சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

குடும்பத்துடன் அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் அஜித்

AK61 அப்டேட்

‘கோட்டை இல்லை, கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா’ பாடல் அஜித்குமாருக்கும் பொருந்தும்போல. அவர் ரசிகர் மன்றங்களைக் கலைத்து ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்கூட இன்னமும் அவரின் ரசிகர்கள் ‘நாங்க வேற மாறி’ எனக் கெத்து காட்டுகிறார்கள். உற்சாகம் துள்ளும் அஜித்தின் ரசிகர்கள் மே 1-ல் அவரது பிறந்தநாள் வருவதனால் கொண்டாட்டத்தில் புன்னகைக்கிறார்கள். அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக அவருடன் பணிபுரிந்த இனிய தருணங்களைப் பகிர்கிறார், இயக்குநர் சிவா.

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்
ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

``அஜித் சார் ரொம்பவே அன்பான மனிதர். அவரோட நட்பு, அவருடைய வழிகாட்டுதல் எனக்குக் கிடைச்சதே மிகப்பெரிய வரமா நினைக்கறேன். அஜித் சார்னாலே ரெண்டு விஷயங்கள் ஞாபகத்துல வந்திடும். அவர் பயங்கரமான தைரியசாலி சார். ‘வீரம்’ படத்துக்காக ட்ரெயின்ல ஒரு காட்சி எடுத்தோம். அஜித் சார்கிட்ட கதை சொல்லும்போது, ட்ரெயின்ல இருந்து வெளியே தொங்கிட்டு வர்ற மாதிரிதான் கதையா சொல்லியிருந்தோம். ஆனா, அதைப் படமாக்கறப்ப ரொம்பவே ரிஸ்கா இருந்ததனால, டூப் வச்சுப் பண்ணிக்கலாம்னு பிளான் பண்ணினேன்.

ஆனா அஜித் சாரோ, ‘நீங்க கதை சொன்னப்ப என்ன சொன்னீங்களோ அதே மாதிரி பண்ணிக்கலாம் சிவா’ன்னார். உடனே நான் `ரொம்ப ரிஸ்க்காத் தெரியுதே சார்’னு சொன்னேன். ‘இல்ல, பண்ணிக்கலாம்’னு சொல்லிட்டார். அந்தக் காட்சி ட்ரயல் பண்றப்ப, ஒரு இடத்துல 350 அடிக்கு மேல ஆழம் இருந்துச்சு. அஜித் சார் என்னைக் கூப்பிட்டு, ‘இந்த இடத்துல பண்ணலாம்’னு சொன்னார். ஒருத்தர் இவ்ளோ தைரியமா இருக்க முடியுமான்னு எனக்கு ஆச்சரியமாகிடுச்சு.

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

அதேபோல ‘விவேகம்' படத்தில் ஒரு பெரிய பில்டிங்ல இருந்து ரோப் கட்டிக்கிட்டுக் கீழே இறங்குற சீன் இருந்துச்சு. அதுவும் பயங்கர உயரம். அதிலும் தைரியமா இறங்கினார். அந்தப் படத்துலேயே இன்னொரு காட்சியில் பனியில் அசாத்திய துணிச்சலுடன் இறங்கி நடிச்சார்.

அவருக்கு ஏகப்பட்ட ஆபரேஷன்கள் பண்ணியிருக்கற விஷயம் எனக்கும் தெரியும். படப்பிடிப்பில் எனக்கும் அவருக்கும் வாக்குவாதங்கள் வர்றது ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். நான் ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு சொன்னாலும் அவர் கேட்க மாட்டார். லாஜிக்கலாப் பேசி என்னை கன்வின்ஸ் பண்ணிடுவார்.

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

‘ஆலுமா டோலுமா’ பாடல் ஷூட் பண்றப்ப ஏற்கெனவே சர்ஜரி பண்ணின ஒரு இடத்துல, மறுபடியும் அவருக்கு அடிபட்டுடுச்சு. வலியில் அவர் கண்ணு கலங்கிடுச்சு. அந்த வலியோடு, டாக்டர் வர்றதுக்குள் அவரே முதலுதவி பண்ணிக்கிட்டார். அப்புறம் டாக்டர்கள் வந்து, செக் பண்ணின பிறகு அவர்கிட்ட, ‘இன்னிக்கு முழு ஓய்வு எடுங்க. பர்ஃபாம் பண்ண வேணாம்’னு சொன்னாங்க. ஆனா அஜித் சாரோ, ‘இல்லீங்க. செட் போட்டிருக்கு, இன்னிக்கு ஒருநாள் ஷூட் பண்ணினா, முழுப்பாடலும் முடிஞ்சிடும்’னு சொல்லி அந்தப் பாடல்ல நின்னுக்கிட்டே பண்ணிக் கொடுத்தார். அதுதான் அஜித் சார்!

