Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022 - திறமைக்கு மரியாதை

சாய் பல்லவி, கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், யோகிபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பல்லவி, கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், யோகிபாபு

“சினிமா ஒரு ஜனநாயகத்தன்மைகொண்ட ஊடகம். அதில் அனைவரும் பங்கெடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இம்மேடையில் இருக்கும் அனைவரும் அதற்குக் காரணம், ரோலக்ஸ் உட்பட’’

மார்ச் 30-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ‘சென்னை வர்த்தக மைய’த்தில் மையம் கொண்டது தமிழ்த்திரை உலகம். கொண்டாட்டமும் குதூகலமுமாக நிகழ்ந்தது ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் விழா. கொரோனாப் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமா எழுச்சி பெற்ற ஆண்டு 2022. திரையரங்குகளுடன், ஓ.டி.டி திரைகளும் இணைந்த கைகளாக ஒளிரத் தொடங்கிய இந்த ஆண்டில், பல சிறிய, பெரிய படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றன. தமிழ்த் திரையுலகம் பேன் இந்திய முயற்சிகளில் உச்சம் தொட்டதும் இந்த ஆண்டில்தான். இந்த எழுச்சிமிகு வருடத்தில் சாதித்த கலைஞர்களுக்குப் புகழ் மகுடம் சூட்டிய 2022-ம் ஆண்டுக்கான விருது நிகழ்வின் சுவாரஸ்யத் துளிகள் இங்கே...

2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதினை ‘விக்ரம்’ திரைப்படத்திற்காகக் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். அவருக்கான விருதினை மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து வழங்கினர். சிறந்த நடிகருக்கான விகடன் விருது நாமினேஷன் பட்டியலில் இருந்த, அசோக் செல்வன், உதயநிதி ஸ்டாலின், கருணாஸ், கார்த்தி, சிம்பு, தனுஷ், மாதவன், விக்ரம், விக்ரம்பிரபு என அனைவரின் பெயரையும் முதலில் வாசித்தார் கமல்ஹாசன். ‘‘சினிமா என்பது கூட்டு முயற்சி. எல்லாம் சரியாக அமைந்து ஒரு ஃபோகஸ் புல்லர் சரியாக அமையவில்லை என்றால் அந்தப் படம் அவ்வளவுதான். அவையடக்கம் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தனியாக இருந்தாலும் நான் இப்படித்தான். இந்தப் பட்டியலில் இருக்கும் அனைவரும் தகுதியானவர்கள். இவர்களோடு நான் விருதினைப் பகிர்ந்துகொள்கிறேன். நான் மட்டும் ஜெயித்ததாக நினைக்கவில்லை’’ என்று சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் கமல்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஷங்கர், அதிதி, சிவகார்த்திகேயன்
ஷங்கர், அதிதி, சிவகார்த்திகேயன்

‘ஒரு பெரிய லைன்-அப்பில் வேலை செய்யப்போகிறீர்கள் என்றும், முக்கியமான இயக்குநர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறோம்... அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறீர்கள்?’ என்ற கேள்வி கமல்ஹாசன் முன் வைக்கப்பட்டது.

“நடிப்பு எனக்கு சலித்துப்போகவில்லை. லோகேஷ் மாதிரி ஒரு தம்பி வரும்போது வருடம் பூராவும் உழைக்க நான் தயார். அப்படி சந்தோஷமா உழைச்சதுக்கு அங்கீகாரம்தான் இந்த விருது. இதுமாதிரி இன்னும் எத்தனை விருது கொடுத்தாலும் வாங்கிப்பேன். மற்ற நடிகர்களோட திறமைக்கு மரியாதை கொடுத்து வரிசையில் நிற்கவும் நான் தயாரா இருப்பேன். கைத்தட்டல்கள் கேட்டு வளர்ந்தவன் நான்” என்று எளிமையாய் நன்றி சொன்னார் கமல்ஹாசன்.

அவரின் ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் அடுத்து வெளிவரும் படங்களைப் பற்றிக் கேட்டபோது, “கதைதான் முக்கியமான விஷயம். அது இருந்தா பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் நிரப்பிடலாம். சிம்பு, சிவகார்த்திகேயன் எல்லோரும் பெட்ரோல் போட்டுத் தயாரா இருக்காங்க” என்றார்.

“ஸ்கூல் பக்கமே போகாமல் எப்படி இவர் இவ்வளவு விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிருக்கார்னு ஆச்சர்யப்படுவேன். இவர் ஒரு பல்கலைக்கழகம்!” என்று கமல் பற்றித் திருவாய் மலர்ந்தார் ரஹ்மான். அதிகம் பேசாத மணிரத்னம், கமலிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘எப்படி ஆர்ட், பொழுதுபோக்கு என இரண்டுவிதமான படங்களையும் சமமாக பேலன்ஸ் செய்து இத்தனை நீண்ட வருடங்கள் சக்சஸ்புல்லாக கரியரைக் கொண்டு செல்கிறீர்கள்?”

