Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

திறமைக்கு மரியாதை

எஸ்.எஸ்.வாசன் விருது - மணிரத்னம்

மலைச்சரிவில் அதன் போக்கில் உருண்டு போகும் சரளையைப் போலத்தான் தமிழ் சினிமா. ஓட்டம் தேய்ந்து ஏதோவொரு புள்ளியில் களைத்து நின்றுவிடும். அப்போது தேவை, பெருங்காதலோடு அதை மீண்டும் முன்னே எறியும் கரங்கள். 80களில் இப்படி ஓய்ந்து போய் நின்றிருந்த சினிமா இயக்கத்தின் வடத்தைத் தாங்கிப்பிடித்தன ஒரு ஜோடிக் கரங்கள். 30 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் அதே உறுதியும் பிடிப்பும் தெரிகிறது அந்தக் கரங்களில். உழைக்கச் சலிக்காத அந்தக் கரங்களுக்கும், சினிமாமீதான பேரன்பை விட்டுக்கொடுக்காத அந்த மனசுக்கும் சொந்தக்காரர் மணிரத்னம்.

வசனங்களில் மட்டுமே வாழ்ந்த தமிழ் சினிமாவுக்கு, ‘திரைப்படம் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்ட கலை ஊடகம்’ என்பதை நினைவுபடுத்தியவர் மணிரத்னம். இசையும் ஒளியும் இணைந்து இயையும் அழகியலைத் தன் படங்களில் விருந்தாகப் படைத்தவர். மிகச்சுருக்கமான வசனங்களே மணிரத்னம் குறித்த விரிவான அறிமுகம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

‘இதயகோயில்’ காதலைத் தொழ, ‘மௌன ராகம்’ காலத்தில் பல்லாண்டுகள் முன்னே போய் இரண்டாம் வாய்ப்பின் அவசியத்தைப் பாடியதுடன், ஒரு பெண்ணுக்கான பால்ய காதலையும் தமிழ் சினிமாவில் அழுத்தமாகப் பதிவு செய்தது. தொடர்ச்சியாகவே மணிரத்னம் சினிமாக்களின் பெண்கள், தயக்கங்களை உடைக்கும் தனித்துவப் பாத்திரங்களே.

மணிரத்னம் நிகழ்த்திய மகத்தான மாற்றம், ‘நாயகன்’ எனும் அற்புதம். உலக சினிமா வரைபடத்தில் சிங்காரச் சென்னை சிம்மாசனம் போட்டு அமர்ந்தது நாயகனுக்குப் பிறகுதான். இன்றுவரை நிழலுலகச் சண்டைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்கு நாற்றங்காலாய் இருப்பது ‘நாயகன்’ தான். இருபெரும் உச்ச நட்சத்திரங்கள் எந்த ஈகோவும் இல்லாமல் கைகோத்துப் பயணிக்க முடியும் என்பதை உணர்த்திய ‘தளபதி’, இன்றுவரை நட்பின் அடிப்படை இலக்கணம்.

உலகமயமாக்கலின் தொடக்கத்தில் காதலின் எழுச்சியைப் பேசிய ‘அலைபாயுதே’, மேற்கத்திய நாகரிகத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட 21-ம் நூற்றாண்டு ‘ஓ காதல் கண்மணி’ எனக் காதலுக்கு அகராதியில் பொருத்தமான பொருள் மாற்றிக்கொண்டே இருப்பதில் இவருக்கு நிகர் இவரே.

காவியக் காதல் மட்டுமல்ல, காவியங்களின் மீதான காதலும் இவர் அடையாளம். மகாபாரதத்தை கர்ணனின் பார்வையில் பேசிய தளபதி, ராமாயணத்தை சீதையின் பார்வையில் பேசிய இராவணன், இதோ இப்போது உலகத் தமிழ்க்குடும்பங்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்த ‘பொன்னியின் செல்வன்’ என தனக்குப் பின்னால் களமிறங்கியவர்களையும் தாண்டிப் பாய்ந்துகொண்டிருக்கும் தேடல்தான் மணிரத்னம் ஸ்பெஷல்.

தாகங்கொண்ட பெரும்பறவைக்கு வானமும் போதாதே! மணிரத்னம் தமிழ் சினிமாவின் தாகங்கொண்ட பெரும்பறவை.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த படம் - ஜெய் பீம்

கானகத்துத் தொல்குடிகளின் வழி ‘ஜெய் பீம்' பேசியது ஒரு காத்திரமான காட்சி ஆவணம். வெயிலும் வியர்வையுமே வாழ்க்கையாகிவிட்ட வெள்ளந்தி மனிதர் கூட்டமொன்றை, அதிகாரம் தன் வெறிக்கு பலியாய்க் கேட்பதை நெஞ்சம் பதைபதைக்கச் சொன்ன உணர்ச்சிச் சித்திரம். அரணாய் நிற்கவேண்டிய காவல்துறை அநீதித்துறையாய், சமமாய் நடத்தவேண்டிய சட்டம் வெற்றுப்புத்தகமாய் இருபுறமும் மாறி நிற்க, நடுவே வாழ்வையும் சாவையும் விளிம்பில் தொட்டு மீளும் இருளர்களின் பாட்டைக் கண்டு கனத்துப்போயின நெஞ்சங்கள். உடல் மேல் காலங்காலமாய் நிகழ்த்தப்படும் அரச வன்முறைக்கு ராசாக்கண்ணுவின் கணுத்துப் போன காயங்கள் சாட்சி என்றால், அதை எதிர்த்து சமர் செய்யத் தயங்காது எளியவர்களின் மனம் என்பதற்கு செங்கேணியின் காய்த்துப்போன கரங்கள் சாட்சி. ஒரு நல்ல படைப்பு என்றும் திரையோடு மட்டும் தேங்கிப்போவதில்லை என்பதற்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய் நீண்ட நேசக்கரங்கள், பழங்குடிகளுக்கு அரசால் முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் என ‘ஜெய் பீம்' நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியது ஒரு அசல் சமூக மாற்றம். அந்தவகையில் கலைக்கும் கருத்துக்கும் கமர்ஷியலுக்குமாய் மூன்று கோடுகள் வரைந்து, அதன் உச்சியில் தூக்கி வைக்கலாம் இந்த மக்களுக்கான சினிமாவை!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த இயக்குநர் - த.செ.ஞானவேல் - ஜெய் பீம்

