Published:Updated:

அறுவடை நாள்: `சின்னதம்பி', `மின்சார கனவு' படங்களின் முன்னோடி; ஆனால் இளையராஜாவின் அந்தப் பாடல்..!

அறுவடை நாள்

ஒரு விதைப்பு நாளில் தொடங்கி அறுவடை நாளில் முடியும் இந்தப் படம் காவியச் சோகத்துடனும் சில மரணங்களுடனும் நிறைவுறுகிறது.

Published:Updated:

அறுவடை நாள்: `சின்னதம்பி', `மின்சார கனவு' படங்களின் முன்னோடி; ஆனால் இளையராஜாவின் அந்தப் பாடல்..!

ஒரு விதைப்பு நாளில் தொடங்கி அறுவடை நாளில் முடியும் இந்தப் படம் காவியச் சோகத்துடனும் சில மரணங்களுடனும் நிறைவுறுகிறது.

அறுவடை நாள்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `அறுவடை நாள்’.

இந்தத் திரைப்படத்தை இன்றளவும் பல ரசிகர்கள் நினைவுகூர்வதற்கு ஒரு பாடல்தான் முக்கியமான காரணம். ஆம், ராஜாவின் இசையில் உருவான அதி அற்புதமான பாடல்களில் ஒன்றான ‘தேவனின் கோயில் மூடிய நேரம்’ என்பதின் வழியாகத்தான் ‘அறுவடை நாள்’ படத்தைப் பலரும் இன்று நினைவு கொள்வார்கள். ‘இறைஞ்சுதல்’ என்கிற உணர்வை இசையாகவும் குரலாகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பாடல் இது.

இந்தப் பாடல் தொடர்பாக ஒரு சம்பவம் உண்டு. படத்தின் இயக்குநரான ஜி.எம்.குமாருக்கு இதுதான் முதல் படம். உதவி இயக்குநராக இருந்த போதே ராஜாவிடம் அவருக்குப் பழக்கம் உண்டு. எனவே தனது படத்தை இயக்கும் போது, ‘ராஜாவிடமிருந்து அற்புதமான பாடல்களை வாங்க வேண்டும்’ என்கிற நோக்கில் “க்ளைமாக்ஸில் ஒரு பாட்டு வேண்டும்... ‘அலைகள் ஓய்வதில்லை’யில் வரும் ‘காதல் ஓவியம்’ மாதிரியான பாடல்” என்று ராஜாவிடம் கேட்கிறார். ஒரு கதையை நுனி முதல் அடி வரை ஆராயும் ஞானம் ராஜாவிற்கு உண்டு. “க்ளைமாக்ஸ்ல பாட்டுக்கு இடமே இல்லையே?” என்று கேட்க, பாடலை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆவலில், "இல்ல... நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன்” என்று சொல்லி பாட்டை வாங்கிவிடுகிறார் குமார்.

அறுவடை நாள்
அறுவடை நாள்

ராஜாவிடம் செல்லமாகத் திட்டு வாங்கிய இயக்குநர்

படத்தின் பின்னணி இசை கோர்ப்புக்கான நேரம். க்ளைமாக்ஸில் வருவதாகச் சொல்லி வாங்கிய பாடல், ஆரம்பத்திலேயே டைட்டில் கார்டின் பின்னணியில் ஓடுகிறது. அதுவும் பாதி பாடல்தான். ராஜாவின் அற்புதமான ஹம்மிங் வேறு அதில் இல்லை. இசைக் கோர்ப்பு முடித்து விட்டு வெளியே வரும் ராஜா, செல்லக் கோபத்துடன் டைரக்டரை நோக்கிக் கேட்கிறார். “ஏன்யா... நான்தான் சொன்னேன்ல... அந்த இடத்துல பாட்டு வராதுன்னு. இப்ப என்ன செஞ்சு வெச்சிருக்கே... பாடலை அரையும் குறையுமா?” என்று கேட்கிறார். “படம் எப்படியிருக்குங்க?” என்று இயக்குநர் தயங்கியபடியே கேட்க “நல்லாயிருக்கு... நல்லாயிருக்கு" என்று புன்னகைத்த படி ராஜா கிளம்பிவிட்டார். அதுவே இயக்குநருக்குக் கிடைத்த பெரிய சான்றிதழ்.

