Published:Updated:

``கோடைக்காலம்தான் தெருக்கூத்து கலைஞர்களை வாழவைக்கும்... ஆனா இப்போ?" - `காலா' ராமலிங்கம்

தெருக்கூத்து

தெருக்கூத்து கலைஞர்களின் தற்போதைய நிலை குறித்துப் பேசுகிறார் பிரபல சினிமா கலை இயக்குநரும் கூத்து கலைஞருமான ராமலிங்கம்.

Published:Updated:

``கோடைக்காலம்தான் தெருக்கூத்து கலைஞர்களை வாழவைக்கும்... ஆனா இப்போ?" - `காலா' ராமலிங்கம்

தெருக்கூத்து கலைஞர்களின் தற்போதைய நிலை குறித்துப் பேசுகிறார் பிரபல சினிமா கலை இயக்குநரும் கூத்து கலைஞருமான ராமலிங்கம்.

தெருக்கூத்து

கொரோனா வைரஸ் காரணமாக எல்லாத் தொழிலுமே முடங்கிக் கிடக்கிறது. இதில் தெருக்கூத்து கலைஞர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. காரணம், கோடைக்காலத்தில்தான் நிறைய கோயில் திருவிழாக்கள் வரும். அந்தத் திருவிழாக்களில் தெருக்கூத்து கலைஞர்களின் கூத்து விடிய விடிய நடக்கும். கூத்து போடுவதற்காக நிறைய ஊர்களுக்குச் சென்று கூத்தாடி வருவர். அவர்களுக்கான காலத்தில் இப்போது லாக்டெளன் வந்திருப்பதால் அவர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள தெருக்கூத்து கலைஞரும் 'கபாலி', 'காலா' உள்ளிட்ட படங்களின் கலை இயக்குநருமான ராமலிங்கத்திடம் பேசினேன்.

"தெருக்கூத்து கலைஞர்கள் நைட் கூத்து ஆடிட்டு காலையில வேற வேலைக்கு போவாங்கன்னு நிறைய பேர் நினைப்பாங்க. ஆனா அப்படியில்லை. ஒரு தெருக்கூத்து குழுவுல 10 பேர் இருக்காங்கன்னா அந்த 10 பேரும் விடிய விடிய கண் முழிக்க வேண்டியிருக்கும். கூத்து ஆடிட்டு காலையில எப்படி வேற வேலைக்குப் போக முடியும்? அதனால தெருக்கூத்தை மட்டுமே நம்பி அதுக்குள்ளதான் இயங்க முடியும். அவங்க ரொம்ப பிஸியா இருக்கிறதே பங்குனி மாசத்துல இருந்து ஆடி மாசம் வரைக்கும்தான். ஏன்னா, இந்த மாசங்கள்லதான் நிறைய ஊர்ல கோயில் திருவிழாக்கள் வரும். இந்த மாசத்துல அவங்க என்ன சம்பாதிக்கிறாங்களோ அதுதான் அவங்களுக்கு பிரதானமான வருமானம். ஆடி மாசம் முடிஞ்சதுல இருந்து மறுபடியும் பங்குனி மாசம் வரை அவங்களுக்கு கூத்து இருக்காது. அப்போ அவங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அப்போதான் அவங்க வீட்டு வேலை, கொத்தனார் வேலை, கரும்பு வெட்டுறதுனு ஏதாவது கூலி வேலைகளுக்குப் போவாங்க. அந்தச் சமயத்துல நான் படத்துல செட் போடுற வேலைகளுக்கு அவங்களை கூப்பிட்டுக்குவேன். வந்து செஞ்சுக்கொடுப்பாங்க. 'காலா' படத்துல 10 தெருக்கூத்து கலைஞர்கள் வேலை பார்த்தாங்க. நான் ஒரு தெருக்கூத்து குழு வெச்சிருக்கேன். அதுல இருக்கவங்கள நான் பார்த்துக்கிறேன்" என்றவரிடம் தெருக்கூத்து மேல் வந்த ஆர்வம் பற்றிக் கேட்டேன்.

கலை இயக்குநர் ராமலிங்கம் தெருக்கூத்து தோற்றத்தில் பா.இரஞ்சித்துடன்...
கலை இயக்குநர் ராமலிங்கம் தெருக்கூத்து தோற்றத்தில் பா.இரஞ்சித்துடன்...

"என் அப்பா ஒரு தெருக்கூத்து கலைஞர். அவரால அதுல பெரிய ஆளா வர முடியலையேன்னு பெரிய வருத்தம். அவருக்கு தனியா ஒரு குழு அமைச்சு தெருக்கூத்து பண்ணணும்னு ஆசை. இப்போ அவர் இல்லை. அப்பா கூத்து ஆடும்போது நான் கூட இருப்பேன். அந்த ஹார்மோனிய பெட்டி சத்தமும் மிருதங்க இசையும்தான் என்னை ஒரு கலைஞனா மாத்துச்சு. நான் ஓவியனா மாறியதே தெருக்கூத்து கலைஞர்கள் அரிதாரம் பூசுறதைப் பார்த்துதான். அதுதான் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அப்புறம்தான் நான் வரைய ஆரம்பிச்சேன். இப்போ ஒரு கலை இயக்குநரா இருக்கிறது அடிப்படை தெருக்கூத்துதான். ஊருக்கு போனா தெருக்கூத்து கலைஞர்களைப் பார்த்தா நேரம் போறதே தெரியாமல் பேசிக்கிட்டிருப்போம். சென்னையில இருந்து விழுப்புரத்துல கூத்து பார்க்க பஸ் பிடிச்சு வந்து கூத்து முடிஞ்சவுடன் காலையில திரும்பி சென்னைக்கு வந்திடுவேன்.

