
விகடன் ஹெட்மாஸ்டர் ரொம்ப கறாரான ஆளு. என் படத்துக்கு 40-45-க்கு மேல மார்க் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க. விமர்சனக்குழுவில் யாரும் 50-க்கு மேல கத்துக்கவே இல்லை போல...”
கலைஞர்களின் திறமைக்கும் அவர்கள் செலுத்தும் உழைப்புக்கும் மரியாதை செய்வதே அறம். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திறமைகளைக் கண்டறிந்து மரியாதை செய்யும் விழா, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் விழா. இது, மார்ச் 30-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து விழாவைச் சிறப்பித்தது.
விசிலும் கைத்தட்டலுமென எட்டுத்திக்கும் ரசிகனின் கைகள் கலைஞர்களை அங்கீகரித்திட, அதை ஒற்றைக் குவியமாய் தனது கரங்களில் வாரி அணைத்துக்கொண்டு, பெருமிதச் சிரிப்புடன் கொண்டு சேர்த்திருக்கிறது விகடன். கொரோனாப் பெருந்தொற்றின் காரணமாக மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த சினிமா விருதுகள் விழா, இந்த ஆண்டு 2020-21, 2022 என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு, மகத்தான கலைஞர்களுக்கு மணிமகுடம் சூட்டி அழகு பார்த்தது. உற்சாகம், நெகிழ்ச்சி, கொண்டாட்டம் என உணர்வுகளின் சங்கமமாக நடந்த இத்திருவிழாவின் 2020-21 ஆண்டுகளுக்கான விருது நிகழ்வின் தொகுப்பு இதோ…
மேடையில் ஆங்காங்கே பேனாவின் கூர்முனையின் மேல் விகடன். ஜொலிக்கும் வண்ணவிளக்குகள். அதன் வழி ஓடிக்கொண்டிருந்தது, அந்த பேனா எழுதிய ‘திறமைக்கு மரியாதை' என்ற வாசகம். ஆர்ப்பரிக்கும் ரசிக சத்தத்தோடு அந்த பிரமாண்ட மேடையைத் தங்கள் வசம் இழுத்து வசீகரித்து, தொகுத்து வழங்கத் தொடங்கினர் அர்ச்சனா, மிர்ச்சி விஜய், கிகி விஜய் ஆகிய மூவர் குழு.

விகடன் குழுமத்தின் மிக உயரிய விருதான எஸ்.எஸ்.வாசன் விருது இயக்குநர் மணிரத்னத்துக்கு வழங்கப்பட்டது. கமல்ஹாசனிடமிருந்து அவர் விருதினைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வினை பாடலாசிரியர் விவேக் தொகுத்து வழங்கினார்.
‘‘நான் சினிமாவின் குழந்தை. இந்த விருதைக் கொடுக்கும்போது பெருமையைவிட பணிவே அதிகமாக வருகிறது. விருது கொடுக்கும்போது வாங்குவதாகவும், வாங்கும்போது கொடுப்பதாகவும் உணர்கிறேன். சினிமா மிகவும் ஜனநாயகத் தன்மை வாய்ந்த ஒரு தொழில். எல்லோரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும்’’ என்றார் கமல்ஹாசன்.
விருதினைப் பெற்றுக்கொண்ட மணிரத்னம், “விகடன் ஹெட்மாஸ்டர் ரொம்ப கறாரான ஆளு. என் படத்துக்கு 40-45-க்கு மேல மார்க் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க. விமர்சனக்குழுவில் யாரும் 50-க்கு மேல கத்துக்கவே இல்லை போல...” என்று காமெடியாகச் சொல்ல, கமல்ஹாசன் தன் பன்ச்சாக, “நன்றாகப் படிக்கிறவர்களுக்குத்தான் இந்தக் கோபம் இருக்கும். எனக்கு இல்லை’’ என்று சொல்லி அரங்கத்தைச் சிரிப்பலையில் அதிர வைத்தார்.
“நானும் மணிரத்னமும் பேசிக்கொண்டதில் 10 சதவிகிதம்கூட இன்னும் எடுக்கவில்லை... குட்டிச்சுவர் மீதும், தெருமுக்கிலும் நின்று அத்தனை கதைகள் பேசியிருக்கிறோம்’’ என்றார் கமல்.
“ஒரு இயக்குநருக்கு ஒரு நடிகர் கிடைச்சா போதும்... ‘நாயகன்’ படத்துல வர்ற ‘நான் அடிச்சா நீ செத்துருவே’ என்ற வசனம் சாதாரண வசனம்தான். ஆனா கமல்ஹாசன் அதை வெளிப்படுத்திய விதம்தான் அந்த வசனத்துக்குப் புது சக்தி கொடுத்துச்சு” என்றார் மணிரத்னம். ‘‘ரஜினி, கமலைச் சேர்த்து வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதா?’’ என்ற கேள்விக்கு, ‘‘இவர்களில் ஒருவருக்குப் படம் செய்வதே கடினம்’’ என்றவர், எஸ்.எஸ்.வாசன் விருதினை சினிமாவைக் காதலிக்கும் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

2020-21 ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதினை 'ஜெய் பீம்' திரைப்படத்துக்காக சூர்யா, த.செ.ஞானவேல், மற்றும் படக்குழுவினர் இணைந்து நீதிநாயகம் சந்துருவிடம் பெற்றுக்கொண்டனர். நிழலும் நிஜமும் என இரு ‘சந்துரு'க்களால் மேடை ‘நிறை'ந்திருந்தது.