கூடவே இன்னொரு சம்பவத்தையும் பார்த்து விடுவோம். ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில்தான் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நடிகராக அறிமுகமானார். "பிரபுவை விட ராம்குமார்தான் முதல்ல நடிகனாவான்னு எதிர்பார்த்தேன்” என்று சிவாஜியே ஒரு நேர்காணலில் சொன்னதை வாசித்த நினைவிருக்கிறது. இயக்குநர் குமாரும், ராம்குமாரிடம் நடிப்புத்திறமை இருப்பதாக உணர்ந்திருக்கிறார். இந்தக் கௌரவப் பாத்திரத்திற்கு முதலில் ரஜினியை அணுக நினைத்தார்களாம். பிறகு சிவாஜியை நடிக்க வைக்கலாம் என்று கூட பேசப்பட்டது. ஆனால் இயக்குநரின் பரிந்துரைப்படி ராம்குமார் உள்ளே வந்தார். இது ராம்குமார் நடித்த முதல் படம்... பிரபு ஹீரோ. எனவே சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு.

படத்தின் டபுள் பாசிட்டிவ் தயாராகி விட்டது. சிவாஜி கணேசன் படத்தைப் பார்க்கத் தயாரானார். “என்னென்ன கரெக்ஷன் சொல்வாரோ... எதை எதைத் தூக்க வேண்டியிருக்குமோ?” என்று நகத்தைக் கடித்த படி வெளியே இயக்குநர். ‘சிவாஜி பார்த்து விட்டு என்ன சொல்வாரோ?’ என்கிற ஒரேயொரு கேள்வி மட்டுமே அந்த அறிமுக இயக்குநரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. உற்சாகத்துடன் வெளியே வந்த சிவாஜி “ஒரு பிரேம் கூட வெட்டக்கூடாது. அற்புதமா வந்திருக்கு படம். மொட்டையன் நிச்சயம் பிச்சிடுவான்... அப்புறம் வேற லெவல்ல போயிடும்” என்று சொல்லி விட்டுச் சென்றதும் இயக்குநருக்கு மிக்க மகிழ்ச்சி. சிவாஜி ‘மொட்டையன்’ என்று சொன்னது யாரை என்பது எளிதில் புரிந்திருக்கும்.

அறுவடை நாள்
அறுவடை நாள்

ராஜாவும் சிவாஜியும் பாராட்டிய ‘அறுவடை நாள்’ படம் எப்படியிருந்தது?

‘அரண்மனை’ என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ரத்னவேல் என்கிற பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில்தான் அந்தக் கிராமம் இருந்தது. நிலவுடைமையாளரான அவருக்கு இருக்கும் ஏராளமான நிலங்களில் வேலை செய்துதான் அடித்தட்டு மக்களின் பிழைப்பு. ரத்னவேலின் ஒரே மகன் முத்துவேல். அப்பாவி. நல்லவன். அவனை ஏறத்தாழ ஓர் அடிமை போலவே அடித்து வளர்க்கிறார் ரத்னவேல். அப்பாவைக் கண்டாலே பிள்ளைக்கு அப்படியொரு பயம். ரத்னவேலின் மனைவிக்கும் அப்படியே! ஆனால் சில சமயங்களில் மட்டும் கணவரை எதிர்த்து அவருடைய தவற்றைச் சுட்டிக் காட்டும் துணிச்சல் வரும்.