தயக்கமே இல்லாமல், ‘‘ ‘நாயகன்’ மாதிரியான படங்களுக்கு மக்கள் தரும் வரவேற்புதான் காரணம். அது நம்மள இழுத்துட்டுப் போயிடும்” என்று குழந்தையைப் போல் பதில் சொல்லிச் சிரித்தார் கமல்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் காரைக்குடி கவிதா கருத்தரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கவிதா ரமேஷ் இருந்தார். “தமிழில் நான் வாங்கும் முதல் விருது இது. ‘கார்கி’ படத்துக்காக இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. 100% இந்தப் படத்துக்கு என்ன தேவை என்பதை ஆழ்மனதில் ஏற்றிக்கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடித்தேன். ரசிகர்கள் இந்தப் படத்தினைத் தங்களுடையதாக்கிக்கொண்டனர். இயக்குநர் கௌதம் ராமச்சந்திரனின் நோக்கமும், காளிவெங்கட்டின் எனர்ஜியும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன” என்றார் சாய் பல்லவி.

சிவகார்த்திகேயன், ‘‘என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோயின் சாய் பல்லவிதான். இந்த காம்போவில் நடனத்தைவிட வேறொரு விஷயம் ஸ்பெஷலாக இருக்கும்’’ என்று சஸ்பென்ஸ் கூட்டிவிட்டுச் சென்றார்.

மதுஸ்ரீ, தாமரை
மதுஸ்ரீ, தாமரை

2022-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதினை ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படங்களுக்காக ஏ.ஆர் ரஹ்மான், பி.சி.ஸ்ரீராமிடம் பெற்றுக்கொண்டார். ‘‘இந்த விருதினை எனது இசைக் குழுவுக்கு சமர்ப்பிக்கிறேன். இரவு பகல் பாராமல் உழைத்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், சவுண்ட் இன்ஜினீயர்கள், என் இசை மாணவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எப்போதும் போல ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’!” என்று தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார் ரஹ்மான். ஆஸ்கர் மேடையில் இரண்டு விருதுகளோடு தான் கொடுத்த பிரத்யேக போஸை இம்முறை விகடன் விருதுகளோடு நின்று ரஹ்மான் கொடுக்க... காணக் கண்கோடி வேண்டும் மொமண்ட். கூடவே விசில் சத்தம் அரங்கத்தை நிறைத்தது.

கூடவே, 2022-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகர் விருதினை `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார். ‘‘தாமரை, சிம்பு, கௌதம் எல்லாருக்கும் நன்றி. இந்த விருது வாங்குனதுல என்னைவிட என் மனைவிதான் சந்தோஷப்படுவாங்க. என்னோட குரல் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். என் இன்டர்வியூ எல்லாம் திரும்பத் திரும்ப பார்த்துட்டிருப்பாங்க” என்றவர், அவரின் மனைவியை மேடையேற்றி, கட்டியணைத்து வரவேற்றார். மைக்கை அவரிடம் கொடுத்து, “இந்தியில் பேசாதே... தமிழில் பேசு” என்று ரஹ்மான் சொல்ல, அவர் மனைவி, “எனக்கு மிகவும் பிடித்த குரல் இவரதுதான்” என்று வெட்கத்தோடு சொல்ல, அவருக்காக ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடலை இரு வரிகள் பாட, அரங்கம் அதிர்ந்தது.

“விகடன் விருதுகள் எப்போதும் ஸ்பெஷல். தமிழ் சினிமாவின் அங்கீகாரம் உயர விகடனின் பங்கு அதிகமாக உள்ளது. அதைத் தொடர வேண்டும்” என்றார் பி.சி.ஸ்ரீராம்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த படக்குழு விருது, ‘விக்ரம்’ படக்குழுவுக்கு! இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் சுபாஸ்கரன் வழங்கினார். விருதைப் பெற கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், நரேன், ரத்னகுமார், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் ஆகியோர் மேடையேற, கமல் சைகையால் சூர்யாவை அழைக்க, சூர்யா உற்சாகமாக மேடையேற, ரசிகர்களின் கரவொலியில் ஆர்ப்பரித்தது அரங்கம்.

“சினிமா ஒரு ஜனநாயகத்தன்மைகொண்ட ஊடகம். அதில் அனைவரும் பங்கெடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இம்மேடையில் இருக்கும் அனைவரும் அதற்குக் காரணம், ரோலக்ஸ் உட்பட’’ என்று சொல்ல. சூர்யா தனக்குக் கமல் பரிசளித்த ரோலக்ஸ் வாட்ச்சைக் காட்டினார்.

லோகேஷ் கனகராஜ், “120 நாள்கள் களத்தில் கமல் சாரோட வேலை செய்ததைப் பெருமையா பார்க்கிறேன். இயக்குநரா விருது வாங்குறதைவிட குழுவா விருது வாங்குறது பெருமையா இருக்கு” என்றார்.

