
2006 சட்டமன்றத் தேர்தலிலேயே பிள்ளையார் சுழி போட ஆசைப்பட்ட ரசிகர்கள்... ஆரம்பமே முதல்வர் கோஷம்தான்!
பொது வாழ்க்கையில் ரொம்பக் கால மாகவே கேப்டனுக்கு ஆர்வம் உண்டு. சட்டம், ஊழல், தேசபக்தி என்று எப்போதும் அரசியல் சாயத்துடன் அவர் படங்களில் வசனங்கள் பொறிபறக்கும். கர்ஜிக்கும் குரலில் புள்ளிவிவரக் கணக்கோடு பஞ்சமில்லாமல் பஞ்ச் டயலாக் பேசுவார். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஏழைகளுக்கு இலவசத் திருமணம், தையல் மிஷின், சைக்கிள், கல்விக்கு உதவித் தொகை என வாரி வழங்கு வார். இப்படிப் பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் விஜயகாந்த் தின் மனைவி பிரேம லதாவும் சமீப கால மாக ஆர்வம் செலுத்தி வந்தார். " விஜயகாந்த்தின் அரசியல் லட்சியத்துக்குப் பின்னால் நிற்கிற மிக முக்கியமான புள்ளியே அவரது துணைவியார் தான்! ” என்கிறார்கள்

'கேப்டன் ' முகாமில் நெடுநாளாக இருப்பவர்கள். ' சரி, விஜயகாந்த்துக்கும் அரசியலுக்கும் என்ன ஒட்டுறவு? ' மன்றத்துப் பக்கம் போய்க் கேட்டால், சில ஃபிளாஷ்பேக்கு களை அள்ளிப் போடுகிறார்கள்.
" பள்ளியில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் கலந்துகொண்டு ' இந்தி ஒழிக ' என்று கோஷம் போட்டுப் பள்ளி நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்டார். சினிமா மீது கேப்டனுக்குச் சிறுவயதிலேயே ஒரு வெறி உண்டு. எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகர். சிவாஜி பட போஸ்டர்களை அவர் கிழித்தெறிந்த சம்பவங்களும் நடந்ததுண்டு. மெள்ளப் பக்குவப்பட்ட பிறகு, ரசிகர் என்ற நிலையிலிருந்து மாறி, எம்.ஜி.ஆரின் தொண்டர் ஆனார் எங்க கேப்டன். அவரோட அப்பா அழகர்சாமி, மதுரை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலராக நின்றார். அப்போ தன் அப்பாவையே எதிர்த்து தி.மு.க - வுக்கு ஆதரவா தேர்தல் வேலை பார்த்து, 300 ஓட்டு வித்தியாசத்தில் அவரைத் தோற்கடித்தவர் கேப்டன். லட்சியம்னு வந்துட்டா, சொந்த பந்தம்னுகூடப் பார்க்கமாட்டார்! ” என்கிறார்கள் ரசிகர்கள்.
விஜயகாந்த் சினிமாவுக்கு வந்த பிறகு ' நேரடி அரசியல் வேண்டாம் ' என்பதில் கவனமாக இருந்தார். ஆனாலும், அவரது ஆரம்பகால சினிமாக்களில் மறைமுகமாக தி.மு.க. ஆதரவு தெரியும். ' நான் ஆளு கறுப்பு.... என் கண்ணு சிவப்பு! ' என்றெல்லாம் வசனங்கள் வரும்.
பதினைந்து வருடங்களுக்கு முன் இலங்கைத் தமிழர் களுக்கு ஆதரவாக மதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்தியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இயல் பாகவே இலங்கை தமிழர்கள் மீது இனப்பற்று கொண்ட விஜயகாந்த், மதுரை அமெரிக்கன் கல்லூரி வாசலில் கைகோத்து நின்று போராட்டத்தை முடித்து வைத்தார்.
அந்த இடத்துக்கு அவரை திறந்த ஜீப்பில் கூட்டி வந்தவர் பொன் முத்துராமலிங்கம். இருவரும் சேர்ந்து வந்ததை வைத்து, ' விஜயகாந்த் தி.மு.க - வில் சேரப் போகிறார் ' என்று ஊகங்கள் கிளம்பின. இதுதான் தருணமென்று பொன் முத்துராமலிங்கமே, கேப்டனின் இடுப்பில் தி.மு.க. கரை வேட்டியைச் சுற்றிவிட பகீதரப் பிரயத்தனம் செய்தார். ' கட்சி மேடைகளில் ஏறுறதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராதுண்ணே! ' என்று நழுவிக்கொண்டார் விஜய காந்த், மிக நெருங்கிய நண்பர்களாக வலம்வந்த ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, சந்திரசேகர் போன்ற வர்கள் எல்லாம் நேரடியாகத் தங்களை அரசியலில் இணைத்துக்கொண்ட போதும், அவர்கள் பாதையில் போகாமல் உஷாராகவே வலம் வந்தார். அந்தத் தொலைதூரப் பார்வைதான், வாய்ப்புக் கிடைக் கும்போது எல்லாம் சினிமாக் களில், ' நான் தமிழண்டா... தமிழ் பூமிக்கு ஒரு ஆபத்து வந்தா துடிச்சு எந்திரிப்பேண்டா! ' என்றெல்லாம் உறுமல் வசனம் வைக்கச் செய்தது.
