Published:Updated:

விழா எடுத்த மு.க.அழகிரி; கிடப்பில் கிடக்கும் கோரிக்கை; டி.எம்.எஸ் விஷயத்தில் தலையிடுவாரா முதல்வர்?

டி.எம்.சௌந்தரராஜன்

எங்களுடைய வருத்தம் என்னன்னா, இவ்வளவு புகழை, பெருமையைப் பெற்ற அந்தக் கலைஞன் இருந்தபோதும் சரி, மறைந்த பிறகும் சரி முழுமையாக அங்கீகரிக்கப்படலைங்கிறதுதான். - ரசிகர்கள்

Published:Updated:

விழா எடுத்த மு.க.அழகிரி; கிடப்பில் கிடக்கும் கோரிக்கை; டி.எம்.எஸ் விஷயத்தில் தலையிடுவாரா முதல்வர்?

எங்களுடைய வருத்தம் என்னன்னா, இவ்வளவு புகழை, பெருமையைப் பெற்ற அந்தக் கலைஞன் இருந்தபோதும் சரி, மறைந்த பிறகும் சரி முழுமையாக அங்கீகரிக்கப்படலைங்கிறதுதான். - ரசிகர்கள்

டி.எம்.சௌந்தரராஜன்
காதல், தத்துவம், சோகம், துள்ளல் எனக் கலவையான உணர்வுகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்கள், சுமார் மூவாயிரம் பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்கள் என சுமார் நாற்பது ஆண்டுகளாக தமிழ் இசையுலகில் பயணித்தவர் டி.எம்.சௌந்தர்ராஜன்.

இது அவருடைய நூற்றாண்டு. வரும் மார்ச் மாதம் அவருடைய 101வது பிறந்த நாள் வரவிருக்கிற சூழலில், அவர்தம் காந்தக் குரலால் ஈர்க்கப்பட்ட லட்சக் கணக்கான ரசிகர்கள் ஒரு சின்ன மனவருத்தத்தில் இருப்பதாக ஒரு தகவல் கிடைக்க, 'என்ன விவகாரம்' என்ற விசாரணையில் இறங்கினோம்.

'ஓல்டு இஸ் கோல்டு' என்பார்களே, அது எதுக்குப் பொருந்துதோ இல்லையோ, டி.எம்.எஸ் குரலுக்கு நிச்சயம் பொருந்தும். திரையிசை இன்னைக்கு எவ்வளவோ வளர்ந்திருக்கலாம். நிறையத் திறமையானப் பாடகர்கள், புதுப் புதுத் தொழில்நுட்பங்கள்னு காலம் மாறிட்டாலும், டி.எம்.எஸ். குரலில் பாடிய எத்தனையோ பாடல்கள் இன்றைய தலைமுறையையும் மெய்மறந்து கேட்க வைக்கின்றன.

பாடகர் டி. எம். சௌந்தரராஜன்
பாடகர் டி. எம். சௌந்தரராஜன்

ஒருசார்பு இன்றி அரசியல் கட்சிகளுக்கு அவர் பாடிய பாடல்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளின் கொள்கைகளை மக்கள்கிட்டக் கொண்டு சேர்க்க ரொம்பவே உதவின. எம்.ஜி.ஆர் படங்களில் அவர் பாடிய எத்தனையோ பாடல்கள் எம்.ஜி.ஆர் மக்கள் மனங்களில் அழுத்தமாக இடம்பிடிக்கக் காரணமாச்சுன்னு சொன்னா மிகையில்லை.

'நான் ஆணையிட்டால்' உள்ளிட்ட பல பாடல்கள் இன்னைக்கும் அதிமுக மேடைகளை அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்தப் பக்கமோ மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் ரொம்பவே பிடித்தமானவராகவே இருந்தார் டி.எம்.எஸ்.

எங்களுடைய வருத்தம் என்னன்னா, இவ்வளவு புகழை, பெருமையைப் பெற்ற அந்தக் கலைஞன் இருந்த போதும் சரி, மறைந்த பிறகும் சரி முழுமையாக அங்கீகரிக்கப் படலைங்கிறதுதான்.