“கமல்ஹாசன் அண்ணாவுடன் வேலை செய்ய வேண்டும் என வெகுநாள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த பாக்கியம் இந்தப் படத்தில் கிடைத்தது. HALF DAY ஷூட்டிங் இந்த அளவுக்கு வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார் சூர்யா. தமது ராஜ்கமல் தயாரிப்பு நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ளும் மகேந்திரன், தன் சகோதரர் சந்திரஹாசன் இடத்தை நிரப்பியுள்ளதாகக் கமல் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் ‘விக்ரம்’ படத்தின் டிரேட்மார்க் காட்சியான ‘ஆரம்பிக்கலாங்களா...’ காட்சியை டயலாக்குடன் செய்து காட்டி அரங்கை அதிரவைத்தார் கமல்ஹாசன்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022

2022-ம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்புக்கான விருதினை ‘பொன்னியின் செல்வன்-1’ படத்திற்காகத் தயாரிப்பாளர்கள் லைகா சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம், ஆகியோர் சேர்ந்து கமல்ஹாசனிடம் பெற்றுக்கொண்டனர். விருது வழங்கிய விகடனுக்கும், படத்தினை பிரமாண்டமாக உருவாக்கிய மணிரத்னம் மற்றும் விருது வழங்கிய கமல்ஹாசனுக்கும் சுபாஸ்கரன் நன்றி கூறினார். தொகுப்பாளர்கள் ‘மருதநாயகம்’ குறித்து கேள்வி கேட்க, கமல்ஹாசன், ‘‘இங்கு ‘பொன்னியின் செல்வன்-2’ குறித்துக் கேள்வி கேளுங்கள். இந்த மேடை இவர்களுக்கான மேடை” என்று அன்போடு குறிப்பிட்டார்.

2022-ம் ஆண்டுக்கான Best Entertainer விருதினை ‘விக்ரம்’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ், சூர்யாவிடம் பெற்றுக்கொண்டார். இதற்கு முன் 2020-21-ம் ஆண்டுக்கான விருது நிகழ்வில் ‘ஜெய்பீம்’ மணிகண்டன், ‘‘நான் கமல் சாரின் மிகப்பெரிய விசிறி. அந்த இடத்தை லோகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்டதால் லோகேஷ்மீது பொறாமையாக இருக்கிறது’’ என்று நகைச்சுவையாகக் கூறியதற்கு லோகேஷ் பதிலடி கொடுத்தார். விருது வாங்கியவுடன், ‘‘முதல்ல மணிகண்டனுக்கு ஒண்ணு சொல்லிக்கறேன். ஒரு மணிகண்டன் இல்ல, பத்து மணிகண்டன் வந்தாலும் அந்த இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றவர், ‘‘டைரக்டருக்கான விருதுகள் நிறைய வாங்கியிருக்கேன்.. விகடன் எப்போதும் தனித்துவமானது. எனக்கு Best entertainer விருது கொடுத்ததை என்னால் மறக்க முடியாது. இன்னும் சாதிக்கத் தூண்டுகிறது இந்த விருது” என்று சொல்லி மகிழ்ந்தார் லோகேஷ்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகர் விருதினை ‘லவ் டுடே’ திரைப்படத்துக்காக யோகிபாபு, லோகேஷ் கனகராஜிடம் பெற்றுக்கொண்டார். அவருடன் Yasko Shirts நிர்வாக இயக்குநர் N.N.கணேசன் மற்றும் செயல் இயக்குநர் விவேகானந்த் கணேசன் ஆகியோர் இருந்தனர். கலகலப்பாகப் பேசி அரங்கை அதிரவைத்த யோகிபாபு, ‘டாக்டர்’ இயக்குநர் நெல்சன், ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின் ஆகியோரையும் மேடைக்கு அழைத்தார். நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி குணச்சித்திர நடிகராகவும், கதை நாயகனாகவும் தன் எல்லைகளை விரிவடையச் செய்திருக்கும் யோகிபாபுவை மேடையில் கௌரவிக்கும் வகையில் ராணுவ வீரர் கெட்டப்பில் யோகிபாபுவின் ஓவியம் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. ‘‘ராணுவத்துல சேரணும் என்பது என் கனவா இருந்துச்சு. அதைக் காட்சியா கொண்டுவந்திருக்கிற இந்த ஓவியம் சிறப்பா இருக்கு. ரொம்ப நன்றி. இப்ப ஆர்மி மேனா ஒரு படத்துல நடிச்சிட்டிருக்கேன். அதுவும் காமெடிப் படம்தான்!” என்றார் யோகிபாபு.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022

