
நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளவில்லை. சொந்தமாக ஒரு பாதையை உருவாக்கி, அதில் பயணிப்பதே எனக்கு மிகவும் விருப்பம்.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
``ஒன்றரை வயதில் `சோட்டா மும்பை' என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்தேன். அதுதான் நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சினிமா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு என 25 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன். தவுஸன்வாலா பட்டாசு போல படபடவெனப் பேசுகிறார் அனிகா. `விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துத் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின்.
``மலையாளத்தில் `ஓ மை டார்லிங்' படத்திலும், தெலுங்கில் `புட்டபொம்மா' படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக ஸ்கிரீனில் வரும்போது ரசிகர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. என்னைக் கதாநாயகியாக ஸ்கிரீனில் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக இருந்துவிட்டு இப்போது கதாநாயகியாக நடிக்கும்போது, என் ஆக்டிங் ஸ்டைல் மாறியுள்ளது. இரண்டு நடிப்புக்கும் பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன். குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். அதுபோல கதாநாயகியாகவும் முத்திரை பதிப்பேன் என நம்புகிறேன். சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான இடம் உண்டு. அந்த இடத்தை நாம் நிரப்பினால் மட்டும்போதும். மற்றபடி இங்கு போட்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை'' என்றவரிடம், ``நடிப்பில் உங்களுக்கு ரோல் மாடல் யார்?'' எனக் கேட்டோம்.
``நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளவில்லை. சொந்தமாக ஒரு பாதையை உருவாக்கி, அதில் பயணிப்பதே எனக்கு மிகவும் விருப்பம். மற்றபடி நஸ்ரியா, அன்னா பென், நயன்தாரா அக்கா நடிப்புகள் ரொம்பப் பிடிக்கும், வெவ்வேறு மொழிப் படங்களில் நல்ல, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ரோல்களில் நடிக்க வேண்டும் என்பதும் நீண்டநாள் ஆசை. அதுபோல, குறிப்பிட்ட ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. எனக்கு கம்பர்ட்டபிளான நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' எனும் அனிகா, மலையாளத்தில் `அஞ்சு சுந்தரிகள்' என்ற படத்தில் நடித்ததற்காக, கேரள மாநில அரசின் விருது பெற்றிருக்கிறார். அந்தப் படம்தான் அனிகாவைத் தமிழுக்கு அழைத்துவந்தது.
``மலையாளத்தில் `அஞ்சு சுந்தரிகள்' படத்தைப் பார்த்த கெளதம் மேனன் சார், என்னைத் தமிழில் நடிக்க அழைத்தார். `என்னை அறிந்தால்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். `என்னை அறிந்தால்', `விஸ்வாசம்' படங்களில் அஜித்தின் மகளாக நடித்ததால், இப்போதும் அஜித்தின் மகளாக தமிழ் ரசிகர்கள் என்னைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் ரசிகர்கள் என்னை அஜித் மகளாகவே ஞாபகம் வைத்துக்கொள்ளட்டும்'' என்கிறார்.

``அனிகா சினிமாவில் அடியெடுத்துவைத்தது எப்படி?’’
