஷாவிற்காகவே ரிப்பீட் மோடில் பார்த்தவர்கள் பலர்.
விஜயகுமாரின் செகண்ட் இன்னிங்க்ஸ்
நீண்ட காலமாகத் தமிழ்த் திரையில் தோன்றாமல் ஒதுங்கியிருக்கிறவர்களை மீண்டும் கொண்டு வந்து ஓர் இனிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவது மணிரத்னத்தின் காஸ்டிங் ஸ்டைல். இந்த வழக்கத்தை அவரது பல படங்களில் பார்க்கலாம். அதைப் போலவே இதிலும் சில வருடங்கள் நடிக்காமல் விலகியிருந்த விஜயகுமாரை மீண்டும் அழைத்து வந்தார் மணிரத்னம். அமெரிக்காவிலிருந்து தற்காலிகமாக வந்திருந்தவரைச் சந்தித்துக் கதை சொல்லப்பட்டது. ஸ்கிரிப்ட்டினால் ஈர்க்கப்பட்ட விஜயகுமார், உடனே ‘ஓகே’ சொன்னார். ‘விஸ்வநாத்’ என்கிற பாத்திரத்திற்குக் கூடுதல் சுவாரஸ்யம் அளித்திருந்தார். இரண்டு மகன்களையும் பெயர் மாற்றி அழைப்பது, அவர்கள் சண்டையிடுவதை வேதனையுடன் பார்ப்பது, ஒரு கட்டத்தில் "எனக்கு ரெண்டு குடும்பம் இருக்குன்றதை நான் என்னிக்குமே வெட்கமா நெனச்சதில்லை. ஆனா இன்னிக்கு உங்களால அப்படி நெனக்கறேன்” என்று இருவரையும் நிற்க வைத்து வெடிப்பது... என்று விஜயகுமாரின் இரண்டாவது இன்னிங்கிஸ்கிற்கு வலுவான அஸ்திவாரத்தை ‘அக்னி நட்சத்திரம்’ ஏற்படுத்தித் தந்தது.

விஜயகுமாரைப் போலவே நீண்ட காலம் திரையில் தோன்றாமல் இருந்த சுமித்ரா, ஜெயசித்ரா ஆகியோரும் காஸ்ட் செய்யப்பட்டிருந்தார்கள். முதல் மனைவி என்கிற மிடுக்குடன் பல காட்சிகளில் வருவார் சுமித்ரா. என்றாலும் கணவருக்கு இன்னொரு உறவு இருக்கிறது என்கிற விஷயம் எந்தவொரு பெண்ணுக்கும் வாழ்நாள் முள்தான். அந்த வேதனையையும் ஊடாகத் தந்திருப்பார். ‘இரண்டாவது மனைவி’ என்கிற தாழ்வுணர்ச்சி, குற்றவுணர்ச்சி போன்றவற்றை அமைதியான முகபாவத்துடன் தந்து அசத்தியிருப்பார் ஜெயசித்ரா. இவர் நாயகியாக நடித்த காலத்தில் துடுக்குத்தனமான பாத்திரங்களுக்குப் பெயர் பெற்றவர். இப்படியொரு அமைதியான, சகிப்புத்தன்மையுடன் கூடிய நிதானமான பாத்திரத்தில் ஜெயசித்ராவைப் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது.
இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரத்தை நிச்சயம் சொல்லியேயாகவேண்டும். அது வில்லனாக நடித்த ஜி.உமாபதி. சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், பதிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். ‘ராஜராஜ சோழன்’ இவர் தயாரித்த படம்தான். ‘சாந்தி’ மற்றும் ‘ஆனந்த்’ என்று சென்னையில் இரண்டு திரையரங்குகளை ஸ்தாபித்தவர். (சாந்தி தியேட்டர் பிறகு சிவாஜிக்கு விற்கப்பட்டது).
தோளில் அங்கவஸ்திரம் வழிய வழிய, ஒரு அரசியல்வாதியின் கெட்டப்பில் “தோ பார் ராஜா... இப்படி வந்து உக்காரு தம்பி... நல்லாயிருக்கீங்களாம்மா?” என்று ஊரிலிருந்து வந்த பெரியப்பா விசாரிப்பது போலவே விஜயகுமாரின் குடும்பத்தை நலம் விசாரித்து அமைதியான வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்தார். அதுவரை உரக்கச் சிரித்து வித விதமான முகசேஷ்டைகள் செய்து வில்லத்தனம் காட்டிய நடிகர்களிடமிருந்து விலகி இவரது நடிப்பு வித்தியாசமாக அமைந்திருக்கும்படியாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்திருந்தார் மணிரத்னம். கார்த்திக்கின் கையில் இருக்கும் தீக்குச்சியை ஊதி அணைத்து “பார்த்து தம்பி... கையைச் சுட்டுக்கப் போற” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு வில்லன் விலகுவது ஒரு சுவாரஸ்யமான காட்சி.

