அத்தியாயம் 2
Published:Updated:

அஜித்... விஜய்... பிரசாந்த்... சூர்யா...

Ajith, Vijay, Prashanth, Surya relay interview
பிரீமியம் ஸ்டோரி
News
Ajith, Vijay, Prashanth, Surya relay interview

“ஒரே நாளில், நாலு டாப் ஹீரோக்களிடம் எடுக்கப்பட்ட ‘ரிலே’ பேட்டிகள்”

``எனக்கு வில்லனே பிரசாந்த்தான்!"

ன்னுடைய டிரேட் மார்க் அடையாளமான இரண்டு நாள் தாடியோடு இருந்தார் அஜீத். சகல நகரங்களிலிருந்தும் `முகவரி' ரிசல்ட் வந்துகொண்டிருந்தது.

"ஜெயிக்கறதுகூடப் பெரிய விஷயமில்லை... அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குள் பெரும் பாடாப் போயிடுது. இந்த வெற்றிகளுக்குப் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிப் போய்விட்டதால் அதற்கேற்ற மாதிரி உழைக்கவேண்டியிருக்கு. கஷ்டம்தான் பாஸ்..." என்று `சந்தோஷமாக'க் கவலைப்பட்டார்.

அஜீத் அலுவலகத்தில் ஒரு டைரி இருக்கிறது. வாய்ப்பு கேட்டு வரும் இளம் டைரக்டர்களின் பெயர், விலாசம் போன்ற தகவல்களைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

``நிறையப் பேர் தினம் தினம் வர்றாங்க. சும்மா அவங்களை இன்னிக்கு வாங்க, நாளைக்கு வாங்கனு அலையவைப்பதில் அர்த்தமில்லை. இந்த டைரியில் அட்ரஸைக் கொடுத்துட்டா ஃப்ரீயா இருக்கும் நேரத்தில் நானே கூப்பிட்டு கதை கேட்பேன். யாருக்கும் தேவையில்லாத நம்பிக்கை கொடுப்பதில் அர்த்தமில்லை... இல்லையா! எனக்குத்தான் கதை சொல்லணும்னு காத்திருக்காம மத்தவங்களுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி முயற்சி பண்ணலாமே... அதைத் தடுக்கற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்" என்றார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அஜீத் பற்றி சமீபத்தில் வந்த செய்தி அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது.

Ajith, Vijay, Prashanth, Surya relay interview
Ajith, Vijay, Prashanth, Surya relay interview

``அலைபாயுதே படத்தில் மாதவனுக்குப் பதில் நான் நடிக்க வேண்டும் என்று ஷாலினி அடம் பிடிப்பதாக ஒரு நியூஸ்... அதைப் படிச்சப்போ அழறதா சிரிக்கறதான்னே புரியலை.

யார்கிட்டேயும் சான்ஸ் தேடி அலையவேண்டிய சூழ்நிலை எனக்கு இல்லை. அப்படியே மணிரத்னம் சார்கிட்டே சான்ஸ் வாங்கணும்னா நான் அவரைத் தேடிப் போவேனே தவிர ஷாலினியைப் பகடைக் காயாகப் பயன்படுத்த மாட்டேன். ஷாலினி எனக்கு அன்பு மனைவி, என் குழந்தைகளுக்குப் பாசமான தாய், என் குடும்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவியாகத்தான் இருக்கவேண்டும். என் வாய்ப்புகளுக்கு அவர் போராட வேண்டிய அவசியம் இல்லை" என்று கொஞ்சம் படபடக்க முகம்சிவந்து பேசினார் அஜீத்.

``அடுத்து `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ரிலீஸாகப் போகிறது, புதுசாக ஏதாவது யோசிக்கவேண்டியிருக்கிறது. புதிய டைரக்டர்களிடம் நிறையப் பேசுகிறேன்" என்று தன் அடுத்த திட்டங்கள் பற்றி பேசும் அஜீத், அடுத்து `சிட்டிசன்' என்ற படத்தில் முழுக்க முழுக்க மொட்டைத் தலையோடு நடிக்கப் போகிறார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஏழு வித 'கெட்டப்'களாம்! அதில் ஒன்று மொட்டை..! டைரக்டர் பவித்ரனிடம் உதவியாளராக இருந்த ஷரவண சுப்பையா என்பவர் டைரக்ட் செய்யப்போகும் `சிட்டிசன்' பற்றித்தான் இப்போது பேசுகிறார்.

