கட்டுரைகள்
Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்... தமிழ் சினிமாவுக்கு மணி மகுடம் சூட்டிய திருவிழா!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் சினிமா விருதுகள்

- அதிகம் பேசிய மணிரத்னம்... நெகிழ்ச்சியின் விளிம்பில் சூர்யா!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு என்பது, தமிழ்ச் சினிமாவுக்கு மணி மகுடம் சூட்டும் மாபெரும் திருவிழா! அத்தகைய திருவிழா, மார்ச் 30 அன்று, சென்னை வர்த்தக மையத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் ஆனந்த விகடன் வழங்கும் சினிமா விருதுகளுக்கு, வாசகர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரிடமும் மிகுந்த வரவேற்பும் மரியாதையும் உண்டு. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. அவற்றுடன், 2022-ம் ஆண்டுக்கான விருதுகளையும் சேர்த்து, 60-க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வு... அமர்க்களமாக, நேர்த்தியாக நடந்தேறியது. நிகழ்வின் ஹைலைட்ஸ்.... ஏராளம், தாராளம்.

தமிழ் சினிமா உலகில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட பெயராக விளங்கும் எஸ்.எஸ். வாசன் அவர்களின் நினைவாக வழங்கப்படும் 2020 - 2022-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.வாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதை மணிரத்னத்துக்கு வழங்கினார் கமல்ஹாசன். மிகச்சுருக்கமான வசனங்களே மணிரத்னம் குறித்த விரிவான அறிமுகம் என்கிற நிலையில், `இந்த விழாவில் மணிரத்னம், சற்று அதிகமாகப் பேசியது ஆச்சர்யம்' என்று கமல்ஹாசனே சொல்லும் அளவுக்கு அமைந்திருந்தது அவர் பேச்சு.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள்... தமிழ் சினிமாவுக்கு மணி மகுடம் சூட்டிய திருவிழா!

2022-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், விருதுகள் இரண்டையும் தன் இரு கரங்களில் ஏந்திக் காட்டியது, ஆஸ்கர் விருதுகள் மொமென்ட்டை ரீவைண்ட் செய்தது.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை 'விக்ரம்' படத்துக்காக கமல்ஹாசனுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், மணிரத்னமும் இணைந்து வழங்க, சிறந்த நடிகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிகர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுடன் இந்த விருதைப் பகிர்ந்துகொள்வதாகக் கமல் கூறியது சிறப்பு.

`ஜெய் பீம்’க்கு 2020-21 ஆண்டுக்கான சிறந்த படம் விருது, `சூரரைப் போற்று’, `ஜெய் பீம்’ திரைப்படங்களுக்குச் சிறந்த நடிகர் விருது என சூர்யாவுக்குச் சிறப்பான அங்கீகாரம். ``கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து நடிக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் தவம். `விக்ரம்’ படம் வெளியாகி, இத்தனை நாள்கள் கடந்தும், அதற்கான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று சூர்யா சொல்ல, அரங்கில் நிரம்பியிருந்த சூர்யா ரசிகர்களின் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆகின.

சூர்யா, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ்
சூர்யா, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ்

‘டாக்டர்‘ படத்துக்காக 2020-21-ம் ஆண்டுக்கான பெஸ்ட் என்டர்டெய்னர் விருது பெற்றார் சிவகார்த்திகேயன். ``நான் வாங்கும் முதல் விகடன் விருது இதுதான். `டாக்டர்’ படத்துக்கு முன்பாக நான் நடித்த ஒரு படம் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியது. அப்போதுதான் ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் என இயக்குநர் நெல்சனை அழைத்தேன். நெல்சனின் விருப்பப்படி படத்தை இயக்கச் சொல்லி தயாரிப்பாளராக ஒத்துழைப்புக் கொடுத்தேன். `டாக்டர்’ மாதிரியான பரிசோதனை முயற்சி வசூலையும் பெற்று, விகடனில் நான்கு விருதுகளையும் வென்றிருப்பது பெரும் ஊக்கமளிக்கிறது’’ என்ற நடிகர் சிவகார்த்திகேயனின் நெகிழ்வு அரங்கத்தை அமைதியாக்கியது.

அதிதி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான்
அதிதி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்குநர் வெற்றிமாறனின் `வாடிவாசல்’, இயக்குநர் ஷங்கரின் `இந்தியன் 2', தயாரிப்பாளர் தனஞ்செயனின் `தங்கலான்', இயக்குநர் நெல்சன் இயக்கும் ரஜினியின் `ஜெயிலர்' எனத் தயாரிப்பிலிருக்கும் படங்களின் அப்டேட் சங்கதிகள் அவ்வப்போது மேடையில் வெளியாகி அனைவருக்கும் விருந்தளித்தன.

உச்சபட்ச இயக்குநர்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உயரத் துடிக்கும் பலர் என்று விருது விழா நொடிக்கு நொடி வேகத்தைக் கூட்ட... விழா நிகழ்வு ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது!