கிட்டத்தட்ட 15 வருட நட்பு. மனோபாலா சார் 'கஜினி'யில் ஒரு உதவி இயக்குநராகவும் வேலை செய்த காலகட்டத்திலிருந்து நட்பானார். அப்போது நான் சினிமா எக்ஸ்பிரஸ்ஸில் நிருபராக இருந்தேன்.
ஒரு பிரஸ்மீட்டில்தான் அவர் நண்பரானார். அப்போது கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் பொற்காலமாக இருந்த நேரம், ஸ்டூடியோக்களில் படப்பிடிப்புகள் பரபரக்கும். ப்ரிவியூ தியேட்டர்கள், டப்பிங் ஸ்டூடியோக்களிலும் பிரெஸ் மீட்கள் நிரம்பி வழியும். வாரத்தில் எப்படியாவது ஒரு முறைவாவது அவரைச் சந்தித்துவிடுவேன். அவர்கிட்ட இருந்து போன் வந்தால், அது அதிகாலை 6 மணியாக இருந்தாலும்கூட எதிர்முனையில் `டேய்... எழுந்திரிச்சிட்டியாடா... இன்னும் என்ன தூக்கம்'னு எழுப்பி விட்டுவிடுவார். அதன்பின் ஃபேஸ்புக்கில் என் நண்பராகவும் இணைந்து, என்னைக் கலாய்த்துக்கொண்டிருப்பார். அதில் ஒரு கமென்ட்டை இன்னமும் மறக்க முடியாது. என் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டபோது, அதில் ஒருவர், 'நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க. நடிக்கப் போலாமே' எனப் பதிவிட்டிருந்தார். உடனே இவர், 'அவனுக்கே கோணவாய். இதில் கொட்டாவி வேறயா'ன்னு கமென்ட் அடித்துவிட்டு, அன்று மாலையே எனக்கு போன் பண்ணினார். 'ஏன்டா, உனக்கு நடிக்கறதுல விருப்பம் இருக்குதா'ன்னு கேட்டார். அவருக்கு எப்போதும் நான் பத்திரிகையாளனாக இருந்ததில்லை. அவரும் ஒரு நடிகராக, இயக்குநராக என்னிடம் நடந்துகொண்டதும் இல்லை.

வியாழனன்று காலை அவரைச் சந்திக்கச் சென்றால்... `காரில் ஏறுடா' என்பார். கார் நேராக அவர் அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் சாய்பாபா ஆலயத்தில் போய் நிற்கும். காரில் புஷ்பங்களும், பிஸ்கட் பாக்கெட்களும் எடுத்து வைத்திருப்பார். பாபாவிடம் கொடுத்துவிட்டு அலுவலகம் திரும்புவோம். திருவண்ணாமலை செல்வது அவருக்கு மிகப் பிடித்தமானது.
என் கல்யாணப் பத்திரிகையை அவரிடம் கொடுத்தபோது, 'அன்னைக்கு படப்பிடிப்பு இருக்கேடா' எனச் சொல்லி அனுப்பினார். கனத்த மனதுடன் திரும்பினேன். ஆனால், திருமணத்தன்று மாலையே 6.30 மணிக்கு பெசன்ட் நகர் தேவாலயத்திற்குப் பூங்கொத்தோடு வந்துவிட்டார். 'நைட் ஷூட் இருக்குடா... அதான் உன் ரிஷப்சனுக்கு இருக்க முடியல'ன்னு சொல்லி, வாழ்த்திவிட்டுக் கிளம்பினார்.