``அப்புறம் கல்யாண ஏற்பாடுகளெல்லாம் எந்த அளவில் இருக்கு?" என்று கேட்டதும், அஜீத்தின் முகம் நிஜ கவலைக்கு மாறியது.

``பிரசாந்த்தும் ஷாலுவும் நடிக்கும் படம்தான் இழுத்துக்கிட்டே போய் கல்யாணத்துக்கும் முட்டுக் கட்டையா இருக்கு. அந்தப் படம் முடிஞ்சுட்டா கெட்டிமேளம்தான். இப்போதைக்கு எனக்குப் பெரிய வில்லனே பிரசாந்த்தான்..." என்று நகைச்சுவையாகச் சொன்னார் அஜீத்.

" பொண்ணு பாக்குறது அப்பா, அம்மா சாய்ஸ்..."

``நான் அஜீத்துக்கு வில்லனா... ஐயையோ... ஷாலினியோடு நடிக்கும் அந்தப் படம் லேட்டாகறதுக்கு நான் காரணமில்லை நண்பா" என்று பெரிய சிரிப்போடு பேச ஆரம்பித்தார் பிரசாந்த்.

இரண்டு வார அலைச்சலில் முகமும் உடலும் கொஞ்சம் வாடிப் போயிருக்கின்றன. ``கல்யாணம் பண்ணிப் பார்னு சும்மாவா சொன்னாங்க. தங்கை கல்யாணத்தை முடிக்கறதுக்குள் பெண்டு நிமிர்ந்து போச்சு. அதிலும் பகல் முழுக்க அப்பாவோடு போய் இன்விடேஷன் கொடுக்கறது, ராத்திரி முழுக்க ஷூட்டிங்னு பயங்கர டென்ஷன்... ஆனா, சமாளிச்சு நல்லபடியா ஃபங்ஷனை முடிச்சுட்டோம்" என்றார்.

"தங்கையை விட்டுப் பிரிஞ்சிருக்கறது கஷ்டமாயில்லையா..?" என்று கேட்டதும் பிரசாந்த் முகத்தில் ஒரு சோகமேகம் கவிகிறது.

"நானும் அவளும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி ஜாலியா அரட்டையடிப்போம். இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவுக்குப் போறா... கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனால், எனக்குக் கிடைச்சிருக்கும் மச்சானும் ஜாலி டைப் என்பதில் ஒரு சந்தோஷம்.... நம்ம வீட்டுப் பொண்ணு இன்னொரு வீட்டுக்கு வாழப்போறா... அங்கேயும் அவ நல்ல பெயர் எடுத்திருப்பது நல்ல விஷயம்தானே...!" என்று சொல்லும்போது பாசத்தில் குரல் தழுதழுக்கிறது.

'எல்லாமே அப்பாதான்' என்று சொல்லும் பிரசாந்த், இப்போதெல்லாம் தானே கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.

Ajith, Vijay, Prashanth, Surya relay interview
Ajith, Vijay, Prashanth, Surya relay interview

``அப்பாதான் எனக்கு எல்லாமே... ஆனால், அவருக்கு சில வேலைகள் இருக்குமில்லையா... அதனால் எனக்கு சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கார். நானும் அதை கரெக்டா பண்ணிக்கிட்டிருக்கேன்" என்றார்.

சட்டென்று டாபிக் மாற்றி, "உங்க படங்கள் எல்லாவற்றிலும் மீசையில்லாமல் மொழுமொழு பேபியாகவே நடிக்கிறீங்களே... எதுனா சென்டிமெண்ட் உண்டா?" என்று கேட்டதும் ரிலாக்ஸாகிவிட்டார்.