மத்திய அரசு வழங்குகிற பத்மஶ்ரீ விருது மட்டும் ஒரேயொரு முறை இவருக்கு வழங்கப் பட்டது. மத்தபடி அவரைப் பெரிசாக் கொண்டாட நாம மறந்துட்டோமோனுதான் நினைக்க வேண்டியிருக்கு.

ஏன்னா, 2013ல் அவர் மறைந்த பிறகு அவருடைய பெயரை மதுரையில் அவருடைய வீடு இருக்கும் தெருவுக்கோ, அல்லது சென்னையில் அவர் வசித்த பகுதியிலோ சூட்ட வேண்டுமென்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனா அந்தக் கோரிக்கை மீது எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாத் தெரியலை'' என்கிறார், ஒரு ரசிகராக டி.எம்.எஸ்.க்கு அறிமுகமாகி அவர் இறக்கும் வரையிலும் அவருடன் தொடர்பிலிருந்த சினிமாத்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட் விரும்பாத அந்த ரசிகர்.

டி.எம்.சௌந்தரராஜன்
டி.எம்.சௌந்தரராஜன்

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிற வேறு சிலரோ, 'நடிகர் விவேக் மறைந்த போது அவருடைய குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவரது வீடு அமைந்திருக்கும் தெருவுக்கு அவரது பெயரைச் சூட்டியது தமிழநாடு அரசு. விவேக் பெரைச் சூட்டியதைத் தவறாகச் சொல்லவில்லை. அதே மாதிரி இந்த மகா கலைஞர் விஷயத்திலும் அரசு நடந்து கொள்ளக் கூடாதா' எனக் கேட்கிறார்கள்.

சினிமா, மற்றும் அரசியல் தொடர்புடைய சிலரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம்.

''இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். இந்த இடத்துல இன்னொரு விஷயுத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கு. திமுக தலைவரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தீவிரமான டி.எம்.எஸ் ரசிகர். கலைஞரை அழைத்துச் சென்று மதுரையில் டி.எம்.எஸ்.க்கு விழா எடுத்தார் அவர். டி.எம்.எஸ் மறைந்ததும் அவருக்கு மதுரையில் சிலை நிறுவும் முயற்சியையும் அவர்தான் எடுத்தார். ஆனால் என்ன காரணமோ தெரியலை, இன்னும் சிலை நிறுவப்படவே இல்லை" என்கிறார்கள்.

'மு.க.அழகிரி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் டி.எம்.எஸ் கண்டுகொள்ளப் படவில்லையா' என்றால், 'போகிற போக்கில் அப்படிச் சொல்லி விட முடியாது. திமுக ஆட்சியில் கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் மாநாட்டிலும் ’செம்மொழியான தமிழ் மொழியே’ பாடலின் முதல் அடியை இவரே பாடியிருந்தார். கலைஞருக்கு ரொம்பவே பிடித்த குரல் டி.எம்.எஸ்.சின் குரல் என்பதால் கலைஞரின் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாதிரியான நோக்கத்தில் இந்த விஷயத்தை அணுக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது’ என்கிறார்கள் இவர்கள்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் தீனாவிடம் பேசிய போது, ‘மக்கள் அங்கீகாரம்கிறது அவருக்குக் கிடைச்சது. சிலை, பெயர் வைக்கிற நிகழ்வுகள் அவர் மறைந்த புதிதிலேயே நடந்திருக்க வேண்டும்தான். நடக்காததை துரதிர்ஷ்டம்னுதான் சொல்வேன். கடந்து போன விஷயங்களை விட்டுட்டு இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்.

டி.எம்.சௌந்தரராஜன்
டி.எம்.சௌந்தரராஜன்

வருகிற அவருடைய பிறந்த நாளில் தமிழ்நாடு அரசு அவருக்கு உயரிய மரியாதை செலுத்தி, அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றித் தரணும்கிறதுதான் என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, மொத்த இசையுலகத்தின் விருப்பமும் கூட’' என்கிறார் இவர்.

`புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ எனத் தன் கணீர் குரலைக் காற்றில் பரவச் செய்தவர் டி.எம்.எஸ்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் அரியணை ஏறி இருக்கிற சூழலில், கலைஞரின் மனதுக்கு ரொம்பவே நெருக்கமான டி.எம்.எஸ்.க்குப் புகழ் சேர்ப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?