‘ஜெய் பீம்’ மூலம் த.செ.ஞானவேல் நிகழ்த்தியது மொத்த சினிமாவிற்கும் அவசியமான ஓர் உரையாடல். கலைப் படைப்பிற்கும் கமர்ஷியல் படத்திற்கும் இடையே பன்னெடுங்காலமாய் அழுந்த வரையப்பட்டிருக்கும் அடர்த்தியான கோட்டை, சுவடு தெரியாமல் இவர் துடைத்தெடுக்க, இப்போது அந்த வழியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. மறுமுனையில், ‘வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெறும் சாகசக்கதைகளாய் இருக்கவேண்டியதில்லை, சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பாகவும் இருக்கலாம்’ எனப் புது எல்லைகளையும் சேர்த்து வரைந்த படைப்பாளி. பழங்குடிகளின் இருளடர்ந்த வாழ்வை வன்சோகக் கவிதையாய்க் கட்டமைத்து, அதில் வெளிச்சத்தின் குறியீடாய்க் கறுப்பை நிறுத்தி இவர் போதித்தது மிக முக்கியமான அரசியல் பாடம். ‘எல்லாரும் சமம்தானே’ என, சிறுமி அல்லி இறுதிக்காட்சியில் கால் மேல் கால் போட்டு அமரும்போது ஆறுதலை நிரப்பிப் பெருமூச்சுவிட்ட அத்தனை மனங்களும் அதற்கு சாட்சி. ‘ஒரு படம் என்ன செஞ்சுடும்’ என எகத்தாளமாய் எள்ளி நகையாடியவர்களை எல்லாம் ‘ஒரு படத்தின் வீரியம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?’ என அசந்துபோய்ப் பேச வைத்ததில் தொடங்கி, அரசையே இறங்கி வந்து சீர்திருத்தம் மேற்கொள்ள வைத்தது வரை, ஒரு முழுமையான கலைஞனுக்கான அத்தனை தகுதிச் சான்றிதழ்களிலும் இருந்தது த.செ-வின் முத்திரை!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த நடிகர் - சூர்யா - சூரரைப் போற்று, ஜெய் பீம்

வாழ்க்கை வரலாற்றுத் திரைப் படங்களில் நடிப்பது எளிதான வேலையில்லை. எல்லாருக்கும் பரிச்சயமாகி விட்ட அந்த அசல் கதாபாத்திரத்தையும் பிரதிபலிக்க வேண்டும், அதேசமயம் ஒரு நடிகனாய் தனக்கான இடங்களையும் அந்த வரைவில் தேர்ந்தெடுத்து ஒளிர வேண்டும். பலரையும் திண்டாட வைக்கும் இந்த உள்முரண், சூர்யாவுக்கு மட்டுமே கைவந்த கலையாய் வாய்த்திருக்கிறது. ‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் கம்பேக்தான். படத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை பார்த்து மொத்தத் தமிழகமும் ‘ஜெயிச்சுட்ட மாறா’ என உச்சிமுகர்ந்து வாழ்த்தியது. அடுத்த ஆண்டு ‘ஜெய் பீமி’ல் நீதிமன்ற வளாகத்திற்குள் தர்க்கமும் தீர்க்கமான கண்களுமாய் எதிரிகளைப் பொசுக்கும் நீதி அரசன், வெளியே கண்களைக் கட்டிக்கொண்டு மனதை மட்டும் திறந்துகாட்டி நெகிழும் தேவதை என இருவேறு பரிமாணங்கள். இரண்டையும் நீதித்தராசைப் போலவே சமமாய் சுமந்து மிளிர்ந்தார் இந்த துருவ நட்சத்திரம். வழக்கமான கதாநாயக அம்சங்களோ, பாடல்களோ, இணையோ, சாகச சண்டைக்காட்சிகளோ கதையில் இல்லை. போக, மற்றொரு பிரதான கதாபாத்திரத்தோடு திரையை, நடிப்பிற்கான வெளியைப் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். வேறு யாராவதாக இருந்திருந்தால் எளிதாய் மறுத்திருக்கக்கூடும் இந்தப் படத்தை. ஆனால் சூர்யா சொன்ன ஒற்றை ‘யெஸ்’ ஒரு நடிகராய், தயாரிப்பாளராய் அவரின் திரையுலகப் பயணத்தை மட்டுமல்லாமல் மொத்தத் தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றியமைத்திருக்கிறது. மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் என்றும் முதல்படியாய் தன்னையே நேர்ந்துகொள்ளும் சூர்யா தமிழ் சினிமாவிற்குக் கொடுப்பது வாரணம் ஆயிரங்களின் பலத்தை!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த நடிகை - லிஜோமோள் - ஜோஸ் ஜெய் பீம்

சிறந்த நடிகை - செங்கேணி என்றே எழுதிவிடுமளவிற்கு ஜெய் பீமில் ஒன்றிப்போயிருந்தார் லிஜோமோல். வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்காட்ட நாயகர்களுக்கு வாய்ப்புத் தருமளவிற்கு நாயகிகளுக்குத் தருவதில்லை தமிழ் சினிமா. கிடைத்த அந்த ஒரு வாய்ப்பையும் செங்கேணி செம்மையாய் பயன்படுத்திக்கொள்ள, பின் வருபவர்களுக்கு இப்போது திறந்திருக்கின்றன ஆயிரம் கதவுகள். ஆண்டுகள் கழிந்தபின்னும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்ளலாம், விதை லிஜோமோள் போட்டதென! நாடோடி இனக்குழுக்களின் கண்களிலேயே தேங்கிவிட்ட தேடல், ஆள்பவர்களுக்குத் தன் முதுகைக் காட்டி நடைபோட்ட மிடுக்கு, இறுதிக்காட்சியில் மழையோடுகூடி உள்ளே கெட்டிதட்டிப்போயிருந்த உணர்ச்சிகளும் கரைந்து வெளியேறும்போதான வலி, எல்லாம் முடிந்தபின் பூக்கும் ஓர் மென்சோகப் புன்முறுவல் என அவர் கொட்டிவிட்டுப் போன நவரசங்களின் ஒவ்வொரு மில்லி அளவிலும் ஒளிந்திருந்தது அசாத்திய கலைத்திறன். ‘மனிதத்தை’விட பான் இந்தியா உணர்வு என்ன இருக்கப்போகிறது எனத் திரையில் உரை நிகழ்த்திய இந்த மனிதி, கடந்த ஆண்டு தமிழ் சினிமா மீண்டும் கண்டெடுத்த செம்பொன்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் - மாஸ்டர், டாக்டர்

2021 - அனிருத்தின் ஆண்டு. பொதுவாய் பாடல் வெளியீட்டிற்கும் பட ரிலீஸுக்கும் நடுவே பெரிய இடைவெளி இருப்பது அந்தப் பாடல்களை மெல்ல நீர்த்துப் போகச் செய்துவிடும். ஆனால் பத்து மாதங்கள் கழித்துத் திரையில் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்கும்போதும் முதல் தடவை கேட்டபோது தொற்றிய அதே எனர்ஜி இறுகப்பற்றிக்கொண்டது பார்வையாளர்களை! ‘வாத்தி கம்மிங்’கிற்கும் ‘வாத்தி ரெய்டி’ற்கும் திருவிழாக்கோலம் பூண்டன தியேட்டர்கள். குத்துப்பாட்டு கோட்டா ஓவர் என ‘டாக்டர்’ படத்தில் துள்ளலாய் ‘செல்லம்மா’, மெய்மறக்கச் செய்யும் ‘நெஞ்சமே’ என ஸ்டைலுக்கு ஒன்றாய் போட்டுத் தாக்க, செவிப்பறைகளில் நிரந்தரமாய்த் தங்கிப் போயின பாடல்கள். ‘கபடி’ தீமை காலத்திற்கேற்றாற்போலத் தகவமைத்தது, கர்நாடக சங்கீதம் வழியே ஹீரோவுக்கான மாஸ் பில்டப்பை ஏற்றியது... இப்படி தனக்குள் தேடித்தேடி அவர் தொட்ட உயரங்கள் பலப்பல! அனிருத் தமிழிசையை மேலும் முன்னகர்த்திச் செல்லும் ராக்ஸ்டார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா - மாநாடு

