சினிமா
பேட்டிகள்
Published:Updated:

அரண்மனை 3 - சினிமா விமர்சனம்

அரண்மனை 3
பிரீமியம் ஸ்டோரி
News
அரண்மனை 3

சுந்தர்.சி சீரியஸ் முகத்தை வரித்துக்கொள்ள, யோகிபாபுவிடம் காமெடி ஏரியா. ஒன்றிரண்டு இடங்களில் வெடித்துச் சிரிக்கவும் வைக்கிறார்.

கொஞ்சம் காமெடி, அதைவிட கம்மியாக பயம், எல்லாவற்றுக்கும் கம்மியாக லாஜிக் என வழக்கமான டெம்ப்ளேட்டில் வெளியாகியிருக்கும் மற்றுமொரு படம் ‘அரண்மனை 3’.

பங்களா - பேய் - ப்ளாஷ்பேக் - க்ளைமாக்ஸ் - இவ்வளவுதான். இதில் கதை எனச் சொல்ல புதிதாக எதுவுமில்லை. முந்தைய பாகங்களின் நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட்டு எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. அரண்மனையும் செட்டும் சி.ஜி-யும்கூட கிட்டத்தட்ட அதேதான் என்பது கூடுதல் தகவல்.

ஹீரோவாக ஆர்யா என டைட்டில் கார்டில் போடுவதோடு சரி. கமர்ஷியல் சினிமாவில் ஹீரோயின்கள் வந்துபோவதைவிடவும் குறைவான காட்சிகளே வந்துபோகிறார். வரும் காட்சிகளிலும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளைத்தான் வெளிக்காட்டுகிறார். ராஷி கண்ணாவும் தன் பங்கிற்கு ஆர்யாவோடு இதில் போட்டி போட்டு நடித்திருக்கிறார். ஓரளவேனும் நம்மை பேய்ப்படம் என நம்ப வைப்பது ஆண்ட்ரியாவின் மெனக்கெடல் மட்டும்தான். பார்த்துப் பழகிய ப்ளாஷ்பேக் கதையிலும் ஓரளவிற்குத் தனித்துத் தெரிகிறார்.

அரண்மனை 3 - சினிமா விமர்சனம்

சுந்தர்.சி சீரியஸ் முகத்தை வரித்துக்கொள்ள, யோகிபாபுவிடம் காமெடி ஏரியா. ஒன்றிரண்டு இடங்களில் வெடித்துச் சிரிக்கவும் வைக்கிறார். உருவகேலிகள்தான் உறுத்துகின்றன. விவேக்கின் கடைசிப்படம் இது. அதனாலேயே என்னவோ அவர் வரும் காட்சிகளில் சிரிப்பைத் தாண்டி மனம் கனத்துப்போகிறது. நளினி, சாக்‌ஷி அகர்வால், சம்பத், வேல.ராமமூர்த்தி, மனோபாலா, குளப்புலி லீலா, வின்சென்ட் அசோகன், அமித் பார்கவ் என சுந்தர்.சி படங்களுக்கேயுரிய கல்யாணக் கூட்டம். ஆனால் ஒருவர்கூட கூட்டத்தை விட்டு விலகித் தனித்துத் தெரியவில்லை.

அரண்மனை 3 - சினிமா விமர்சனம்

சத்யாவின் இசையில் பாடல்கள் ம்ஹூம்! அதுவும் ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப லூப்பில் ஓடவிடுவது அலுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒருசில காட்சிகளுக்கு த்ரில் ஏற்றுகிறது பின்னணி இசை. செந்தில்குமாரின் கேமராவும் அதற்கு ஒத்துழைக்கிறது.

ஹாரர் காமெடி படத்தில் ஹாரரும் காமெடியும் துண்டு துண்டு சீன்களாக நிற்பதுதான் பிரச்னை. குழந்தைகள் ரசிக்கும்படியான காமெடிகள் இருக்குமளவிற்கு பெரியவர்களுக்கான ரசிக்க வைக்கும் தருணங்கள் இல்லையென்பது பெரிய குறை. இரண்டு ஆவிகள், அவற்றின் நோக்கத்தில் இருக்கும் ட்விஸ்ட் போன்றவையே இரண்டாம் பாதியை எதிர்பார்க்கவைக்கின்றன. ஆனால் கைக்குழந்தையாக செத்து ஆவியாக வளர்ந்து சிறுமி ஆவதெல்லாம் ஹாரர் படத்திலேயே நிகழும் ஹைப்போதெட்டிக்கல் தியரி.

அரண்மனை 3 - சினிமா விமர்சனம்

பயமுறுத்தவும் போதிய முயற்சிகள் எடுக்காமல், கதையாகவும் நம்மை கன்வின்ஸ் செய்யாமல்... இயக்குநராய் சுந்தர்.சி மெனக்கெடாதது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

‘இதுவே போதும்’ என்கிற மனநிலையிலிருந்து விலகி, கதை, திரைக்கதைகளில் கவனம் செலுத்தியிருந்தால் அரண்மனை பயமுறுத்தியிருக்கும்.