"என்ன காரெக்டரோ அதுபடிதானே நடிக்க முடியும். இப்போ `அப்பு'ங்கற படத்தில் நாலு நாள் தாடியோடு நடிக்கிறேன். கதைக்கு மீசை தேவைப்பட்டால் மீசை வைப்பேன். வேண்டாம்னா எடுத்துருவேன். ஒட்டுமீசையில் இது ஒரு வசதி" என்று கண்சிமிட்டிச் சிரித்தார் பிரசாந்த்.

ரசிகர்களுக்குக் கடிதம் அனுப்புவதில் ஹைடெக்காக இருப்பவர் இவர். "லெட்டர்கள் எல்லாம் ஈமெயில்தான். வெளிநாட்டு ரசிகர்களுக்கு தபாலில் கடிதம் அனுப்பினா என்னிக்குப் போய்ச் சேர்றது. ஈமெயில்னா அடுத்த செகண்ட் அவங்க கையில் லெட்டர் போய்ச் சேர்ந்திடும்" என்றார்.

"தங்கை கல்யாணம்தான் முடிஞ்சு போச்சே... உங்களுக்கு எப்போ டும்டும்... ஹனிமூன்... தனிக்குடித்தனம்?' என்றவுடன் உஷாராகிவிட்டார்.

"இப்போதானே ஒரு விசேஷம் முடிஞ்சிருக்கு. இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்னு வீட்டில் சொல்லிட்டேன். நமக்கு காதலிக்கக்கூட நேரம் இல்லை. அதனால பொண்ணு பார்க்கறதெல்லாம் அப்பா அம்மா சாய்ஸ்தான். அப்புறம் என்ன கேட்டீங்க... தனிக்குடித்தனமா... அதைக் கல்யாணமான விஜய்கிட்டே கேளுங்க..." என்றார்.

படம் : பொன். காசிராஜன்

"நட்பு.. குடும்பம்.. தொழில் எல்லாமே தனித்தனி!"

"ன்ன கேட்டீங்க... தனிக்குடித்தனமா... நம்மள அந்த லிஸ்டில் சேர்க்க முடியாதுங்க... இங்கே பதினஞ்சு நாள், அங்கே பதினஞ்சு நாள்னு ரெண்டு வீட்லயும் குடியிருக்கிறோம்" என்று சிரிக்கிறார் விஜய்.

சென்னையில் ஷூட்டிங் என்றால் மத்தியானம் வீட்டுக்குப் போய் அம்மணி கையால் சாப்பாடு போடச் சொல்லி ஒரு கட்டு கட்டிவிட்டுத்தான் வருகிறார்.

"ஆரம்பத்துல ரெண்டு மூணு வெரைட்டிதான் பண்ணினாங்க. ஆனா, இப்போ ஏகப்பட்ட விஷயம் கத்துக்கிட்டு அசத்துறாங்க. அதிலும் எனக்குப் பிடிச்ச சிக்கனை எத்தனை விதமாப் பண்றாங்க தெரியுமா.. அப்படியே அம்மா கைபக்குவம். அதுசரி... சொல்லிக் கொடுத்தது என் அம்மாதானே..." என்று சொல்லும்போதே நாக்கை சப்புக்கொட்டிக்கொள்கிறார்.

Ajith, Vijay, Prashanth, Surya relay interview
Ajith, Vijay, Prashanth, Surya relay interview

"அப்புறம். தனிக்குடித்தனமெல்லாம் எப்படி இருக்கு?" என்றால், "ஜாலிதான்" என்று சிரிக்கிறார்.

"கல்யாணம் நிச்சயம் பண்ணின உடனேயே அப்பா தனிக்குடித்தனம் வைக்க வீடு தேடினார். 'எதுக்குப்பா அதெல்லாம். நாங்க உங்களோடுதான் இருப்போம்னு சொன்னப்போ, 'அமைதியா இரு... உனக்கு எதுவும் புரியாது'னு. அதட்டல் போட்டுட்டார். குடும்பம் நடத்துவதில் எத்தனை பொறுப்பு. கஷ்ட நஷ்டம் இருக்குன்னு புரியவைக்கத்தான் அப்பா இந்த ஏற்பாடு பண்ணியிருக்கார்னு இப்போ புரியுது. இதுவும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான்" என்றார் விஜய்.