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்
ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

அவரிடம் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு விஷயம் தைரியம்னா, இன்னொரு விஷயம், அவரது நேர்மை. அவ்ளோ ஹானஸ்ட்டா இருப்பார். அந்த புராஜெக்ட்டுக்கு, அவரது ரசிகர்களுக்கு, டெக்னீஷியன்களுக்கு, அந்தப் படத் தயாரிப்பாளருக்குன்னு எல்லாருக்குமே அவ்ளோ ஹானஸ்ட்டா இருப்பார். எந்த அளவுக்கு நேர்மையா இருக்கிறாரோ அந்த அளவு எல்லாரிடமும் அன்பாவும் இருப்பார். நிறைய விஷயங்கள் மனசுவிட்டுப் பேசுவார்.

அஜித் சாருடன் நாலு படங்கள் ஒர்க் பண்ணியிருந்தாலும் மே முதல் தேதியில் எங்க படப்பிடிப்பு இருக்கற மாதிரி எதிலும் அமையல. இப்படி ஒரு சந்தர்ப்பத்துல அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறதுல ரொம்பவே சந்தோஷப்படுறேன். தங்கமான மனிதருக்கு தங்கமான பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்!’’

சொல்லும்போதே மகிழ்ந்து நெகிழ்கிறார் சிவா.

*****

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

அஜித் 5

* `அஜித்-61’ல் அஜித் நெகட்டிவ் ஷேட் கேரக்டரில் நடிக்கிறார். ‘மங்காத்தா’ ஹிட்டின் போது அவர் சொன்ன விஷயம் இது. ‘`ரசிகர்கள் புத்திசாலிகள். அவங்களுக்கு என்ன கொடுக்கிறோமோ அதைத் தெளிவாச் சொல்லிட்டாப் போதும். அவங்க அதை ஏத்துப்பாங்க... என்னால காலேஜ்ல போய் ஒரு பொண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லி இனிமே நடிக்க முடியாது. என் வயசுக்கேத்த வேடம் வேணும். அமிதாப் ஹீரோவா பண்ணினப்ப அவர்கூட தர்மேந்திரா, ஜிதேந்திரா, ராஜேஷ் கண்ணான்னு நிறைய ஸ்டார்ஸ் இருந்தாங்க. ஆனா, இன்னிக்கு அமிதாப் மட்டுமே இருக்கார். ஏன்னா வயசுக்கேத்த கதாபாத்திரங்களை அவர் செலக்ட் பண்ணி நடிக்கறார்...’’ என்ற அஜித், அதன்பிறகு தனது படங்களில் லவ், டூயட்களைக் குறைத்தும், தவிர்த்தும் வந்தார். இந்தக் கொள்கையை `அஜித்-61’லிலும் கடைப்பிடிக்கிறார். அவரது பாலிசிக்கேத்த கதையாக ‘அஜித்-61’ஐ ஹெச்.வினோத்தும் வடிவமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நல்லவனும் அவர்தான். கெட்டவனும் அவர்தான்.

* ‘ஏ.கே-61’ படத்திற்கு மொத்தம் 60 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ரகுலும் உண்டு, தபுவும் உண்டு.

* அஜித்தின் சமீபத்திய படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் தொடர்ந்து ஹைதராபாத்திலேயே நடந்துவருவதால், எல்லா இடங்களும் அவருக்கு அத்துப்படி. படப்பிடிப்பு எங்கு நடந்தாலும், லொகேஷன்களை அனுப்பச் சொல்லிவிடுகிறார். அங்கே சைக்கிளிலோ பைக்கிலோ ஆஜராகிவிடுகிறார்.

ஹீரோவும் நானே... வில்லனும் நானே! - டபுள் ஆக்ட் அஜித்... ரெண்டு ஹீரோயின்கள்

* நெகட்டிவ் ஷேட் அஜித்தின் போர்ஷன்களைத்தான் ஹைதராபாத்தில் இப்போது படமாக்கிவருகின்றனர். ஹீரோயின்கள் போர்ஷன் மே இரண்டாவது வாரத்திலிருந்துதான் படமாக்க உள்ளனர். அஜித்தின் இன்னொரு லுக்கில் ஸ்டைலான அஜித்தைப் பார்க்கலாமாம்.

* `அஜித்-62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். `அஜித்-63’ஐ சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்குகிறார் என்ற பேச்சு இருக்கிறது. இதுபற்றி சிவாவிடம் கேட்டால், முகம் மலர்கிறார். ‘`இதை அஜித் சார் அதிகாரபூர்வமாகச் சொல்வதுதான் சரி" என்கிறார் சிரித்த முகத்துடன்!