சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இது பெண்ணியம் பேசும் படம்!”

லாஸ்லியா, லிஜோமோல்
பிரீமியம் ஸ்டோரி
News
லாஸ்லியா, லிஜோமோல்

என் நண்பர்கள் பலர் ரெண்டு ஹீரோயின்கள் வச்சு, படங்கள் இயக்கியிருக்காங்க. அதுல இருக்கற சிக்கல்கள் பத்திச் சொல்லியிருக்காங்க

லிஜோமோல், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள `அன்னபூரணி' படத்தின் மொத்தப் படப்பிடிப்பையுமே 19 நாள்களில் நடத்தி முடித்திருக்கிறார், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா. இதற்கு முன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் ரஷ்யன் பியானோ கோர்ஸை முடித்துவிட்டு ரஹ்மானிடமே பணிபுரிந்தவர் இவர்.

“இது பெண்ணியம் பேசும் படம்!”

``எல்லோருடைய உழைப்புனாலதான் இது சாத்தியமாகியிருக்கு. முழுக்க முழுக்க சென்னையிலதான் ஷூட் பண்ணினோம். காலையில 6 மணிக்கு ஆரம்பிக்கிற ஷூட், ராத்திரி 9 மணியானாலும் விறுவிறுப்பா ஒர்க் போகும்.

நான் இயக்குநரா ஆனதற்கு எங்க அம்மாவுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிறேன். கம்யூனிசக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கேன். என் அப்பா, அம்மா ரெண்டுபேருமே கம்யூனிஸ்ட்கள். என் அப்பாவோட மறைவுக்குப் பின் என் அம்மாதான் தனியொரு மனுஷியா என்னை வளர்த்து, இயக்குநராக்கியிருக்காங்க. ஆடியோ இன்ஜினீயரிங், புனே திரைப்படக் கல்லூரியில் டைரக்‌ஷன் கோர்ஸ்னு என்னைக் காலத்துக்கேத்த சினிமாவைக் கத்துக்க வச்சாங்க.

இந்தப் படத்துக்கு வசனம் எழுதுற யுகபாரதி அண்ணன்கிட்ட இதுக்கு முன்னாடி பல கதைகள் சொல்லியிருக்கேன். அவர் திருப்தியானது இந்தக் கதையிலதான். 'பூரணி கேரக்டருக்கு லிஜோமோல் ரொம்பப் பொருத்தமா இருப்பாங்க'ன்னு அவர் சொன்ன பிறகுதான், லிஜோகிட்ட பேசினோம். அவங்க கமிட் ஆன பிறகுதான் இந்தக் கதைக்குத் தயாரிப்பாளர்கள் கிடைச்சாங்க.''

“இது பெண்ணியம் பேசும் படம்!”

``லிஜோமோல்.. லாஸ்லியான்னு ரெண்டு ஹீரோயின்கள்... இது ஹீரோயின் சென்ட்ரிக் வேற...’’

``இன்னிக்கு நிலவுற குடும்பச் சூழலையும், அதன் அரசியலையும் பேசுற படமா வந்திருக்கு. இது ஒரு த்ரில்லர் டிராமா. அனா, பூரணி எனும் இரண்டு பெண்களின் கதை இது. குடும்ப அமைப்புக்குள் இருக்கும் பூரணிக்கும், குடும்ப அமைப்பு தேவையில்லைன்னு சொல்ற அனாவுக்குமான பயணமே இந்தப் படம். `அனா'வாக லாஸ்லியா, பூரணியா லிஜோமோல் நடிக்கறாங்க. ‘குடும்பம்தான் பெண்ணைச் சிறைப்படுத்துது’ன்னு பெரியார் சொல்வார். பெரியாரின் சிந்தனைகளிலும், தோழர் கவிதா கிருஷ்ணனின் ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது தோன்றிய சிந்தனைகளிலும்தான் இந்தக் கதைக்கரு உருவாச்சு.