“எங்களுக்கு ‘ஜெய் பீம்’ ஒரு கூட்டுக் கனவு. இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும், என்னுடைய கனவை அவர்களுடைய கனவாக மாற்றிக்கொண்டு கடுமையாக உழைத்தார்கள்” என்றார் த.செ.ஞானவேல். பட உருவாக்கத்தில் பங்குபெற்ற கலைஞர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘‘கடைக்கோடி இந்தியனின் நீதிக்கான நம்பிக்கையை ஜெய் பீம் விதைத்திருக்கிறது’’ என்றார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “ஆரம்பத்தில் ஒரு சுயாதீன இசையமைப்பாளராக இருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு முதலிலேயே இசையமைப்பதாக இருந்தால், நான் முன்பே சினிமாவுக்கு வந்திருப்பேன்’’ என்றார்.
எடிட்டர் பிலோமின் ராஜ், “ஒரு கொரியன் படம் அந்நாட்டுச் சட்டத்தையே மாற்றியுள்ளது. அதேபோல ஒரு மாற்றத்தை ‘ஜெய் பீம்’ செய்துள்ளது” என்றார். 2டி என்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர், “ஒவ்வொருவரும் நடித்தார்கள், வேலை செய்தார்கள் என்பதைக் காட்டிலும் வாழ்ந்தார்கள் என்பதே உண்மை” என்றார்.
நாயகி லிஜோமோள் ஜோஸ், “இது என் வாழ்நாளுக்குமான சினிமா. நடித்த உணர்வு வரவில்லை. ஒரு family reunion போல இருந்தது” என்றார். மணிகண்டன், “படத்தில் ஒரு வசனம் வரும். நம் திறமைக்கு மரியாதை அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது... அதை இந்தப் படம் செய்துகாட்டியிருக்கிறது’’ என்றார். நிறைவாக அனைவரும் ஒரு புகைப்படத்திற்காக ஒன்றிணைந்து நிற்க, “இந்த மேடையில் நாங்கள் எடுக்கும் இந்தக் குழுப் படத்தை என்னுடைய வீட்டில் மாட்டி வைப்பேன்!” என்று நெகிழ்ந்தார் த.செ.ஞானவேல்.
நீதிநாயகம் சந்துரு, `` `இந்தச் சமூகத்தில் இப்படியெல்லாம் அநீதி நடக்கிறதா? அதைக் கண்டும் காணாமல், நாம் கடந்து சென்றிருக்கிறோமா?’ என்ற குற்றவுணர்வினைப் பலர் பெற்றார்கள்... என் மனைவியின் வேண்டுகோளுக்காக என் வாழ்க்கையை 4 நிமிட வீடியோவாக எடுக்க இருந்த ஒன்றுதான் ‘ஜெய் பீம்' சினிமாவாகப் பரிமாணம் பெற்றது'' என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-21 -ஆல்பம்
2020-21-க்கான சிறந்த இயக்குநர் விருதினை ‘ஜெய் பீம்' திரைப்படத்துக்காக த.செ.ஞானவேல், இயக்குநர் வெற்றிமாறனின் கைகளில் பெற்றுக்கொண்டார். விருதை வாங்க மேடை ஏறிய த.செ.ஞானவேலுக்கு அரங்கம் அதிர ரசிகர்கள் ‘ஜெய் பீம்' முழக்கம் கூறி வரவேற்றனர்.
‘‘சினிமா விமர்சனத்தின் நீட்சியே விருதுகள். ஒரு சினிமா சாதாரணமாக விவாதத்தை எழுப்பிவிடாது. நம் தமிழ்ச் சூழலில் ‘ஜெய் பீம்’ அதை தைரியமாகச் செய்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திர மதிப்பு கொண்ட நடிகரான சூர்யாவை வைத்து அதைச் சாத்தியப்படுத்தியிருப்பது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று வாழ்த்தினார் வெற்றிமாறன்.
விருதினைப் பெற்றுக்கொண்ட த.செ.ஞானவேல், ‘‘விகடன் எனது தாய் வீடு, இந்த மேடை எனக்கு எப்போதும் பதற்றம் ஏற்படுத்தாத மேடை. மாணவ நிருபராக 2002-ம் ஆண்டில் விகடனில் சேர்ந்த எனக்குக் கற்றுத்தந்த பாடத்தை இன்றும் தொடர்ந்துவருகிறேன். அப்போது நான் எழுதிய ‘அன்றும் இன்றும்' எனும் தொடரில், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றிய கட்டுரையில் ஒரு பெண் தனியாக வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். ஆசிரியர் என்னை அழைத்து, ‘இது திருடர்களுக்கு சாதகமாக அமையும்' என்று என்னை அன்போடு திருத்தினார். அந்த அளவுக்கு சமூக அக்கறை கொண்ட பத்திரிகை விகடன். `ஜெய் பீம்' படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் நான் விகடனில் இருந்தபோதுதான் சந்தித்தேன். இந்த விருதை சாத்தியப்படுத்திய சூர்யா சாருக்கு நன்றி. விருதினை வெற்றிமாறனிடம் வாங்கியது பாலு மகேந்திராவின் கைகளில் இருந்து வாங்கிய உணர்வைத் தருகிறது” என்றார்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ‘ஜெய்பீம்' மற்றும் ‘சூரரைப் போற்று' திரைப்படங்களுக்காக சூர்யாவுக்குக் கிடைத்தது. கமல்ஹாசன் கரங்களிலிருந்து விருதை அவர் பெற்றுக்கொண்டார்.