1996 - ல் தி.மு.க., த.மா.கா. கூட்டணிக் காக ரஜினி ' வாய்ஸ் ' கொடுத்தபோது தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்த ரசாயன மாற்றங்களை உன்னிப் பாகக் கவனித்தார் விஜயகாந்த் காங்கிரஸ் குடும்பத் தில் பிறந்த விஜய காந்த், மூப்பனா ரிடம் மரியாதை கொண் டவர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு சமயம் மூப்ப ார் பேசுகையில், ரஜினி மட்டும் நேரடியாகக் தனி களத்தில் இறங்கியிருந்தார்னா, தமிழ்நாட்டோட சரித்திரமே மாறியிருக்கும். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரு தம்பி! ' என்று சொல்ல, அதுதான் விஜயகாந்த்துக்குள் ஒரு புது வேகத்தைக் கிளப்பியதாகச் சொல்கிறார்கள்.

விஜயகாந்த்தின் தனிச் சிறப்பே, கட்சி பேதமின்றி எல்லோருக்கும் செல்லப் பிள்ளை என்பது தான். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது துணைவியார் ஜானகியம்மாளின் அன்புக்கு உரிய பிள்ளையாகவே இருந் தார் விஜயகாந்த். இன்னொரு பக்கம் கலைஞர், மூப்பனார் இருவருடனும் மிக நெருக்கம். வைகோவின் மீது பாசம், ஜெயலலிதாவிடம் மரியாதை என எல்லாப் பக்கமும் சங்கட மின்றி உலவிய ஒரே நடிகர் விஜயகாந்த்தான்!
மற்ற எல்லா நடிகர்களையும்விட, தன் ரசிகர்களை ஒரு இயக்கமாக மாற்றுவதற்குத் தயார்படுத்திக்கொண்டே இருந்த விஜயகாந்துக்குக் கிடைத்த நடிகர் சங்கத் தலைவர் பதவி, எல்லா நடிகர்களையும் ஒன்றுதிரட்டி அவர் நிர்வகித்த விதம், அவரது ரசிகர்களை அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வைத்தது.
கடந்த உள்ளாட்சித் தேர்த லில் அவரது ரசிகர்கள் களம் இறங்கினார்கள். உள்ளூரில் செல்வாக்கு கொண்ட ரசிகர் கள் மன்றத்தின் பெயரில் தேர்தலில் நிற்க கேப்டனிடம் அனுமதி கேட்டு வந்தனர். " ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மன்றத்துக் கொடியையும், என் படத்தையும் தாராள மாகப் பயன்படுத்தலாம் " என்று வாழ்த்தி வழியனுப்பி னார். அந்தத் தேர்தலில் பல இடங்களில் கேப்டன் ரசிகர் மன்ற வேட்பாளர்கள் அடியும் உதையும் பட்டார்கள். அப்போது சினிமாவைப் போலவே நிஜத்திலும் சீறி எழுந்தார் விஜயகாந்த். தேர்தல் முடிவுகள் வந்தபோது கணிசமான இடங்களில் கேப்டன் ரசிகர்கள் வெற்றிக் கொடி நாட்டியிருந்தார்கள்.
உற்சாகமான விஜயகாந்த், ரசிகர்களைச் சந்திக்க, மாவட்டம் மாவட்டமாக மாநாடுகள் நடத்த ஆரம்பித்தார். செல்லும் இடமெல்லாம் தன்னைப் பார்க்க பிரமாண்டமாகக் கூட்டம் கூடுவதைப் பார்த்துப் பூரித்துப் போனார்.