வில்லத்தனம் என்றால் மிரட்டும் உடல்மொழியும் கோபப் பார்வையுமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சிரித்தபடியே திரையில் வென்று காட்டினார் எஸ்.ஜே சூர்யா. முதல்பாதி முழுக்க குரோதமும் சதியும் மண்ட, இரண்டாம் பாதியில் அப்படியே நேர்மாறாய் குதர்க்கமும் விஷமமுமாய் இவர் எடுத்தவை இருவேறு அவதாரங்கள். உதயத்திற்கு முன்னான வானம் சட்சட்டென ஒரு நிறம் உதிர்த்துவிட்டு மற்றொரு நிறம் பூசிக்கொள்வதுபோல இவர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துகொண்டே இருக்க, மாய்ந்து மாய்ந்து பாராட்டினார்கள் ரசிகர்கள். வில்லனைப் பார்த்துக் குழந்தைகள் மருள்வதுதானே வாடிக்கை. ஆனால், ‘ஐயோ... தலைவரே தலைவரே...’ என இவர் கதறும்போதெல்லாம் வெடித்துச் சிரித்தார்கள் குழந்தைகள். நாயகனுக்கு இணையாக நெகட்டிவ் கேரக்டரும் ஜெயிக்க வேண்டும் எனப் படம் பார்ப்பவர்கள் நினைத்ததே இவரின் திறனுக்கு அத்தாட்சி. ‘வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு’ வசனம் மீம்களாகவும் ரீல்ஸ்களாகவும் மீண்டும் மீண்டும் ரிப்பீட் அடித்ததே எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனத்துக்கான விருதுதான்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த நகைச்சுவை நடிகர் - ரெடின் கிங்ஸ்லி - டாக்டர்

கொஞ்ச காலம் பயணித்தபின்பே தங்களுக்கான பிரத்யேக உடல்மொழியை, வசன உச்சரிப்பைக் கண்டடைவார்கள் நகைச்சுவை நடிகர்கள். ஆனால் அறிமுகமான நாளிலிருந்தே தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி இந்தத் தலைமுறை காமெடியன்களில் ஒருவராகத் தன் பெயரைப் பொறித்துவிட்டார் ரெடின். ஸ்லோமோஷனில் வெளிப்படும் வசனங்கள், சதா சர்வகாலமும் கடுப்பாய்த் தோன்றும் முகமொழி... இவை எல்லாம் தமிழ்சினிமாவுக்குப் புதிதென்பதால் இன்ஸ்டன்ட் ஹிட். ‘டாக்டர்’ டீல் செய்த அவல நகைச்சுவை ஏரியாவுக்கெனவே அளவெடுத்துச் செய்த டெம்ப்ளேட் இவருடையது என்பதும் ஒரு காரணம். போதாக்குறைக்கு ஸ்கூல் யூனிபார்மில் தோன்றியபோது புரையேறிச் சிரிக்காதவர்களே இல்லை. யாரையும் புண்படுத்திவிடாத பாதையில் இன்னமும் பண்பட்டு நடைபோட்டால் ரெடின் கோலிவுட்டின் தவிர்க்கமுடியாத காமெடி முகம் என்பதில் ஐயமில்லை!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த குணச்சித்திர நடிகர் - பசுபதி - சார்பட்டா பரம்பரை

நமக்கு இப்படியொரு வாத்தியார் இல்லையே என, பார்த்தவர்களை ஏங்க வைத்தார் இந்த ரங்கன் வாத்தியார். துரோணர்களின் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்த நமக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியது பசுபதி எனும் புதிய ஆசிரிய ஆளுமையை! மாபெரும் பள்ளத்தாக்கையும் தன்னாற்றலால் ஆட்கொள்ளுமே ஆழி, அப்படித்தான் பசுபதியும். ரங்கன் கதாபாத்திரத்தில் இட்டு வைத்திருந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து என்றென்றும் மனதில் நிற்கும் முழுமையான சித்திரமாக்கினார். ‘தோற்றவனிடம் மட்டுமே அனுபவமும் வெல்வதற்கான திட்டமும் இருக்கும்’ என்கிற பரிணாம வளர்ச்சியின் ஆதிபாடத்தைத் தன் சீடன் கபிலன் வழி நம் அனைவருக்கும் போதித்தார். சைக்கிளில் ஏறிச் செல்லும் வாஞ்சையும் கூனிக் குறுகும் அவமானமும் தோள் துண்டை உதறிப்போடும் ஆவேசமும்... கற்றுக்கொண்டே இருந்தார்கள் சாமானியர்களும் திரையில் இவரைப் பார்த்து. அந்தவகையில் பசுபதி இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிப்பு ஆசான்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த குணச்சித்திர - நடிகை ஊர்வசி - சூரரைப் போற்று

‘சூரரைப் போற்று’வில் உடைப்பெடுத்து ஓடிய உணர்வுகளின் ஊற்றுக்கண் ஊர்வசி. நடிகர்களுக்கென ஒரு குணமுண்டு. எதிரில் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் நடிப்பாற்றலை உள்வாங்கி அதைப் பன்மடங்காக எதிரொலிப்பார்கள். அப்படி தாய் - மகனாக ஊர்வசி - சூர்யா இடையேயான அன்பின் ரசாயனம் ‘சூரரைப் போற்று’ முழுவதிலும் தெரிந்தது. மகனோடு தொலைபேசியில் பேசும் காட்சியில் தன் அனுபவம் மொத்தத்தையும் அவர் முதலீடாகப் போட, வரவாய் வந்தன ஆயிரமாயிரம் கண்ணீர்த்துளிகள். இறுதிக்காட்சியில் மகனை ஊர் கொண்டாட, தூரத்திலிருந்து அவர் விட்ட பெருமூச்சு, அடுக்களைக்குள்ளேயே முடங்கிப்போய்விட்ட பல தலைமுறைப் பெண்களின் பிரதிநிதியாக அவரை சடுதியில் ஆக்கியது. நாற்பதாண்டுகளுக்கு முன்னர் கடவுளின் தேசத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த அபூர்வ வைரம் இன்றும் நதி போல நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது, கலையின் அடுத்தடுத்த வாழிடங்களைத் தேடி. ஊர்வசி என்றும் வற்றாத நடிப்பின் ஜீவநதி!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன் அஸ்வின் - மண்டேலா