“இன்று நூற்றாண்டைத் தொடுகிற அளவுக்கு விகடன் நிறுவனம் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கு. அத்தகைய பாரம்பரியமுள்ள நிறுவனத்தின் விருது பெறுவது பெருமிதமாக உள்ளது. ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் அறிமுகமும் எனக்கு விகடனால் கிடைத்தது. எங்கள் அகரம் பவுண்டேஷனில் ஞானவேலின் உழைப்பு அளப்பரியது. அது இப்போது 5,000 மாணவர்களின் உயர்கல்விக் கனவு சாத்தியமாகக் காரணமாக இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு அகரம் பவுண்டேஷனுக்கு விகடன் நம்பிக்கை விருது வழங்கப்பட்டது. அதற்கும் சேர்த்தே இன்று நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’' என்றார். விகடன் விருதினை தன் மனைவி ஜோதிகாவிற்கு 'டெடிகேட்' செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு, தனது விருதினை ஜெய் பீமில் ராசாக்கண்ணுவாக வாழ்ந்த மணிகண்டனை மேடைக்கு அழைத்து, பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார். கமல்ஹாசனைப் பற்றிப் பேசும்போது, ‘‘கமல்ஹாசன் அண்ணா ஒரு பல்கலைக்கழகம். சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த 5 படங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினால், கமல்ஹாசனின் 50-60 படங்களைத் தேர்ந்தெடுக்கலாம்’’ என்றார்.

மேடையேறிய மணிகண்டன் சூர்யாவுக்கு நன்றி கூறி விட்டு, கமல்ஹாசனைப் பார்த்து, “நான் இந்த மேடைல எது சொன்னாலும் மிகையாதான் இருக்கும். உங்களோட அவ்ளோ பெரிய ரசிகன் நான். உங்க வசனத்தை அப்படியே மனப்பாடம் பண்ணிப் பேசுவேன். லோகேஷ் கனகராஜ் மேல எனக்குப் பொறாமையா இருக்கும். அடிச்சிரணும் போல தோணும்’’ என்று தனது அன்பினை வித்தியாசமாய் வெளிப்படுத்த, அரங்கம் கலகலப்பானது.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதினை ‘ஜெய் பீம்’ திரைப்படத்துக்காக லிஜோமோள் ஜோஸ், மீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் ஜோய் ஆலுக்காஸ் இந்தியா லிமிடெட் ரீஜினல் மேனேஜர் சுமேஷ் கே.ஏ இருந்தார். “கேரளாவைச் சேர்ந்த நான், இங்கே தமிழகத்தின் பழங்குடிப் பெண்ணாக நடித்தது சிரமமாக இருந்தது. செங்கேணியாக மக்கள் என்னை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. விருது வழங்கிய விகடனுக்கும், பழங்குடி மக்களுக்கும் நன்றி” என்றார் லிஜோ.
2020-21-ம் ஆண்டின் சிறந்த என்டர்டெயினர் விருதினை ‘டாக்டர்’ திரைப்படத்துக்காக சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் நிப்பான் பெயின்ட் இந்தியாவின் தலைவர் மகேஷ் ஆனந்த் இருந்தார்.
“நான் வாங்கும் முதல் விகடன் விருது இதுதான். `டாக்டர்’ படத்துக்கு முன்பு நான் நடித்த படம் கடும் விமர்சனம் பெற்றது. அப்போதுதான் ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் என இயக்குநர் நெல்சனை அழைத்தேன். நெல்சனின் விருப்பப்படி படத்தை இயக்கச்சொல்லி தயாரிப்பாளராக ஒத்துழைப்பு கொடுத்தேன். `டாக்டர்’ மாதிரியான பரிசோதனை முயற்சி, திரையரங்கில் 50% ரசிகர்ளுக்கு மட்டுமே அனுமதி என்று இருந்த நேரத்திலும் வசூலையும் பெற்றது. இப்போது விகடனில் நான்கு விருதுகளையும் வென்றிருப்பது பெரும் ஊக்கமளிக்கிறது” என்றார்.
‘‘சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திலும் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் வேறு வேறு மாதிரி புது முயற்சிகள் செய்கிறார். அவரது ‘டாக்டர்’ படத்தை ரசித்துப் பார்த்தேன்’’ என்றார் இயக்குநர் ஷங்கர். அவரிடம் ‘இந்தியன்-2’ அப்டேட் கேட்காமல் இருப்போமா? ‘‘75% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஜூன் மாதம் படப்பிடிப்பு முடிந்து விடும். அனிருத்திடம் ஒரு சிறிய பாடல் கேட்டிருக்கிறேன். அது வந்தவுடன் ஒரு சிறிய காணொலி முன்னோட்டம் வெளிவரும்’’ என்றார்.

