
சக்தியாக விக்ரம் பிரபு, நன்றாகவே நடித்திருக்கிறார்.
கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் கேடி நாயகனும், அதற்கு அவன் சொல்லும் காரணங்களும்தான் `அசுரகுரு!’
மைசூரிலிருந்து சென்னை வரும் ரயிலில், ஒரு வங்கியின் பணம் பார்சலில் வருகிறது. அதைப் பாதி வழியிலேயே, ரயிலின் மீது ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போடுகிறார் நாயகன். பிறகு, காரில் வரும் ஹவாலா பணத்தையும் பாதி வழியிலேயே டிக்கியைத் தெறிக்கவிட்டு அபேஸ் செய்கிறார். நல்ல நோட்டுகளைக் கள்ள நோட்டுகளாக டபுளிங் பண்ணும் ஒருவரின் பூக்கடையைத் தீக்கடையாக்கி, அங்கிருக்கும் நல்ல நோட்டுகளைக் களவாண்டு செல்கிறார். இப்படிப் பணமிருக்கும் இடமெல்லாம் தேடித் தேடி திருடும் நாயகன் யார், அவர் திருடுவதற்கான காரணம், திருடிய பணத்தை வைத்து என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை!

‘ஜென்டில் மேன்’ காலத்திலிருந்தே பார்த்துச் சலித்த கதைதான். அதைச் சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்ற எத்தனம் இயக்குநருக்கு இருந்திருந்தால், படம் சிறப்பாக வந்திருக்கும். ஆனால், ரயிலில் நாயகன் போட்ட ஓட்டையைவிட, பெரிய பெரிய லாஜிக் ஓட்டைகள் திரைக்கதையில். நாயகன் கொள்ளையடிப்பதிலிருக்கும் சின்ன சின்ன ஆச்சர்யங்கள்கூட இதனால் மங்கிப்போகின்றன. நாயகனுடைய கதாபாத்திர வடிவமைப்பு முற்றிலும் புதிது. அதை வைத்துக்கொண்டு விளையாட அத்தனை வாய்ப்பிருந்தும், `விளையாட மாட்டேன்’ என அடம்பிடிக்கிறார் இயக்குநர் ராஜ்தீப். கபிலன் வைரமுத்து மற்றும் சந்துரு மணிவாசகத்தின் வசனங்கள் சில இடங்களில் மட்டும் நச், பல இடங்களில் ப்ச்!
சக்தியாக விக்ரம் பிரபு, நன்றாகவே நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக்காட்சிகள் விக்ரம் பிரபுக்கு அல்வா காட்சிகள். ஸ்டன்ட் காட்சிகளில் யதார்த்தம் சேர்த்திருக்கிறார். டிடெக்டிவ் ஏஜென்ட்டாக வரும் மஹிமா நம்பியாரின் கதாபாத்திர வடிவமைப்பே பெரிய சறுக்கல். அதைத் தனது நடிப்பால் கொஞ்சம் சமாளித்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகளாக வரும் சுப்பாராஜு மற்றும் குமரவேல் படத்துக்குப் பெரிதாய் பலம் சேர்க்கவில்லை. யோகி பாபுவின் காமெடி, படத்தில் அவர் போடும் டீயைப் போலவே சுமாராக இருக்கிறது. ஜெகனின் காமெடிகளும் அதே ரகம்தான்.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் முழுமை இல்லை. லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும், திரைக்கதையால் பாழாகிறது. கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. சைமன் கே.கிங்கின் பின்னணி இசை ஓகே.
நல்ல ஐடியா, நல்ல நடிகர்கள், நல்ல கதை எல்லாமிருந்தும் திரைக்கதையிலும், அதைப் படமாக்கியதிலும் அரைக்கிணற்றிலேயே நின்றுவிட்டான் இந்த `அசுரகுரு.’