கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்! - “எனக்கு ஹீரோ ஆசை இல்லை!”

வி.ஜே விகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.ஜே விகாஷ்

ஆங்கரிங்கில் இருந்துட்டு நடிக்க வந்ததும் எனக்கு அந்தச் சூழல் புரியலை. எல்லாப் பெரிய மனிதர்களும் என்னைச் சுற்றி இருந்தாங்க. காலையிலிருந்து என் சீன் எப்ப வரும்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன்

விஜய் டி.வி-யில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் சிடுமூஞ்சியாக இருக்கும் வி.ஜே விகாஷ், நிஜத்தில் சிரித்த முகத்தோடு செம கலகல பார்ட்டி. ராஜ் டி.வி-யில் ஆங்கராகத் தன் பயணத்தை ஆரம்பித்தவர் தொடர்ந்து சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

``ஆங்கரான கதையைச் சொல்லுங்களேன்..?’’

“படிப்பு முடிஞ்சதும் மீடியாவுக்குள்ளேதான் போகப் போறேன்னு சொன்னதும் எந்தத் தடையும் சொல்லாம என் ஃபேமிலியில் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. ராஜ் டி.வி-யில் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கருக்கான ஆடிஷன் நடந்துச்சு. 57 பேர் கலந்துகிட்ட ஆடிஷனில் 57வது ஆளா ஆடிஷனுக்குப் போனேன். அங்கே ரெண்டு நிமிஷம் பேசச் சொன்னாங்க. ரிசல்ட் வந்தப்ப அந்த 57 பேரில் நான் ஒருத்தன்தான் செலக்ட் ஆகியிருந்தேன். அப்படித்தான் வி.ஜே விகாஷாக மாறினேன்.”

ஆங்கர் to ஆக்டர்! - “எனக்கு ஹீரோ ஆசை இல்லை!”

``சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது..?’’

“விஜய் டி.வி-யில் ஆங்கரிங் வாய்ப்பு கேட்டுதான் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு `நீ நடிக்க வந்திடு... நாளையிலிருந்து உனக்கு ஷூட்’னு சொல்லி அனுப்பிட்டாங்க. அப்படிக் கிடைச்ச வாய்ப்புதான் ‘நீலி.’ அந்தத் தொடரில் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சேன். அந்தத் தொடர் எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. மக்கள் மத்தியில் அதுவரை ஆங்கராகப் பரிச்சயமாகியிருந்த நான், நடிகனா தெரிய ஆரம்பிச்சேன். அந்தத் தொடருக்காக விஜய் அவார்ட்ஸில் ‘சிறந்த வில்லன்’ என்கிற பிரிவில் விருதும் கிடைச்சது.

ஆங்கரிங்கில் இருந்துட்டு நடிக்க வந்ததும் எனக்கு அந்தச் சூழல் புரியலை. எல்லாப் பெரிய மனிதர்களும் என்னைச் சுற்றி இருந்தாங்க. காலையிலிருந்து என் சீன் எப்ப வரும்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன். அவங்க சொல்ற சீனை எனக்கு நடிக்கவே தெரியல. எல்லார் முன்னாடியும் திட்டினாங்க. மறுபடி மறுபடி சொதப்பிட்டே இருந்தேன். சீரியலில் ஃபர்ஸ்ட் ஷாட்னு சொல்லுவாங்க. அப்படி ஃபர்ஸ்ட் ஷாட்டில் ஓகே பண்ண எனக்கு ஆறு மாசம் ஆச்சு. அப்ப என் நண்பர் ஒருத்தர், ‘உனக்கு வராதுன்னு இல்ல, தெரியாது... தெரிஞ்சுகிட்டு நடி’ன்னு சொன்னார். அவமானங்களையெல்லாம் பெருசா எடுத்துக்காம அவர் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு, கத்துக்கிட்டு பர்ஃபாம் பண்ண ஆரம்பிச்சேன். திட்டுனவங்களே அப்புறம் என்னைப் பாராட்ட ஆரம்பிச்சாங்க.”

``சீரியலில் ஹீரோவா நடிக்க விருப்பம் இல்லைன்னு சொன்னீங்களாமே?’’

“இப்போதைக்கு ஹீரோவா நடிக்க எனக்கு ஆசை இல்லை. ஏன்னா, ஹீரோவா நடிக்கும்போது ஒரே மாதிரிதான் நடிக்க வேண்டியிருக்கும். அதுவே, கேரக்டர் தேர்ந்தெடுத்து நடிக்கும்போது பல கோணங்களில் நம்முடைய நடிப்புத்திறமையை வெளிக்காட்ட முடியும். ஹீரோவாகத்தான் வெற்றியடைய முடியும் என்பதெல்லாம் இல்லைங்க. கதைக்கேற்ற ஹீரோவாக நடிப்பின் மூலம் வெற்றியடையணும், அவ்வளவுதான்! பாசிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு எல்லா ரோலும் பண்ணிட்டேன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் இன்னும் எந்தத் தொடரிலும் நடிக்கல. சீக்கிரம் அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு விரும்புறேன்.”

ஆங்கர் to ஆக்டர்! - “எனக்கு ஹீரோ ஆசை இல்லை!”

`` ‘நானும் சிங்கிள்தான்’ பட அனுபவம்..?’’

“சீரியலில் இருக்கும்போது சினிமாவிலும் பிடித்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிச்சிட்டிருந்தேன். என்னோட சொந்த ஊர் மதுராந்தகம். எங்க ஊரில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு’ படத்தின் நைட் ஷூட் நடந்துட்டிருந்துச்சு. அங்கே தினேஷ் இருக்காருன்னு கேள்விப்பட்டு அவரைப் பார்க்கிறதுக்காக நைட் முழுக்க வெயிட் பண்ணினேன். ஆனா, அவரைப் பார்க்க முடியல. திடீர்னு ஒரு நாள் நண்பர் கோபி போன் பண்ணி இந்தப் படம் பண்ணப் போறோம்னு சொல்லிட்டு ஹீரோ ‘அட்டக்கத்தி’ தினேஷ்னு சொன்னார். அப்பவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரை நேரில் சந்திச்சப்ப இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். இப்ப வரை அவர் எனக்கு நல்ல நண்பரா இருக்கார். நம்முடைய தேடல் உண்மையா இருந்தா கடவுள் நாம கேட்காமலே கொடுப்பார்.”

`` ‘பாக்கியலட்சுமி’ தொடர் குறித்து..?’’

“நான் சில காரணங்களுக்காக வெயிட் போட்டிருந்தேன். திடீர்னு போன் பண்ணி ‘செழியன்’ கதாபாத்தி ரத்திற்காகக் கேட்டாங்க. அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பிச்சதும் பாடி ஷேமிங் பண்ணினாங்க. ஆர்யன் மாதிரி இவர் இல்லைன்னு வெளிப்படையா கமென்ட் பண்ணினாங்க. இப்ப நானும் வெயிட் லாஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதுவரை வேறொருவரைச் செழியனா பார்த்துட்டு டக்குனு என்னைப் பார்க்குறப்ப ஆடியன்ஸுக்கு இப்படித் தோணுறது சகஜம்தானே? இப்ப கொஞ்சம் கொஞ்சமா மக்கள் என்னைச் செழியனா ஏத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க.”