சமூகம்
அலசல்
Published:Updated:

கொண்டாடி மகிழ்ந்த விகடன்... உற்சாகத்தில் திளைத்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள்!

விகடன் சினிமா விருதுகள் விழா
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சினிமா விருதுகள் விழா

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-2021, 2022

சிலிர்க்கவைக்கும் பிரமாண்ட மேடையில், அழகாக, அதிரடியாக, கலகலப்பாக நடந்துமுடிந்திருக்கிறது, 2020-2021, 2022-க்கான விகடன் சினிமா விருதுகள் விழா. அதன் சுவாரஸ்யத் தருணங்கள் சில இங்கே...

மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளையும் வழங்க வேண்டும் என்பதால், 30.03.2023 அன்று முன்பகலிலேயே தொடங்கிய விழா, இரவு வரை நீண்டது. அதிரும் இசையோடு, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக அரங்கினுள் நுழைய, பற்றிக்கொண்டது உற்சாகம்.

`க/பெ.ரணசிங்கம்’, `கர்ணன்’, `மண்டேலா’, `ஜெய் பீம்’, `நட்சத்திரம் நகர்கிறது’, `கடைசி விவசாயி’, `டாணாக்காரன்’, `கார்கி’, `விட்னஸ்’, `நெஞ்சுக்கு நீதி’, `தேன்’ எனச் சமூக அக்கறையுள்ள திரைப்படங்கள்... `மாஸ்டர்’, `மாநாடு’, `டாக்டர்’, `சூரரைப் போற்று’, `சார்பட்டா பரம்பரை’, `பேச்சுலர்’, `விக்ரம்’, `பொன்னியின் செல்வன்’, `லவ் டுடே’, `வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட மக்களைப் பெரிதும் சந்தோஷப்படுத்திய படங்கள், கவனம் ஈர்த்த வெப்சீரீஸ்கள் எனக் கடந்த மூன்று ஆண்டுகளின் முக்கிய படைப்புகளுக்கும், அதில் பங்களித்தவர் களுக்கும் விருது வழங்கி கௌரவித்தது விகடன்.

சிறந்த கதைக்கான விருதைப் பெற ‘க.பெ.ரணசிங்கம்’ இயக்குநர் விருமாண்டி, தன் குடும்பத்துடன் மேடையேறியது நிகழ்வின் முதல் நெகிழ்ச்சியான தருணம். அவரின் தாய் கட்டியணைத்து முத்தமிட, விருமாண்டியின் கண்கள் குளமாகின.

விகடன் சினிமா விருதுகள் விழா
விகடன் சினிமா விருதுகள் விழா
கொண்டாடி மகிழ்ந்த விகடன்... உற்சாகத்தில் திளைத்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள்!

“ `விட்னஸ்’ படம், மனிதக்கழிவை மனிதரே அகற்றும் அவலத்துக்கு எதிராக மக்களைச் சிந்திக்கவைக்கும்” என்று படத்தின் கதைக்காக விருதுபெற்ற தீபக், முத்துவேல் நம்பிக்கை தெரிவித்தனர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுபெற்ற மது பாலகிருஷ்ணன், ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே...’ பாடலைப் பாடி, தன் வசீகரக் குரலால் அரங்கத்தைக் கிறங்கடித்தார். பாடல் பதிவாகும்போது நடந்த சுவாரஸ்யக் கதை சொன்னார் பாடலாசிரியர் தாமரை. `சார்பட்டா பரம்பரை’, `கர்ணன்’ படங்களின் சிறந்த கலை இயக்கத்துக்காக விருது பெற மேடையேறிய ராமலிங்கம் “விருது என்றாலே அது விகடன்தான். ஒட்டுமொத்த, தமிழ்ச் சமூகத்தின் அங்கீகாரத்தைப் போன்றது இந்த விருது” என்றார் உணர்வுபூர்வமாக.

