கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

காதலில் சொதப்பலாம்; படத்தில் சொதப்பக்கூடாது!

சித்தார்த், அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தார்த், அமலா பால்

நம்ம வேலையை நாம சரியா பார்த்திருக்கோம்கிற ஒரு திருப்தி இருக்கு.

தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ ஒரு ட்ரெண்ட்செட்டர். ஒரு குறும்படம் பலரின் கவனம் ஈர்த்து அதுவாக திரைப்படமாக மாறியது. குறும்படம் எடுத்து அதன்மூலம் சினிமா வாய்ப்புபெற்று நேரடியாக இயக்குநர் ஆன பல திறமைசாலிகளுக்கு முன்மாதிரி பாலாஜி மோகன்தான். தமிழின் முதல் வெப் சீரிஸும் இவருடையதுதான்.

சித்தார்த், அமலா பால்
சித்தார்த், அமலா பால்

‘`குறும்படம் டு திரைப்படம்... இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது?’’

`` ‘காதலில் சொதப்புவது எப்படி’ குறும்படம் ’நாளைய இயக்குனர்’ ஷோல வந்தபோதே நல்ல ரெஸ்பான்ஸ். அந்தக் ஸ்கிரிப்ட் எழுதும்போதே, இந்தக் கதையைப் படமாவும் பண்ணலாம்; அதுக்கான ஸ்கோப் இருக்குன்னு தெரிஞ்சது. ஷோ முடிஞ்சதும் தயாரிப்பாளர்களைத் தேடாமலேயே முழுப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டா மாற்ற ஆரம்பிச்சிட்டேன். அப்பதான் யூடியூப் பிரபலமாகிட்டிருந்துச்சு. யாரோ ஒருத்தர் டிவில வந்த குறும்படத்தை மொபைல்ல ஷூட் பண்ணி யூடியூபில் போட்டிருக்கார். எக்கச்சக்கமான வியூஸ். அந்த வீடியோவை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா சார் பார்த்துட்டு, ’ஒய்நாட் ஸ்டூடியோ’ சஷி சார்கிட்ட சொல்லியிருக்கார். நான் இந்த ஸ்கிரிப்ட்டை முடிக்கிற சமயத்தில் சஷி சாரும் என்னை அப்ரோச் பண்ணினார். சித்தார்த் சாரும் படத்தை யூடியூப்ல பார்த்துட்டு எங்களோடு ஜாய்ன் பண்ணிக்கிட்டார். இப்படித்தான் படம் டேக் ஆஃப் ஆச்சு.’’

‘`குறும்பட இயக்குநரா இருந்து நேரடியா படம் இயக்க வந்த முதல் ஆள் நீங்கள்தான்; அந்த ப்ரெஷரை எப்படிக் கையாண்டீங்க?’’

``ப்ரெஷர் இருந்துச்சு. ஆனால், வெளில ரொம்ப கூலா இருந்தேன். சஷி சார் என்கிட்ட, ‘நீ என்ன டென்ஷனே இல்லாம இருக்குற; சந்தேகமா இருக்கே’ன்னு கேட்டார். ‘என்னன்னு தெரியலை சார்; பதற்றமாவே இல்லை. ரெண்டு வருஷமா இந்த ஸ்கிரிப்ட் வொர்க்கிலேயே இருக்கிறதாலயும், தொடர்ந்து குறும்படங்கள் எடுத்திட்டு இருந்ததாலயும் நம்பிக்கையா இருக்கேன் போல’ன்னு சொன்னேன். ஆனால், எனக்குள்ள இந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்கிற எண்ணம் ஓடிட்டே இருந்துச்சு. ஏன்னா, குறும்பட இயக்குநரை நம்பி ஒரு தயாரிப்பு நிறுவனம் படம் எடுக்கிறாங்க. அதுல சித்தார்த், அமலா பால்னு ஃபேமஸான நடிகர்கள் நடிக்கிறாங்க. நீரவ் ஷா, தமன் மாதிரி டெக்னீஷியன்ஸ் கொடுத்திருக்காங்க. இவங்க எல்லாரையும் வெச்சுக்கிட்டு நான் சொதப்பிட்டா, எனக்கு அப்புறம் வர குறும்பட இயக்குநர்களுக்கும் இது பிரச்னையா அமைஞ்சிடும். அதனால, நாம சொதப்பிடக்கூடாதுன்னு நினைச்சிட்டே இருந்தேன். படம் ரிலீஸாகி நல்ல ரெஸ்பான்ஸ் வந்ததுக்கு அப்புறம், அடுத்தடுத்து படங்கள் பண்றதுக்கு ரெடியா இருந்த குறும்பட இயக்குநர்கள் என்கிட்ட, ‘நல்ல வேளை... ஹிட் பண்ணிட்டீங்க. இல்லைன்னா, அதை வெச்சே அடுத்தடுத்து போற எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணியிருப்பாங்க’ன்னு சொன்னாங்க. நம்ம வேலையை நாம சரியா பார்த்திருக்கோம்கிற ஒரு திருப்தி இருக்கு.’’