கடந்த ஆண்டு தமிழ்சினிமாவில் கரையைக் கடந்த பாசிட்டிவ் புயல் ‘மண்டேலா.’ முதல் படமே அரசியல் படம். அதுவும் பகடி. மேலும், நாம் எல்லாரும் ஏதோவொரு தருணத்தில் கடந்து வந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பற்றியது. அதையும் சாதியால் கூறுபட்டுப்போன இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் கதையாய் வைத்தது... இத்தனை அடுக்குகளையும் ஒருசேர கவனித்த போது எல்லாருக்கும் தோன்றிய கேள்வி, ‘எப்படி அஸ்வின் முதல் படத்திலேயே இது சாத்தியம்?’ என்பதுதான். பதிலாய் அவர் மெளனத்தையே பரிசாகத் தந்தாலும் அவருக்கும் சேர்த்துப் பக்கம் பக்கமாய்ப் பேசியது ‘மண்டேலா.’ யோகிபாபுவின் கதாபாத்திரம் வழியே அஸ்வின் செயல்படுத்திய சமூகக் கூராய்வு பலரின் இதயங்களைப் பதம் பார்த்தது. பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்துபார்க்கும் தமிழ்சினிமா சில சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலும் அரசியல் பகடிப் பக்கம் தலைவைப்பதே இல்லை. ‘தீண்டாமை என் படத்தில் மட்டுமல்ல, படம் செய்யும் நோக்கத்திலும் இருக்கக்கூடாது’ என அதை தைரியமாய்த் தொட்டுத் தூக்கி வெற்றி முத்தமிட்ட மடோன் அஸ்வின் நம் நம்பிக்கை வெளிச்சம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த அறிமுக நடிகர் - ஹக்கீம் ஷா - கடைசீல பிரியாணி

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முழுக்க முழுக்க இளைஞர்களால் எடுக்கப்பட்டு வல்லுநர்களுக்கே சவால்விட்ட ‘கடைசீல பிரியாணி’ படத்தில் மணம் வீசிய முதன்மைக் கதாபாத்திரம். அடுத்தவீட்டுப் பையன் போன்ற தோற்றம். ஆனால் கொலைக்கு அஞ்சாத கொடூர குணம். கேட்க எளிதாய் இருந்தாலும் திரையில் இந்த வரைவை ஏற்று நடிப்பது எளிதான வேலையில்லை. கொஞ்சமும் அசராமல் ஹக்கீம் காட்டிய வில்லத்தனத்தில் பார்க்கும் நமக்குத்தான் திக்கென இருந்தது. ஒருகட்டத்தில் திரையில் அவரிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் கதாபாத்திரங்களோடு நம்மையும் சேர்த்து பயமுறுத்திப் பதைபதைக்க வைக்குமளவிற்குத் தத்ரூபமான நடிப்பு. வில்லன் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் சிக்கிவிடாமல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தென்னிந்திய சினிமாவில் உருவாவார் ஹக்கீம் எனும் புதிய அலை நாயகன்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த அறிமுக நடிகை - அபர்ணதி - தேன்

முதல் படம் என்கிற சாயல் துளியும் இல்லாமல் பூங்கொடியாய் மின்னினார் அபர்ணதி. நவீனத்தின் எந்தத் தாக்கமும் இல்லாமல் இயற்கையோடு இயைந்து வாழும் துடுக்கான மலைப்பெண் வேடத்திற்கு பாந்தமான பொருத்தம். மனதுக்குப் பிடித்தவன் பின்னால் ஓடித் திரியும் வெகுளி, காதலின் சாட்சியான குழந்தையை வளர்க்கும் பொறுப்பான அம்மா, இறுதியில் வலியில் வதங்கி சருகைப் போலக் கிடந்து மாயும் மனைவி என ஒரே படத்தில் மூன்று முகங்களைக் காட்டவேண்டிய தேவை. குறையே சொல்ல முடியாத அளவிற்கு நிறைவாய் அந்தக் கதாபாத்திர வரைவைச் சுமந்து நின்றார். எங்கோ கோட்டையில் ஒருவர் எடுக்கும் முடிவு எப்படி துளியும் தொடர்பில்லாத சாமானியர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதை நிஜத்திற்கு நெருக்கமாய் சொன்னவகையில் அபர்ணதி அனைத்து ஏரியாக்களிலும் முதல் வகுப்பில் பாஸ்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த குழந்தை நட்சத்திரம் - முகேஷ் - மண்டேலா

குழந்தை நட்சத்திரம் என்றால் துடுக்குடன் பேசும் பணக்காரக் குழந்தை என்றே பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவில், பாதை மாறி ஒளிர்ந்த நட்சத்திரம் மண்டேலாவின் முகேஷ். ஊராரால் ஒதுக்கப்பட்ட ஒரு சவரத்தொழிலாளியுடன் தொடர்ந்து பயணித்து, அவன் ஆன்மாவையும் உணர்வுகளையும் புரிந்துகொண்ட ஓர் அன்புமிக்க ஜீவன். தன் பெயர் என்ன என்பதே தெரியாதவனுக்கு சூட்டப்பட்ட புதுப்பெயரான மண்டேலாவை, முகேஷ் கொஞ்சம் கொஞ்சமாக ஓவியமாகத் தீட்டும் காட்சிகள், திரையில் படரும் கறுப்பு வெளிச்சம். அவமானங்களை ஏற்க முடியாமல் திணறும் உடல்மொழி, எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் குரல்மொழி என இரண்டையும் தன் நடிப்பில் கொண்டுவந்த முகேஷுக்குக் காத்திருக்கிறது ஒரு வளமான எதிர்காலம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த ஒளிப்பதிவு - தன்வீர் மீர் - சைக்கோ

‘நீங்க முடியுமா?’ பாடல் காட்சியில் பிரேமின் ஒரு மூலையில் நுழையும் கார், பாடல் காட்சியின் முடிவில் அந்த பிரேமை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் ஒரு கணம் போதும், தன்வீர் மீர் உன்னதமான ஒளிக்கலைஞன் என்பதைச் சொல்ல. கண்களில் வெளிச்சத்தைத் தொலைத்த நாயகன், இதயத்தில் இருட்டைச் சேமித்த கொலைகாரன் என பகலுக்கும் இரவுக்குமான ஒளி விளையாட்டை விதவிதமாய் நிகழ்த்திக் காட்டியது தன்வீர் மீரின் கேமரா. ‘உன்னை நினைச்சு’ பாடலுக்கு ரசிகர்களை உருகவைத்தது இளையராஜாவின் இசையும் சித் ஸ்ரீராமின் குரலும் மட்டுமல்ல, பச்சையும் மஞ்சளும் இணைந்து ஒளிர்ந்த தன்வீர் மீரின் ஒளிப்பதிவும்தான்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் - மாநாடு