"ஆக பொறுப்புகள் அதிகமாகிட்டதா உணர்கிறீர்கள்... அதுதானே..." என்றதற்கு, ஆமாம் என்று வேகவேகமாகத் தலையாட்டினார்.

"முன்னேயெல்லாம் ஷூட்டிங் முடிய எவ்வளவு ராத்திரியானாலும் கவலைப்படாமல் வீட்டுக்குப் போய் என் ரூமில் படுத்துத் தூங்கிடுவேன். இப்போ கொஞ்சம் லேட்டானாகூட கீதா தனியா இருப்பாங்களேனு டென்ஷனாகிடறேன். அதோடு வீட்டுக்குப் போய் என் வேலைகளை நானே செஞ்சுக்கிட்டு, பொறுப்பா வீட்டைப் பூட்டி செக் பண்ணி பார்த்துட்டுதான் தூங்கப் போறேன். இதெல்லாம் எனக்கே புதுசாயிருக்கு"என்று கண்கள் விரியப் பேசினார்.

"அதெல்லாம் சரி... கல்யாணத்துக்கப்புறம் நண்பர்களையெல்லாம் கழட்டி விட்டுட்டீங்களா?" என்றதும் கொஞ்சம் வினோதமாகப் பார்த்துவிட்டு, "எனக்கு என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப முக்கியம்.

இதோ பாருங்க... நமக்கு நட்பு, குடும்பம், தொழில் எல்லாமே தனித்தனி.." என்று சொன்ன விஜய் தன் கல்லூரி நண்பர் சூர்யாவோடு இன்னொரு முறை இணைந்து நடிக்கிறார்.

"நட்புக்கு நட்புமாச்சு... நடிப்புக்கு நடிப்புமாச்சு...ஆனால், சூர்யா நடிக்க வருவாருன்னு காலேஜ் படிக்கும் நாட்களில் நினைச்சுக்கூட பார்த்ததில்லை' என்றார் விஜய்.

படம்: தேனி ஈஸ்வர்

"கொழுத்த மீனுக்காக காத்திருக்கிறேன்..."

நான் கூடத்தான் நினைச்சுப் பார்த்ததேயில்லை.. நான் காலேஜ் படிச்சிட்டிருந்த சமயம். எங்க பக்கத்து வீட்டுலதான் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இருந்தார். ராத்திரி நேரங்கள்ல காத்து வாங்கலாமேனு வாசல்ல வந்து நின்னேன்னா உதயகுமார் என்னைப் பார்த்து சிரிப்பார்... 'ஏம்ப்பா. நீ ஏன் நடிக்கக்கூடாது?'ம்பார். 'எனக்கு இஷ்டமில்லை'ம்பேன். 'என்ன செய்யப்போறே'ம்பார். 'துணி ஏற்றுமதி பிஸினஸ் பண்ணப் போறேன்'னு சொல்வேன். அவர் சிரிப்பார். சினிமா வாய்ப்புங்கிற விஷயம் எனக்குக் கைக்கு எட்டற தூரத்துல இருந்ததாலோ என்னவோ நான் பிடிவாதமா முடியாதுனு மறுத்திட்டிருந்தேன்.

Ajith, Vijay, Prashanth, Surya relay interview
Ajith, Vijay, Prashanth, Surya relay interview

பிஸினஸ் கத்துக்கறதுக்காக நெல்சன் மாணிக்கம் ரோடுல ஒரு கம்பெனியில வெறும் சரவணனா போய்ச் சேர்ந்தேன். நடிகர் சிவகுமார்தான் எங்கப்பானு யார்ட்டயும் சொல்லலை. ஒரு மாசம் கழிச்சு கம்பெனியில அவங்களாத் தெரிஞ்சுட்டு "என்னப்பா. ஒரு வார்த்தைகூடச் சொல்லாம பூனை மாதிரி இருந்திட்ட"னு கேட்டாங்க. ஆறு மாசத்துல அங்கே தறிக்கு ஆர்டர் பண்றது. டையிங் பண்றது. பட்டன் வைக்கறது, தைக்கறதுனு ரெண்டு வருஷம் துணி வியாபாரம் பத்தி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். திடீர்னு ஒரு நாள், தினம் தினம் ஒரே வேலையைப் பண்றோமேனு தோணிடுச்சு. ஒரு மாற்றம் வேணும்னு நினைச்சேன்.