2022-ம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் விருதினை ‘டாணாக்காரன்’ திரைப்படத்துக்காக லால், இயக்குநர் லிங்குசாமியிடம் பெற்றுக்கொண்டார். “மலையாளத்தில் பல விருதுகள் வாங்கியிருக்கிறேன். ஆனால் தமிழில் கிடைத்த முதல் விருது இது. கத்திரி வெயில், மரங்கள் இல்லாத இடம் என்று ஷூட்டிங் கடும் நெருக்கடியாக இருந்தது. இப்படத்தின் இயக்குநர் தமிழை ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களில் வில்லனாகப் பார்த்தபிறகு, இந்தக் கதாபாத்திரத்தை இவரே செய்திருக்கலாமே என்று தோன்றியது. பிறகுதான் அவரது உயரதிகாரியுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் போலீஸ் வேலையை விட்டு வந்தவர் என்று தெரிந்துகொண்டேன். அந்த அதிகாரியாக என்னை நினைத்து வாட்டி வதைக்கிறார் எனத் தோன்றியது!” என்று சொல்ல, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

லிங்குசாமி ‘சண்டக்கோழி’ திரைப்படத்தில் வந்த, ‘பத்து ரூபா இருந்தா தாண்ணே’ என்ற வசனத்தையும், ‘ஏலே மஞ்சனத்தி புருஷா, பத்து ரூபா போதுமா’ என்ற வசனத்தையும் தொடர்புபடுத்தி ‘சண்டக்கோழி படத்தில் லாலுடன் ஏற்பட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகர் விருதினை ‘கார்கி’ படத்திற்காகக் காளி வெங்கட், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் சத்யா மொபைல்ஸ் இயக்குநர் ரோஷன் இருந்தார். ‘‘நான் ‘முண்டாசுப்பட்டி’யிலிருந்து விகடன் விருதுக்குக் காத்துட்டு இருந்தேன்... இப்பதான் நடந்திருக்கு. ‘கார்கி’ இயக்குநர் கௌதமுக்கு நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன்... லவ் யூ கௌதம்” என்று சொன்ன காளி வெங்கட், ‘‘சமீபத்துல ஃப்ளைட்டைப் புடிக்க லேட்டா போயிட்டேன். அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அங்கே ஒரு மொழி தெரியாத நபர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சாரு. ‘கார்கி’ படத்தைப் பத்திச் சொல்லி என்னை ஃப்ளைட்ல உட்கார வெச்சார். அந்த அளவுக்கு இந்தப் படம் மக்கள்கிட்ட போயிருக்கு” என்றார். அவரை வாழ்த்தி மகிழ்ந்தார் எஸ்.பி.முத்துராமன்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகை விருதினை ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்காக கீதா கைலாசம், கலை இயக்குநர் தோட்டாதரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் சத்யா ஏஜென்சீஸ் இயக்குநர் ஜாக்சன் இருந்தார். “20 வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது 40 வயது ஆகிவிட்டது. இப்போதுதான் எனது முதல் விருதினை வென்றிருக்கிறேன். இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு நன்றி. படப்பிடிப்பில் மூன்று நாள்கள் தாண்டியதும் அந்தக் கதாபாத்திரம் என்னோடு இயல்பாக ஒட்டிக்கொண்டது’’ என்றார் கீதா. மேலும் அப்படத்தின் ஒரு வசனத்தைத் தொகுப்பாளர்களிடம் பேசிக் காட்ட, கலகலப்பானது அரங்கம்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக இயக்குநர் விருதினை ‘டாணாக்காரன்’ திரைப்படத்துக்காக இயக்குநர் தமிழ், வெற்றிமாறனிடம் பெற்றுக்கொண்டார். “இந்த விருது வாங்கக் காரணமே வெற்றிமாறன் சார்தான். அவர் கையால் விருது கிடைச்சது பெருமை. காவல்துறை வேலையை விட்டுட்டு சுமார் பத்து வருடம் இந்தக் கதையைத் தூக்கிச் சுமந்துள்ளேன். இந்தக் கதையை நம்பிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுக்கும் விருது வழங்கிய விகடனுக்கும் நன்றி!” என்றார் தமிழ். ‘‘என் ‘விசாரணை’, `வடசென்னை’, `விடுதலை’ திரைப்படங்களில் வரும் காவல்துறையினர் தொடர்பான நுணுக்கமான காட்சியமைப்புக்குத் தமிழ்தான் காரணம். மிகப்பெரிய இடங்களைத் தமிழ் அடைவார்” என்று தன் சிஷ்யனை சிலாகித்தார் வெற்றிமாறன்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகர் விருதினை ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்துக்காக கிஷன் தாஸ், ஆர்.ஜே.பாலாஜியிடம் பெற்றுக்கொண்டார். அவருடன் Cureka.com நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹேமா சதீஷ், இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் சதீஷ் தேவதாஸ் ஆகியோர் இருந்தனர். ‘‘இந்தப் படத்துக்காக நாலு வருஷம் ட்ராவல் பண்ணியிருக்கேன். என்னை அங்கீகரித்த ஆனந்த விகடனுக்கு நன்றி” என்றார் கிஷன் தாஸ். தனது படத்தில் இடம்பெற்ற 96 batch நண்பர்களுக்கும், படத்தின் இயக்குநர் தர்புகா சிவாவுக்கும் அவர் நன்றி கூறினார்.