‘மாநாடு’ முழுக்க வியாபித்திருந்தது பிரவீனின் மந்திரக் கோலம். ஒரு கோவையில்லாமல் நகரும் திரைக்கதை, திரும்பத் திரும்ப வரும் காட்சியமைப்புகள் என கத்தி மேல் நடக்கும் வித்தையை கச்சிதமாய் கைக்கொண்டது அவரின் கத்தரி. கொஞ்சம் தவறினாலும் பார்ப்பவர்களுக்குக் குழப்பமோ அலுப்போ தட்டிவிடும் சிக்கலான கதைக்களத்தில் சளைக்காமல் கம்பு சுழற்றினார் கே.எல். கைத்தட்டல்கள் குவிந்தன. வெள்ளைத் தாளில் இருப்பதை காட்சிமொழிக்குக் கடத்துவது அவ்வளவு எளிதில்லை, அதுவும் அறிவியல் புனைகதையில். அதை அனாயாசமாய் செய்ததில் அடங்கியிருக்கிறது பிரவீனின் இத்தனை ஆண்டுக்கால அனுபவம். இவரின் பரபர வேகத்தில் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்தது காட்சிகள் மட்டுமல்ல, மொத்தத் தமிழ்சினிமாவும்தான். ‘இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்கிற வரையறை உடைத்து ‘மாநாட்டின் படத்தொகுப்பில்’ பிரவீன் எடுத்தது அடுத்த தலைமுறைக்கான பாலபாடம்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த கதை - பெ.விருமாண்டி - க.பெ.ரணசிங்கம்

பொருளீட்டலின் நிமித்தம் வளைகுடா நாடுகளில் தங்கள் வசந்தங்களைத் தொலைத்துவிட்டு, உறவையும் நேசத்தையும் இழந்து தவிக்கும் துயரம் ஒரு மடங்கு என்றால், கண்காணாத தேசத்தில் தங்கள் துணையை இழந்துவிட்டு, இறுதிச்சடங்கு செய்ய சடலம்கூட கிடைக்காத பெருந்துயர் பல மடங்கு. எதார்த்தத்தில் இன்னமும் நீளும் இந்தக் கண்ணீர்க்கதையை ஒரு போராட்ட மனுஷியை முன்னிறுத்தி தமிழ்த்திரையில் படைத்திருந்தார் பெ.விருமாண்டி. தன் கணவனின் உயிரைக் காக்க பெண் போராடிய புராணக்கதையை விஞ்சியது, தன் கணவனின் சடலத்தை மீட்க ரணசிங்கத்தின் மனைவி நடத்திய வீரமிகு போராட்டம். அறைந்து சாத்தப்பட்ட அதிகார வர்க்கத்தின் காதுகளை ஊடுருவி ஒலித்த குரலும் இந்தத் துயரத்தின் பின்னணியும் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. பொருள் புதிது, சொல் புதிது என்று உள்ளடக்கம் சொன்ன சிறந்த கதைசொல்லி விருமாண்டி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021
SUDARSHAN

சிறந்த திரைக்கதை - வெங்கட் பிரபு - மாநாடு

தமிழ் சினிமா வகுத்து வைத்திருக்கும் இலக்கணங்களை எல்லாம் கலைத்துப் போட்டு ‘உள்ளே வெளியே’ ஆடும் இந்த மங்காத்தா, ‘மாநாடு’ வழியே கூட்டியது வேற லெவல் கூட்டம். பெருந்தொற்றின் நீட்சியாய் காற்று வாங்கிக் கொண்டிருந்த திரையரங்குகளுக்குத் தேவையாய் இருந்தது ஒரே ஒரு ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.’ சூப்பர் ஓவரில் இலக்கு தெரிந்து இறங்கும் பேட்ஸ்மேனைப் போல பிரஷர் ஏற்றிக்கொள்ளாமல் வெங்கட்பிரபு மடக்கி அடித்ததில் சிதறின கடந்த ஆண்டுக்கான பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகள். ‘வர்றோம்... பார்க்குறோம்... போறோம்... ரிப்பீட்டு’ என ஆடியன்ஸ் அளித்த ஏகோபித்த ஆதரவில் அரசியல் கட்சிகளே பொறாமைப்பட்டன. ‘கோட்பாடு - டைம் லூப், உபயம் - மாநாடு’ என கடைக்கோடி பாமரன் வரையில் சிக்கலான சயின்ஸை சுலபமான திரைக்கதை மூலம் கொண்டு சேர்த்தார் இந்தக் குசும்புக்கார விஞ்ஞானி. ‘மேல ஏறி வாரோம், நீ கொஞ்சம் ஒதுங்கி நில்லு ஹாலிவுட்டு’ என பிறமொழிக் கலைஞர்களைத் தன் நுட்பமான எழுத்தின் வழி அசரடித்த அசல் படைப்பாளி!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த வசனம் - மாரி செல்வராஜ் - கர்ணன்

‘கர்ணன்’ திரைப்படம் - ஒடுக்குமுறைக்கு எதிரான உக்கிரமான வசனங்களால் தனக்கான தனித்துவம் பெற்ற படைப்பு. சாதி எவ்வளவு நுட்பமாக இயங்குகிறது என்பதையும், அதற்கு எதிரான போராட்டத்தின் விதைகள் குறித்தும் வலியும் போர்க்குணமும் கொண்ட வார்த்தைகளை வசனங்களாகத் தீட்டியிருந்தார் மாரி செல்வராஜ். “கந்தையா மவன் கண்ணபிரான் ஆகலாம், மாடசாமி மகன் கர்ணனா இருக்கக் கூடாதா?” என்ற கேள்வி ஆயிரமாண்டுக்கால சாதியக் கொடூரத்துக்கு முன்பு வீசப்பட்ட அமிலம். “உங்களுக்கு என் தேவை என்னன்னு முக்கியம் இல்ல, என் பிரச்சினை என்னன்னு முக்கியம் இல்ல, உங்க முன்னாடி எப்படி குனிஞ்சு நிக்கிறேன், எப்படிப் பேசுறேன்னுதான் உனக்கு முக்கியமா?” என்று காவல்துறையைப் பார்த்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி உரத்துப் பேசும் வசனம், ஆண்டாண்டுக்கால அடக்குமுறையை எதிர்த்த அடர்த்தியான போர்க்குரல்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த கலை இயக்கம் - த.ராமலிங்கம் - சார்பட்டா பரம்பரை, கர்ணன்

