சினிமா
Published:Updated:

“காதலிப்பது எளிது... திருமணம்தான் கடினம்!”

ஆலியா காஷ்யப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலியா காஷ்யப்

அது ஒரு கெட்ட கனவு. மோடி அரசை அப்பா கடுமையாக விமர்சித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தார்கள்.

ஆலியா... 21 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் gen Z அறுந்த வாலு! பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ஒரே செல்ல மகள். யூடியூப் Vlog, இன்ஸ்டாகிராம் என எக்கச்சக்க இளசுகள் பின்தொடர பிஸியாக இருக்கிறார் இந்த ஸ்டார்-கிட்! கலிபோர்னியாவில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனை பறந்து பறந்து படித்துக்கொண்டிருக்கும் ஆலியா காஷ்யப் அண்மையில் இந்தியா வந்திருந்தபோது பேசினேன். அவரிடம் பேச ஒரு காரணமிருந்தது. இரண்டாவது கேள்வியும் அதுதான்!

எப்படி இருக்கீங்க ஆலியா?

‘‘நான் நல்லா இருக்கேன். என் தந்தையைப் பற்றி அப்டேட் என்றால் அவரிடமே போன் போட்டு பேசிக்கொள்ளுங்கள். அவர் ஃப்ரெண்ட்லி பெர்ஸன்தான். என்னிடம் என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்கள்! என் ஃபாலோயர்ஸ், என் ஃபேன்ஸ் பற்றி...’’

“காதலிப்பது எளிது... திருமணம்தான் கடினம்!”

அனுராக் மீதுள்ள வன்மத்தால் சிலர் கடந்த ஆண்டு உங்களுக்கு பகிரங்கமாக பாலியல் ரீதியான மிரட்டல் விடுத்திருந்தார்கள். அது உங்களை வெகுவாக பாதித்ததாக அனுராக்கே சொல்லியிருந்தார்... எப்படி மீண்டு வந்தீர்கள்?

‘‘அது ஒரு கெட்ட கனவு. மோடி அரசை அப்பா கடுமையாக விமர்சித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தார்கள். பெயர் தெரியாத ஒரு நடிகையை வைத்து அவர்மீது ‘மீ-டூ’ புகார் கொடுக்க வைத்தார்கள். ஆனால், அவருடன் பணிசெய்த நடிகைகள், விவாகரத்தான என் அம்மா உட்பட எல்லோரும் அப்பாவுக்கு ஆதரவாக நின்றார்கள். இது அவரை எதிர்த்தவர்களுக்குக் கசப்பாகி விட்டது. அப்பா மற்றும் அப்பாவுக்கு ஆதரவாக நின்ற பாலிவுட் பிரபலங்கள் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை சாதகமாக்கப் பார்த்தார்கள். பலனில்லை. அப்பாவிடம் வீடு நிறைய டிவிடிக்கள், மூன்று கார்கள் தவிர ஏதுமில்லை. அப்பாவைத் திட்ட ஒரு வழி தேவைப்பட்டது. ஈஸி டார்கெட் என் சோஷியல் மீடியா. என்மீது பாலியல் வன்முறை நிகழ்த்துவதாக மிரட்ட ஆரம்பித்தார்கள். என் பதிவுகளுக்கு அருவருப்பான கமெண்ட் போட ஆரம்பித்தார்கள். நான் தனிமையில் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். அழுதுகொண்டே இருந்தேன். நல்லவேளை, அப்பாவும் அம்மாவும் உடனே அமெரிக்கா வந்து என்னுடன் தங்கி என்னை மீட்டெடுத்தார்கள். இப்போது அப்பா என்னுடன் அதிக நேரம் செலவிடுகிறார். அவர் இல்லாவிட்டாலும் சுயமாக முடிவெடுக்கும் இடத்துக்கு வந்துவிட்டேன். கமெண்ட்டுகளைக் கண்டுகொள்ளாமல் என்னுடைய யூடியூப் பக்கத்தில் தினமும் ஒரு வீடியோ போடுவதில் பிஸியாகி விட்டேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!’’

காதல் திருமணம் செய்த அப்பா -அம்மா பிரிந்திருப்பது வருத்தமாக இருக்கிறதா?

