சினிமா
தொடர்கள்
Published:Updated:

“பிரமாண்ட படத்தில் எல்லாமே கிராபிக்ஸ்னு நினைச்சுடறாங்க!”

சாபுசிரில்
பிரீமியம் ஸ்டோரி
News
சாபுசிரில்

இதை பாகுபலி மாதிரி நினைக்காதீங்க. ஃபேன்டஸி கிடையாது. இது ரியலிஸ்ட்டிக் படம். ஆக்‌ஷன் நிறைய இருக்கும். எமோஷனலான படமாகவும் இருக்கும்'ன்னார்.

இந்தியாவின் புகழ்பெற்ற கலை இயக்குநராக தேசிய விருதுகள் பல குவித்தவர் சாபுசிரில். ஷங்கரின் `எந்திரன்' படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக உயர்ந்தார். அன்று தொடங்கிய புரொடக்‌ஷன் டிசைனர் பயணம், `பாகுபலி', `பாகுபலி 2', `மரைக்காயர் அரபிக் கடலின் சிம்ஹம்', `சாஹோ', `ஆர்.ஆர்.ஆர்' என பிரமாண்டப் படங்களில் அசத்த வைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

“பிரமாண்ட படத்தில் எல்லாமே கிராபிக்ஸ்னு நினைச்சுடறாங்க!”

``மலையாளத்தில் `அமரம்'னு ஒரு சின்னப் படத்துல ஆரம்பிச்ச கலை இயக்குநர் பயணம், இப்ப பிரமாண்ட படங்களின் புரொடக்‌ஷன் டிசைனரா எல்லாரும் கொண்டாடுறாங்க... எப்படி இருக்கு இந்தப் பயணம்?’’

``இந்தத் துறைக்கு வந்து 32 வருஷம் ஆச்சு. `அமரம்'லதான் முதன்முதல்ல கமிட் ஆனேன். ஆனா, அடுத்து கமிட் ஆன `ஐயர் த கிரேட்'தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. ஒவ்வொரு நாள் ஷூட்டிங் போகும்போதும் முதல்நாள் பரீட்சை எழுதப்போகும் பையன் மாதிரிதான் மனநிலை இருக்கும். இப்பவும் இண்டஸ்ட்ரீயில புதுசா கத்துக்க நிறைய இருக்கு. நாளைய ஒர்க்கைவிட, இன்னிக்கு வேலையை ஒழுங்கா பண்ணணும்னு எப்பவும் என் மைண்ட்ல ஓடிட்டு இருக்கும். இத்தனை வருஷத்துல சினிமாவும், டெக்னாலஜியும் நிறைய மாறியிருக்கு. இருக்கற தொழில்நுட்பத்தை வச்சு, எவ்வளவு சிறப்பா பண்ணமுடியுமோ அப்படிப் பண்ணிட்டு இருக்கோம். எதையும் கஷ்டப்பட்டுப் பண்ணினதில்ல. ஒவ்வொரு நாளும் புதுசா கத்துக்கறேன். அப்டேட் பண்ணிக்கறேன். இழந்ததுன்னு எதுவும் இல்ல. அப்படி எதையாவது இழந்திருந்தால் அதையும் பாசிட்டிவ்வாதான் நினைப்பேன்.''

சாபுசிரில்
சாபுசிரில்

``எப்படி இருந்தது `ஆர்.ஆர்.ஆர்.' அனுபவம்? என்ன சொல்றார் ராஜமௌலி?’’

``ராஜமௌலி என்னை `ஆர்.ஆர்.ஆர்.' படத்துக்குக் கூப்பிடும்போதே, `இதை பாகுபலி மாதிரி நினைக்காதீங்க. ஃபேன்டஸி கிடையாது. இது ரியலிஸ்ட்டிக் படம். ஆக்‌ஷன் நிறைய இருக்கும். எமோஷனலான படமாகவும் இருக்கும்'ன்னார். அவரோட ஒர்க் பண்ணின அனுபவம் இருந்ததால, `ஆர்.ஆர்.ஆர்'ல ஒர்க் பண்ணினது எளிதா இருந்தது. பிரிட்டிஷ் காலகட்டத்துல நடந்த விஷயங்களை ரீகிரியேட் பண்ணியிருந்தோம். அரண்மனை, ரோடு, மார்பிள் சிலைகள் எல்லாம் ரெடி பண்ணினோம். அதோட விரிவாக்கத்துலதான் கிராபிக்ஸ் இருந்துச்சு. `நாட்டு நாட்டு' பாடல் படமாக்கறப்ப இந்தியாவில் லாக்டௌன். அதனால வெளிநாட்டுக்காரங்க இங்கே வரமுடியாமப் போனது. ஆனா, நாம வெளிநாடு போறதுக்கு அனுமதி இருந்ததால, அந்தப் பாட்டுக்காக உக்ரைன் போய் ஷூட் பண்ணினோம்.