கலை இயக்கத்தின் வழியேயும் கதை சொல்லலாம் என மீண்டுமொரு முறை நிறுவியிருக்கிறார் ராமலிங்கம். அரசியலும் அதுசார்ந்த நடப்புகளும், சினிமாவும் அதன் தாக்கமும், குத்துச்சண்டை, கால்பந்து, நகர உருவாக்கமும் மீள் குடியேற்றமும் என 70களின் சென்னைக்கு ஏகப்பட்ட நிறங்களுண்டு. அவை அனைத்தையும் அதன் சாரம், சுவை குறையாமல் நம் கண் முன் கொண்டு வந்து சேர்த்த கலாரசிகர். ‘வா வாத்யாரே’ என ரங்கனை கபிலன் சைக்கிளில் வைத்துச் சுற்றியபோது இலவசமாய் காலப்பயணம் மேற்கொண்டது நாமும்தான்! இதற்கு அப்படியே நேரெதிரான கதைப்பரப்பு கர்ணனில். பொட்டலும் புழுதியுமாய் கால்நடைகள் சூழ 90களில் வாழ்ந்த பொடியன்குளத்துப் பெருமக்களின் வெறுமையையும் வாழ்வியல் முறையையும் கிடைத்த வழிகளிலெல்லாம் நமக்குக் கடத்தினார். கபிலன் களமாடிய பிரமாண்ட மூங்கில் கூரைக்கொட்டகையோ, மஞ்சனத்தி புருஷன் களவாடும் குறும்புக்கார மதினியின் சுருக்குப்பையோ... இயக்குநர்கள் எண்ணங்களால் வளர்த்த கனவுக்குத் தன் வண்ணங்களால் உயிர்கொடுத்த தளபதி த.ராமலிங்கம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த ஒப்பனை - தசரதன் -சார்பட்டா பரம்பரை

டான்ஸிங் ரோஸ் ஆடும்போதெல்லாம் முன்வந்து விழும் கற்றை முடி, பற்றற்ற இளைஞனாய் கபிலன் திரியும்போது மெலிதாகவும் லட்சியத்திற்காக அவன் பயணப்படும்போது அவன் மன ஓட்டங்கள் போலவே கனமாகவும் மாறும் மீசை, சினிமாவிற்கான எந்தப் பூச்சும் இருந்திடாத அடுத்த வீட்டுப்பெண்ணாய் மாரியம்மா என ஒப்பனை சிகையலங்காரம் வழியாகவே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியையும் தன் கைகொண்டு தீட்டினார் தசரதன். சிறியவர்கள், பெரியவர்கள், அனுபவசாலிகள், புதியவர்கள் என திரைகொள்ளா நடிகர்கள் சார்பட்டா படத்தில். ஆனால் அனைவரும் தங்கள் பாணியில் தனித்துத் தெரியுமாறு மெனக்கெட்டு உழைத்திருந்த விரல் வித்தகர் தசரதனின் முயற்சி பாராட்டுக்குரியது. மாதங்கள் கழிந்தபின்னும் இன்னும் நினைவிலிருக்கும் அந்த முகங்கள் சொல்லும், தசரதன் எனும் கடின உழைப்பாளியின் கதையை!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா - மாஸ்டர்

‘அடிக்கிற அடியில் அட தவிலு கிழிஞ்சு தொங்கட்டும்.. அடிச்சது யாரு அட சத்தம் கேட்டுச் சொல்லட்டும்’ - மாஸ்டரின் இந்தப் பாடல் வரிகள்தான் மாஸ்டர் சில்வாவுக்கான வர்ணனையும்கூட. ஆக்‌ஷன் காட்சிகளில் விட்டுக்கொடுக்காத இயக்குநர், இரண்டு பெரிய ஸ்டார்கள் மோதும் கதைக்களம்... சொல்லவா வேண்டும் சில்வாவின் சிறுத்தைப் பாய்ச்சலை?! ஒருபக்கம் மழையில், மறுபக்கம் சிறையில் என இடைவேளைக்கான முஸ்தீபுகள் பக்கா பில்டப்களுடனான பிளானிங் என்றால், க்ளைமாக்ஸ் காட்சியமைப்போ அதிரடி சரவெடி கலாட்டா. விஜய்யை இதற்கு முன் நாம் பார்த்து ரசித்த நாஸ்டாலஜியா காலத்திலிருந்து அப்படியே பிரதியெடுத்தது, விஜய் சேதுபதியை நாம் இதுவரை பார்த்திடாத உடல்மொழியில் செதுக்கியது என காட்சிக்குக் காட்சி சில்வாவின் ராஜாங்கம்தான்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த நடன இயக்கம் - தினேஷ் - வாத்தி கம்மிங் (மாஸ்டர்)

பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பற்றவைத்த நெருப்பு பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனாவுக்கு இணையாகப் பரவ, கிருமியே குழம்பிப்போனது. குட்டிக் குட்டி வாண்டுகள் தொடங்கி ஆஸ்திரேலிய வார்னர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ‘வாத்தி கம்மிங்’ வைப். உலகமே முடங்கி வீட்டிற்குள் கிடந்த வேளையில் தோளையும் தலையையும் குலுக்கி மன அழுத்தத்திலிருந்து மீண்டார்கள் பலரும். இந்த அத்தனை பெருமைக்கும் உரிய மாஸ்டர் பாடலின் மாஸ்டர்மைண்ட் தினேஷ் மாஸ்டர். நடனம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரும் எளிதாய் ஆடக்கூடிய வகையில் குத்தாட்டம், க்ளாஸிக்கல் என ஏகப்பட்ட ஸ்டைல்களைக் கலந்துகட்டி அவர் சமைத்த வெரைட்டி விருந்தை, விஜய் தனக்கேயுரிய ஸ்டைலில் பரிமாற வெடித்து அதிர்ந்தன தியேட்டர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன் சின்னதாய்க் கிளம்பிய தீப்பொறி இன்றும் கொழுந்துவிட்டு நம் தொடுதிரைகளில் எரிவதற்கு தினேஷ் மாஸ்டரின் கைங்கரியமே காரணம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஏகன் ஏகாம்பரம் - சார்பட்டா பரம்பரை

ஆட்டமும் பாட்டமும் கூத்தும் கலையுமாய்க் கொண்டாடி மகிழும் வடசென்னை மக்களின் வாழ்க்கைக்கு மேலும் ஒளிகூட்டி வாணவேடிக்கை காட்டினார் ஏகன். புகைப்படங்களில் பார்த்திருந்த நம் அப்பா - அம்மா காலத்து மனிதர்களை அப்படியே கடத்திவந்து நம் வீட்டுத் தொலைக்காட்சியில் இருத்தினார். அடிமனதில் எங்கோ ஆழ அமிழ்ந்துவிட்ட ‘பெல்பாட்டம்’ ஞாபகங்களை அவர் வடிவமைத்த ஆடைகள் கிளறிவிட, முந்தைய தலைமுறையின் கண்கள் பனித்தன. பூப்போட்ட சேலை, சட்டை, கோடுகளும் பழைய மொஸைக் தரையின் ஓவியங்களுமாய் லுங்கி என அவர் வரைந்த ஒவ்வொரு ஆடைக்குறிப்பும் டன்கணக்கில் நினைவுகளைச் சுமந்தபடி வந்து வரவேற்பறையில் அமர்ந்து நம்மை ஆட்கொண்டன. நிகழ் காலத்தைையும் கடந்த காலத்தையும் தன் நுண்ணிய முடிச்சுகளால் இணைத்த ஏகன் சந்தேகமே இல்லாமல் ஒரு ஜாலக்காரர்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த பாடலாசிரியர் - தாமரை - யார் அழைத்தது (மாறா)

