ஆதிமனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் தொடர்புடைய ஒரு வார்த்தைதான், ஜல்லிக்கட்டு. தன்னுடைய பாதுகாப்பு கருதி விலங்குகளைக் கொல்ல ஆரம்பித்த மனித இனம், காலப்போக்கில் அதை இறைச்சியாக உண்டு, தனது பசியாற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பின்னர், பரிணாம வளர்ச்சியடைந்த மனிதன், இறைச்சியை வணிகமாக்கினான். இறுதியில், ஒவ்வொரு சாராரும் தற்போது அதை ஒவ்வொரு வகையில் வணிகமாக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலிருக்கும் ஒரு நூல் ஒற்றுமையை உணரவைத்து, யோசித்துப்பார்க்கவைத்த மலையாளப் படமே `ஜல்லிக்கட்டு'. இப்படம் வெளியாகி ஒரு மாத காலம் முடிவடைவதற்குள், தற்போது அமேஸான் ப்ரைமில் வெளியாகிவிட்டது.

பூமலை என்ற மலைப்பிரதேச கிராமத்தில் வர்கீ என்பவரின் எருமை இறைச்சி பெரும் பிரபலமாகிறது. நாவிற்கு விருந்தாய் வர்கீ வெட்டும் மாட்டிறைச்சிக்கு அவ்வளவு கிராக்கி. அலையெனத் திரண்டு அதை வாங்கிச்சென்று உண்கின்றனர், மக்கள். மாட்டின் மூக்கனாங்கயிறு, மனிதனின் கையில் இருக்கும் வரைதான் அவன் அதனின் ராஜா. அந்த மூக்கனாங்கயிறு அறுபட்டு, மாடு ஆர்ப்பரித்து ஓடினால் என்னவாகும்? `சாதரண எருமைதானே... ஊர் மக்கள் ஒன்றுதிரண்டால் பிடித்தவிடலாம்தானே' என்று படத்தின் ஆரம்பத்தில் நினைத்தவன்தான் நானும். அதற்கான விடையை நெற்றிப்பொட்டில் அடித்து, அப்பட்டமாகச் சொல்லும் படமே, `ஜல்லிக்கட்டு'.
காதுகுத்தில் ஆரம்பித்து கல்யாணம், கருமாதி வரைக்கும் வர்கீ - யின் மாட்டிறைச்சிதான் அந்தக் கிராமவாசிகளின் பெருந்தேடல். நாவை நாட்டியமாடவைக்கும் அந்த மாட்டிறைச்சியில் கிடைக்கும் ருசிக்கு ஊரே அடிமை. இவ்வளவு வர்ணிக்கக் காரணம், படத்தின் சாராம்சமே இதுதான். அதுவும் கிரீஷ் கங்காதரணின் ஒவ்வொரு ஃப்ரேமும் அப்படிப்பட்டது. கசாப்பு கத்தியின் கூர் பகுதியில் தொக்கியிருக்கும் கறியைச் சரிசெய்து, கத்தியை மீண்டும் கூர்மையாக்கி, மிளிரச் செய்து, `சதக் சதக்' என கசாப்புக்காரன் எருமையைக் கறியாக்கும் விதத்தை ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறார்கள். ஹரீஷ் எழுதிய சிறுகதையை அவரின் உதவியோடு அழகாய் படமாக்கியிருக்கிறார், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

Also Read
ஆதிமனிதன் குரங்கிலிருந்து தோன்றினானோ இல்லையோ, மனிதனின் மனநிலை குரங்கைப் போன்றததுதான்... மரத்துக்கு மரம் தாவிக்கொண்டேயிருக்கும். இதைக் கண நேரத்தில் ஒரு காட்சியின்மூலம் கடத்தியிருப்பார் இயக்குநர். எருமை தப்பித்ததையடுத்து, அதைத் தேடி சங்கு என்பவரின் வயக்காட்டுக்குச் சென்று ஆரவாரமாய்த் தேடுவார்கள் மக்கள். அப்போது அந்தப் பெரியவர், `பாவப்பட்ட அந்த ஜீவராசியை ஏன் துன்புறுத்த நினைக்கிறீங்க. மனிதனைப் போல் அவையும் உயிருள்ள ஒரு ஜீவராசிதானே' என்று பாவப்பட்டு, கெட்ட வார்த்தை பேசுபவருக்கு அறிவுரை கூறுவார். சிறிது நேரம் கழித்து, பயிரிடப்பட்டிருக்கும் தாவரங்களை நாசம் செய்த எருமையை உலகிலிருக்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் சொல்லி திட்டித் தீர்ப்பார், அதே சங்கு. மனிதன் மிருகமாவதை கமர்ஷியலாகச் சொன்ன இடமிது.
படத்தின் மற்றுமொரு சிறப்பு, போகிற போக்கில் சொல்லப்படும் கிளைக் கதைகள். படத்தில் இடம்பெற்றிருக்கும் சின்னஞ்சிறு கதாபாத்திரத்துக்குக்கூட கிளைக்கதை பயணித்துக்கொண்டே வரும். அண்ணன் வர்கீ-க்கு தெரியாமல் தங்கை சோஃபிக்கும் ஆன்டனிக்கும் நடக்கும் காதல் சடுகுடு, துணை ஆய்வாளர் டினு பப்பச்சனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்படும் டாம் அண்டு ஜெர்ரி சண்டை, குரியாச்சன் சேட்டாவின் இல்லத் திருமண விழா, அந்தத் திருமணத்தை விரும்பாமல் நடக்கும் கலவரத்துக்கு நடுவில் வீட்டை விட்டு தப்ப நினைக்கும் குரியாச்சனின் மகள், எருமையை வேட்டையாடும் இடத்துக்கு மத்தியில் தள்ளு வண்டியில் மணியடித்துக்கொண்டே செல்லும் சோன் பப்டிகாரன், அதே கலவரத்துக்கு நடுவில் வட்டிப் பணத்தைப் பெற வந்திருக்கும் தமிழ்நாட்டு அண்ணாச்சி, பயிர்கள் நாசமானதையடுத்து சர்காரிடம் உதவி நாடிச் செல்லும் சங்கு எனப் படம் நெடுக பயணிக்கும் கிளைக் கதைகளை சூழலுக்கேற்ப தெள்ளத்தெளிவாய் பொருத்தியிருப்பார், இயக்குநர்.

