நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் அரசு திரையரங்கமான ஊட்டியில் இருக்கும் அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கம் கொரோனா ஊரங்குக்குப்பின் மீண்டும் புத்துயிர் பெற்று புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக குறும்பட விழா நடத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில், நீலகிரி ஃபிலிம் கிளப் மற்றும் பி.சி டி.வி- நெட்வொர்க் அமைப்புகளின் சார்பில் ஊட்டி குறும்பட விழா அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் நேற்று தெடங்கியது. இதனை நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ் நேற்று குத்து விளக்கு ஏற்றித் தெடங்கி வைத்தார். தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த குறும்பட திருவிழாவில் 32 நாடுகளைச் சேர்ந்த குறும்பட கலைஞர்களால் படைக்கப்பட்ட 119 குறும்படங்களை திரையிட உள்ளனர்.

விழாவின் நிறைவில் சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கு யானை விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த குறும்படங்களை இயக்குநர் கௌதம் வாசுதேவ் தேர்வு செய்யவுள்ளார். மேலும், இந்தக் குறும்பட திருவிழாவின் சிறப்பு அம்சமாக முதல் முறையாக தோடர் பழங்குடி மக்கள் குறித்த குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டுள்ளது.
ஊட்டியில் நடைபெற்று வரும் குறும்பட விழா குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள்,"ஊட்டி ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல் அமைப்பு நீலகிரி ஃபிலிம் கிளப்பால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சியுடனான லாப நோக்கமற்ற அமைப்பாகும். உள்ளூர் திறமைகளை ஆதரிக்க புதிய விருதுகள் ஜான் சலீவன் பெயரில் வழங்கப்பட உள்ளது. இந்த விருது நீலகிரியில் கலை மற்றும் கலாசாரத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்த நபர்கள் மற்றும் உள்ளூர் திரைக் கலைஞர்களுக்கானது.

குறும்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை பார்வையாளர்கள் இலவசமாகக் காணலாம். தமிழ் திரை உலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளனர்." எனத் தெரிவித்தனர்.