‘லட்சுமிபதி... முதலாளி...’ – நகைச்சுவை அதகளம் செய்திருந்த வி.கே.ஆர் + ஜனகராஜ்
சிறந்த இயக்குநர் என்பதைத் தாண்டி மணிரத்னம் பிசினஸ் மூளையும் கொண்டவரும் கூட. தனது பிரத்யேக சுவையில் உருவாக்கிய ஒரு படத்தை எப்படி வணிகமாக்குவது என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கேற்ப சில சமரசங்களையும் செய்து கொள்வார். அந்த வகையில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் காமெடி டிராக்கைச் சொல்ல வேண்டும். படத்திற்குள் பொருந்தாமல் இந்த நகைச்சுவையை அநாவசியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த காமெடி டிராக் தனிப்பாதையில் பயணித்தாலும் வி.கே.ஆர் – ஜனகராஜ் கூட்டணி, இந்த நகைச்சுவைப் பகுதியில் அதகளம் செய்திருந்தது. ‘லட்சுமிபதி...’ என்று விகேஆர் அரற்றுவதும், ‘முதலாளி...’ என்று ஜனகராஜ் பதிலுக்குப் பாசத்துடன் ஆறுதல் சொல்வதும் சுவாரஸ்யமான காட்சிகள். “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்று ஜனகராஜ் உற்சாகமாகக் கத்துவது அழியாத, நிரந்தர முத்திரையாக ரசிகர்களின் நெஞ்சில் பதிந்துவிட்டது. இருவரும் சேர்ந்து ‘பலான படம்’ பார்க்கும் காட்சியில், ‘திரையில் என்ன ஓடுகிறது?’ என்பதை இவர்களின் எக்ஸ்பிரஷன்களின் மூலமாகக் கண்டுகொள்ள முடியும். அப்படியொரு பரவச நிலையை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள்
இசை ஆல்பம் என்பதைப் பொறுத்தவரை மணிரத்னம் + இளையராஜா என்பது எப்போதுமே ஸ்பெஷல். உத்தரவாதமாக ‘ஹிட்’ ஆகக்கூடிய பாடல்களை எதிர்பார்க்கலாம். இதற்கு ‘அக்னி நட்சத்திரத்தின்’ பாடல்களும் விதிவிலக்கல்ல. பாடல்கள் சிறப்பாக அமைந்ததைப் போலவே அதைக் காட்சிப்படுத்துவதிலும் மணிரத்னம் நிறைய மெனக்கெடுவார் என்பதற்கு இந்தப் படமும் ஓர் உதாரணம். ‘ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்கிற அட்டகாசமான பாடல், ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரகளையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நடனம் ஆடுபவர்களில் சிலர் வரவில்லையென்பதால் தன் மகனை ஆட வைத்திருந்தார் சுந்தரம் மாஸ்டர். எனவே இந்தப் பாடலில் பிரபுதேவா நடனமாடுவதைக் காண முடியும். ‘மௌன ராகம்’ திரைப்படத்தில் ‘பனிவிழும் இரவு’ பாடலிலும் ஏற்கெனவே வந்திருந்தார்.

பொங்கும் இளமையுடன் அமலா – பிரபு ரொமான்ஸைக் காட்சிப்படுத்தியிருக்கும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலின் இடையிசையில் ‘டிரம் பீட் எத்தனை முறை வருகிறது?’ என்பதைச் சரியாக எண்ணிச் சொல்வது எங்களின் அப்போதைய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது. ‘வா வா... அன்பே அன்பே...’வின் பாடலின் தொடக்க இசையே அத்தனை அற்புதமாக இருக்கும். கார்த்திக்கும் நிரோஷாவும் கேமராவே வெட்கப்படும்படி நடித்திருப்பார்கள். எனவே சென்சார் விழிப்பாக இருந்து சில காட்சிகளை வெட்டியிருக்கும் இடைவெளிகள் நன்கு தெரியும்.
வித்தியாசமான லைட்டிங்கில் அசத்திய பி.சி.ஸ்ரீராம்
‘அக்னி நட்சத்திரத்தின்’ இன்னொரு ஸ்பெஷல் அதன் ஒளிப்பதிவு. அதுவரை தமிழ் சினிமாவில் பதிவாகிக் கொண்டிருந்த மரபான ஒளிப்பதிவு பாணியை பி.சி.ஸ்ரீராமின் புத்துணர்ச்சியும் பரிசோதனை முயற்சியும் உடைத்துப் போட்டது எனலாம். வீட்டிற்குள் நுழையும் மதிய வெயில் வெளிச்சத்தில், எவர்சில்வர் குடத்தை வைத்தால் எப்படி அது வீடு முழுக்க எதிரொலிக்குமோ, அப்படியான லைட்டிங்கை சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தார் ஸ்ரீராம். இந்த மாதிரியான பரிசோதனைகள், படத்திற்குப் புதுவிதமான நிறத்தைத் தந்தாலும் சில இடங்களில் அவை மிகையானதாக இருந்ததோ என்று தோன்றுகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ்!
'காட்ஃபாதர்' திரைப்படமும் அகிரா குரோசாவாவின் சில திரைப்படங்களும் மணிரத்னத்திற்கு அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பல படங்களில் உணரலாம். பதறியோடும் குதிரைகளுக்கு நடுவே பிரபுவிற்கும் கார்த்திக்கிற்கும் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை, அகிராவின் படங்களை நினைவுபடுத்துகிறது. 'காட்ஃபாதர்' திரைப்படத்தில், மருத்துவமனையில் இருக்கும் தனது அப்பாவிற்கு எதிரிகளால் ஆபத்து சூழ்வதை உணரும் அல் பசினோ, துரிதமாகச் செயல்பட்டு அறையை மாற்றிவிடுவார். இதே காட்சியின் பாதிப்பில் இதன் க்ளைமாக்ஸை உருவாக்கினார் மணிரத்னம். துரிதகதியில் எரிந்து எரிந்து அணையும் Strobe light-களைப் பயன்படுத்தி படமாக்கப்பட்ட இந்த க்ளைமாக்ஸ் காட்சியைப் பாராட்டியவர்களும் உண்டு. ‘தலைவலியே வந்துடுச்சு’ என்று திட்டியவர்களும் உண்டு. வெளியீட்டிற்கு முன்பாக இந்தக் காட்சியைப் பற்றிய விமர்சனம் மணிரத்னத்திற்குக் கிடைத்தாலும், புதுமையான முயற்சியைப் படைத்தாக வேண்டும் என்கிற தாகத்தால் அதை மாற்றாமல் அப்படியே வைத்துவிட்டார்.