“கிஷன் சிங்கிள் பேரன்ட் வளர்ப்பு. நேர்மையும் உறுதியும் கொண்டு வென்றிருக்கிறார். இன்னும் பல சிகரங்கள் காத்திருக்குடா பையா!” என்று ஆர்.ஜே.பாலாஜி வாஞ்சையோடு கூறும்போது, பெருமிதக் கண்ணீருடன் கிஷன் தாஸின் அம்மா, நடிகை பிருந்தா தாஸ், தன் மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகை விருதினை ‘விருமன்’ திரைப்படத்துக்காக அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனிடம் பெற்றுக்கொண்டார். அவருடன்

ஆர்.கே.ஜி நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்த் இருந்தார். “நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னை இந்த இடத்துக்குக் கொண்டுவரக் காரணமா இருந்த அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நன்றி. நம்பிக்கையோடு வாய்ப்பளித்த இயக்குநர் முத்தையா அவர்களுக்கு நன்றி!” என்றார்.

தொகுப்பாளர்கள், “உங்கள் மகள் விருது பெற்றுள்ளார்... இனி ஷங்கரின் மகள் அதிதி என்பதைத் தாண்டி அதிதியின் அப்பா ஷங்கர் என்னும் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “அதிதி பெரிய திறமைசாலி. படம் நடிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், ‘நீ நீயா இரு’ என்ற அறிவுரையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை” என்றார் பாசக்கார அப்பா ஷங்கர்.

“அதிதி பெரிய இயக்குநரின் மகள் என்றெல்லாம் இருக்க மாட்டார். மிக இயல்பாகப் பழகக்கூடியவர். என்னுடைய ‘டான்’ படத்தில் முதலில் அதிதி நடிப்பதாக இருந்தது. இப்போது ‘மாவீர’னில் சேர்ந்து நடிக்கிறோம். இவருடைய எனர்ஜி பிரமிப்பாக உள்ளது. அடுத்த ஆண்டு சிறந்த எண்டர்டெய்னர் விருது வாங்குவார்” என்றார் சிவகார்த்திகேயன்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022

2022-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை ஹியா தவே ‘நானே வருவேன்’ திரைப்படத்துக்காக நடிகர் விமலிடம் பெற்றுக்கொண்டார். “இது எனது முதல் விருது. வழங்கிய விகடனுக்கு நன்றி” என்று கூறினார். பின்னர் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடிக்காட்டினார்.

“குழந்தை நட்சத்திரம்லாம் டக்கு டக்குனு வளர்ந்திடுறாங்கப்பா!” என்று ஹியாவைப் பார்த்து தன் ஆச்சர்யத்தைப் பதிவு செய்தார் விமல்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்துக்காக ரவி வர்மன், அவருடைய குருநாதரான ரவி கே.சந்திரனிடம் பெற்றுக்கொண்டார். ‘‘சென்னைக்கு 1987-ம் ஆண்டு வந்து ஐந்தாண்டுப் போராட்டத்திற்குப் பிறகே எனக்கான வழியைக் கண்டடைந்தேன். பாலுமகேந்திராவிற்குப் பிறகு ரவி கே.சந்திரனிடம் உதவியாளராக சேர்ந்தேன். இந்த இருபது வருட பயணத்தில் எனக்கும் ரவி கே.சந்திரனுக்குமான உறவு தந்தை - மகனைப் போன்றது. என் முதல் விமானப் பயணம் அவருடன் சாத்தியமானது. அப்போது என்னை ஜன்னலோர இருக்கையில் அமரவைத்து மகிழ்வித்தார்” என்று நெகிழ்ந்தார் ரவி வர்மன். பதிலுக்கு ரவி கே.சந்திரன், ‘‘இன்று இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் உருவாகியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்றார்.

2022-ம் ஆண்டின் சிறந்த படத் தொகுப்புக்கான விருதினை, ‘லவ் டுடே’ படத்துக்காக பிரதீப் இ.ராகவ், தயாரிப்பாளர் தனஞ்செயனிடமிருந்து பெற்றுக்கொண்டார். “விருது எப்போதும் கலைப் படங்களுக்குத்தான் கிடைக்கும். ஆனால் ‘லவ் டுடே’ மாதிரி ஒரு பக்கா என்டர்டெய்ன்மென்ட் படத்துக்குக் கொடுத்ததுக்கு விகடனுக்கு நன்றி. ‘கதகளி’யில் தொடங்கிய என்னோட 6 வருட சினிமா வாழ்க்கைல முதல் விருது இது” என்றார் பிரதீப் இ.ராகவ் உற்சாகமாக. “பிரதீப் ரங்கநாதனின் கதை சொல்லும் விதமே இந்த விருதுக்குக் காரணம்” என்றவர், படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த கலை இயக்குநருக்கான விருதினை ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்துக்காகத் தோட்டா தரணி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடன் மார்க் மெட்ரோ இயக்குநர் இளங்கோ குமணன் இருந்தார். “நான் செய்த கலைக்கு இவ்விருது திருப்தி செய்துள்ளது. மணிரத்னத்துக்கும் என் ஊழியர்களுக்கும் நன்றி” என்றவர், விகடனுக்கும் நன்றி கூறினார். எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, “தந்தை தோட்டா, அவரின் மகன் தரணி ஆகியோரைத் தொடர்ந்து தரணியின் மகளான ரோகிணியும் இத்துறையில் சாதிப்பார். கலைஞன் மேலும் ஓடுவதற்கான டானிக்தான் விருது. அதை விகடன் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது” என்று பாராட்டினார்.