அநாதையான நிர்மலாவிற்கு கன்னியாஸ்திரி ஆகி தொண்டு செய்ய வேண்டுமென்பதுதான் லட்சியம். மடத்தில்தான் அவள் வளர்கிறார். ஆனால் அவள் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை வாழட்டும் என்று மூத்த கன்னியாஸ்திரி எண்ணுகிறார். ‘உலகத்தைப் பற்றி அறியட்டும்’ என்று கிராமத்திற்குச் சேவை செய்ய அனுப்புகிறார். ஒரு மருத்துவராகக் கிராமத்திற்குள் நுழையும் நிர்மலாவிற்கும் வெள்ளந்தியான முத்துவேலிற்கும் இடையில் நிகழும் முதல் சந்திப்பு அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, முத்துவேலின் அப்பாவித்தனம் அவருக்குப் பிடித்துப் போகிறது. தந்தையிடம் அடி வாங்கும் அவனின் மீது அனுதாபம் உருவாகி காதலாக மாறுகிறது.

நிர்மலா தன் வருங்கால மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று முத்துவேலுவுக்கும் ஆசை. ஆனால் அவனது தந்தை சம்மதிப்பாரா? மதத்தையும் அந்தஸ்தையும் தாண்டி உருவாகும் இவர்களின் காதலை அறியும் ரத்னவேல், நயவஞ்சகமாக ஒரு திட்டம் தீட்டி முத்துவேலுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார். அதுவும் இன்னமும் பூப்படையாத ஒரு பெண்ணுடன். இதைக் கேள்விப்படும் நிர்மலா அதிர்ச்சியடைகிறாள். முத்துவேலின் வாழ்க்கையும் பாழாகி பித்துப் பிடித்தவன் போல் அலைகிறான்.

அறுவடை நாள்
அறுவடை நாள்
இறுதியில் என்னவானது? ஒரு விதைப்பு நாளில் தொடங்கி அறுவடை நாளில் முடியும் இந்தப் படம் காவியச் சோகத்துடனும் சில மரணங்களுடனும் நிறைவுறுகிறது.

'சின்னதம்பி', 'மின்சார கனவு' ஆகியவற்றின் முன்னோடி

பிரபுவுக்கு ‘சின்ன தம்பி’ மாதிரியான அப்பாவி பாத்திரம். பேன்ட் அணிந்து வரும் பல்லவியை ‘ஆண்’ என்று நம்பி கலாட்டா செய்யும் அளவுக்கு அவர் வெள்ளந்தியாம். ஆனால் இது போன்ற பாத்திரங்களில் பிரபு கச்சிதமாகப் பொருந்தி விடுவார். அவருடைய புஷ்டியான உடலும் பால் வடியும் முகமும் பொருத்தமாக இருக்கும். அப்பாவிடம் அடி வாங்கி அவர் கலங்கும் போது நமக்கும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. கோழையாக இருக்கிற அவரை வழக்கம் போல் நாயகிதான் வழிகாட்டி வீரனாக்குகிறார். கடைசியில் சூறாவளிக் காற்றாக வேறு உருவம் எடுக்கிறார் பிரபு.

நாயகி பல்லவி அறிமுகமான தமிழ்ப்படம் இது. அவர் ஏற்கெனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் சில படங்களில் நடித்திருக்கிற விஷயம், இயக்குநருக்கே தெரியாமல் போய் ‘அட! ஆடிஷனில் இந்தப் பொண்ணு இப்படிக் கலக்குகிறதே?!’ என்று வியந்து போய் தேர்வு செய்துவிட்டாராம். பிறகு ஜி.எம்.குமாரின் சில படங்களில் தொடர்ந்து நடித்தார் பல்லவி. பிறகு இருவருக்கும் ஏற்பட்ட காதல் சமாச்சாரம் எல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். முதல் தமிழ்ப்படம் என்றாலும் தனது பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார் பல்லவி. பிரபுவின் முட்டாள்தனத்தைக் கண்டு முதலில் கோபப்படுவதும், பிறகு அனுதாபத்தில் விழுந்து காதலாக மாறுவதையும் பிறகு நிகழும் சோகத்தையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அறுவடை நாள் - பல்லவி
அறுவடை நாள் - பல்லவி