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த வெப் சீரீஸ்க்கான விருதை ‘நவம்பர் ஸ்டோரி’ தயாரிப்புக்காக விகடன் குழும இயக்குநர்கள் ராதிகா, ராதா இருவரும் பெற்றுக்கொண்டனர். “கத்துக்குட்டியாக வந்த எங்களுக்கு விகடன் பெருந்தன்மையுடன் வாய்ப்பளித்தது; வெற்றியைத் தேடித்தந்தது” என்று நெகிழ்ந்தார் இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன். 2022 சிறந்த வெப்சீரீஸுக்காக விருதுபெற மேடையேறிய நடிகர் விமல் உள்ளிட்ட ‘விலங்கு’ டீம், “தோற்றவர்களெல்லாம் ஒன்றுகூடிப் பெற்ற வெற்றி இது” என்று புன்னகைத்தனர்.

கமல், சூர்யா
கமல், சூர்யா
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர்
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர்
விகடன் சினிமா விருதுகள் விழா
விகடன் சினிமா விருதுகள் விழா

சிறந்த குணச்சித்திர நடிகை விருதுபெற்ற ஊர்வசி ‘குப்புசாமி’ என்று குஷ்புவைக் கொஞ்ச... விருது வழங்கிய குஷ்பு, பதிலுக்கு அவரை ‘பொடி’ என்று கொஞ்ச... இரு தோழிகளின் நெடுங்கால அன்பால் உருகியது அரங்கம். சிறந்த வசனத்துக்கான விருதைப் பெற மேடையேறிய தமிழரசன் பச்சமுத்து, “என் வாழ்வில் பார்த்தது, எனக்கு வலித்ததையே ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனங்களாக ஆக்கியிருக்கிறேன்” என்றார். “தேசிய விருதைவிட இந்த விருது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சிறந்த வில்லி விருது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கிறது. சிறந்த வில்லன் விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?” எனக் கூறி புன்னகைக்க வைத்தார், `டாணாக்காரனு’க்காக விருதுபெற்ற லால்.

`கர்ணன்’ படத்தின் சிறந்த வசனத்துக்கான விருது (2020-21) பெற்றார் மாரி செல்வராஜ். 2020-21 சிறந்த இயக்குநருக்கான விருதை `ஜெய் பீம்’ படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறன் கரங்களால் இயக்குநர் த.செ.ஞானவேல் பெற்றுக்கொண்டார். “ஒரு பத்திரிகையாளனாகப் பணிபுரிந்த காலத்தில், விகடன் எனக்கு எடுத்த பாலபாடமே `ஜெய் பீம்’ போன்ற ஒரு படத்தை எடுக்கவைத்தது” என விகடனுடனான மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்தார் ஞானவேல். தொடர்ந்து பேசிய சூர்யா, “ஞானவேல் எனக்கு அறிமுகமானதே விகடன் மூலமாகத்தான். விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் என் ரோல் மாடல். அந்த வகையில் எனக்கு விகடன் நிறைய கொடுத்திருக்கிறது” என்றார். `ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி பாத்திரமாகவே வாழ்ந்த லிஜோ மோள் ஜோஸ், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை மீனாவின் கரங்களிலிருந்து பெற்றார். `ஜெய் பீம்’ படத்தின் ரியல் ஹீரோவான ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, படக்குழுவுக்கு விருது வழங்கியது ஓர் நெகிழ்ச்சித் தருணம்.

ஞானவேலுக்கு விருது
ஞானவேலுக்கு விருது
சாய் பல்லவிக்கு விருது
சாய் பல்லவிக்கு விருது
யோகி பாபுவுக்கு விருது
யோகி பாபுவுக்கு விருது

`ஜெய் பீம்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருதை கமலின் கரங்களால் வாங்கிய சூர்யா, நடிகர் மணிகண்டனுடன் மேடையைப் பகிர்ந்துகொண்டார். 2022-ம் ஆண்டின் ‘பெஸ்ட் என்டர்டெய்னர்’ விருதுபெற்றார் லோகேஷ் கனகராஜ். மேடையில், ‘கமல்ஹாசனின் சிறந்த ரசிகன் யார்?’ என மணிகண்டன் - லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் இடையில் நடந்த சண்டை ரசிக்கும்படியாக இருந்தது.

