கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

அனல் மேலே பனித்துளி - சினிமா விமர்சனம்

ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்ட்ரியா

பாதிக்கப்பட்ட மதியாக வரும் ஆண்ட்ரியா காவல்நிலையக் காட்சிகளில் நெஞ்சை உறையவைக்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண், தனக்கான நீதியைப் பெற நடத்தும் போராட்டமே ‘அனல் மேலே பனித்துளி.'

சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை ஒன்றில் மேலாளராக இருக்கும் மதி, தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரின் திருமணத்துக்காகக் கொடைக்கானல் செல்கிறார். அங்கே மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். ஏற்கெனவே மதியைப் பழிவாங்கக் காத்திருக்கும் சில ஆண்கள்தான் குற்றவாளிகள் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறது காவல்துறை. ஆனால், அதன்பின் மதிக்குப் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவர, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதே படத்தின் கதை.

அனல் மேலே பனித்துளி - சினிமா விமர்சனம்

பாதிக்கப்பட்ட மதியாக வரும் ஆண்ட்ரியா காவல்நிலையக் காட்சிகளில் நெஞ்சை உறையவைக்கிறார். முதல் பாதியில் இரண்டே காட்சிகளில் காணாமல்போகும் ஆதவ் கண்ணதாசன், இரண்டாம் பாதியில் ஆண்ட்ரியாவுக்குத் துணையாக நிற்கும் காட்சிகளில் ஆறுதலளிக்கிறார். காவல்துறை அதிகாரிகளில் அழகம்பெருமாள் மட்டுமே சாதுரியம், தந்திரம், பதற்றம் ஆகியவற்றைப் பிரதிபலித்திருக்கிறார். அறிமுகமாகும் காட்சியிலிருந்து இறுதிவரை இளவரசு ஒரேமாதிரியான உணர்வுகளையே வெளிப்படுத்துவது ஏமாற்றம். மூன்றாவது போலீஸாக நடித்திருப்பவரோ கடமைக்குச் சில வார்த்தைகளை மட்டுமே வசனங்களாகப் பேசியிருக்கிறார்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண் சந்திக்கும் உளச்சிக்கல்கள், அவளின் உடலே எப்படி அவளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படுகிறது, பாதிக்கப்பட்ட பெண்ணையே இந்தச் சமூகம் எப்படித் தவறாகப் பார்க்கிறது உள்ளிட்ட முக்கியமான விவாதங்களை நிகழ்த்தும் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கைசர் ஆனந்த். ‘‘உசுரு பெருசா, மானம் பெருசான்னா, மானம்தான் பெருசு. ஆனா, அந்த மானம் எதுல இருக்கு, என் உடம்புலயா? நான் வாழற வாழ்க்கையிலதானே?’’ என ஆண்ட்ரியா பேசும் வசனங்களும், தன் உறவினர்களிடம் கால மாற்றம் குறித்து ஆதவ் பேசும் வசனங்களும் முக்கியமானவை.

கொடைக்கானலின் இயற்கைக் காட்சிகளில் மட்டும் குளிர்ச்சி தருகிறது வேல்ராஜின் கேமரா. பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, சந்தோஷ் நாராயணன் வெளிப்படவே இல்லை.

அனல் மேலே பனித்துளி - சினிமா விமர்சனம்

பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியாவைக் குற்றவாளிகள் இருக்கும் இடத்திலேயே காவல் ஆய்வாளர் அனுபமா குமார் விட்டுச் செல்வது, பின்னர் தேடாமலே இருப்பது, விசாரணை வளையத்துக்குள் வந்த பின்னரும் குற்றவாளிகள் செல்போன் பயன்படுத்துவது, ஆபாச வீடியோக்களை வெளியே விடுவது என்று படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். இத்துடன் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் லிப் சிங்க் போன்ற தொழில்நுட்பப் பிரச்னைகளும்கூட.

பேசும் அரசியலில் அனல் இருந்தாலும், பட உருவாக்கம், வெயிலில் காணாமல்போகும் பனித்துளியாக பலவீனமாக இருக்கிறது.