" நேரடியாக அரசியலில் இறங்கிக் கலக்குவது என்று முடிவு எடுத்த பிறகு, கேப்டனுக்குப் பொது எதிரிகள் தேவைப்பட்டார்கள். அதனால்தான், பா.ம.க - வுக்கும், தான் மிகவும் நேசித்த தி.மு.க - வுக் கும் எதிராக சமீபகாலமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். ' தேர்தலைச் சந்திக்காமலேயே எப்படி மத்திய அமைச்சர் ஆகலாம்? ” என்று அன்புமணிக்கு எதிராகவும், ' தங்களுக்கு வேண்டிய துறைகளை கேட்டு வாங்கினார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய எந்த இலாகாவை வாங்கினார்கள்? ' என்று தி.மு.க - வையும் சீண்டினார்.
கலைஞருக்குப் பொன் விழா எடுத்து அசத்தியவர், ஜெயலலிதாவுக்கு திருட்டு வி.சி.டி. தடுப்பு நடவடிக் கைக்கும் பாராட்டு விழா நடத்தி அசத்தினார். ' ஆளுங்கட்சி ஆளாகிவிட் டார் ' என்று நாலு பேர் பேசும்போதே, பா.ஜ.க. பிரமுகர்களை அழைத்து, உறவு கொண்டாடினார். மொத்தத்தில் ' நான் அவிழ்க்க முடியாத புதிர் ' என்று அரசிய லுக்குத் தேவை முதல் முக்கியத் தகுதியைத் திறம்படக் காட்டிவிட் டார்” என்கிறார் அவரது நண்பர் ஒருவர்.

சரி, விஜயகாந்த்தின் புதுக் கட்சிக்கு என்ன பெயராம்?
' அண்ணா முன்னேற்றக் கழகம் ' ( இந்த ' அண்ணா ' குறிப்பது கேப்டனைத்தான்! ) ' தமிழ் முன்னேற்றக் கழகம், ' தமிழர் முன்னேற்றக் கழகம் ' எல்லாம் அவரது தமிழி ' கேபினட் ' (! ) சகாக்கள் சொல்லும் சாம்பிள்கள்!
' ' புதுக்கட்சியில் மன்றத்துப் பிள்ளைகளுக்கே பதவிகள் தருவோம்” என ஒரு பக்கம் அவர் சொன்னாலும், ஒரு காலத்தில் அரசியல் களத்தில் கம்பீரமாகக் வாரம்... கோலோச்சி விட்டு, தற்போது ஒதுங்கி இருக்கும் பெருந்தலைகள் பலருடன் பேசிக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். குறிப்பாக, எம்.ஜி.ஆர். விசுவாசி களிடம்!
2006 சட்டமன்றத் தேர்தலிலேயே பிள்ளையார் சுழி போட ஆசைப்படுகிறார்கள் ரசிகர்கள். ஆரம்பமே முதல்வர் கோஷம்தான்!
எல்லாம் இருக்கட்டும். விஜயகாந்த் கட்சியின் கொள்கை என்ன? திட்டம் என்ன? மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து எப்படி மாறுபடப்போகிறார்? ரசிகர்களையும் பொது மக்களையும் எப்படி ஒருங்கிணைக்கப்போகிறார்?
" நம்மால் ஊருக்கு நல்லது செய்ய முடியும்னு நினைக்கிற மனசும், எங்கேயும் இறங்கி வேலை பார்க்கிற துணிச்சலும் இருந்தால் யாரும் எந்தப் பொறுப்புக்கும் வரலாம். அப்படி ஒரு நடிகன், நாளைக்கு முதலமைச்சர் ஆவான். ஆகட்டுமே! என்ன தப்பு?
ஒரு நடிகன் இனி நாடாளக்கூடாதுனு மக்கள் நினைச்சாங்கன்னா, அதை என் விஷயத்தில் சொல்லட்டும். நான் ஒதுங்கிக் கிறேன். ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்கு. அரசியலில் தாக்குப் பிடிக்கத் தேவையான தகுதி, திறமை, உழைப்பு இருக்கு.
நான் ஏன் அரசியலுக்கு வர்றேன்னா.... எனக்குப் பேர், பணம், புகழ்னு எல்லா அடையாளமும் தந்தது இந்த மக்கள். அதுக்கு நான் என்ன திருப்பிச் செய்தேன்னு ஒண்ணு இருக்கணும்ல? அதைச் செய்யறதுக்கும் ஒரு பொறுப்பு வேணும்ல? அதான் அரசியலுக்கு வர்றேன்! ” என்கிறார் விஜயகாந்த்.
எல்லா அரசியல் மாற்றங்களுக்கும் மதுரை தான் ஆரம்பம் என்பார்கள். இங்கே மதுரையே தன் அரசியலை ஆரம்பிக்கிறது.
மற்றவை வெள்ளித் திரையில் அல்ல... மக்கள் சபையில்!
- குல.சண்முகசுந்தரம், த.செ. ஞானவேல்
படங்கள்- என்.விவேக்
(10.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)