Published:Updated:

`` `பில்லா’ன்னா அஜித் கோட்... `பிகில்’ல என்ன தெரியுமா?!'' - அனுவர்தன் ஷேரிங்ஸ்

அனுவர்தன்

"நீங்க இதை சிம்பிளான டிரெஸ்னு சொல்லிடுறீங்க. ஆனா, அதுதான் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி முழுசா புரியவைக்குது. உண்மையிலேயே ஒரு காஸ்ட்யூம் டிசைனரோட வேலையே, ஒரு கதாபாத்திரத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தேவையான உடையை உருவாக்குறதுதான்!" - ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன்.

Published:Updated:

`` `பில்லா’ன்னா அஜித் கோட்... `பிகில்’ல என்ன தெரியுமா?!'' - அனுவர்தன் ஷேரிங்ஸ்

"நீங்க இதை சிம்பிளான டிரெஸ்னு சொல்லிடுறீங்க. ஆனா, அதுதான் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி முழுசா புரியவைக்குது. உண்மையிலேயே ஒரு காஸ்ட்யூம் டிசைனரோட வேலையே, ஒரு கதாபாத்திரத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தேவையான உடையை உருவாக்குறதுதான்!" - ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன்.

அனுவர்தன்

பெரும்பாலும் ஆண்களால் நிரம்பிய, அவர்களின் ஆதிக்கத்தில் இருக்கிற துறை என்றே திரைத்துறைமீது ஒரு பிம்பம் உருவாகியிருக்கிறது. இத்தகைய மனநிலை தவிர்க்க முடியாததும்கூட. என்றாலும், சினிமாவில் பெண்கள் ஆதிக்கம் இருக்கும் ஒரு சில துறைகளும் உள்ளன. அதில் முதன்மையானது உடையலங்காரம் மற்றும் ஆடை வடிமைப்புத்துறை. இந்தத் துறை குறித்து அத்தனை பெரிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே, இதைப் பற்றிய கருத்துகள் எல்லாமே 'என்ன பெருசா பண்ணிடப்போறாங்க. டிரெஸ்ஸுதானே மாட்டிவிடப்போறங்க' என்பதுபோல் மேலோட்டமாகவே இருக்கின்றன.

அனுவர்தன்
அனுவர்தன்

இந்தக் கண்ணோட்டத்தைப் பற்றி பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தனிடம் கேட்டோம். ரஜினியுடன் 'கபாலி', 'காலா', கமலின் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடையலங்காரம், அஜித்தின் 'பில்லா', 'விவேகம்', நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா', 'விஸ்வாசம்', 'பிகில்' என முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களிலும், பா.இரஞ்சித், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, அட்லி உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் பணியாற்றியிருக்கும் அனுவர்தனுக்கும் அதே கவலைதான்!

உங்க துறை பற்றிய கண்ணோட்டம் ரொம்ப மேம்போக்கா இருக்கேன்னு உங்களுக்குத் தோணலையா?

"இது வருத்தமான விஷயம்தான். ஆனா, அந்தக் கண்ணோட்டம் உருவாகுறதுக்கும் ஒரு காரணம் இருக்கே. இங்கே இருக்கிற பல காஸ்ட்யூமர்ஸுக்கே இந்தத் துறை பற்றிய ஒரு தெளிவு இல்லை. ஒரு கதை, அதுல இருக்கிற கதாபாத்திரங்கள், அவங்களோட பண்பு இப்படி எல்லாவற்றையும் பார்த்துதான் அவங்களோட உடை எப்படி இருக்கணும்னு முடிவு பண்ணணும். ஆனா, இதை ஒரு பகுதிநேர வேலையா, ஆசைக்கு செய்ற வேலையா, முழுமையான ஆர்வமில்லாம செய்ற பலரை நான் பார்க்கிறேன். அதனாலதான், இப்படியொரு பிம்பம் உருவாகியிருக்குன்னு நினைக்கிறேன்."