2022-ம் ஆண்டின் சிறந்த கதைக்கான விருதினை ‘விட்னஸ்’ திரைப்படத்துக்காக தீபக், முத்துவேல் இருவரும் ரோகிணியிடம் பெற்றுக்கொண்டனர். “விகடன் அங்கீகாரம் பெருமகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தருகிறது. கதைக்கருவிற்கு நேர்மையும், அர்ப்பணிப்பும் செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். 2017-ல் தோன்றிய சிறிய கதைக்கரு இப்போது பெரிய இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” என்றார் தீபக்

“ஒரு படைப்பு, உரையாடலை நிகழ்த்த வேண்டும். அதை ‘விட்னஸ்’ நிகழ்த்தியுள்ளது. பொதுவாக ஒடுக்கப்படுபவர்களின் வலிகளைக் காட்ட அதீத சோகத்தைக் காட்டியிருப்பார்கள். நான் மௌனத்தைத்தான் காட்ட விரும்பினேன்’’ என்றார் முத்துவேல். அந்த மௌனம் விருதாக மாறி, கைத்தட்டல் சத்தத்தை ஏற்படுத்தியது.

2022-ம் ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான விருதினை ‘கார்கி’ திரைப்படத்துக்காக ஹரிஹரன் ராஜு, கெளதம் ராமச்சந்திரன் ஆகியோர் விக்ரம் பிரபுவிடம் பெற்றுக்கொண்டனர். இருவரும் சிறுவயதில் இருந்தே ஆனந்த விகடன் வாசகர்கள் என்பதை மேடையில் பதிவு செய்ததோடு, “பாரம்பர்யமிக்க விகடன் நிறுவனத்தில் விருது வாங்குவது மகிழ்ச்சி” என்றனர். விக்ரம் பிரபு, “எனது ‘டாணாக்காரன்’ திரைப்படம் விகடன் விருது வாங்கியது பெரும் மகிழ்ச்சி” என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022

2022-ம் ஆண்டின் சிறந்த வசனத்துக்கான விருதினை ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்துக்காகத் தமிழரசன் பச்சமுத்து, இயக்குநர் லிங்குசாமியிடம் பெற்றுக்கொண்டார். ‘‘நான் முதன்முதலில் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று ரெஸ்யூம் எடுத்துச் சென்றது லிங்குசாமி சார் ஆபிஸுக்குத்தான். ‘தம்பி மேல ஒண்ணும் கை வச்சிரலையே’ என்ற சண்டக்கோழி படத்தின் ஒற்றை வசனத்தில் திரையரங்கையே அதிர வைத்தவர். அவர் கையில் விருது வாங்குவது மகிழ்ச்சி. ‘நெஞ்சுக்கு நீதி’யில் வசனம் எழுதுவது சிரமமாக இல்லை. நான் பார்த்து, எனக்கு வலிச்ச, இன்னும் நடந்திட்டிருக்கும் விஷயத்தைத்தான் எழுதியிருக்கேன். எனக்கு இந்தப் பெரிய வாய்ப்பைத் தந்த அருண்ராஜாவுக்கு நன்றி” என்ற தமிழரசன் பச்சமுத்து, படத்தின் ஒரு வசனத்தை இரவெல்லாம் சிலாகித்துப் பேசிய, மறைந்த நடிகர் மயில்சாமிக்கு விருதினை சமர்ப்பித்தார்.

2022-ம் ஆண்டின் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதினை ‘வலிமை’ திரைப்படத்துக்காக திலீப் சுப்பராயன், நடிகர் நரேனிடம் பெற்றுக்கொண்டார். திலீப் சுப்பராயன், “இது எனது நான்காவது விகடன் விருது. இதுக்கு முன்னாடி ‘தெறி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களுக்காக விருது வாங்கியிருக்கேன். அஜித் சாருக்கு நன்றி. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த விருதை என்னோட ஃபைட்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!” என்றார்.