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதினை ‘மாஸ்டர்’ மற்றும் ‘டாக்டர்' படங்களுக்காக அனிருத் சார்பாக இயக்குநர் நெல்சன் பெற்றுக்கொண்டார். தயாரிப்பாளர் 2டி ராஜசேகரிடம் இருந்து இவ்விருதினை அவர் பெற்றுக்கொண்டார். ‘‘அனிருத் வாய்ஸ்ல என்னால நன்றி சொல்ல முடியாது'' என்று குறும்புடன் சொன்னார் நெல்சன். விருதுக்கு நன்றி தெரிவித்து அனிருத் பேசிய காணொலி ஒளிபரப்பப்பட்டது. ‘‘அமெரிக்காவில் இருப்பதால் விழாவிற்கு வர முடியவில்லை... விகடன் விருதுக்கு நன்றி!'' என்று சொன்னதோடு, வர இயலாததற்கு வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகர் விருதினை ‘சார்பட்டா பரம்பரை' திரைப்படத்துக்காக பசுபதி பெற்றார். இயக்குநர் சசியின் கைகளிலிருந்து விருதினைப் பெற்றுக்கொண்ட பசுபதி, ‘‘23 ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் என் முதல் விகடன் விருது இது. கேமராவுக்கு முன்னால் நான் பெரிதாக என்னைத் தயார் செய்துகொள்வது கிடையாது. இயக்குநர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்!” என்றார். இயக்குநர் சசி தனது 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் வசூல் விகடன் விமர்சனத்துக்குப் பிறகு அதிகரித்ததை நினைவுகூர்ந்தார்.

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகை விருதினை ‘சூரரைப் போற்று' திரைப்படத்துக்காக ஊர்வசி, தன் தோழி குஷ்புவிடம் பெற்றுக்கொண்டார். அவருடன் கீதம் வெஜ் ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குநர் முரளி இருந்தார். ‘‘என் அழகி குஷ்புவிடம் விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு கிளாஸ்மேட்டிடம் விருது வாங்குவதுபோல் உள்ளது. நான் குஷ்புவை குப்புசாமி என்றுதான் கூப்பிடுவேன். இப்போது அவர் சினிமா, அரசியல் என்று பெரும் துறைகளில் இருந்து தேசியக் குரலாக ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
‘‘என் ‘முந்தானை முடிச்சு’ படத்துக்காக விகடனில், 'இரண்டெழுத்து மூன்றெழுத்து நடிகைகளே உஷார்... நான்கெழுத்து ஊர்வசி வந்துவிட்டார்' என்று விமர்சனம் வந்திருந்தது. என் 13 வயதில் நடித்த படத்துக்காக அப்படிப் பாராட்டிய விகடன் ஆறு முறை எனக்கு விருது வழங்கிவிட்டது. ஏற்கெனவே மகளிர் மட்டும் திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட விருதுக்கு வர முடியாமல்போனது மிகவும் வருத்தமாக இருந்தது. அதுவும் சகோதரர் சூர்யாவின் தயாரிப்பில் வந்த திரைப்படம்தான். இந்த விழாவில் சூர்யா கலந்துகொள்கிறார். அவர் முன்னிலையில் விருது வாங்க வர வேண்டும் என்று அதற்காகவே வந்தேன்'' என்றார் ஊர்வசி. முன்வரிசையில் அமர்ந்திருந்த சூர்யா, புயல்வேகத்தில் மேடையில் ஏறி ஊர்வசிக்குப் பாராட்டு சொன்னார்.
‘‘நான் ஊர்வசியை பொடி என்றுதான் கூப்பிடுவேன். ‘சூரரைப் போற்று’ அருமையான படம். அதில் பொடியைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது. சூர்யா க்ளைமாக்ஸில் விமானத்தில் பறக்கும் காட்சியில் அவரது கண்களில் இருக்கும் நீரினையும், முக பாவத்தையும் கண்டு பிரமித்துப்போனேன். ஊர்வசி பொறாமை இல்லாத நடிகை. நானும் அவளும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ஒன்றாக நடித்த தருணத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பசுமையாக உள்ளது” என்றார் குஷ்பு.

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகர் விருதினை ‘டாக்டர்' படத்துக்காக ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் நெல்சனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் சென்னை ஏ.வி.ஐ.டி கல்லூரியின் முதல்வர் செல்வகுமார் இருந்தார். “நெல்சன் இல்லாட்டி நான் இங்க இல்லை’’ என நெகிழ்ந்தார் ரெடின். “எந்த இடத்துக்குப் போனாலும் சும்மா நெல்சன் தம்பிக்கு வணக்கம் என்று சொல்றார், என்னமோ நான் எப்போதும் இவர்கூட இருக்கிற மாதிரி” என்று கலாய்த்தார் நெல்சன். பிறகு ரெடின் கிங்ஸ்லியை முதன்முதலாக டான்ஸ் ஸ்கூலில் சந்தித்த நிகழ்வை தன் ஸ்டைலில் காமெடியாக நெல்சன் கூற, அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்தது. ரெடினின் உடல்மொழியை விஜய் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு, ‘‘அது நானா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி இருந்தால் மகிழ்ச்சி’’ என்ற ரெடின், செம டான்ஸ் மூவ்மென்ட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக இயக்குநர் விருதினை ‘மண்டேலா’ திரைப்படத்துக்காக மடோன் அஸ்வின் தன் நண்பர் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பெற்றுக்கொண்டார். மடோன், “விகடனின் மதிப்பெண்ணை எப்போதும் பார்ப்பேன். அதற்கு எவ்வளவு மரியாதை உள்ளது என்பதை நான் அறிவேன். என் திரைப்படத்துக்கு ஆனந்த விகடனில் மதிப்பெண் இல்லாமல் 5-க்கு 4 ஸ்டார் கொடுக்கப்பட்டிருந்தது. ‘ஏன் மதிப்பெண் வழங்கவில்லை?' என்று கேட்டதற்கு, ‘ஓ.டி.டி படங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது கிடையாது' என்று கூறினர். சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆனால் விருது கிடைத்து இப்போது அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். லோகேஷ் கனகராஜ், ‘‘அவனும் நானும் ஒன்றாகத்தான் படம் எடுக்க வந்தோம். நான் சற்று முந்திக்கொண்டேன். அவன் படம் இயக்கினால் நான் அதில் அசிஸ்டென்டாக வேலை செய்யலாம் என்று இருந்தேன்'' என்றார்.