‘`முதல் பட ஷூட்டிங்கில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிச் சொல்லுங்க?’’

``நான் எழுதி, இயக்கி, சில காட்சிகளில் நடிச்சிருக்கேன். அதையும் தாண்டி ஒரு பாடலை கோரியோகிராப் பண்ணினேன். ‘ஆனந்த ஜலதோஷம்’ பாட்டைக் கொஞ்சம் வித்தியாசமா கோரியோகிராப் பண்ணணும்னு ப்ளான் பண்ணி, நானே அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் மூவ்மென்ட் கோரியோ பண்ணி, அதை சில டான்ஸர்களுக்குச் சொல்லிக்கொடுத்து, அந்தப் பாட்டை எடுத்தேன். இந்த அனுபவம் எனக்கு வித்தியாசமாவும், மறக்க முடியாததாவும் இருந்துச்சு.’’

பாலாஜி மோகன்
பாலாஜி மோகன்

‘`உங்களோட முதல் படம் ரிலீஸாகி எட்டு வருஷம் ஆகுது; மீண்டும் இந்தப் படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தால் எதையெல்லாம் மாத்துவீங்க?’’

`கதையே மாறிடும். ஏன்னா, எட்டு, ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி காதலர்கள் எப்படி இருந்தாங்களோ அதை வெச்சுத்தான் இந்தக் கதையை எழுதினேன். இப்போ இருக்கிற காதல், இந்தக் கதையைவிட அப்கிரேட் ஆகிடுச்சு. அதனால, அதுக்கு ஏற்றமாதிரி வேற கதைதான் எழுதணும். காதல் அப்கிரேட் ஆன மாதிரி, ரிலேஷன்ஷிப் மேல இருக்கிற என்னோட புரிதலும் மாறியிருக்கு. அதை வெச்சுத்தான் ‘As I’m Suffering from Kadhal’ங்கிற வெப் சீரிஸை எடுத்தேன். இந்த வெப் சீரிஸே கிட்டத்தட்ட `காதலில் சொதப்புவது எப்படி’ படத்தோட அப்கிரேடட் வெர்ஷன்தான்.’’

‘`படம் பார்த்துட்டு வந்த பாராட்டுகளில் மறக்க முடியாதது எது..?’’

``இந்தப் படத்தோட சக்ஸஸ் என்னன்னா, அதுவரைக்கும் தமிழில் வந்த காதல் படங்களில் காட்டாத காதலர்களுக்கிடையே இருந்த குட்டி, குட்டி விஷயங்களை எல்லாம் இதில் காட்டினதுதான். அது நிறைய காதலர்களுக்கு ரொம்பவே கனெக்ட்டாகியிருக்கு. `இதே மாதிரிதான் நாங்க சண்டை போடுவோம்; எங்க வாழ்க்கையிலேயும் இப்படி நடந்திருக்கு’ன்னு படம் பார்த்த பல பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க. அதுமட்டுமல்லாமல், என் ஃபிரெண்ட்டுக்குத் தெரிஞ்ச ஒரு பிரேக் அப்பான காதல் ஜோடி, இந்தப் படம் பார்த்துட்டு மீண்டும் ஒண்ணு சேர்ந்திருந்தாங்க. இதுதான் இந்தப் படத்துக்குக் கிடைச்ச மிகப்பெரிய பாராட்டு.’’

சீக்கிரம் அப்கிரேடு ஆகி அடுத்த அதிரடி கொடுங்க நண்பா!