இந்தப் படத்தின் முக்கியமான பலம் என்று ‘அரண்மனையாக’ நடித்திருக்கும் ஆர்.பி.விஸ்வத்தைச் சொல்ல வேண்டும். எளிமையான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் மிரட்டலான உடல்மொழியைக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்களின் வெறுப்பை அநாயசமாகச் சம்பாதிக்கிறார். இந்தப் படத்தின் வசனமும் இவரே. தமிழின் முக்கியமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா என்று இவரைச் சொல்லலாம். சில திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். இவரது அடியாளாக மொட்டைத் தலையுடன் நடித்திருப்பவர் இந்திரஜித். (‘பதினாறு வயதினிலே’ டாக்டர்’). ‘அரண்மனை’யின் மனைவியாக நடித்திருக்கும் வடிவுக்கரசியின் நடிப்பும் அருமை. ஓர் அராஜகமான கணவனின் செயல்களைக் கண்டு மனம் புழுங்குவதும், அவசியமான சமயங்களில் மட்டும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கோபத்தில் வெடிப்பதும், தனது மகனுக்கு நடக்கும் ‘முறையற்ற’ திருமணத்தைத் தடுக்க முடியாமல் மனம் குமைவதும் என ஒரு சராசரி இல்லத்தரசியின் பாத்திரத்தைக் கச்சிதமாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் அறிமுகம் ஆன படம்

இதில் அறிமுகம் ஆன ராம்குமாரைப் பற்றிப் பார்த்து விடலாம். ஏறத்தாழ பிரபுவின் அதே தோற்றத்தில், குரலில் ஆனால் சற்று புஷ்டியாக இருக்கிறார் ராம்குமார். ஒரு புரட்சிகரமான பாதிரியார். ‘கடவுளை விடவும் மனிதம் முக்கியம்’ என்று கருதுபவர் ‘பைபிளைச் சம்பிரதாயமாகப் புரட்டுவதை விடவும் மனதைப் புரட்டுவது முக்கியமானது’, ‘கோயிலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. செய்யும் தொழிலே தெய்வம்’, ‘ஜெபக்கூட்டத்திற்கு வராமல் போனாலும் சரி, மக்கள் போராட்டங்களில் இறங்கு’ என்று புரட்சி ஆன்மிகம், அரசியல் பேசும் பாத்திரத்தைக் கையாண்டிருந்தார் ராம்குமார்.

திருச்சபையின் உயர்மட்ட பிரதிநிதிகள் இவரின் புரட்சியைக் கேள்வி கேட்கும் போது இவர் பதில் அளிக்கும் காட்சிகள் சிறப்பு. இயக்குநரின் புரட்சிகரமான சிந்தனைகள் இது போன்ற காட்சிகளில் வெளிப்படுகின்றன. ஆனால் தனது அங்கியைக் கழற்றி வைக்கும் பாதிரியார், ‘கிழிஞ்ச சட்டையை இனி எப்படி மறைப்பேன். ஓ... ஜீசஸ்’ என்று அழும் காட்சிகள் நகைப்பையே உண்டாக்குகின்றன. ஒரு பாடல் காட்சியில் பளபளப்பான கோட் அணிந்து வரும் இதே பாதிரியாரா கிழிந்த சட்டை அணிவார்?! ஓர் அறிமுக நடிகராக ராம்குமாரின் வருகை வரவேற்கத்தக்கது என்றாலும் பல காட்சிகளில் அவர் வசனம் பேசும் முறையும் நடிப்பும் அமெச்சூராக இருந்தன. ஆனால் பட்டைத் தீட்டினால் நடிப்பில் மிளிர்வார் என்பதற்கான தடயங்களும் கூடவே பளிச்சிட்டன. பிறகு ‘ஐ’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் ராம்குமார் நடித்தார்.