Billa
Billa

சினிமாவுக்குள்ளே ஆடை வடிவமைப்பு குறித்து எப்படிப்பட்ட விழிப்புணர்வு இருக்குன்னு நினைக்கிறீங்க?

"இப்போ ரொம்பப் பரவாயில்லை. சினிமா இப்போ நிறுவனமயமாக்கப்பட்டு வருது. அதனால, இங்கே எல்லாத்துக்குமே சரியான திட்டமிடல், தொடக்கம், முடிவு, தெளிவு இருக்கு. படப்பிடிப்பு வரைக்கும் போயிட்டு, அங்கே இருந்து இந்தக் கேரக்டருக்கு இந்த மாதிரி டிரெஸ் வேணும், அந்தக் கேரக்டருக்கு அப்படி டிரெஸ் வேணும்னு கேட்கிற கடைசி நிமிட அழுத்தம் இல்லை. திட்டமிடப்படாத படங்கள்ல நான் வேலை பார்க்கிறதில்லை. ஒருசில நேரங்கள்ல கடைசி நிமிட எதிர்ப்பார்ப்பு இருக்கும். ஆனா, நிறைய படங்கள்ல அது மட்டும்தான் அதிகமா இருக்கும். அப்படி இருக்கக்கூடாதுல்ல. உங்க படம் என்ன, அதுக்கு என்ன மாதிரி உடைகள் தேவைப்படும்னு முன்கூட்டியே திட்டமிடணும். அது இப்போ நிறைய இளம் தலைமுறை இயக்குநர்கள்கிட்ட இருக்கிறதை என்னால வெளிப்படையா பார்க்க முடியுது. இதுவே ஒரு நல்ல முன்னேற்றம்தான்."

ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகளில் ஆடை வடிவமைப்பாளர்களைச் சேர்த்துக்கிற, அவங்ககிட்ட ஆலோசிக்கிற போக்கு இங்கே இருக்கா?

"ஒருசில நேரங்கள்ல இருக்கு. டெக்னீஷியன்களை மட்டுமல்ல, நடிகர்களையும் ப்ரீ-ப்ரொடக்‌ஷன் விவாதத்துல சேர்த்துக்கணும். நாம வடிவமைக்கிற உடை, அவங்களுக்குப் பொருத்தமா இருக்குங்கிறதை அவங்க முதல்ல நம்பணும். அப்போதான் அவங்களால அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்க முடியும். இந்த மாதிரி விவாதங்கள் நடந்து, அதுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கினா, எங்களுக்கான வேலைகளும் ரொம்ப சுலபமாகிடும். எனக்கு விஷ்ணுவர்தன் படங்கள்ல வேலை பார்க்கிறதுல இருக்கிற பெரிய அட்வான்டேஜ், இந்தத் திட்டமிடல்தான்."

அனுவர்தன்
அனுவர்தன்

நிறம் சார்ந்த திரைக்கதை அமைப்பு, நிற அரசியல், நிற உணர்வுகளெல்லாம் இப்போ வர்ற படங்கள்ல இடம்பெறுது. இது எந்த அளவுக்கு உங்க வேலையில் தாக்கத்தைக் கொடுக்குது?

"நிறையவே கொடுக்குது. உதாரணத்துக்கு, பா.இரஞ்சித் படங்களை எடுத்துக்கலாம். அவர் தன்னோட கதாபாத்திரங்கள் என்ன நிறத்துல உடை உடுத்தணும்ங்கிறதுல அவ்ளோ கவனம் செலுத்துவார். அதைப் பல புதுமுக இயக்குநர்கள்கிட்டேயும் பார்க்க முடியுது. அதனால, அவங்ககூட வேலை பார்க்கிறது எனக்கு அவ்வளோ எளிமையாவும், சுவாரஸ்யமாவும் இருக்கும்."

புதிய தலைமுறை இயக்குநர்கள் மத்தியில நீங்க உங்களை எப்படி அப்டேட் பண்ணிக்கிறீங்க?