இந்தப் படத்தோட கதை முழுசா தெரிஞ்சதால, ஷூட்டிங் தொடங்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே வேலைகளை ஆரம்பிச்சிட்டோம். நிறைய பைக்குகளை ஆல்ட்ரேஷன் பண்ணியிருந்தோம். ஏன்னா, ஒரிஜினல் பைக்ல அந்த வேகம் கிடைக்காது. ராம்சரண் பயன்படுத்தின ஜீப்கள் ஒரிஜினல் வாங்கி அவற்றை பழைய ஜீப்பா மறு உருவாக்கம் பண்ணினோம். `ஐயர் த கிரேட்'ல ஒரு ட்ரெயின் மினியேச்சர் பண்ணியிருப்பேன். இப்ப `ஆர்.ஆர்.ஆர்' படத்துலேயும் ஒரு ட்ரெயின் மினியேச்சர் பண்ணினேன். அந்தக் காலத்துல இருந்து மினியேச்சர் பண்ணிட்டிருக்கறதால, இப்ப இன்னும் பெட்டரா பண்ணமுடியுது. `ஆர்.ஆர்.ஆர்'ல ட்ரெயின் மினியேச்சர்னு ஈஸியா சொன்னாலும் அந்த மினியேச்சர் ட்ரெயினையே 25 அடியில போட்டிருந்தோம்.''

“பிரமாண்ட படத்தில் எல்லாமே கிராபிக்ஸ்னு நினைச்சுடறாங்க!”

`` `க்ரீஷ்3', `பாகுபலி' `சாஹோ', `மரைக்காயர்', `ஆர்.ஆர்.ஆர்'னு எல்லாமே பிரமாண்ட படங்களா பண்றீங்களே, சின்ன பட்ஜெட் பண்ணமாட்டீங்களா?’’

``அப்படி அமைஞ்சிடுச்சு. உண்மையைச் சொல்லணும்னா, பிரமாண்ட படங்கள்ல நானும் பங்களிச்சிருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. ஏன்னா, திறமைசாலிகள் நிறைய பேர் இருக்காங்க. நமக்கு அந்தப் படம் தேடிவர்றது கண்டிப்பா கடவுளோட கிருபைதான். ஒவ்வொரு படத்துக்கும் ஐந்தைந்து வருடங்கள் ஒர்க் பண்றீங்களேன்னு கேட்பாங்க. ஆனா, அந்தப் படங்களோட ஒர்க் போறப்ப அதுல ஈடுபாட்டோட உழைக்கும்போது நேரம் காலம் போறது தெரியாது. ஒவ்வொரு படத்திலும் நிறைய விஷயங்கள் ரீகிரியேட் பண்றோம். ரொம்ப நல்லா பண்ணும்போது, அதை ஒரிஜினல்னு நினைச்சிடுறாங்க. இது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் இப்படி பிரமாண்ட படங்கள்ல `க்ரீஷ்3'ல இருந்து `மரைக்காயர்' வரை பத்து வருஷமா எதுக்குமே தேசிய விருது கிடைக்கல. அதிலும் `மரைக்காயர் அரபிக்கடலின் சிம்மம்' படத்துக்கு நிறைய தேசிய விருதுகள் வந்துச்சு. எனக்குக் கிடைக்கல. பெரிய படம்னா, அது கிராபிக்ஸ்னு நினைச்சுக்கறாங்க. செட்களை ரியலிஸ்ட்டிக்கா பண்ணும்போது அதை கிராபிக்ஸா நினைக்கிறாங்க. சின்ன பட்ஜெட் படங்கள் பண்ணமாட்டேன்னு சொன்னதில்ல. ப்ரியதர்ஷனின் `காஞ்சீவரம்' சின்னப்படம்தானே, அதுல பிரகாஷ்ராஜின் வீடு செட்தானே! அதுல, பழைய பார்சல் சர்வீஸ் லாரியை வாங்கி அதை பஸ்ஸா மாத்தியிருப்போம்.''

“பிரமாண்ட படத்தில் எல்லாமே கிராபிக்ஸ்னு நினைச்சுடறாங்க!”

``உங்க மகள் ஸ்வேதா செபாஸ்டியன் `காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் மூலம் கலை இயக்குநர் ஆகியிருக்காங்க..? குருவாக, அப்பாவாக என்ன அட்வைஸ் பண்ணியிருக்கீங்க?’’

``ஸ்வேதா என்கிட்ட கொஞ்ச வருஷம் ஒர்க் பண்ணினா. அப்புறம், என் அசிஸ்டென்ட் ரூபினோட இந்தி புராஜெக்ட்ஸ்ல உதவி தயாரிப்பு வடிவமைப்பாளரா ஒர்க் பண்ணினா. அப்புறம், தனியா டிசைனர் ஆனா. எதையும் சின்ஸியரா இன்வால்வ் ஆகிக் பண்ணணும்னு என் உதவியாளர்கள் எல்லாருக்குமே தெரியும். அது ஸ்வேதாவுக்கும் தெரியும். தனியா அட்வைஸ் பண்ணினதில்ல. இப்ப அவர் ஒர்க் பண்ணியிருக்கற படம் ரிலீஸ் ஆனதும், அதன்பிறகு என் கருத்தைச் சொல்வேன்.''

``அடுத்து `ஆர்.ஆர்.ஆர்.2' எப்போ வரும்?’’

``அதைத் தயாரிப்பாளர், இயக்குநர்தான் சொல்லணும். அடுத்து ஜூனியர் என்.டி.ஆர்., கொரட்டலா சிவா இணையும் படம் பண்ணப் போறேன். இந்தியிலும் ஒரு படம் வந்திருக்கு. இதிகாச `கர்ணன்' தொடர்பான படம் அது. தமிழில் நான் படம் பண்ண மாட்டேன்னு சொன்னதில்ல. வந்தால், கதை பிடிச்சிருந்தா கண்டிப்பா பண்ணுவேன். அது சின்னப்படமா இருந்தாலும் பண்ண ரெடி!''