அறுவடை நாள்
அறுவடை நாள்

பிரபுவுடன் பலவந்தமாகத் திருமணம் செய்யப்படும் முறைப்பெண்ணாக ராசி நடித்திருந்தார். அவரது நடிப்பும் நிறைவாகத்தான் இருந்தது. ஆனால் இவரைப் போன்றவர்கள் ஏன் முன்னணிக்கு வரமுடியவில்லை என்பது ஆச்சரியம். ஹீரோயின்கள் என்று வரும் போது தமிழ் முகங்களுக்குத் தமிழர்கள் பெரிதும் ஆதரவு தராததில் ஏதோவொரு உளவியல் ரகசியம் இருக்கிறது. மலையாளம் ‘சம்சாரிக்கும்’ இன்ஸ்பெக்டராக ஓரத்தில் நடித்து விட்டுப் போனார் ராஜ்கபூர். இவரது உடல்மொழியில் செயற்கைத்தனம் தெரிந்தது. (படத்தின் இணை இயக்குநரும் கூட). கதையை எழுதிய லிவிங்ஸ்டனும் ஒரு காட்சியில் வந்து போனார்.

நான்கே படங்களை இயக்கிய ஜி.எம்.குமார்

ஜி.எம்.குமார், பாக்யராஜிடம் பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக, திரைக்கதையை மேம்படுத்துபவராகப் பணியாற்றினார். என்றாலும் அவரது முதல் திரைப்படத்தில் பாரதிராஜாவின் சாயலைப் பார்க்க முடிந்தது. காதலுக்குக் குறுக்கே மதம் நிற்பதும், நிலவுடைமை சமூகம் அந்தக் காதலை எதிர்ப்பதும், சோகமான முடிவும் பாரதிராஜாவின் பாணியை நினைவுபடுத்தின.
ஜி.எம்.குமார்
ஜி.எம்.குமார்

சில காட்சிகள் இன்றைக்குப் பார்க்கும் போது அமெச்சூராகத் தெரிந்தாலும், அந்தக் கால அறிமுக இயக்குநரின் படம் என்கிற வகையில் நிறைவாகவே இருந்தது. போகப் போக இவரால் சிறந்த படங்களை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தது. ஆனால் குமார் இயக்கியது வெறும் நான்கு திரைப்படங்கள் மட்டும்தான். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த பெற்றோரைக் கொண்டிருந்தார் குமார். எனவே மதம் தொடர்பான தத்தளிப்புகள், அழுத்தங்கள், அலைச்சல்கள் போன்றவை இளம் வயதில் அவரிடம் இருந்தன. அதுவே அவரது திரைப்படங்களிலும் எதிரொலித்தது. ‘அறுவடை நாள்’ படத்திலும் மதத்தைப் பின்னுக்குத் தள்ளி, மனிதனை முன்னே வைத்து புரட்சிகரமாகப் பேசும் பாதிரியார் வருகிறார். தமிழ் சினிமாவில் இப்படி வருவது அபூர்வம். போலவே கன்னியாஸ்திரியாக விரும்பும் நாயகி, காதலா அல்லது மதமா என்று தத்தளிப்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று. ('மின்சார கனவு' கஜோலின் முன்னோடி).