"என்கிட்ட வேலைபார்க்கிறவங்க மூலமாதான். பெரும்பாலும் இளைஞர்களாதான் இருக்காங்க. அதனால, அவங்க சொல்ற யோசனைகளே ரொம்பப் புதுசா இருக்கும். நான் யோசிக்காத விஷயங்களையெல்லாம் அவங்க யோசிக்க வைப்பாங்க. இளைஞர்கள்களோடு இருந்தாலே போதும், தானா அப்டேட் ஆகிடும்!"

Kaala
Kaala

பெரிய நடிகர்களுக்கு ஆடை வடிவமைச்சிருக்கீங்க. அவங்க உடை விஷயத்துல தலையிடுவாங்களா?

"கொஞ்சமா தலையீடு இருக்கும். ஆனா, அதை நான் ஆதிக்கமா நினைக்க முடியாது. உதாரணத்துக்கு, கமல் சார் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீஸன் சமயத்துலதான் அரசியலுக்கு வந்தார். அதனால, அவரோட தோற்றம் மக்கள் மத்தியில ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தணும்ங்கிறதுல அதிக கவனம் செலுத்தினார். அதுக்காக நாங்க மேற்கொண்ட மெனக்கெடல் ஏராளம். அதுதான் நம்ம வேலை."

கதை, கதாபாத்திரத்தைத் தாண்டி, நடிகர் அல்லது நடிகைக்கான உடை இதுதான்னு என்னென்ன காரணிகளை வெச்சு முடிவு பண்ணுவீங்க?

"நிறைய இருக்கு. அஜித்துக்கான தோற்றம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அவரோட நடை, உடலமைப்பு அதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டுதான் முடிவு பண்ணுவேன். 'பில்லா' படத்துல அவர் போட்ட கோட், பிறகு கிராமத்து வேடம் எல்லாமே அந்தத் தோற்றத்துக்கு ஏற்ற மாதிரி அதுவா மாறணும். 'கபாலி' படத்துலவர்ற கோட், ஒரு பெரிய அரசியல் காரணத்தோடு இருக்கும். அப்போ, நாம ரஜினி சாரையும் மைண்டுல வெச்சுக்கணும், படத்தின் தன்மையையும் சிதைக்கக்கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம், 'கேரக்டர் ஆர்க்'. அதாவது, ஒரு கதாபாத்திரம், அந்தத் திரைக்கதையில் மேற்கொள்ளும் பரிணாம வளர்ச்சியையும் காட்டணும். அதுக்கு நல்ல உதாரணம், 'விஸ்வாசம்' நயன்தாரா ரோல். அதுல, நயன்தாராவுக்கு மூணு விதமான மாற்றம் இருக்கும். அஜித்தை காதலிக்கிற நயன்தாரா, திருமணம் முடிஞ்சதும் கிராமத்துல இருக்கிற காலகட்டம். கடைசியா, அஜித்தைப் பிரிஞ்சு இருக்கிற காலம். மூணுமே வேற வேறயா இருக்கும். அந்த நடிகை, அவங்க கதாபாத்திரம் ரெண்டையும் மனசுல வெச்சு உடையை வடிவமைக்கணும். உடையும் தெரியணும், நயன்தாராவும் பார்வையாளர்களுக்குத் தெரியணும். அதுதான் முக்கியம்."

Viswasam
Viswasam

'பிகில்' படத்துல நயன்தாராவோட லுக் எப்படி இருக்கும்?

"ஒரு டைனமிக்கான கேரக்டர் அது. அதுக்கு ஏற்ற மாதிரி இருக்கும். அட்லி, சரியான திட்டமிடலோடுதான் இருப்பார். அவரோட கேரக்டர்ஸ், என்ன கலர்ல டிரெஸ் பண்ணணும்ங்கிறதுல வலுவான முடிவு இருக்கும். அதனால, என் வேலை ஈஸி. 'பிகில்' படத்துக்குள்ளே நான் ரொம்ப லேட்டாதான் வந்தேன். படத்துல நயன்தாராவுக்கு மட்டும்தான் நான் காஸ்ட்யூம் டிசைனர். அவரோட காட்சிகளெல்லாம் ரெண்டாவது ஷெட்யூல்லதான் நடந்தது. அதனால, எங்களுக்கான வேலையும் அந்த சமயத்துலதான் ஆரம்பமாச்சு."