‘‘அப்பா ஒரு நேர்மையான மனிதர். பிஸியான இயக்குநர். அம்மா, அப்பாவின் ஜெராக்ஸ். பிஸியான சினிமா எடிட்டர். காதலிப்பது எளிது. ஆனால், திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழ்வது கடினம். அப்பா ஒரு நாடோடி. செல்போன் இல்லாமல் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல் எங்காவது போய் அமைதியாக படம் பார்த்துக்கொண்டும், வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார். அவருக்கு பியர் இருந்தால் போதும். அம்மா அப்படியே நேரெதிர். வீட்டில் அமைதியாக தியானம், சமையல், சினிமா என இருப்பார். கருத்து வேறுபாடு வந்தாலும் மனமொத்து மணமுறிவு செய்து கொண்டார்கள். நான் சின்ன வயதிலிருந்து அம்மாவோடு வளர்ந்தாலும், அப்பா என்னைப் புறக்கணித்ததில்லை. இருவரும் எனக்காக நல்ல நண்பர்களாக வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். அப்பா இன்னொரு திருமணம் செய்தார். அதிலும் அவரால் தொடர முடியவில்லை. மறுபடியும் மணமுறிவு. இப்போதுகூட அவர் ஒரு பெண் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். ஆனால், திருமண பந்தத்தில் அவர் விழவில்லை. இந்த உலகத்தில் யாரையும்விட என்னை அப்பா அளவு கடந்து நேசிக்கிறார். கல்வி, பாய் ஃப்ரெண்ட் என எல்லாவற்றையும் நானே தீர்மானிக்கும் உரிமையை எனக்குக் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் விட அவர்தான் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்!’’

உங்களுடைய Vlog-ல் அப்பாவிடம் ஆக்வர்ட் கொஸ்டீன்ஸ் என்ற தலைப்பில் செக்ஸ், ஆல்கஹால், போர்னோகிராபி என்றெல்லாம் ஓப்பனாக கேள்வி கேட்பதெல்லாம் இந்தியச் சூழலில் சரியா?

‘‘அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தீர்களா? அதில் என் எந்தக் கேள்விக்கும் அவர் முகம் சுளிக்கவில்லை. செயற்கையாக பதில் சொல்லவில்லை. ‘மனிதர்களுக்குக் காதலும் காமமும் இயல்பாக நடக்க வேண்டிய விஷயம். செக்ஸ் இயல்புதான். ஆனால் இந்தியச் சூழலில் கூலான விஷயம் இல்லை. அதற்கான மனப்பக்குவம் இருந்தால்தான் அது இங்கு சரியாக இருக்கும். உனக்கு ஒரு பிரச்னையென்றால் அப்பா உனக்கு ஆதரவாக நிற்பேன். நாமும் காயப்படாமல் யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது அதில் முக்கியம்' என்றார். திருமணத்துக்கு முந்தைய உறவைப் பற்றிய கேள்வியில் ‘இதெல்லாம் கி.மு-வில் கேட்கப்பட வேண்டியது’ என்றார். இவ்வளவு ஓப்பனாக பேசியும் ஒரு கமெண்ட்கூட நெகட்டிவாக வரவில்லை. ‘ரோல் மாடல் அப்பா அவர்’ என்று இந்தியர்கள்தான் பாராட்டினார்கள். இந்தியாவில் பாலியல் அத்துமீறல் நடப்பதற்குக் காரணமே இங்கு ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக வாய்ப்பே கொடுக்காத சூழல்தான்!’’

“காதலிப்பது எளிது... திருமணம்தான் கடினம்!”

உங்கள் காதலர் ஷேன் எப்படி இருக்கிறார்? காதலரைப் பற்றி சொன்னதும் அப்பா என்ன சொன்னார்?

‘‘அமெரிக்கரான ஷேன் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். ஒரு டேட்டிங் ஆப் மூலம் பழக்கமானோம். ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அப்பாவிடம் சொன்னேன். இந்தியா வரும்போது அழைத்து வரச்சொன்னார். ஷேனை அப்பாவுக்கு ரொம்பப் பிடித்து விட்டது. ‘என்னுடைய 40 வயதில் இருந்த தெளிவு ஷேனுக்கு இப்ப இருக்கு' என்று பாராட்டினார். ‘படிப்புக்கும் நேரம் ஒதுக்குங்கள்’ என்று மட்டும் அம்மா காமெடியாக சொன்னார். நல்லவேளை, ஷேன் என்னைவிட படிப்பில் செம கெட்டி!’’

அப்பா, அம்மா, ஷேன் தவிர உங்கள் உலகத்தில் யார் உங்களுக்கு நெருக்கம்?

‘‘யாரும் இல்லை. நான் சினிமா ஆட்களிடம் விலகி இருந்தாலும் ஒரே ஒரு பிரபலம் சிறுவயதிலிருந்தே என்னுடன் நட்பாகி விட்டாள். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என் நெருங்கிய தோழி!’’

நீங்கள் எப்போது பாலிவுட்டில் நடிகையாக களமிறங்கப் போகிறீர்கள்?"

‘‘யார் சொன்னா..? எனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம். எனக்குப் பெரிய யூடியூபரா ஆகணும் என்ற கனவுதான் இன்று இருக்கிறது. நாளையைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. ஆனால், எந்தத்துறையில் இருந்தாலும் நம்பர் ஒன்னாக இருப்பேன்!’’