160-170 கிலோமீட்டர் அதிவேகமாகச் செல்லும் பைக் காட்சிகளுக்கு அதிநவீன rig கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அரை கிலோமீட்டருக்கு முன்னமே கேமராவை வைத்து ஷூட் செய்ததாகவும் ஸ்டன்ட் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நரேனிடம், ‘லோகேஷ் கனகராஜின் LCU’ பற்றி தொகுப்பாளர்கள் அப்டேட் கேட்க, ‘‘கைதி 2-ல் நான் இருக்கலாம்’’ என்று அப்டேட் கொடுத்தார்.

2022-ம் ஆண்டின் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதினை ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக நடன இயக்குநர் ஜானி, நடிகர் வினய்யிடம் பெற்றுக்கொண்டார்.

மேடையேறிய ஜானி மாஸ்டர், “மூன்று விஷயங்கள் இன்று எனக்கு ஸ்பெஷல். ஒன்று விருது பெறுவது. அடுத்து எனது திருமண நாள், மற்றொன்று, இன்று என் குழந்தையின் பிறந்த நாள்’’ என்று சொன்னதோடு குழந்தையையும் மனைவியையும் மேடையேற்றினார். மனைவியிடம், “ஆயிஷா, ஐ லவ் யூ” என்று சொல்ல “ஐ லவ் யூ சோ மச்” என்று அவர் சொல்ல க்யூட்டான மொமண்ட் ஆனது. பின்னர் அரங்கம் பர்பிள் இதய வண்ணத்தில் மாற, ‘மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு இருவரும் பறவை போல நடன அசைவுகள் கொடுத்து, காதல் வானில் சிறகடித்துப் பறந்து நெகிழ வைத்தார்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022

2022-ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருதினை ‘குலுகுலு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அன்பரே’ மற்றும் `கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் ‘சண்ட வீரச்சி’ பாடல்களுக்காகப் பாடலாசிரியர் விவேக், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பெற்றுக்கொண்டார்.

“இந்த வருடம் பல கமர்ஷியல் ஹிட்டடித்த பாடல்களை எழுதியுள்ளேன். ஆனால் இப்பாடல்களுக்கு விருது கிடைத்தது பெருமகிழ்ச்சியாக உள்ளது. நா.முத்துக்குமார் அவர்களுக்கு ‘அழகு அழகு’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்த பிறகே அப்பாடலைக் கேட்டேன். அன்பை வாரித் தெளித்திருப்பார். அதுபோல எழுதவே ஆசை” என்ற விவேக், விருதினை தன் குரு சந்தோஷ் நாராயணனுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

“எல்லோரும் எப்பவும் ஜெயிக்கணும்னு அவசியம் இல்லன்னு ‘சென்னை-28’ கடைசிக் காட்சில காட்டியிருப்பாரு வெங்கட்பிரபு சார். ‘இந்த உலகம் இப்படித்தான் ஏமாத்தும்டா’ன்னு ‘மங்காத்தா’ல காட்டியிருப்பாரு. ஜாலியான இயக்குநர் என்பதைத் தாண்டி இவரைத் தத்துவம் பேசுற இயக்குநராதான் பார்க்கிறேன். அவர்கிட்ட இருந்து விருது வாங்கியது மகிழ்ச்சி” என்றார் விவேக்.

2022-ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகி விருதினை ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடலுக்காக மதுஸ்ரீ, கவிஞர் தாமரையிடம் பெற்றுக்கொண்டார். துள்ளலான நடன அசைவோடு மேடையேறிய மதுஸ்ரீ, “தமிழ்நாடு எனது நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது. உங்கள் அன்பிற்கு நன்றி” என்றார். கவிஞர் தாமரை இந்தப் பாடல் உருவான விதத்தை விவரித்தார். மூன்று நள்ளிரவுகளில், மொத்தம் நான்கு மாதங்கள் இழைத்து இழைத்து ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்ட பின்னணிக் கதையை தாமரை சொல்லச் சொல்ல, மதுஸ்ரீ புன்னகையோடு அதை ஆமோதித்தார். பின்னர் உணர்ச்சி பொங்க ‘மல்லிப்பூ’ பாடலைப் பாடினார். மொழி தெரியாவிட்டாலும் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை மதுஸ்ரீ எவ்வாறு உள்வாங்கியுள்ளார் என்பதை பனித்த அவருடைய கண்கள் பேசின.

2022-ம் ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதினை ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்துக்காக ஏகா லக்கானி, அனுவர்தனிடம் பெற்றுக்கொண்டார். ஆடை வடிவமைத்ததில் நந்தினி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றார் ஏகா. “நிறைய சவால்களுடன் நிறைய சுதந்திரமும் இருந்தது. மனதை உற்சாகத்தோடு வைத்துக்கொண்டு செய்யும் எந்த வேலையும் தோல்வியடையாது. உழைப்பின் பலனைத் திரையில் பார்க்கும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விட்டன!” என்றார் ஏகா லக்கானி.