இந்தக் குடும்ப அமைப்பு ஒரு ஆணுக்குப் பாதுகாப்பாகவும், ஒரு பெண்ணுக்கு எதிரானதாகவும் இருக்கு. குடும்பம் என்னும் நிறுவனம் பெண்கள்மீதான வன்முறைக்களமா இருக்கு. இதையெல்லாம் மெசேஜாக இல்லாமல் கதையாவே சொல்லியிருக்கேன். `மெட்ராஸ்'ல ஜானியா நடிச்ச ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ்காந்தி, `ரைட்டர்' ஸ்டண்ட் மாஸ்டர் சுதீஷ்னு கதைக்கான ஆட்கள் இருக்காங்க.

“இது பெண்ணியம் பேசும் படம்!”

ஒரு நல்ல கதை அதுக்கான விஷயங்களை அதுவே அமைச்சிக்கும்னு சொல்வாங்க. மராத்தியில் ஒளிப்பதிவாளராக இருந்த என் நண்பர் ஹெக்டர் முதல்முறையா தமிழில் ஒளிப்பதிவு பண்றார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதுல கலை இயக்குநர் அமரனின் உழைப்புக்குப் பெரிய பங்கு உண்டு. பாடல்கள் யுகபாரதி. அவரது வசனங்கள் இந்தக் கதையை உயிரோட்ட மாக்கியிருக்கு. டாக்கி போர்ஷனை 18 நாள்களிலும் ஒருநாள் பாடல் ஷூட்டுமாக மொத்தமே 19 நாள்களில் படத்தை முடிச்சிட்டோம்.

`ஜெய்பீம்'க்குப் பிறகு நிறைய கதைகள் லிஜோமோளைத் தேடி வந்தது. ஆனா, இந்தக் கதை அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லி நடிக்க வந்தாங்க. கதையில கார் ஓட்டக்கூடிய காட்சி இருந்தது. லிஜோவுக்கு கார் ஓட்டத் தெரியாது. அதுக்காக அவங்க கார் ஓட்டக் கத்துக்கிட்டாங்க.

லாஸ்லியா இதுல எலைட் ஃபேமிலியில உள்ள பொண்ணு. லாஸ்லியாவின் கதாபாத்திரம் கதைக்குத் திருப்புமுனையா இருக்கும். நிறைய குடும்பம் சார்ந்த அரசியலை விவாதிக்க வைக்கும். ஒரு ஆக்‌ஷன் காட்சியில் லாஸ்லியா, டூப் போடாம நடிச்சிருக்காங்க.''

“இது பெண்ணியம் பேசும் படம்!”

``இரண்டு ஹீரோயின் சேர்ந்து நடிச்சாலே நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் ஸ்பாட்ல நடந்திருக்குமே..?’’

``உண்மைதான். என் நண்பர்கள் பலர் ரெண்டு ஹீரோயின்கள் வச்சு, படங்கள் இயக்கியிருக்காங்க. அதுல இருக்கற சிக்கல்கள் பத்திச் சொல்லியிருக்காங்க. அதனால எனக்கும் சின்ன பயம் இருந்துச்சு. ஆனா, லிஜோவும் லாஸ்லியும் அவ்ளோ ஃப்ரெண்ட்லியா பழகினாங்க. கடைசி நாள் ஷூட்ல லிஜோகிட்ட இதுபத்தி சொன்னேன். `நீங்க ரொம்பவே சப்போர்ட் பண்ணியிருக்கீங்க’ன்னு சொன்னேன். உதாரணத்துக்கு, ரெண்டு ஹீரோயின்கள் காம்பினேஷன் ஷாட் வைக்கறப்ப, ஒருத்தர் முகம் தெரியும் போது இன்னொருத்தருக்கு உதவி இயக்குநரே நிற்பாங்க. ஆனா, இங்கே சஜசன் ஷாட்ல லாஸ்லியாவே நின்னாங்க. அதேபோல லாஸ்லி பேசுற ஷாட்ல லிஜோ நின்னாங்க. ஒருத்தருக்கொருத்தர் காத்திருந்து, நடிச்சுக் கொடுத்துட்டுதான் ஸ்பாட்டை விட்டுக் கிளம்புவாங்க. இப்படி ஒரு சப்போர்ட் இருந்ததாலதான் படப்பிடிப்பை நாங்க நினைச்ச நாள்களில் முடிக்க முடிஞ்சது'' என்று புன்னகைக்கிறார் லயோனல் ஜோஸ்வா.