`டாணாக்காரனு’க்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதுபெற்ற தமிழ்தான், `தன் படங்களில் போலீஸ் குறித்த நுட்பமான டீட்டெயிலிங் இடம்பெறக் காரணம்’ என்றார் அந்த விருதை தமிழுக்கு வழங்கிய வெற்றிமாறன்.

`டாக்டர்’ படத்துக்காக விருதுபெற்ற ரெடின் கிங்ஸ்லி - நெல்சனின் நான் ஸ்டாப் ரகளையில் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, காத்திரமான படைப்பாக வெளிவந்த ‘கார்கி’யில் மிகச் சிறப்பாக நடித்த சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான விருதுபெற்றார். “தமிழில் நான் பெறும் முதல் விருது என்று நெகிழ்ந்தார். தனது கலகலப்பான, க்யூட்டான நடிப்பால் முதல் படத்திலேயே (விருமன்), தமிழ்க் குடும்பங்களின் செல்லப் பிள்ளையாக மாறிய அதிதி ஷங்கர், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றார். அவருக்கு விருது வழங்கிய சிவகார்த்திகேயன் அதிதியைப் பாராட்டித் தள்ள, இயக்குநர் ஷங்கரின் முகத்தின் அவ்வளவு சந்தோஷம்.

விகடன் சினிமா விருதுகள் விழா
விகடன் சினிமா விருதுகள் விழா
ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
விகடன் சினிமா விருதுகள் விழா
விகடன் சினிமா விருதுகள் விழா

பொன்னியின் செல்வனுக்காக சிறந்த தயாரிப்புக்கான விருது பெற்றார் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன். விழாவின் உச்சமாக அமைந்தது, இயக்குநர் மணி ரத்னம் அவர்களுக்கு எஸ்.எஸ்.வாசன் விருது வழங்கப்பட்ட தருணம். “ஐம்பதுக்கு மேல் ‘மார்க்’ போடவே யோசிக்கும் விகடன், இந்த விருதை எனக்குக் கொடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது” என்றார். அந்தத் தருணத்தில், கமல் - மணி ரத்னம் இருவரிடமும் கேள்விகள் கேட்டு சுவாரஸ்யமான பதில்களைப் பெற்றார் பாடலாசிரியர் விவேக். ‘விக்ரம்’ படத்துக்காக, சிறந்த நாயகனுக்கான விருதுபெற்ற கமல்ஹாசன், “சினிமாவில் எனக்கு No Retirement” என பன்ச் வைத்தார். சிறந்த பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் என இரு விருதுகளைப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இரு ஆஸ்கர் விருதுகளைக் கையில் ஏந்தியதுபோல, விகடனின் விருதுகளையும் இரு கைகளிலும் தாங்கி புன்னகையோடு ரஹ்மான் போஸ் கொடுத்தது விகடனுக்கு ஒரு எவர்கிரீன் மொமன்ட்.

பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, ரவிவர்மன், இயக்குநர் மடோன் அஸ்வின், யோகி பாபு, கலைப்புலி தாணு, தினேஷ் மாஸ்டர், வெங்கட் பிரபு, பசுபதி எனத் தமிழ் சினிமாவின் சிறந்த ஆளுமைகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழாவை தொகுப்பாளினி அர்ச்சனா, ஆர்ஜே விஜய், கீர்த்தி மூவரும் கொஞ்சமும் எனர்ஜி குறையாமல் தொகுத்து வழங்கி, சிறப்பித்தனர்!