படம் முழுவதும் இருந்த 'மணிரத்ன' ஸ்டைல்
இந்தப் படத்தின் திரைக்கதையில் 'மணிரத்ன' பாணியில் அமைந்த காட்சிகளை நிறையப் பார்க்கலாம். ஒரே வசனத்தை வெவ்வேறு முரணான சூழலில் பயன்படுத்துவது இயக்குநரின் ஸ்டைல். 'மௌனராகம்' படத்தில் ‘நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்குது’ வசனத்தை நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதைப் போல இதிலும் சில இடங்கள் வருகின்றன. “நான் ஒரு நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம். ஆனா ஒரு நல்ல புருஷன்!” என்று கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு இன்னொரு வீட்டிற்குச் செல்வார் விஜயகுமார். ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காக நெடுநேரம் காத்திருந்து நொந்துபோய் அமர்ந்திருப்பார் முதல் மனைவி. “நீங்க ஒரு நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம். ஆனா நல்ல புருஷனா இருங்க...” என்று வெடிப்பார் பிரபு.
பிரபுவும் கார்த்திக்கும் பரஸ்பரம் மற்றவரை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தும் காட்சிகள் வெவ்வேறு சூழலில் அமைந்திருப்பது படத்தின் உஷ்ணத்தைக் கூட்டுபவை. இருவருக்குமான மோதல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிற பில்டப்பை ஏற்றிக் கொண்டே சென்றிருப்பார் மணிரத்னம். ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்று 'மௌனராகத்தில்' கலாட்டா செய்வதைப் போலவே, இதிலும் நிரோஷாவும் அவரது தந்தையும் ஹோட்டலில் இருக்கும் போது வந்து கலாட்டா செய்வார் கார்த்திக்.
போலீஸ் ஸ்டேஷனில் ஜாமீன் கையெழுத்துப் போடும் போது, சுமித்ராவின் பக்கத்தில் கையெழுத்திடும் ஜெயசித்ரா, ‘வி’ என்கிற இனிஷியலை எழுதுவதற்கு முன் ஒரு கணம் தயங்குவது இயக்குநரின் ‘டச்’. ஓடும் ரயிலில், அசோக்கின் தங்கையிடம் வில்லனின் ஆட்கள் வம்பு செய்யும் போது, தன்னிச்சையாக முன்வந்து பாசம் காட்டி அவர்களைப் பிரபு விரட்டியடிப்பது சுவாரஸ்யமான காட்சி. என்னதான் இரண்டாவது குடும்பத்தை வெறுத்தாலும், அப்பாவின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள், நமக்கும் உறவினர்களே என்பது ஒரு கட்டத்தில் முதல் குடும்பத்திற்குத் தோன்றி விடும்.

ஒரு மசாலா திரைப்படத்தை, சுவாரஸ்யமான மேக்கிங், மெனக்கெட்டு எழுதப்பட்ட திரைக்கதை, அற்புதமான இசை, ஒளிப்பதிவு போன்றவற்றின் மூலம் மகத்தான அனுபவமாக மாற்றிவிட முடியும் என்பதற்கான கச்சிதமான உதாரணம் ‘அக்னி நட்சத்திரம்’. இன்றைய தலைமுறையினர் கூட விரும்பிப் பார்க்க முடியும் அளவிற்கு உருவாக்கப்பட்டிருப்பது மணிரத்னத்தின் இளமை ததும்பும் டைரக்ஷன் பாணிக்குச் சாட்சியமாக நிற்கிறது.