மடோன் தன் உதவி இயக்குநர்களை மேடையேற்றி அழகு பார்த்ததோடு ஒரு விஷயத்தைப் பதிவு செய்தார். ‘‘நான் ‘மண்டேலா’ ஷூட்டிங் ஆரம்பித்த நேரத்தில் பல அசிஸ்டன்ட் டைரக்டர்கள் வெயிலின் தாக்கத்தால் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்கள். அதன்பின் வந்த உதவி இயக்குநர்கள் கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுத்தார்கள். சாதிச்சண்டையில் ஒரு சுவரில் திட்டி எழுதி வைத்திருக்கும் காட்சி வரும். அதை வேண்டுமென்றே எழுத்துப்பிழையாக எழுதி வைத்திருந்தார்கள். அதை frame செட் செய்யும்போதுதான் நான் பார்த்தேன். அந்த அளவுக்கு என் உதவி இயக்குநர்கள் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தார்கள்'' என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகர் விருதினை ‘கடைசீல பிரியாணி’ திரைப்படத்துக்காக ஹக்கீம் ஷா, தேவயானியிடம் பெற்றுக்கொண்டார். அவருடன் ரேடியோ சிட்டியின் ஆர்.ஜே நிதி இருந்தார். “இது என்னுடைய முதல் விருது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்புக்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன்’’ என்றார் ஹக்கீம் ஷா. ‘‘கடைசீல இன்னைக்கு பிரியாணிதானே?'’ என்று தொகுப்பாளர் அர்ச்சனா கேட்க, சிரித்துக்கொண்டே “ஆமாம்... நிச்சயமா!’' என்றார் ஹக்கீம் ஷா.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகை விருதினை ‘தேன்' திரைப்படத்தில் நடித்ததற்காக அபர்ணதி, இயக்குநர் கிருத்திகா உதயநிதியிடம் பெற்றுக்கொண்டார். அவருடன் சத்யா நிறுவனத்தின் ஜென்சன் இருந்தார். அபர்ணதி, “இதுவரை 20 சர்வதேச விருதுகளை இப்படத்திற்காக நான் வாங்கியிருந்தாலும், தமிழில் வாங்கும் முதல் விருது இது. இந்த விருதை 10 தேசிய விருதுகளுக்குச் சமமாகப் பார்க்கிறேன். கல்லிலும் முள்ளிலும் நடந்ததற்கான பலன் இது’’ என்றார். ‘‘வெறும் புதுமுகங்களைக் கொண்டு படம் எடுத்து 80 சர்வதேச விருதுகளை வெல்வது சாதாரண விஷயமல்ல'’ என்று பாராட்டினார் கிருத்திகா உதயநிதி.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை ‘சைக்கோ’ படத்துக்காக தன்வீர் மீர், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனிடம் பெற்றுக்கொண்டார். “மிஷ்கினின் திரைமொழி உன்னதமானது. ஒருமுறையாவது அவரிடம் மற்ற ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிய வேண்டும். அவர் மனதில் இருப்பதை அப்படியே காட்சியாக வாங்கிவிடுவார். இந்த வாய்ப்பினை வழங்கிய பி.சி.ஸ்ரீராம் சாருக்கு நன்றி” என்றார் தன்வீர் மீர்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த கலை இயக்கம் விருதினை ‘சார்பட்டா பரம்பரை' திரைப்படத்துக்காக கலை இயக்குநர் த.இராமலிங்கம், ‘சத்யஜோதி' தியாகராஜனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் சத்யா ஏஜென்சீஸ் இயக்குநர் ஜாக்சன் இருந்தார். ‘‘எனக்கு ‘காலா', ‘கபாலி' படங்களுக்கு விகடன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கிறது. ஒருதலையாகக் காதலித்த பெண் சம்மதம் சொன்னதுபோல இருக்கிறது” என்று கலகலப்பாகப் பேசினார் ராமலிங்கம். குறுக்கிட்ட தியாகராஜன், “நம்ம ‘கேப்டன் மில்லர்’ ஷூட்டிங்கை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க, என்ன விஷயம்?” என்று கேட்க, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. பிறகு கேப்டன் மில்லரின் 70% படப்பிடிப்பு தென்காசியில் முடிந்துவிட்டதாகவும். மீதிப் படப்பிடிப்பு சென்னையிலும் ஊட்டியிலும் தொடரும் எனவும் அப்டேட்டை வழங்கினார் தியாகராஜன்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த வசனத்துக்கான விருதினை ‘கர்ணன்’ திரைப்படத்துக்காக இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் லிங்குசாமி மற்றும் தயாரிப்பாளர் தாணுவிடமிருந்து பெற்றுக்கொண்டார். ‘‘'மாரி செல்வராஜின் திறமையைப் பார்த்து படம் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறேன்” என்றார் தாணு.