சினிமாவுக்குள்ள வந்து வேலை செஞ்சு எனக்கான தேவைகள் பூர்த்தி அடைஞ்ச பிறகு, நம்ம அப்பா ஆசைப்பட்ட தெருக்கூத்துக்கு ஏதாவது பண்ணணும்னு நினைச்சு, அப்பா கூட கூத்து ஆடுனவங்களை எல்லாம் கூப்பிட்டு கூத்து போடலாம்னு கேட்டேன். எல்லோரும் என்னை காமெடியா பார்த்தாங்க. இப்போ கூத்து ஆடினா தன்னுடைய பசங்க திட்டுவாங்கன்னு பயந்துட்டு நிறைய பேர் முன்வரலை. அப்புறம், நானும் உங்களோட சேர்ந்து கூத்து ஆடுறேன்னு கேட்டு, கொஞ்சம் கத்துக்கிட்டேன். அப்புறம் அவங்களும் வந்தாங்க. தெருக்கூத்தை இப்போ யாரும் மதிக்காத நேரத்துல அதைப் பெரிய விஷயமா மாத்தணும்னு நினைச்சேன்.

தெருக்கூத்து
தெருக்கூத்து

'தெருக்கூத்து மீள் உருவாக்கம்'னு ஒரு நிகழ்ச்சி வெச்சு அதுக்கு இயக்குநர் ராஜுமுருகன், நடிகர் கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ் இவங்க எல்லோரையும் வரவெச்சேன். நடிகர்கள் வர்றாங்கன்னு மக்கள் தெருக்கூத்தைப் பார்க்க வந்தாங்க. தெருக்கூத்து கலைஞர்களுக்கு அவங்க மாலை எல்லாம் போட்டு மரியாதை பண்ணவுடன் அவங்களுக்கு நம்பிக்கை வந்திடுச்சு. சினிமாவை தெருக்கூத்துக்காகப் பயன்படுத்தினேன். இளைஞர்களை எல்லாம் கூப்பிட்டு அவங்களுக்கு தெருக்கூத்து சொல்லிக்கொடுத்து குழுவுல சேர்த்தேன்.

அவங்களும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. தங்களுடைய கிராமத்தை விட்டா அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது. அப்படித்தான் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூத்துக்கட்ட ஆரம்பிச்சாங்க. அப்புறம், எல்லோரும் வெவ்வேற ஊர்களுக்கு போயிட்டதுனால கூத்துக் கலையை கத்துக்கவே ஆளில்ல. இப்போ இந்த லாக்டெளன்ல எல்லா பசங்களும் ஊருக்குள்ளேயே இருக்கிறதுனால எல்லோரும் கூத்து கத்துக்க ஆர்வமா முன்வர்றாங்க. திண்டிவனம் பக்கத்துல என் இடத்துல நிறைய பசங்களுக்கு கூத்து சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன். அப்பாவோட ஆசை நிறைவேறுது.

கலை இயக்குநர் ராமலிங்கம்
கலை இயக்குநர் ராமலிங்கம்

இருந்தாலும் அவங்க பிஸியா இருக்கிற இந்த நேரத்துல கொரோனா வந்ததுனால ரொம்ப கஷ்டப்படுறாங்க. மனசு ரொம்ப வேதனையா இருக்கு. கூத்து கலைஞர்களுக்கு வருமானம் வர்றதே இந்த நேரத்துலதான். அவங்க திரும்பி மீண்டு வர்றதே சிரமம். நான் சினிமாத்துறையில இருக்கேன். சினிமாக்காரங்களுக்கு மீண்டு வர நிறைய வழிகள் இருக்கு. ஆனா, இந்தக் கலைஞர்கள் ரொம்ப பாவம்.

என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்றேன். ஆனா, என் ஒருத்தனால எவ்வளவு செய்ய முடியும்? அரசாங்கம் தெருக்கூத்து கலைஞர்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். கலை இலக்கிய பண்பாட்டு மையத்துல உறுப்பினரா இருக்கவங்களுக்கு 1,000 ரூபாய் தந்தாங்கன்னு கேள்விப்பட்டேன். ஆனா, அதுல உறுப்பினரா இல்லாத எத்தனையோ கலைஞர்கள் இருக்காங்க. அவங்களுக்கு அந்தச் சங்கத்துல சேரணும்னு ஒரு புரிதல்கூட இருக்காது. அவங்களை யார் பாத்துக்கிறது? சாப்பாட்டை கையில எடுக்கும்போது தட்டிவிட்டது மாதிரி சரியான நேரத்துல பிரச்னை வந்துடுச்சு. அரசாங்கம் இந்தப் பிரச்னையைக் கவனிச்சு உதவி பண்ணணும்னு கேட்டுக்கிறேன்" என்றார்.