சில வருடங்களுக்கு முன்னர் நான் பணிபுரிந்த வார இதழ் ஒன்றில் அவரது சினிமாப் பயணம் முழுவதையும் ஒரு தொடராக எழுதினேன். அதற்காக வாரம் தவறாமல் அவரைச் சந்திக்கச் செல்வேன். அதிகாலை ஆறு மணிக்கே எழுந்துவிடுவார். எழுந்ததும் அலுவலத்தில் தோட்டப் பராமரிப்பு. அன்றைக்கு வந்த செய்தித்தாளிலிருந்து வார இதழ்கள் வரை அனைத்தையும் படித்துவிடுவார். சரியாக காலை ஏழு மணிக்கு அவரைச் சந்திக்கப் போனால், எனக்காக சுடச்சுட இட்லியும், வத்தல் குழம்பும் செய்து வைத்திருப்பார்.
அவர் அலுவலகத்தில் இருக்கும் டிரைவர், மேனேஜர், அப்போது 'சதுரங்க வேட்டை' படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்ததால் அவர் அலுவலகத்தில் குறைந்தது மூன்று பேராவது இருப்பார்கள். அத்தனை பேருக்கும் தன் கைப்பட சுடச்சுட இட்லி சுட்டு, கெட்டி சட்னியும், வத்தக்குழம்பையும் சமைத்து வைத்திருப்பார். நாசர் சாரிலிருந்து, எழில் சார் வரை அவர் வீட்டு வத்தக்குழம்பு ஃபேமஸ்.
உதவியாளர்கள் சூழ, அவருடன் தரையில் அமர்ந்து சாப்பிடுவோம். பின்னர், `இந்த மல்லிச் செடியைப் பார்த்தியா’, `இந்த வெண்டைக்காய் பிஞ்சு விட்டிருக்கு' என மாடித் தோட்டத்து அப்டேட்களை குழந்தையாய்ச் சொல்லி மகிழ்வார். தொடருக்காக அவர் தனது அனுபவங்களைச் சொல்லும்போது ஒருமுறைகூட அவர் வருடங்கள் குறித்தோ, பிரபலங்கள் குறித்தோ யோசித்ததில்லை. மடைதிறந்த வெள்ளமாய் தடுமாறாமல் சொல்லி முடித்துவிடுவார். மனோபாலா ஓர் ஓவியர். ஒரு காலகட்டத்தில் சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அதையெல்லாம் எடுத்துக்காட்டி, என் ரியாக்ஷனை கவனிப்பார்.
அவரைப் பொறுத்தவரை சின்னப் படமோ அல்லது விஜய், அஜித் படமோ, யார் அவரை நடிக்கக் கேட்டாலும், 'எப்போ வரணும். எத்தனை நாள்கள் ஷூட்டிங்'னு கேட்பார். அவ்ளோதான். அந்த வாய்ப்பை மறுக்காமல் நடித்துக் கொடுத்துவிடுவார்.
`என்னண்ணே, இப்படி கதைகூடக் கேட்காம, நடிக்கறேன்னு உடனே கால்ஷீட் கொடுத்திடுறீங்களே!' என அவரிடம் கேட்டிருக்கேன். அவர் ரொம்பவும் கூலாக 'என்னால அந்தப் படம் ஓடப்போறதில்லை. அவங்களுக்கு ஒரு கதை இருக்கும். கதாநாயகன் இருக்கார். வந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கறேன்' என்பார்.

படப்பிடிப்பில் இருந்தாலும்கூட, 'அந்தப் படம் எப்படிடா இருக்கு?' எனக் கருத்து கேட்பார். அவர் கருத்தும் என் கருத்தும் ஒருபோதும் ஒத்துப்போனதில்லை. அவர் அன்னை இல்லம் அருகே உள்ள தெருவில் குடிவந்த போது புதுப் போன் வாங்கியிருந்தார். `உன்கூட நான் போட்டோ எடுத்துக்கிட்டதே இல்லடா' எனச் சொல்லி என்னுடன் செல்ஃபி எடுத்த வி.ஐ.பி, அண்ணன்தான்.

அதன்பின், வடபழனி அவுச்சி ஸ்கூல் எதிரே உள்ள தெருவில் அலுவலகம் போட்டிருந்தார். அங்கிருக்கும் போதுதான் அவர் வேஸ்ட் பேப்பர் சேனல் ஆரம்பித்தார். அவர் பதிவேற்றும் வீடியோக்களை எனக்கு அனுப்பி வைப்பார்.
சாலிகிராமம் அலுவலகத்தில் அவரது மொட்டை மாடித் தோட்டத்தில் வெண்டைக்காய் மரத்தில் காய்த்தது. அன்று மதியமே எனக்கு போன்செய்துவிட்டார். `டேய் வெண்டைக்காய் மரத்துல காய்ச்சுப் பார்த்திருக்கியாடா' எனக் கேட்டார். `அதெப்படிண்ணே மரத்துல காய்க்கும்' என 'கரகாட்டக்காரன்' செந்தில் ரியாக்ஷனாய் கேட்க.. அவர் விளக்கிச் சொன்னபடியே, 'ஆபீஸ் வந்து பாரு... நானும் ஒரு வீடியோ எடுக்கப்போறேன்... நீயும் எடுக்கணும்னா எடுத்துக்கோ'ன்னார். விகடன் சினிமா விருது விழாவிற்காக அழைப்பிதழை அவருக்குக் கொடுப்பதற்காகப் போனேன். 'படப்பிடிப்பில் இருக்கேன்' ஆபீஸ்ல கொடுத்திடு, வாங்கிக்கறேன்' என்றார்.
இப்போது அவரது அலுவலகம் கோயம்பேட்டில் இருக்கிறது. கடந்த மார்ச் 25-ம் தேதிதான் அவரோடு கடைசியாகப் பேசினேன். முகவரியை மேப்போடு, அவரது வாய்ஸையும் ஆடியோ மெசேஜாகப் போட்டிருந்தார். 'கோயம்பேட்டுப் பக்கம் நீ வந்தா ஆபீஸுக்கு வா' என்றவர்... பேச்சை சற்று நிறுத்தி, 'போன் பண்ணிட்டு வா' என்றார். அந்த அலுவலகம் போனால், `வாடா... பாரதி!' என வாஞ்சையோடு என்னை வரவேற்கும் அண்ணன் அங்கு இருக்கப்போவதில்லை.