“வசனம் என்பதற்குத் தனிக் கவனம் செலுத்தவில்லை. திரைக்கதையில் நேர்மையாக இருந்தால் வசனம் பட்டவர்த்தனமாக அகத்தின் வழி வந்துவிடும். எழுதக்கூடிய கதாபாத்திரத்தின் அறிவு என்பதைப் பொறுத்து வசனம் இருக்க வேண்டும்” என்றார் மாரி செல்வராஜ். ‘மாமன்னன்’ குறித்த கேள்விக்கு, ‘‘தமிழ் சினிமாவில் எடுக்க முடியாத ஒரு கதைக்கருவைக் கொண்டது ‘மாமன்னன்’ படம். உதயநிதி ஸ்டாலின் இல்லையென்றால் இப்படியொரு படத்தை தமிழ் சினிமாவில் எடுத்திருக்க முடியாது. எனது மூன்று படத் தயாரிப்பாளர்களும் எனக்கு முழுச் சுதந்திரத்தைத் தந்தனர்” என்றார் அவர்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்பு விருதினை ‘தேன்’ திரைப்படத்துக்காக தயாரிப்பாளர்கள் அம்பலவாணன் மற்றும் பிரேமா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனிடம் விருதினைப் பெற்றுக்கொண்டார்கள். ‘‘மிகச் சிறிய படத்தினை அங்கீகரித்த விகடனுக்கு நன்றி'' என்று தயாரிப்பாளர்கள் நெகிழ, படக்குழு மேடையை அலங்கரித்தது. ‘‘50 சர்வதேச விருதுகளை வென்ற இத்திரைப்படத்திற்கு விகடன் தந்திருப்பது தமிழில் முதல் அங்கீகாரம்'' என்று இயக்குநர் கணேஷ் விநாயகன் நன்றி தெரிவித்தார்.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த படக்குழு விருதினை ‘கர்ணன்’ திரைப்படத்துக்காக மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, லால், கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் மேடையேறி பார்த்திபனிடம் பெற்றுக்கொண்டனர். “என் உணர்வு நியாயமானது... அதுவே அநியாயமானது” என்று வழக்கம்போல தனக்கான பாணியிலே பேசத் தொடங்கினார் பார்த்திபன். “எனது முதல் படமான ‘புதிய பாதை’ திரைப்படத்திற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது விகடனே! அதை என்றும் மறக்கமாட்டேன். விகடனுக்கும் எனக்குமான உறவு தொடரும்” என்றார்.
விருது வாங்கியவுடன் மாரி செல்வராஜ் தனது ஊரான புளியங்குளம் மக்களுக்கும், நடிகர் தனுஷிற்கும் நன்றி கூறியதோடு, தனுஷ் தனது முந்தைய படமான பரியேறும் பெருமாளைப் பார்த்துவிட்டு, ‘உங்கள் கதையில் என் தலையீடு இருக்காது’ என்று முழுச் சுதந்திரம் தந்ததாகக் கூறினார். இதற்கிடையே ரசிகர்கள் “வாடிவாசல்...வாடிவாசல்’’ என்று கோஷம் எழுப்பத் தொடங்க, ‘‘தம்பி சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் படைப்பில் உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல், ‘வாடிவாசல்.’ இந்த வருடத்திலேயே ரசிகர்களின் எண்ணம் நிறைவேறும். உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சிமுகரும் படைப்பாக ‘வாடிவாசல்’ அமையும்” என்று அப்டேட் ஒன்றைத் தட்டிவிட்டு அமைதிப்படுத்தினார் தாணு.
2020-21-ம் ஆண்டின் சிறந்த படத்தொகுப்புக்கான விருதினை ‘மாநாடு’ திரைப்படத்துக்காக பிரவீன் கே.எல், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் பெற்றுக்கொண்டார். ஒரே வட்டத்துக்குள் சுற்றும் கதையைப் படத்தொகுப்பு செய்வது சவாலாக இருந்ததாக அவர் சொன்னார். ‘‘எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படம் உருவாக்கப்படுகிறது என்பார்கள். ஆமாம்... என்னைப் பொறுத்தவரை எடிட்டர்கள்தான் ஸ்கிரிப்ட் டாக்டர்கள்’’ என்று ‘மாநாடு’ படத்தின் எடிட்டிங்கைப் புகழ்ந்தார் ரவிவர்மன்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த கதை விருதினை க/பெ.ரணசிங்கம் திரைப்படத்துக்காக இயக்குநர் பெ.விருமாண்டி, ரோகிணியிடம் பெற்றுக்கொண்டார். விருதினை வழங்க மேடையேறிய ரோகிணிக்கு ‘உனக்குள் நானே’ பாடல் பின்னணியாக இசைக்கப்பட, மேடையேறியவர் “வழக்கமா நான் மேடையேறினா ஆசை அதிகம் வச்சு பாடல்தான் போடுவாங்க... ஆனா நான் பாடல் வரிகள் எழுதிய பாட்டைப் போட்டது ஆச்சர்யமா இருக்கு. அந்த ஆச்சர்யம்தான் விகடன்” என்றார்.
