``15 வருஷத்துக்கு முன்னாடி ஸ்டாண்ட் அப் காமெடிகள் கிடையாது. நாடகங்களின் கிளைதான் இப்போ வந்திருக்குற ஸ்டாண்ட் அப் காமெடிகள் எனச் சொல்லலாம். சின்ன வயசுல இருந்தே கலை மேல் எனக்கு தீராதக் காதல் உண்டு. ஸ்கூல், காலேஜ்ல நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். அதனாலயே மேடை நாடகங்களில் நடிக்கணும்னு ஆர்வம் அதிகமாச்சு.

நான் அமெரிக்காவில் வேலைபார்த்துக்கொண்டிருந்த காலத்துல நாடக எழுத்தாளர் இராமனுஜம்கூட சேர்ந்து நாடகங்கள் பண்ணியிருக்கேன். Natak-னு ஒரு நாடகக் குழுவுடன் சேர்ந்து தமிழ் நாடகங்கள் போட்டோம். அதுவரைக்கும் அங்கே இந்தி நாடகங்கள் மட்டும்தான் நடந்துகிட்டு இருந்தது. அப்போதான் எனக்கு நாடகங்களில் இருக்கிற ஆழம் ரொம்ப பெருசுனு புரிய ஆரம்பிச்சது. உடல்மொழி மற்றும் திரைக்கதையில் எப்படி நடிக்கணும்னு கத்துக்கிட்டது இங்கதான். பார்க்குற பார்வையாளர்களுக்கு நம்ம நடிப்பு எதார்த்தமா இருக்கணும். கதையின் பாத்திரத்துடன் ஒத்து இருக்குற உணர்வை கொடுக்கணும். சினிமால க்ளோஸ் ஷாட் வெச்சுட்டு நம்ம நடிப்பை ஆடியன்ஸுக்கு காட்டிருவாங்க. ஆனா மேடை நாடகங்களைப் பொறுத்தவரைக்கும் உடல் மொழி மூலமா ஆடியன்ஸை எப்படி நம்ம பக்கம் திருப்புறதுனு தெரிஞ்சிக்கிட்டேன். மேடையில் ஒரு மேஜிக் நிகழ்த்திக் காட்டணும். அப்போதுதான் நாடகம் அப்ளாஸ் அள்ளும்.
யு.எஸ்-ல இருந்து சென்னைக்கு வந்தப்போ ஷர்தா நாடக குழுவுடன் சேர்ர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். ஆனந்த் ராகவ்வின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். அவரோட நாடகங்களில் நடிச்சிருக்கேன். அதுக்குப் பிறகு, வினோதினி வைத்யநாதன் அறிமுகம் ஆனாங்க. கூத்துப்பட்டறையில் நாடகங்கள் குறித்த ஆராய்ச்சி 40 ஆண்டுக்காலமா நடந்துக்கிட்டு இருக்கு. இது பொக்கிஷமான விஷயம். இதுக்குப் பின்னாடி எவ்வளவு உழைப்பு இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன். `நாட்டிய சாஸ்திரம்' இலக்கியத்தை யாரும் படிச்சிருக்க மாட்டாங்க. ஆனா, இந்த இலக்கியத்தை படிச்சிட்டு கத்துக்கிட்ட விஷயங்கள், தெருக்கூத்துல இருந்து கத்துக்கிட்ட விஷயங்கள் எல்லாத்தையும் முத்துசாமி ஐயா நிறைய நாடகங்களா அரங்கேற்றம் பண்ணியிருக்கார். இப்போ வினோதினி நாலு வருஷமா இதைக் கத்துக்கிட்டு செயல்படுத்துறாங்க. அவங்களே இயக்கி நடிக்கவும் செஞ்சிருக்காங்க.

இவங்க உழைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால வினோதினியோட 'தியேட்டர் ஸீரோ' நாடகக்குழுவுல சேர்ந்தேன். அப்போ இரண்டு நாடங்கள் நடத்துனாங்க. அதுல நான் நடிச்சேன். இப்போ நாங்க இணைந்து மேடையில் அரங்கேற்றப்போகிற `நாகர்கோயில் எக்ஸ்பிரஸும் நாடக கம்பெனியும்' நாடகத்தை அப்பவும் நடத்தினோம். ஆனா, அந்த நேரத்துல சின்ன வடிவுல இருந்தது. இந்த ரெண்டு நாடகங்ளையும் டிராமா ஃபெஸ்டிவலில் ஒரு பகுதியா வெச்சிருந்தோம். கிட்டத்தட்ட 15 ஷோ வரைக்கும் பண்ணோம். ஆனா, டிக்கெட்ஸ் ஃபுல் ஆனாலும் வெளில மக்கள்கிட்ட பெருசா தெரியல. அதுக்குப் பிறகு `அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்' ஷோ பெரிய ஹிட் அடிச்சது. அப்போ திரும்பவும் இந்த நாடத்தை கையில் எடுக்கணும்னு தோணுச்சு. எனக்கு இப்போ கொஞ்சம் ஃபாலோயர்ஸ் கிடைச்சிருக்காங்க. அவங்களை நம்பி இந்த நாடகத்தை இப்போ நான் தயாரிச்சு நடிக்கிறேன்.
முதல் பகுதியில் `நாகர்கோயில் எக்ஸ்பிரஸும்' இடைவெளிக்குப் பிறகு, இரண்டாம் பகுதியில் `நாடக கம்பெனியும்' நடக்கும். இது இரண்டையும் ஒரே நிகழ்ச்சியில போடுறோம். சில வருஷங்களுக்கு முன்னாடி `short and sweet'னு குறுநாடகங்களுக்கான ஒரு விழா நடக்கும். இதில், `சாத்தூர் சந்திப்பு'னு ஒரு நாடகத்தை வினோதினி எழுதி அரங்கேற்றுனாங்க. இது 10 நிமிட நாடகம் சிறந்த நாடகம்ங்கிற விருதை வாங்கியது. நடிகர் குருசோமசுந்தரம் இதில் நடிச்சிருந்தார். ரெண்டு வருஷம் கழிச்சு இந்த 10 நிமிட நாடகத்தை 30 நிமிட நாடகமாகப் போட்டாங்க. இப்போ இந்த நாடகம் 1 மணி நேர10 நிமிஷமா மாறியிருக்கு. இடையில் இசை கலந்திருக்கு. சமகால அரசியல் பற்றிய பேச்சும் இருக்கு. நாங்க முதலில் இதை 45 நிமிஷத்துக்குத்தான் திட்டமிட்டோம். ஆனா, கொஞ்சம் நேரம் அதிகமாகியிருக்கு.

சென்னை, பெங்களூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரினு எட்டு ஊர்கள்ல இந்த நாடகங்களை அரங்கேற்றப்போறோம். இதில் சென்னையில் மட்டும் ஆறு நாள் நடக்குது. ரசிகர்களோட லைவ் பல்ஸ் பார்க்க ஆர்வமா இருக்கோம்'' என உற்சாகமாகப் பேசினார் அலெக்ஸ்!