மலைப்பாதையின் ஒரு திருப்பத்தில் சட்டென காற்று ஓங்கி அணைக்க எதிரே பிரமாண்டமாய் விரியுமே ஒரு பச்சைப்புல்வெளி, அப்படி காற்றில் மிதந்துவந்து இதமளித்தது தாமரையின் ‘யார் அழைத்தது’ பாடல் வரிகள். ‘அலைவார் அவர்தானே அடைவார்’, ‘அடங்காத நாடோடிக் காற்று’ எனத் தனித்தனி ஹைக்கூ கவிதைகளாய் படத்தின் கதையை நம்முள் படரவிட்டதில் இருக்கிறது அவர் வரிகளின் வெற்றி. காதல் பெண்களுக்கானது, பயணம் ஆண்களுக்கானது என்கிற பொதுமரபை உடைத்து இவர் இயற்றியிருப்பது பால்பேதமற்ற அனைத்து உயிர்களுக்குமான உற்சாக கீதம். கடந்த நொடியின் இழப்பை, இந்த நொடியின் அழகை, அடுத்த நொடியின் நிச்சயமின்மையை ஒருசேர விளித்து இவர் அளித்த வார்த்தைப் புதையலில் கட்டுண்டு கிடந்தன செவிகள். மழலையின் சிரிப்பு, மூங்கில் துளைத்துப் பாயும் காற்று எனக் கேட்கச் சலிக்காதவை பட்டியலில் இந்தப் பாடலையும் இணைத்த பெருமிதத்தில் நிமிர்ந்து நிற்கிறது தாமரையின் பேனா.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த பின்னணிப் பாடகர் - கபில் கபிலன் - அடியே நீ தானடி (பேச்சுலர்)

எல்லா ஆண்டுகளிலும் ஏதேனும் ஒரு குரல் நம்மை உடைய வைக்கும்; உருகிக் கரைய வைக்கும். நம் கணங்களை மறந்து காலத்தில் உறைய வைக்கும். அப்படி 2022-ம் ஆண்டு எல்லோரின் செவிகளிலும் நுழைந்து இதயத்தை ஊடுவிய குரல் கபில் கபிலனுடையது. ‘பேச்சுலர்’ படத்தில் அவர் பாடிய ‘அடியே’ பாடலை இளைய தலைமுறை, உள்ளங்களில் ஏந்திச்சென்றது. ‘அடியே’ என்று தொடங்கும் முதல் வார்த்தையில் ஆரம்பிக்கும் பாட்டுப்பயணத்தினூடாக கபில் கபிலனின் குரலில் பல வளைவுகளில் பயணித்து மீண்டோம். ‘இரவுகள் நீள... இமைகளும் மூட... இடைவெளி ஏனோ கண்மணியே’ என்ற ஒற்றை வரியில்தான் எத்தனை உச்சங்கள், இறக்கங்கள்! சந்தேகமில்லாமல் சென்ற ஆண்டின் கானக்குரலோன் கபில் கபிலன்தான்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த பின்னணிப் பாடகி - கிடாக்குழி மாரியம்மாள் - கண்டா வரச்சொல்லுங்க (கர்ணன்)

ஆயிரம் இசைவகைகள் வந்தாலும் தமிழ் நாட்டுப்புறம் நம்மைப் பிடித்து உலுக்குமளவிற்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இசை வேறெதுவுமில்லை. அப்படி ஏக்கம், பரிதவிப்பு, ஓங்காரம் என மனித மூளை வகைப்படுத்தி வைத்துள்ள அத்தனை உணர்ச்சிகளையும் கோத்து அடிவயிற்றிலிருந்து கிடாக்குழி மாரியம்மாள் பாடியபோது ஆடிப்போனது உயிர்க்குலை. ‘வாள் தூக்கி நின்னான் பாரு’ என உச்சம் தொடும் குரல் மயிர்க்கூச்செறியும் தாண்டவமென்றால் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்கிற ஓலம் அடக்குமுறைக்கு உள்ளான ஆதி மனிதர்களின் முணுமுணுப்பு. ‘சாதிக்க வயது தடையில்லை’ என்கிற சினிமாக் கணக்கின் புதுவரவு இவர். பூமி தொட்ட நேரம் தொடங்கி இறுதிக்கேவல் வரை சக உயிர்களின் வாழ்க்கையை இசைவழி ரட்சிக்கும் கிடாக்குழி மாரியம்மாள் நிச்சயமாய் கடந்த ஆண்டிற்கான குரல்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த படக்குழு - கர்ணன் - வி கிரியேஷன்ஸ்

பகைக்காக வாளையும் பாசத்திற்காக ஊரையும் தூக்கிச் சுமக்கும் கர்ணன், கோபமும் வாஞ்சையுமாய் தம்பியைத் தாங்கும் பத்மினி, ஆயிரம்காலத்து அடக்குமுறைக்குத் தன் முதுகை வளைத்துக் கொடுத்துவிட்ட தந்தை, பாடலாய் உருப்பெற்று காற்றில் உறைந்துவிட்ட மஞ்சனத்தி, எமனுக்கு அவளைக் காவு கொடுத்துவிட்டு அவள் நினைவிலேயே எஞ்சிய காலத்தைக் கழிக்கும் எம ராஜா, என்றோ முடிந்து போன காதல் அத்தியாயத்தின் எச்சங்களை இன்றும் அசைபோடும் மதினி, முகம் காட்டாமல் நாட்டார் தெய்வமாய் மாறி நம் மனச்சாட்சியை உசுப்பிக் கேள்வி கேட்ட சிறுமி என மாரி செல்வராஜின் கதைமாந்தர்கள் இந்தக் கர்ணனைக் காத்து நின்ற கவச குண்டலங்கள். எஞ்சிய கெளரவர்களாய் அவருடன் தோளோடு தோள் நின்றது படக்குழு. தயாரித்த கலைப்புலி தாணு, தெக்கத்தி 90களை மீட்டுருவாக்கம் செய்த தேனி ஈஸ்வர் - ராமலிங்கம் இணை, இசையால் ஒரு தலைமுறையின் ரணத்தை ரெளத்திரத்தை வெளிப்படுத்திய சந்தோஷ் நாராயணன், இந்த உழைப்பை மாலையாய்க் கோத்த செல்வா ஆர்.கே, இந்தப் படையை வழிநடத்தி சமூகத்தோடு சமர் புரிந்த மாரி... இன்னும் நூற்றுக்கணக்கான பேரின் உழைப்போடு காலத்திற்கும் பேசும் படைப்பாய் ஓங்கி நிற்கிறது ‘கர்ணன்.’