“சாதாரண நாடகக் கலைஞனின் பையன் நான். 20 வருஷமா கஷ்டப்பட்டிருக்கேன். 200 ரூபா சம்பளத்துக்கு சென்னை வந்தேன். இப்போ இந்த மேடைல நிற்கிறேன்.எப்போதும் மக்களுக்கான படம் பண்ணுவேன்” என்றார் இயக்குநர் பெ.விருமாண்டி. அவரது குடும்பத்தினரை மேடையேற்றியவர், மூன்று தலைமுறையாகத் தொடர்ந்து இத்துறையில் இருப்பதாகக் கூறிப் பெருமிதம் அடைந்தார். ‘ஏம் மவன் செயிச்சிட்டான்’ என்று அவரின் தாயார் பெ.விருமாண்டிக்கு முத்தமிட நெகிழ்ந்தது அரங்கம்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான விருதினை ‘மாநாடு’ திரைப்படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபு பெற்றார். இயக்குநர் மோகன் ராஜா மற்றும் கார்த்திக் ராஜாவிடம் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டார். அவர்களுடன் வி.ஜி.பி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் வி.ஜி.பி.ரவிதாஸ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி.ஜி.பி. பிரேம்தாஸ் இருந்தனர். வெங்கட் பிரபு, “என் முதல் விருது ‘சென்னை 600028’-க்குக் கிடைத்தது. 18 வருடங்களுக்குப் பிறகு விகடன் விருது கிடைத்துள்ளது. இனி விருது பெரும் கால இடைவெளியைக் குறைக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஜாலியான ஒரு படத்துக்கு விருது பெறுவது கடினமான விஷயம். சீரியசான படம் எடுப்பதுபோல ஜாலியான படங்கள் எடுப்பதும் கடினமான விஷயமே. ‘கர்ணன்’, ‘ஜெய் பீம்’ என்று சீரியஸா படம் எடுத்து எல்லா விருதையும் அள்ளிட்டா நாங்க என்ன பண்ணுறது?” என்று வெங்கட்பிரபு கேட்க, கீழே இருந்த மாரி செல்வராஜும் த.செ.ஞானவேலும் குலுங்கிச் சிரித்தனர். அதே மேடையில் ‘தனி ஒருவன் 2’ அப்டேட்டை மோகன் ராஜா சொல்ல ‘காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது’ பாடலை கார்த்திக் ராஜாவும் வெங்கட் பிரபுவும் இணைந்து பாடிக் கலக்கினர்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருதினை ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்காக ஸ்டன்ட் சில்வா, நரேனிடம் பெற்றுக்கொண்டார். ஸ்டன்ட் சில்வா, “இது எனது முதல் விகடன் விருது’’ என்று நன்றி தெரிவித்தார். விஜய்க்கும் நன்றி சொன்ன அவர், படப்பிடிப்பில் தான் விளையாட்டாக சிரித்துவிட்டதாகவும் அதற்கு லோகேஷ் கோபப்பட்டதையும் நகைச்சுவையாகச் சொல்லிக் கலகலப்பாக்கினார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த நடன இயக்குநர் விருதினை ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்காக நடன இயக்குநர் தினேஷ், ‘பாஃப்டா’ தனஞ்செயனிடம் பெற்றுக்கொண்டார். ‘‘ராஜு சுந்தரம் மாஸ்டர்ட்ட அசிஸ்டென்ட்டா இருக்கும் போதிருந்து விஜய் சார் கூட வேலை செஞ்சுட்டிருக்கேன். ‘மெல்லினமே’, ‘ஆல்தோட்ட பூபதி’, ‘போடாங்கோ’ன்னு எங்க லிஸ்ட் பெருசு. அதைப் பார்த்துட்டுதான் லோகேஷ் என்னை மாஸ்டருக்குக் கூப்பிட்டாரு. விஜய் சாரோட டான்ஸ் கேமராவுக்குப் பின்னாடி 50 சதவிகிதம்னா கேமராவுக்கு முன்னாடி 200 சதவிகிதமா இருக்கும். இந்தப் பாடலுக்கு உழைத்த அனைத்து நடனக் கலைஞர்களுக்கும் நன்றி’’ என்றவர், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடியதோடு தனஞ்செயனையும் ஆட வைத்தார். ‘லியோ’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகக் கூறிய அப்டேட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
2020-21-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதினை ‘மாறா’ திரைப்படத்தின் ‘யார் அழைப்பது’ பாடலுக்காக கவிஞர் தாமரை, இயக்குநர் கிருத்திகா உதயநிதியிடம் பெற்றுக்கொண்டார். அவருடன் நெக்ஸ்ட் அட்வர்டைசிங் சொல்யூஷன்ஸ் சி.எஸ்.ஓ ஜெகதீஷ் இருந்தார். ‘‘நான் விகடனில் மாணவ நிருபராக இருந்தேன். ஆதலால் எனது குடும்பத்திலிருந்து விருதுபெற்றதாக உணர்கிறேன்’’ என்ற தாமரை, தான் விருது பெற்ற பாடலை எழுதிய சூழலை விளக்கிய விதம் ஆச்சர்யமாக இருந்தது.