``நான் குழந்தையாக இருந்த சமயத்தில் கொச்சியில் வசித்துவந்தோம். நாங்கள் இருந்த பகுதியில் விளம்பர ஷூட்டிங்குகள் அதிகம் நடக்கும். அப்போது என் அண்ணன் அங்கிட் சுரேந்திரனுக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணன் விளம்பரத்தில் நடிப்பதைப் பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னை அம்மா அழைத்துப் போவார். அப்படிப் போனபோது என்னைப் பார்த்த இயக்குநர் ஒருவர், சின்னச்சின்ன விளம்பரங்களில் நடிக்க வைத்தார். விளம்பரத்தில் என் நடிப்பைப் பார்த்து `சோட்டா மும்பை' வாய்ப்பு வந்தது. மலையாளத்தில் மோகன்லால் மகளாகவும், தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகளாகவும், தமிழில் அஜித்தின் மகளாகவும் நடித்திருக்கிறேன். சின்ன வயதில் சினிமா ஃபீல்டு பற்றிப் பெரிதாகத் தெரியாது. நடிக்கப் போனால் ஸ்கூலை கட் அடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக அரட்டை அடித்து நேரம் போக்கலாம் என்ற சந்தோஷம் மட்டுமே இருந்தது. ஆனால் நான் சினிமாவுக்கு வந்தது பெரிய அதிர்ஷ்டம் என இப்போதுதான் எனக்குத் தெரியவருகிறது. சின்ன வயதிலேயே எனக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதற்கு கடவுளுக்கு நன்றி'' என்றவரிடம், ``படிப்பையும் சினிமாவையும் எப்படி பேலன்ஸ் பண்ணுறீங்க’’ என்று கேட்டால் சிரிக்கிறார்.
``கோழிக்கோடு தேவகிரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தேன். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும்போது படிப்பில் கவனம் செலுத்தவேண்டியது இருந்ததால், நடிப்பதில் சிரமம் இருந்தது. மற்றபடி நடிப்புக்கு பள்ளியிலிருந்து சப்போர்ட் கிடைத்தது. அதனால் எந்தச் சிரமமும் இல்லை. இந்த வருடம்தான் சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் கோர்சில் சேர்ந்துள்ளேன். நாயகியாக நடிப்பதால், ஷூட்டிங் பிசியில் இதுவரை கல்லூரிப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பள்ளியில் உடன் படித்தவர்கள் தோழியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். நான் செலிபிரிட்டி என்ற எண்ணம் அவர்களுக்குக் கொஞ்சமும் ஏற்படவில்லை. கல்லூரியிலும் அப்படித்தான் இருக்கும் என நம்புகிறேன்'' என்கிறார்.

``அனிகாவின் கிளாமர் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரல். சினிமாவிலும் அப்படித்தான் நடிப்பாரா?’’
``நான் இப்போது வளர்ந்துவிட்டேன். போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்கிறேன். அதற்கு ஆதரவும் கிடைக்கிறது, நெகட்டிவ் கமெண்டுகளும் வருகின்றன. இன்ஸ்டாகிராமில் இப்படி போட்டோ போடுவதால், அப்படித்தான் நடிப்பேன் என்று அர்த்தமில்லை. கிளாமராக நடிக்கும் ஐடியாவே இல்லை. படிப்பும் நடிப்பும் இப்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் இப்படியே தொடரவேண்டும் என ஆசை இருக்கிறது'' என்ற அனிகாவை பர்சனல் பக்கம் திருப்பினோம்.
``அம்மா ரெஜிதா, அப்பா சுரேந்திரன், அண்ணன் அங்கிட். அப்பா பிசினஸ் செய்கிறார். அண்ணன் ஐ.டி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். ஷூட்டிங் போகும்போது அம்மாதான் என்கூட வருவார்கள். வாசிப்பு எனக்குப் பிடிக்கும். அதிகமாக நாவல்கள் படிப்பேன். டான்ஸ் ஆடுவேன். நண்பர்களுடன் நேரம் செலவிடுவேன். சினிமா இண்டஸ்ட்ரியில் பெரிய நண்பர்கள் இல்லை. நெருக்கமான நண்பர்கள் சினிமாவுக்கு வெளியேதான் உள்ளனர்'' என்றவரிடம், ``எந்த மொழி சினிமாவில் நடித்தது பிடித்திருந்தது’’ என்றோம்.
``தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். தமிழில் நடித்த அனுபவம் வித்தியாசமானது. மலையாளத்தில் நடிக்கும்போது எனது சொந்த மொழி என்பதால், கம்பர்ட்டபிளிட்டி உண்டு. எல்லா மொழி சினிமாக்களிலும் இணக்கமாக நடிப்பேன். தமிழில் நல்ல ஹீரோயின் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்'' என்று எதிர்பார்ப்புடன் முடிக்கிறார்.