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த தயாரிப்பு - தேன் - ஏ.பி புரொடக்‌ஷன்ஸ்

வணிகமய சினிமாக்களுக்கு நடுவே வறியவர்களின் அலைக்கழிப்பை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசிய படைப்பு ‘தேன்.’ தன்போக்கில் தற்சார்பு வாழ்க்கை வாழும் குறிஞ்சி நிலக்குடியை சட்டகத்திற்குள் அடைத்து, திக்கற்றுத் திரியும் எறும்பைப் போல நாலாபுறமும் சிதறடித்து அவர்களின் அறியாமையை முதலீடாய்க் கொண்டு கொழிக்கும் முதலைகளின் முகத்திரையைக் கிழித்த தைரியத்திற்காகவே தயாரிப்பாளர்கள் அம்பலவாணன், பிரேமாவைப் பாராட்டலாம். எல்லாவற்றையும் எதிர்க்கும் இந்தக் காலத்தில், ‘அரசின் திட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை அலசும் கதை’ மட்டும் தப்பிப் பிழைக்குமா என்ன? இங்கேதான் பிற தயாரிப்பாளர்களிடமிருந்து ஓரடி முன்னிற்கிறார்கள் இவர்கள். ஒரு நல்ல படைப்பு தனக்கான இடத்தை அதுவாகவே தகவமைத்துக்கொள்ளும் என்பதை மட்டும் நம்பி, சினிமாவுக்கான முகங்கள், பூச்சுகள் எல்லாவற்றையும் தவிர்த்து அவர்கள் விதைத்திருப்பது நம்பிக்கை விதை.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - டாக்டர்

வாழ்வதற்கும் வீழ்வதற்குமான போராட்டத்தில் உலகமே மன அழுத்தத்தோடு தத்தளித்துக்கொண்டிருந்தபோது ஊசியில்லாமல் மாத்திரை இல்லாமல் பலரை இலகுவாக்கிய ‘டாக்டர்.’ அறைக்குள் முடங்கிக்கிடந்த இளைஞர்களைக் கயிறுகட்டி இழுத்துவந்து தமிழ்சினிமாவுக்கு அந்நேரம் தேவைப்பட்ட ஆசுவாசத்தை ஆக்சிஜனாய் வழங்கிய எமர்ஜென்ஸி மருத்துவர். ‘சிரிப்பா... கிலோ என்ன விலை’ எனக் கேட்கும் மிலிட்டரி ஹீரோ, அவருக்கும் சேர்த்து நகைச்சுவையை பார்சல் கட்டிக் கொடுத்த கத்துக்குட்டிக் கடத்தல்காரன், ‘நாங்க சீரியஸாதான் இருப்போம். ஆனா உங்களுக்கு சிரிப்பு வரும் பாருங்களேன்’ எனப் பந்தயம் கட்டி சாதித்த பகத் - கிளி, என்ன ரகமென்றே இனம் காணமுடியாத சுமதியும் அவர்தம் சுற்றமும்... இவர்களை வைத்து காமெடி கதகளியே ஆடிக்காட்டினார் இயக்குநர் நெல்சன். விளைவு, அடுத்தடுத்த ஷோக்களும் நிரம்பி வழிந்தன மனிதத்தலைகளால்! ‘என்ன ஜானராய் இருந்தால் என்ன, மக்களால் திரையில் தோன்றுபவர்களோடு பொருந்திப்போக முடிந்தால் போதும், வெற்றி வந்து வாசல்கதவைத் தட்டும்’ என ‘டாக்டர்’ படைத்தது புது கமர்ஷியல் இலக்கணம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

Best Entertainer - சிவகார்த்திகேயன்

‘என் பணி மக்களை என்டர்டெயின் செய்து கிடப்பதே’ என, கடந்த ஆண்டும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கிக் கல்லா கட்டினார் சிவகார்த்திகேயன். ஒன்றரை ஆண்டுகளாய்ச் சிரிக்க மறந்து மரத்துப்போயிருந்த மனித மனங்களைத் தூசிதட்டி எழுப்பவேண்டிய கடமை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களுக்கு இருந்தது. அந்தப் பந்தயத்தில் முதல் ஆளாய் ஓடத்தொடங்கி வெற்றிகரமாய் இறுதிக்கோட்டையும் தொட்டு வெற்றிக்கோப்பை ஏந்தினார் சிவா. வழக்கமாய் ஏற்று நடிக்கும் வேடமில்லை. மருந்துக்கும் சிரிக்கக்கூடாது இந்த டாக்டர். ஆனாலும் பிறருக்கான வெளியைப் பகிர்ந்துகொடுத்து, தன் பங்காய் சில சீனிப்பட்டாசுகளைச் சேர்த்து தியேட்டரில் இவர் கொளுத்திய ஆயிரம்வாலாவில் சில வாரங்கள் முன்னரே வந்தது தீபாவளி. ‘டார்க் காமெடி’ என்கிற, தமிழ்சினிமா அதிகம் பயணப்பட்டிருக்காத பாதையில் ரிஸ்க் எடுத்து ஜாலியாய் புல்லட் ஓட்டிச் சென்ற இவரின் வேகம் இப்போது மற்றவர்களுக்கும் உத்வேகத்தை அளித்திருக்கிறது. பொடிசு முதல் பெரியவர் வரை மேஜிக் நிகழ்த்தும் சிவா, எல்லோருக்குமான ஹீரோ!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021

சிறந்த வெப்சீரிஸ் - நவம்பர் ஸ்டோரி

‘எங்கெங்கு காணினும் த்ரில்லர்’ என ஓ.டி.டி-யைத் திறந்தாலே வரிசைகட்டி நிற்கின்றன ‘திக்திக்’ தொடர்கள். ‘மினிமம் கியாரன்டி, மேக்ஸிமம் என்டர்டெயின்மென்ட்’ என்கிற கமர்ஷியல் பார்முலாவே இதற்குக் காரணம். ‘இனி எடுக்க என்ன இருக்கு’ என எல்லாரும் யோசித்தபோது ஹாட்ஸ்டாரில் வந்திறங்கியது நவம்பர் ஸ்டோரி. முதல் பார்வைக்கு அப்பா - மகளின் பாசக்கதை போலத் தெரிந்தாலும், ஒவ்வொரு அத்தியாயமாய் நகர நகர, ஒவ்வொரு முடிச்சாய் அவிழ அவிழ சூடு பிடித்தது த்ரில்லர் மீட்டர். மார்ச்சுவரி பின்னணியில் விரிவாய் பின்னப்பட்டிருந்த கதை, அதில் மெலிதாய் இழையோடிய சமூகப் புறக்கணிப்பு, கவனமாய்க் கையாளப்பட்டிருந்த உளவியல் சிக்கல்கள் எனப் புதுவித ட்ரீட்மென்ட்டில் பார்ப்பவர்களைக் கவர்ந்தது இந்தத் தொடர். தமிழ் ரசிகர்கள் சினிமாவில் பார்த்திருந்த ஸ்டார்களை சிறிய திரைக்கு வரவைத்தது, த்ரில்லர் தொடர்களுக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது என ‘நவம்பர் ஸ்டோரி’ வருகைக்குப் பின் ஓ.டி.டி தளங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021