2022-ம் ஆண்டின் சிறந்த ஒப்பனைக்கான விருதினை ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்துக்காக விக்ரம் கெய்க்வாட், ரம்யா பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளியான அவர், கைகளால் ஜாலம் செய்யும் வித்தைக்காரர். “இந்த வாய்ப்பை வழங்கிய மணிரத்னம் சாருக்கு நன்றிகள். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய படக்குழுவினர் அனைவருக்கும், விருது வழங்கிய விகடனுக்கும் நன்றிகள்!” என்று சொன்னார். அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர். “விகடன் விருதுகள் பட்டியலில் இடம்பிடித்த அனைவரும் பெஸ்ட்டிலும் பெஸ்ட். இதுதான் விகடனின் சிறப்பு” என்றார் ரம்யா பாண்டியன்.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் - விஷுவல் எபெக்ட்ஸுக்கான விருதினை ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்துக்காக NY VFXWAALA நிறுவனத்தின் சஞ்சீவ் ஆனந்த் நாயக், புகழ்பெற்ற அனிமேஷன் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகனிடம் பெற்றுக்கொண்டார். “தென்னிந்திய நட்சத்திரப் பட்டாளத்துடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மணிரத்னம் மற்றும் கடவுளின் அருளால் இவ்விருது கிடைத்துள்ளது. தியேட்டர்களில் மக்கள் கொண்டாடியது மேலும் மகிழ்ச்சியை அள்ளித் தந்திருக்கிறது. கடுமையாக உழைத்த எங்கள் நிறுவன ஊழியர்கள் சார்பாக விகடனுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி” என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022

2022-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான விருதினை ‘லவ் டுடே’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் சசியிடம் பெற்றுக்கொண்டார். அர்ச்சனா, “எல்லாத் தயாரிப்பாளர்கள் போலவே எங்களுக்கும் ப்ளாக்பஸ்டர் கனவு உண்டு. அதை ‘லவ் டுடே’ செய்து காட்டியிருக்கிறது” என்றார். ‘‘பிரதீப் ரங்கநாதன்தான் கதையின் நாயகன் என்றபோது பல நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார், எப்படி நீங்கள் தேர்வு செய்தீர்கள்?’’ என்ற கேள்வி அர்ச்சனாவிடம் கேட்கப்பட்டது. “ஸ்கிரிப்ட்டின் மீது இருக்கும் நம்பிக்கைதான் அதற்குக் காரணம்!” என்று சொன்னார் அவர். “படைப்பாளிக்கு சுதந்திரம் தரும் தயாரிப்பாளராக நீங்கள் தொடர வாழ்த்துகள்!” என்றார் சசி.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த வெப்சீரிஸ் விருதினை ‘விலங்கு’ வெப் சீரிஸுக்காக இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், நடிகர் விமல், ரவி, பாலசரவணன் மற்றும் படக்குழுவினர் மொத்தமாக மேடையேறி இயக்குநர் எழிலிடம் பெற்றுக் கொண்டனர். பிரசாந்த் பாண்டிராஜ், “என்னுடைய முதல் படத்துக்கு விகடன் மதிப்பெண் எவ்ளோன்னு காத்துட்டு இருந்தேன். ஆனா என் படத்துக்கு விமர்சனம் கூட வரல. கம்மியான மார்க் வந்திருந்தாகூட பரவால்ல. கவனிக்கவே படலங்கிறது வருத்தமா இருந்துச்சு. ரொம்பப் பிடிச்ச ஒரு ஆசிரியர் நம்மளைக் கண்டுக்காத மாதிரியான உணர்வு. ஆனா இப்ப விருதே வாங்கியாச்சு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. விகடனுக்கு நன்றி” என்றார்.

“விமல்னு ஒரு நடிகன் இருக்கான்னே பலர் மறந்துட்டாங்க ‘விலங்கு’தான் அதை மாத்தியிருக்கு. பொறுப்பைக் கூட்டிய விகடனுக்கு நன்றி” என்றார் விமல். பாலசரவணன், ‘‘இதுநாள் வரையும் என்னை எல்லோருக்கும் காமெடியனாதான் தெரியும். ஆனா விலங்கு என்னை நடிகனா அடையாளம் காட்டியிருக்கு” என்று கூறினார்.

2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது, ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்துக்கு. இயக்குநர் பா.இரஞ்சித்தின் சார்பில், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘குதிரைவால்’ திரைப்பட இயக்குநர் மனோஜ் லியோனல் ஜேசன் பெற்றுக்கொண்டார். அவருக்கு விருதினை தயாரிப்பாளர் தனஞ்செயன் வழங்கினார். ‘‘தங்கலான் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கோலார் தங்கவயலில் தொடர்ந்து நடைபெறுவதால் பா.இரஞ்சித்தால் வர இயலவில்லை” என்று கூறினார் மனோஜ் லியோனல் ஜேசன்.

இவ்வாறாக, கலைநிகழ்ச்சிகளும் மகிழ் தருணங்களுமாய் மனதை நிறைத்து, இனிதே நிறைவுபெற்றது ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022 எனும் மகத்தான நிகழ்வு.