சத்தமின்றி பின்னணியில் மட்டுமே பயணிக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு படத்தில் பஞ்சமில்லை. அசுரத்தனமாய் அந்த கிராமத்தில் உலா வந்துகொண்டிருக்கும் எருமை மாடு, வழியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கொடிகொண்ட கம்பத்தை இடித்துச் சாய்த்துவிடும். அப்போது நிகழும் சகாக்களின் உரையாடலின்போது, `வர்கீ நம்ம கட்சிக்கு நிறைய உதவி பண்ணியிருக்கார். அதுக்காக நம்மலும் உதவி பண்ணணும்' என ஒருவர் சொல்ல, `ஆமா... அவன் கடைக்குப்போனா எப்போ பாரு காக்க வெச்சிட்டுத்தான் கறி கொடுத்து அனுப்புவான்' எனத் தன் தரப்பு ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பார், ஒரு காம்ரேட்.
அதே காட்சியில், `பூமலை புள்ளீங்கோ' என்று சொல்லப்படும் அந்த கிராமத்தின் லோக்கல் பாய்ஸ், சரக்கைப் போட்டுக்கொண்டு நடப்பதை கேலி செய்து நடனமாடிக்கொண்டிருப்பார்கள். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி எருமையை வேட்டையாட வந்திருக்கும் குட்டச்சனைப் பார்க்கும் கிராமவாசிகள், `டட்டட்டன்ட்டடன்... ஈயாஊவான் குட்டச்சன்...' என்று குட்டச்சன் புகழ்பாடி அவரை அழைத்துச் செல்வதெல்லாம் உச்சம். அதே வேகத்தில், வாளியில் இருக்கும் கம்பியை தோட்டாக்களாக மாற்றும் குட்டச்சன், உச்சத்திலும் உச்சம்.

தன் எழுத்தின் மூலம் பலதரப்பட்ட கதைகளை இப்படி நமக்கு உணர்த்திக்கொண்டேவருகிறது படத்தின் திரைக்கதை. எருமையின் வேட்டை ஒரு பக்கம், விலங்குகள் வாழ்ந்துவந்த அந்த மலைப் பிரதேசத்தை மனிதர்கள் ஆக்கிரமித்த கதையைச் சொல்லும் தாத்தாக்கள் ஒரு பக்கம், குட்டச்சனுக்கும் ஆன்டனிக்கும் நடக்கும் கௌரவ சண்டை ஒரு பக்கம், திமிரியெழுந்து ஊரையே ரெண்டாக்கி, பின்னர் சேர்ந்து போய் சகதியில் தவழுந்துகொண்டிருக்கும் எருமை ஒரு பக்கம், இறுதியில் வெறிகொண்டு ஆதாயம் கிட்டுமெனப் பாய்ந்தோடி மலையெனக் குவியும் மிருகமாய் மாறிய மானிடக்கூட்டம் ஒரு பக்கம்... இப்படிப் பல பக்கங்களை விலாவரியாக படித்துச் சொல்கிறது இந்த `ஜல்லிக்கட்டு'.
கண்களுக்கு விருந்தாய் கிரிஷ் கங்காதரணின் ஒளிப்பதிவு மின்னிட, அதற்குப் பின்னால் ஒலிக்கும் சவுண்டு மிக்ஸிங் செவிகளைக் குளிர்காய வைக்கிறது. படத்தின் காட்சியோட்டத்திற்கேற்ப மனிதர்களின் குரல்வளைகளும், பறவை, பூச்சி, விலங்குகளின் குரல்வளைகளும் தாளமிட்டிருக்கின்றன. ஆம், இசைக்கருவிகள் ஏதுமின்றிதான் படத்திற்கு இசையமைப்பட்டிருக்கிறது. இப்படி இசையமைப்பதை `அகப்பெல்லா' இசை முறை என்பர். மனிதனுக்கு வெறிபிடிக்கும் சமயத்தில், அவன் எழுப்பும் ஓலமும் கதறலுமே இப்படத்தின் இசைவாத்தியம். இதுவே அந்தக் கிராமத்தில் மனித சத்தமின்றி மௌனமாய் இருக்குமிடத்தை பறவைகளின் கூவல்களும், பூச்சிகளின் கரகரப்பு சத்தங்களும் நிரப்புகின்றன. இந்த ஒலி - ஒளி உருவக் காட்சியை சதக் சதக்கென அழகாய் தொகுத்திருக்கிறது தீபு ஜோசப்பின் எடிட்டிங்.
Also Read
சகதியில் வியர்வை வடிந்தால் அது விவசாயம், அதே சகதியில் குருதி படிந்தால், அதுவே இந்த `ஜல்லிக்கட்டு'. அமைதியான மலை உச்சியில் ஆரம்பிக்கப்படும் படம், மலையெனக் குவிந்துகிடக்கும் மனிதக்கூட்டம் எழுப்பும் ஓலத்துடன் முடிகிறது. கட்டாயம் இந்த ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்கலாம்.