
படங்கள்: விக்னேஷ்
``நான், `கனா' படம் முடிச்சவுடனே, நிறைய கதைகள் கேட்டுட்டு இருந்தேன். அப்போ, டைரக்டர் நெல்சன் வெங்கடேசனை சந்திச்சப்ப `ஃபர்ஹானா' கதையைச் சொன்னார். கேட்டதுமே பிடிச்சிருச்சு. வித்தியாசமான கதை. தமிழ் சினிமாவுக்கு `ஃபர்ஹானா' ரொம்பப் புதுசா இருக்கும்'' - விரைவில், ரிலீஸாகவிருக்கும் `ஃபர்ஹானா' படத்தின் புரொமோஷனில் சுறுசுறுப்பாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷைப் பிடித்தபோது குஷி பொங்கப் பேசியவர், தொடர்ந்தார்...
``படத்தோட டீசர் பார்த்துட்டு நிறைய நண்பர்கள் போன் பேசினாங்க. டீசரை மட்டும் வெச்சிக்கிட்டு, படத்தோட கதையை முடிவு செய்யாம இருந்தால் போதும். படம் பார்த்துட்டு வெளியே வர்றப்போ எல்லோருக்கும் `ஃபர்ஹானா' பிடிக்கும்.

என்னுடைய நெருங்கிய தோழி ஆண்ட்ரியா. லாக்டௌன் நேரத்தில் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கேக்கெல்லாம் சமைச்சு சாப்பிட்டிருக்கோம். அந்தத் தோழி, `ஃபர்ஹானா' படத்தோட ஒரு சிங்கிள் டிராக் பாடியிருக்காங்க. படத்துக்கு புரொமோஷனும் பண்ணுறாங்க. ரொம்ப ஹேப்பியா இருக்கு. இந்தப் படத்துல ஐஸ்வர்யா தத்தா இருக்காங்க. அவங்களும் எனக்கு நல்ல தோழி. சமீபத்துல சி.எஸ்.கே மேட்ச்சுக்கு ஒண்ணா போயிட்டு வந்தோம். ஜித்தன் ரமேஷ், கணவர் கேரக்டர் பண்ணியிருக்கார். இந்தப் படம் அவருக்கு நல்ல பேரை கண்டிப்பா வாங்கிக்கொடுக்கும்.
டைரக்டர் நெல்சன் வெங்கடேசன், ரீ டேக் போயிக்கிட்டே இருப்பார். கொஞ்சம்கூட திருப்தி அடைய மாட்டார். இவர்கிட்ட டேக் ஓகே ஆகுறது கஷ்டம்.
படம், முஸ்லிம் சப்ஜெக்ட். ஆனா, அந்த மதச் சடங்குகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. படத்தோட ஷூட்டிங் போறதுக்கு முன்ன முஸ்லிம் அம்மா ஒருத்தர் பத்து நாள் ட்ரெய்னிங் கொடுத்தாங்க. நமாஸ் எப்படிப் பண்ணணும்கிறதுல ஆரம்பிச்சு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க.

இப்ப ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களா தேடிப் பிடிச்சுப் பண்ணுறேன். இது ரொம்பப் பிடிச்சிருக்கு... ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள்வழியா நிறைய மெசேஜ் சொல்ல வேண்டியிருக்கு. ஒரு நல்ல படத்தைப் பண்ணுறேன்னு திருப்தி அதுல கிடைக்குது.
ஒரு படத்துல கமிட்டாகும்போது கதை மட்டுமல்லாம, தயாரிப்பு நிறுவனம், அதன் புரொமோஷன் சைடு எனப் பலதும் மனசுல வச்சிக்கிட்டு ஓகே பண்ணுவேன். படத்தைப் பார்க்கிறவங்களுக்கு ஒரு மெசேஜ் இருக்கிற மாதிரியான சப்ஜெக்ட்தான் செலக்ட் பண்ணுறேன்.''