‘’நான் தலைவலிக்காரி. பெரிதாக பயணம் செய்யாத, பயணத்தைத் தவிர்க்கிற என்னிடம் ஒரு பயணப் பாடலை எழுதச் சொன்னார்கள். ஆனால் என்னால் அதைச் செய்ய முடிந்தது. அதற்குக் காரணம் எதை நான் இழந்தேனோ அதை என் எழுத்தின் மூலம் அடைந்ததுதான். அதுவே இவ்விருதினைப் பெற வைத்திருக்கிறது!” என்றார். கிருத்திகா உதயநிதி விரைவில் தனது படைப்பின் மூலமாக தாமரையுடன் கைகோப்பதாக மேடையில் தெரிவித்தார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதினை ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலுக்காக பாடகர் கபில் கபிலன், பாடகர் ஸ்ரீனிவாஸிடம் பெற்றுக்கொண்டார். ‘‘பல நேரத்தில் இந்தப் பாடலை ரசித்துள்ளேன். யார் இந்தப் பாடகர் என்று தேடிக்கொண்டு இருந்தேன். இப்போது விழா மேடையில் கண்டுகொண்டேன்” என்றார் ஸ்ரீனிவாஸ். ‘தாஜ்மஹால்’ படத்தின் ‘அடி நீ எங்கே...’ பாடலை ஸ்ரீனிவாஸ் மேடையில் பொருத்தமாய்ப் பாட அரங்கமே நாஸ்டாலஜியா உணர்வில் திளைத்தது. கபில் கபிலனும் தனது ‘அடியே’ பாடலைப் பாடிக்காட்ட மெஸ்மரைஸ் ஆனது அரங்கம்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகி விருதினை ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலுக்காக கிடாக்குழி மாரியம்மாள், சின்னத்திரை நடிகை ரக்க்ஷிதாவிடம் பெற்றுக்கொண்டார். ‘‘இந்த விருதுக்கு நான் தேர்வாகியுள்ளேன் என்று கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. விகடன் இதழில் வெளியான பிறகே நம்பினேன். மதிப்புக்குரிய விருதினை வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” என்று கூறியதோடு ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலைப் பாடி அரங்கத்தை அதிர வைத்தார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் விருதினை ‘டாக்டர்’ திரைப்படத்துக்காக இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் 2டி ராஜசேகரிடமிருந்து பெற்றுக்கொண்டார். “நான்தான் முதல் விகடன் விருது விழாவினை இயக்கினேன். இப்போது அதே விழாவில் விருதுபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு விருதுகள் தந்து ‘டாக்டர்’ படத்தை அங்கீகரித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார். ‘ஜெயிலர்’ குறித்த அப்டேட் கேட்கப்பட, ‘‘ரஜினி சாரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை ‘மண்டேலா’ திரைப்படத்துக்காக முகேஷ், விமலிடம் இருந்து பெற்றுக்கொண்டார். “காலேஜ் படிக்கும் குழந்தை நட்சத்திரமா நான் மட்டும்தான் இருப்பேன்...’’ என்று தன்னைக் கலாய்த்தபடி பேசினார் முகேஷ். ‘‘முதல் படத்தில் விருது வாங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது நான் காலேஜ் முதலாம் ஆண்டு படித்துவருகிறேன்... நீ எப்படிய்யா குழந்தை நட்சத்திரமா ஆனேன்னு பலரும் கேலி செய்கிறார்கள்” என்று அப்பாவியாய் சொல்லிச் சிரிப்பில் ஆழ்த்தினார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதினை `சார்பட்டா பரம்பரை‘ திரைப்படத்துக்காக ஏகன் ஏகாம்பரம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தனிடம் பெற்றுக்கொண்டார். ‘‘ஏகன் மிகப்பெரிய திறமைசாலி... இவர் படிப்புக்கு டெக்ஸ்டைல் ஃபீல்டுல பெரிய சம்பளத்துல நிம்மதியா வேலை பார்க்கலாம். ஆனால், அதை விட்டுட்டு சினிமாதான் வேணும்னு வந்திருக்கார். எங்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தப்போ நானே இதைச் சொல்லியிருக்கேன். ஆனா, அவர் கனவு சினிமாவில்தான் இருந்தது. ஏகனுக்கு விருது கொடுப்பது மகிழ்ச்சி!’’ என்று அனுவர்தன் நெகிழ்ந்தார். ‘‘சார்பட்டா பரம்பரையில் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த பா.இரஞ்சித் சாருக்கு நன்றி. ஒரு குறிப்பிட்ட காலத்துல சென்னை மக்கள் உடுத்தியிருந்த உடைகளைத் தேடித்தேடி படத்துக்குள்ள கொண்டுவர நிறைய மெனக்கெட்டேன். அதற்கான பலனா விகடன் விருது மேடம் கையால கிடைச்சது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி’’ என்றார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருதினை `சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்துக்காக தசரதன், ரம்யா பாண்டியனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் தமிழ் பனீர் மேனேஜிங் பார்ட்னர் தமிழரசன் சங்கர் இருந்தார். “57 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.இத்தனை வருஷத்துக்கு அப்புறம் விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்த விருதினை நெசவாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த வெப் சீரீஸ் விருதினை ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரீஸிற்காக இயக்குநர் இந்திரா சுப்ரமணியன், ஆனந்த விகடன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ராதிகா ஸ்ரீனிவாசன், ராதா ஆகியோர் இயக்குநர் எழிலிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
‘‘விகடன் நிறுவனத்தின் முதல் வெப் சீரிஸ்... எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கும் என்ற தயக்கம் இருந்தது. ஆனால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி’’ என்று தயாரிப்பாளர்கள் சொல்ல... ‘‘கத்துக்குட்டியாக வந்தோம். விகடன் எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தது. நிறைய தவறுகள் செய்தோம். விகடன் சப்போர்ட் செய்து தவறுகளைத் திருத்திக் கற்றுக்கொடுத்தது” என்றார் இயக்குநர் இந்திரா சுப்ரமணியன்.
2020-21-ம் ஆண்டுக்கான விருதுகள் விழாவுடன் 2022-ம் ஆண்டிற்கான ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ வழங்கும் நிகழ்வும் இணைந்தே நடைபெற்றது. அந்த விழாவின் சுவாரஸ்யத் துளிகளை அடுத்த வாரம் காணலாம்.