அப்போதான் வஸந்த் சார் 'நேருக்கு நேர்'ல நடிக்கக் கூப்பிட்டார். செய்துபார்க்கலாமேனு ஒப்புக்கிட்டேன். அப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாது. இருந்தாலும், 'விஜய் எதிர்த்தாப்ல வருவாரு... முறைக்கணும்... சண்டை போடணும்'னு அவர் சொல்லச் சொல்ல அதுமாதிரி செஞ்சிட்டேன். ஆனா, 'சிம்ரனை மடியில உக்கார வெச்சு நெத்தியில தொடங்கி முத்தம் கொடுத்துட்டே பேசணும்னு சொன்னதும் தான் நடுங்கிப் போய்ட்டேன். மத்த விஷயங்கள்லாம் நான் சொல்லிக் கொடுத்திடுவேன்... ரொமான்ஸ் நீயேதான் பண்ணணும்'னு சொல்லிட்டார். படிச்சது முழுக்க பாய்ஸ் ஸ்கூல், பாய்ஸ் காலேஜ், அம்மாவையும் தங்கையையும் தவிர, வேறு எந்தப் பொண்ணு கூடவும் அதிகமாப் பேசினது கூட இல்லை. கைகால்லாம் நடுங்க ஆரம்பிச்சுட்டது. ரொம்பக் கூச்சமா இருந்தது. திக்கித்திணறிப் பண்ணிட்டேன். திரையில் பார்க்கிறப்போ, 'நல்லாவே பண்ணலை'னு தோணிச்சு.

இதுவரை ஒரு பெரிய 'பிரே'க் கிடைக்கலையேனு வருத்தம் இருக்குதான். ஆனா, நான் நிச்சயம் ஜெயிச்சுடுவேன்னு என் உள்மனசு சொல்லுது. ஜெயிச்சே ஆகணும்னு ஒரு ஆக்ரோஷம் வந்திருக்கு பொதுவா பெரிய சந்தோஷம், பெரிய துக்கம்னு எதையுமே நான் கண்டுக்கமாட்டேன். ஆனா, நடிப்பு விஷயத்துல 'என்னால் முடியும்'கிற நம்பிக்கையும் பிடிவாதமும் வந்திருக்கு. கொஞ்சம் கொஞ்சமா என்னைத் தகுதிப் படுத்திட்டிருக்கிறேன்.

டான்ஸ், சண்டை கத்துக்கறேன். ஜிம்முக்குப் போறேன். கூத்துப் பட்டறைக் கலைஞர்களிடம் நடிப்பு கத்துக்கறேன். இதெல்லாத்தையும் செய்யச் சொல்லி அப்பா ரொம்ப வருஷமா சொல்லிட்டிருக்கிறார். எப்பவுமே நம்ம அப்பாவும் அம்மாவும் ஒரு விஷயத்தை சொன்னா 'சரிதான் போ'னு சொல்வோம். அதே விஷயத்தைப் பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னா, "சரினு ஒப்புக்குவோம். அது மாதிரி தான் அப்பா சொன்னப்போ 'முடியாது'னு சொல்லிட்டு நாசர் சார் சொல்லி ஒப்புக்கிட்டேன்.

இப்போ நிறையக் கத்துட்டு' உயிரிலே கலந்தது' படத்துல பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டிருக்கிறேன். என்னோட கடின உழைப்பு கட்டாயம் ஜெயிக்கும். அதுக்காகத்தான் காத்துட்டு இருக்கிறேன்.

கொழுத்த மீனுக்காகத் தவமிருக்கிற கொக்கு மாதிரி... என்னோட தவம் முழுக்க. வெற்றிங்கிற மீன் மேல தான்" என்றார் சூர்யா.

படம் : பொன். காசிராஜன்

தொகுப்பு: செல்லா, தயாமலர்

(12.03.2000 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)