“என்னால் ஒரு பிரச்னையைத் தொடாமல் படமெடுக்கவே முடியாது. எனவே சென்சார் உள்ளிட்டுப் பல பிரச்னைகளை என்னுடைய திரைப்படங்கள் சந்தித்தன. அதுவே ஒருவகையில் பின்னடைவிற்கும் காரணமாக இருந்தது” என்று ஒரு நேர்காணலில் சொல்லிச் சிரிக்கிறார் குமார். வெற்றியடைந்த இயக்குநர்களை மட்டுமே நாம் அதிகம் கவனிக்கிறோம். ஆனால் தனது கசப்புகளை விழுங்கி விட்டு வெடிச்சிரிப்புடன் யதார்த்தமாகப் பேசும் குமாரின் நேர்காணல்கள் பார்ப்பதற்குச் சுவாரஸ்யமானவை. இயக்குநராக அதிகம் கவனிக்கப்படவிட்டாலும் நடிகராக அதிகம் பேசப்பட்டார். 'வெயில்', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை', 'கர்ணன்' போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

அறுவடை நாள்
அறுவடை நாள்
சமகாலத்தைக் கறுப்பு – வெள்ளையிலும், பிளாஷ்பேக்கை வண்ணத்திலும் காட்டும் உத்தியைப் பயன்படுத்தியிருந்தார் குமார். பல்லவியின் நடிப்பு சிறப்பாக வெளிப்படுவதற்கு, அவருக்கு டப்பிங் தந்த உமாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது எனலாம். தமிழில் பெண் ஒளிப்பதிவாளர்கள் மிகக் குறைவு என்னும் சூழலில் பி.ஆர்.விஜயலஷ்மி, இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

'தேவனின் கோவில் மூடிய நேரம்...'

அது சுமாரான கதையாக இருந்தாலும் தனது அற்புதமான இசையை ராஜா வழங்கிவிடுவார் என்பதை மறுபடி மறுபடி பார்த்திருக்கிறோம். இதிலும் அப்படியே. பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி ‘தேவனின் கோவில்’ பாடல் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஆத்மார்த்தமான பாடல். இந்தப் படத்தின் விசிட்டிங் கார்ட் என்று கூட சொல்லிவிடலாம். பாடல் துண்டாக்கப்பட்டு, டைட்டிலில் வந்துவிட்டதால் ஆரம்பத்தில் வருத்தமடைந்தாலும், பிறகு பல்லவியின் அறிமுகக் காட்சியில் இந்த மெட்டைப் பின்னணியாக இட்டு சமன் செய்தார் ராஜா. இப்படியொரு உருக்கமான பாடலின் இடையில் ராஜாவின் உற்சாகமான ஹம்மிங் ஒலிக்கும். ஆனால் எவ்வித உறுத்தலும் இன்றி கலந்திருக்கும். எஸ்.ஜானகி உயிரை உருக்கிப் பாடி பாடலுக்கு ஜீவனைச் சேர்த்திருந்தார்.

மலேசியா வாசுதேவன், ஜானகி, வாணி ஜெயராம் பாடிய ‘சின்னப்பொண்ணு’ பாடல் இன்னொரு சோக மெலடி. ‘மேளத்தை மெல்லத் தட்டு’ பாடல் ஒரு அற்புதமான டூயட் மெலடி. காற்றில் சிறகு பறப்பதை நாம் தொட்டு உணர்வது போன்ற இன்பத்தை இந்தப் பாடல் தரும். ‘ஒரு காவியம்’ என்கிற பாடல் ராஜா பாடியதாலேயே ஒரு பிரத்யேக அந்தஸ்தை அடைந்தது. ‘சின்னப் பசங்க நாங்க’ என்பது ஒரு நல்ல நையாண்டிப் பாடல். ‘ஓல குருத்தோல’ என்பது ஜானகி நிகழ்த்திய இன்னொரு அற்புதம்.

அறுவடை நாள்
அறுவடை நாள்
எண்பதுகளில் வெளியான காதல் திரைப்படங்களின் சாயலைக் கொண்டிருந்தாலும் ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் ஏதோவொரு பிரத்யேக ருசி இருந்தது. அறிமுக இயக்குநரின் அழுத்தமான தடம் இருந்தது. குமாரின் இயக்கத்துக்காகவும் ராஜாவின் இசைக்காகவும் இந்தத் திரைப்படத்தை இன்றும் பார்த்து ரசிக்கலாம்.