
குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரையும் இன்னும் நல்லாப் புரிஞ்சிக்கிறேன்.
‘பார்த்தாலே பச்ச முகம், பாலு வடியும் முகம்’’ என்கிற வரிகளுக்கு சொந்தக்காரர் அசோக் செல்வன். ‘ஓ மை கடவுளே’ மூலம் சக்சஸ் கிராஃபில் ஏறியிருக்கும் அசோக்செல்வன் இப்போது மோகன்லாலுக்கு வில்லன்.

‘`மார்ச் மாதமே மோகன்லாலோடு நீங்க நடிச்சிருந்த ‘மரக்கர் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ வெளியாகியிருக்கணும்... வருத்தமா இருக்கா?’’
“ முதல் முறை நெகட்டிவ் கேரக்டர்னு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தேன். முதல் மலையாளப் படம், அங்க நம்மளை எப்படி ஏத்துக்குவாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு . ‘ஓ மை கடவுளே’ வெற்றிக்குப் பிறகு, இந்தப் படம் நல்ல தொடர்ச்சியா இருக்கும்னு மனசுக்குள்ள நிறைய கணக்கு போட்டு வெச்சிருந்தேன். என்ன பண்றது? இந்த வருஷக் கடைசியிலதான் அது வெளியாகும்னு நினைக்கிறேன்.”
‘`பிரியதர்ஷன் இயக்கத்துல அந்தப்படத்துல மோகன்லால் மட்டுமல்லாம, அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ்னு பல நடிகர்கள்... எப்படி இருந்தது?”
“ ‘சில சமயங்களில்’ படத்துல பிரியதர்ஷன் சார் கூட வேலை செஞ்சிருக்கேன். இந்தப் படத்துக்கு என்னைக் கூப்பிட்டவுடன் மலையாளம், நெகட்டிவ் ஷேட் கொஞ்சம் தயக்கமா இருந்தது. ‘What’s your problem? You are an actor. I believe in you. Come and Do’னு சொன்னார். உடனே போயிட்டேன். மலையாளத்துல பேசி நடிக்கிறதுக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். என்னைத் தவிர எல்லோருமே ரொம்ப சீனியர்ஸ். நாம ஸ்பாட்ல போய் பேசிப்பார்த்து, இன்னொரு டேக் போலாம்னுலாம் டைம் எடுத்துப் பண்ண முடியாது. சீன் பேப்பரை முதல் நாளே வாங்கி நைட் முழுக்க உட்கார்ந்து படிச்சு மனப்பாடம் பண்ணிட்டுப் போயிடுவேன். ஒரு நாள் ரொம்பப் பெரிய டயலாக்கைப் பேசி முதல் டேக்லயே ஓகே பண்ணிட்டேன். அர்ஜுன் சார் கைதட்ட ஆரம்பிச்சவுடன் எல்லாரும் கைதட்டிப் பாராட்டி னாங்க. அது என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத தருணமாகிடுச்சு.

மோகன்லால் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிக்கப் போறோம்னு தெரிஞ்சவுடன், அவர்கிட்ட இருந்து எவ்ளோ கத்துக்க முடியுமோ கத்துக்கிட்டு வந்திடணும்னுதான் என் மனசுல தோணுச்சு. மனுஷன் செம ஜாலி. நடிக்கிறதே தெரியாம கேஷுவலா நடிச்சு கைத்தட்டல் வாங்கிட்டுப் போயிடுவார். அவர் நடிக்கிறதைப் பார்க்கும்போது ரொம்ப கேஷுவலாத் தெரியும். ஆனா, ஸ்கிரீன்ல அதோட தாக்கம் வேற மாதிரி இருக்கும்.”
‘`மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்குலயும் அறிமுகமாகப்போறீங்க. அந்தப் படம் எப்படி வந்துட்டு இருக்கு?’’
“அந்தப் படத்துடைய இயக்குநர் அனி சசியும் நானும் ‘மாயா’ன்னு ஒரு ஷார்ட் பிலிம்ல வொர்க் பண்ணியிருக்கோம். அது இன்டர்நேஷனல் லெவல்ல விருது வாங்குச்சு. இதுல ஒரு செஃப் கேரக்டர்ல நடிக்கிறேன். அந்தக் கேரக்டருக்காக 100 கிலோ வரை வெயிட் போட்டேன். எனக்கு என்ன வேணாலும் சாப்பிடலாம்ங்கிற சுதந்திரம் இருந்தது. 40 நாள் லண்டன்ல ஷூட்டிங். என்னென்ன கிடைக்குமோ எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சுட்டேன். நித்யா மேனன், ரீது வர்மானு ரெண்டு ஹீரோயின்ஸ். ‘ஓ மை கடவுளே’ படத்தை ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் எப்படி சேர்ந்து பண்ணமோ அதே மாதிரி ஃபீல்தான் இந்தப் படத்துலயும் இருந்தது. இப்போ தெலுங்குல இருந்து நிறைய வித்தியாசமான கதைகள் வர ஆரம்பிச்சிருக்கு. டோலிவுட்ல எல்லோரையும் சூப்பரா ட்ரீட் பண்றாங்க. இப்போக்கூட ரெண்டு கதைகள் தெலுங்குல இருந்து வந்திருக்கு. ரெண்டுமே சூப்பரா இருக்கு.”