'கோலமாவு கோகிலா' நயன்தாரா, '96' த்ரிஷா மாதிரி நிறைய கதாபாத்திரங்களோட மிக எளிமையான உடைகள் பெரிய டிரெண்டா மாறிடுதே... என்ன காரணம்?

"நீங்க, இதை சிம்பிளான உடைனு சொல்லிடுறீங்க. ஆனா, அதுதான் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி முழுசா புரியவைக்குது. உண்மையிலேயே, ஒரு கதாபாத்திரத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தேவையான உடையை உருவாக்குறதுதான் ஒரு காஸ்ட்யூம் டிசைனரோட வேலையே. '96', நான் வொர்க் பண்ண படமில்லை. ஆனா, இதுதான் என் கருத்துக்கு வலுவான உதாரணமா சொல்வேன். ஒரு கேரக்டரோட பண்பை உள்வாங்கினாதான், அப்படியொரு உடையை அவங்களுக்குத் தரமுடியும். நானும் இதைத்தான் பண்ணணும்னு விரும்புறேன்."

அனுவர்தன்
அனுவர்தன்

சிறிய படங்கள்ல ஒரு கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி இவ்வளவு நுணுக்கங்களோட ஆடை வடிவமைக்கிறீங்க. ஒரு அங்கீகாரம், விருதுன்னு வரும்போது, 'பாகுபலி', 'பத்மாவத்', 'பாஜிராவ் மஸ்தானி' போன்ற படங்கள்தான் தேர்வாகுது. அதுக்குக் காரணம் என்ன?

"தெரியல! ஒருவேளை இதைப் பற்றி இன்னும் விழிப்புணர்ச்சி இல்லைனுதான் எடுத்துக்கணும். இது ரொம்ப முக்கியம்னு தெளிவா தெரியணும். ஒரு நடிகரை ஒவ்வொரு படத்துக்கும் மாற்றிக் காட்டுறதுல உடை எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்குதுன்னு எல்லோருக்கும் தெரியணும். 'காலா' படத்துல ரஜினி சார் கேரக்டருக்கு கறுப்பு, நீலம் இந்த ரெண்டு கலர்லதான் உடைகள் இருக்கும். பார்க்க எளிமையா இருந்தாலும், அது ஒரு ஸ்டேட்மென்ட். அது மூலமா என்ன சொல்ல வர்றாங்கன்னு ஒரு விஷயம் இருக்கு. 'பில்லா'ன்னு சொன்னா, அஜித் சார் கோட்தான் ஞாபகத்துக்கு வரணும். நாங்க ஒரு நடிகரோட ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்குறோம்."

புதுசா வர்ற இளம் ஆடை வடிவமைப்பாளர்களுக்கு நீங்க என்ன அறிவுரை சொல்லுவீங்க?

நிறைய உழைப்பைப் போடணும். ஜஸ்ட் லைக் தட்னு வேலை பார்க்க முடியாது. இது ஒரு ஹாபியும் இல்ல. ஒரு கதை கேக்குறீங்கன்னா, அதோட ஆழம் என்னன்னு தெரிஞ்சு அதுக்கு ஏற்ற மாதிரி வேலைபார்க்கணும். ஒரு நடிகரை அழகா காட்டுறது மட்டும் நம்ம வேலை இல்லை, அவங்க அந்தப் படத்துல என்னவா மக்களுக்குத் தெரியணும்னு முடிவு பண்ணத் தெரியணும். கலர் பேலட் குறித்த அடிப்படை அறிவு இருக்கணும். எந்தக் கலருக்கு என்ன எமோஷன தூண்டுற சக்தி இருக்குனு தெரியணும். ஏன்னா மக்களும் இப்போ உலக சினிமாவுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டாங்க. ஏனோதானோனு ஒரு வேலை செஞ்சா கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவாங்க. அதனால, செய்யிற வேலைய சீரியஸா செய்யணும்.