சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர் - “ரொமான்ஸ்தான் கஷ்டம்!”

வினோத் பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
வினோத் பாபு

ஆங்கரிங்கைத் தாண்டி ஆக்டர் என்பதுதான் என் கனவு என்பதால் அடுத்தடுத்து நடிப்பில் முயற்சி பண்ணணும் என்கிற எண்ணம் இருந்துச்சு

'எங்கே போனாலும் ‘வெற்றி’ன்னு என்னோட சீரியல் கதாபாத்திரத்தின் பெயர் சொல்லிக் கூப்பிடுறாங்க. அந்த அன்புக்காகத்தானே இத்தனை போராட்டம்!’’ எனச் சிலாகித்துப் பேசத் தொடங்கினார் வினோத் பாபு. ஆங்கராக மீடியா துறைக்குள் என்ட்ரியானவர் தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ தொடரில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

‘‘சொந்த ஊர் திருச்சி. காலேஜ் படிக்கும்போது டான்சராக இருந்தேன். அப்பவே சிவகார்த்திகேயன் அண்ணன் நல்ல பழக்கம். என் பாட்டையெல்லாம் ரசிச்சுக் கேட்டுப் பாராட்டியிருக்கார். அவரும் எங்க ஊருங்கிறதனால அவர்தான் என்னோட இன்ஸ்பிரேஷன்! சின்ன வயசில இருந்தே நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. எம்.பி.ஏ படிச்சேன். படிச்சி முடிச்சதும் மூன்று வருடம் தனியார் கம்பெனியில் வேலைக்குப் போய்ட்டு இருந்தேன். அப்பவே மிமிக்ரி பண்றது, பாட்டு பாடுறதுன்னு எல்லாமே பண்ணுவேன். அதனால, வேலைக்குப் போய்ட்டே ஈவன்ட்டிற்கும் போக ஆரம்பிச்சேன். சூப்பர் சிங்கர் ஆடிஷனெல்லாம் ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி முயற்சி பண்ணியிருக்கேன்.

ஆங்கர் to ஆக்டர் - “ரொமான்ஸ்தான் கஷ்டம்!”
ஆங்கர் to ஆக்டர் - “ரொமான்ஸ்தான் கஷ்டம்!”

‘டாடி எனக்கு ஒரு டவுட்டு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான திண்டுக்கல் சரவணன் அண்ணனுடன் ஒரு ஈவன்ட்டில் கலந்துகிட்டேன். அந்த நிகழ்ச்சியில் விடிய விடிய பாட்டு பாடிட்டு இருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு அவர் ஆதித்யாவில் ஆங்கரிங் வாய்ப்பு இருக்குன்னு ஆடிஷனில் கலந்துக்கச் சொன்னார். கிட்டத்தட்ட மூணு மாசம் அதுக்காக ஒர்க் பண்ணிட்டு, கன்டென்ட் எல்லாம் ரெடி பண்ணிட்டுப் போனேன். நான்கு கட்ட ஆடிஷன் முடிச்சு என்னை செலக்ட் பண்ணுனாங்க. ஆறு மாத உழைப்பிற்குப் பிறகு ஆதித்யா டி.வி-யில், ‘காமெடிக்கு நாங்க கேரண்டி’, ‘கோலிவுட் சம்பிரதாயம்’ போன்ற நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சேன். ‘கோலிவுட் சம்பிரதாயம்’ நிகழ்ச்சியில் நானே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஆங்கரிங்கும் பண்ணினேன். அந்த நிகழ்ச்சி மூலமா பலருக்கும் என் முகம் பரிச்சயமாச்சு.

ஆங்கரிங்கைத் தாண்டி ஆக்டர் என்பதுதான் என் கனவு என்பதால் அடுத்தடுத்து நடிப்பில் முயற்சி பண்ணணும் என்கிற எண்ணம் இருந்துச்சு. ‘கலர்ஸ்’ தமிழில் ஒரு சீரியலுக்காக ஆடிஷன் நடந்துச்சு. அதே புரொடக்‌ஷன் ஹவுஸில் ஏற்கெனவே எனக்கு அறிமுகம் இருந்ததனால அவங்க `நீங்கதான் லீடு ரோலில் நடிக்கிறீங்க’ன்னு சொன்னாங்க. ‘சிவகாமி’ என்கிற சீரியலில் ஹீரோவா நடிச்சேன். ஆனா, வரலை!

ஆங்கர் to ஆக்டர் - “ரொமான்ஸ்தான் கஷ்டம்!”
ஆங்கர் to ஆக்டர் - “ரொமான்ஸ்தான் கஷ்டம்!”

மறுபடி ஜீரோவிலிருந்து கரியரை ஆரம்பிச்சேன். ‘கலக்கப்போவது யாரு’வில் நானே தேடி, ஜோடி சேர்ந்து ‘கலக்கப்போவது யாரு சீசன் 8’-ல் போட்டியாளரா கலந்துகிட்டு ஃபைனல் வரைக்கும் வந்தேன். பிறகு, விஜய் டி.வி-யில் ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ என்கிற தொடருக்கான ஆடிஷனில் கலந்துக்கிட்டு செலக்ட் ஆனேன். அந்த சீரியலில் இயக்குநர் அப்துல் கபீஸ் சார் என்னை பர்ஃபாமரா எல்லாருக்கும் தெரிய வச்சார். பிறகு, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. இந்தத் தொடருக்கும் அப்துல் சார்தான் இயக்குநர் என்பதால் அவர் முதலிலேயே என்ன மாதிரி கேரக்டர் இருக்கணும்னு என்கிட்ட சொல்லிட்டார். இந்தத் தொடரில் வில்லன் கதாபாத்திரம் என்பதால் அதற்கேற்ற உடல்மொழி தேவைப்பட்டது. எல்லாமே ஒர்க்அவுட் பண்ணி அந்த கேரக்டருக்கு என்னைத் தயார்படுத்தினேன். ஆக்‌ஷன் சீன் எல்லாம் செமையா நடிச்சிடுவேன். எனக்குக் கஷ்டமான சீன் என்றால் அது ரொமான்ஸ் காட்சிகள்தான்! எதிரில் ஆளே இல்லாம சில நேரங்களில் ரொமான்ஸ் பண்ண வேண்டியிருக்கும், அல்லது, சுற்றி பல பேர் முன்னாடி அப்படியான காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். ரெண்டுமே பல நேரங்களில் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கு.

நடிப்பில், ‘கன்னிமாடம்’ பட இயக்குநர் போஸ் வெங்கட் அண்ணன்கிட்ட இருந்து கிடைச்ச பாராட்டு ஸ்பெஷலா இருந்துச்சு. இன்னொரு சீரியல் சீனியர் நடிகரிடமிருந்து அவ்வளவு சுலபமா பாராட்டு வாங்கிட முடியாதுன்னு நினைக்கிறேன். இயக்குநர் பிரவீன் பென்னட் என்னோட நடிப்பைப் பார்த்துட்டு இந்தப் பையன் நல்லா நடிக்கிறான்னு என் டைரக்டர்கிட்ட பாராட்டிச் சொல்லியிருக்கார்.

‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறதா இருந்துச்சு... சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைவிட்டுப் போயிடுச்சு. என்னுடைய யூடியூப் பக்கத்தில் ஷார்ட் பிலிம், ஆல்பம் சாங்ஸ், டெலி பிலிம் எல்லாம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கேன். சீக்கிரமே என்னை வெள்ளித்திரையில் பார்ப்பீங்க!’’ எனப் புன்னகைக்கிறார் வினோத்பாபு.