‘` `சூது கவ்வும்’, ‘தெகிடி’ ரெண்டு படங்களோட சீக்வெல்லும் ரெடியாகுதுன்னு கேள்விப்பட்டோமே?’’
“ஏகப்பட்ட ஆடிஷன், நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கிட்டேன். ஆனா, எனக்கு சரியான வாய்ப்பே அமையலை. ஒரு கட்டத்துல சினிமாவே வேணாம்னுகூட தோணிடுச்சு. அப்போ எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான் ‘சூது கவ்வும்’. ஒருவேளை இந்தப் படம் கிடைக்கலைன்னா, சினிமா வேண்டாம்னு விட்டிருப்பேன். நலன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். அதோட சீக்வெல் பத்தி எனக்குத் தெரியாது. அதுக்கான அழைப்பும் எனக்கு இன்னும் வரலை. நானும் ‘தெகிடி’ இயக்குநர் ரமேஷும் ஒரு படம் பண்றோம். அது ‘தெகிடி 2’-ஆக இருக்குமானும் எனக்குத் தெரியாது.”
‘`நடிகர்கள் சரியான வாய்ப்புகள் இல்லாதபோது டிப்ரஷனுக்குப் போய்டுவாங்கன்னு சொல்லுவாங்க... நீங்களும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் ரொம்ப நாள் இருந்தீங்க... அந்த நாள்களை எப்படிக் கடந்து வந்தீங்க?’’
‘`நான் தமிழ்நாடு அண்டர்-17 டீம்ல கிரிக்கெட் விளையாடியிருக்கேன். கிரிக்கெட்தான் என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர். கிரிக்கெட் விளையாடும்போது நமக்கான பட வாய்ப்புகள் வரலை, ஈ.எம்.ஐ கட்டணும், வீட்ல பிரச்னைன்னு எதுவும் மனசுல இருக்காது. வர்ற பந்தை எப்படி சந்திக்கணும்னு மட்டும்தான் ஃபோகஸ் இருக்கும். அந்த மொமன்ட்ல இருப்போம். அதனால கிரிக்கெட்தான் எனக்கான மோட்டிவேஷன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிளப் மேட்ச்ல செஞ்சுரி அடிச்சேன். அந்த ஃபீல் நல்லாருந்தது. ஏன்னா, அந்தச் சமயத்துல எனக்குப் பட வாய்ப்புகள் குறைவாதான் வந்தது. அதுவும், எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. அதனால, ரொம்ப டிப்ரஷன்ல இருந்தேன். அப்போ நான் அடிச்ச செஞ்சுரி எனக்குக் கொஞ்சம் ஆறுதலா, எனக்கான நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அந்த செஞ்சுரிக்குப் பிறகு, நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. அதனால, எனக்கு என் வாழ்க்கையில அந்த 100 எப்பவும் ஸ்பெஷல்!”
‘`உங்கள் கனவு கேரக்டர்...?’’
“இப்ப நடிச்சிருக்கிற மலையாள வரலாற்றுப் படத்துல நான் வில்லன். அதனால, எனக்கு இன்னொரு வரலாற்றுப் படத்துல ஹீரோவா நடிக்கணும். உண்மையைச் சொல்லணும்னா, ‘பொன்னியின் செல்வன்’ படத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அப்புறம், யாருடைய பயோபிக்லயாவது நடிக்கணும், செம மாஸா ஒரு வில்லன் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசையிருக்கு.”
‘`லாக்டெளன் நாள்கள் எப்படிப்போயிட்டிருக்கு?’’
‘`குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்கிறதுக்கான நேரமா இந்த நாள்களை நான் எடுத்துக்குறேன். என் அம்மா சமையல் சூப்பரா இருக்கும். நல்லா சாப்பிடறது, படம் பார்க்குறதுன்னு சந்தோஷமா இருக்கேன். நிறைய முறை ‘எனக்கு டைம் இல்லை. இருந்திருந்தா இதைக் கத்திருந்திருப்பேன், அதைச் தெரிஞ்சிருந்திருப்பேன்’னு சொல்லியிருக்கேன். ஆனா, டைம் நிறைய இருந்திருக்கு. நான்தான் கத்துக்கிறதுக்கான முயற்சி எடுக்காம இருந்திருக்கேன்னு இப்போதான் புரிஞ்சது. என்கிட்ட இருக்கிற குறைகள் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டேன். குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரையும் இன்னும் நல்லாப் புரிஞ்சிக்கிறேன்.”

‘`உங்க டெய்லி டைம் ஷெட்யூல் சொல்லுங்க?’’
‘`என் அக்கா பையன் இங்கதான் இருக்கான். அவன்தான் எனக்கான என்டர்டெய்ன்மென்ட். தலைமுடி அதிகமா இருந்ததனால ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருந்தான். எனக்கும் முடி வெட்டிப் பழகணும்னு ஆசை. அதனால அவனை வெச்சுக் கத்துக்கலாம்னு அவனுக்கு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மாதிரி ஹேர் கட் பண்ணிவிட்டிருக்கேன். ஸ்மார்ட்டா இருக்கான். மெயில், வீடியோ கால் மூலமா நிறைய கதைகளும் கேட்டுட்டு இருக்கேன்.”
‘`நடிகர் ஆனதும் நீங்க முதல்ல டிக் அடிச்ச விஷ் லிஸ்ட் என்ன?’’
“ஸ்கோடா ஆக்டேவியா VRSன்னு ஒரு கார். அதை போன் வால் பேப்பரா, ரூம்ல போஸ்டரா ஒட்டி வெச்சுக் கனவு கண்டிருக்கேன். அந்தக் காரை வாங்கிட்டேன். அப்புறம் பெசன்ட் நகர் இல்லைனா போட் கிளப்ல ஒரு பெரிய வீடு வாங்கணும்னு ஆசை. அது இன்னும் டிக் ஆகாமல் இருக்கு.”