Published:Updated:

ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்

ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்

சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்த அறிமுக இயக்குநர் பொன்குமார், முதல் பாதிக் கதையை நிதானமாக, அதே சமயம் குறைகளின்றி நகர்த்தியிருக்கிறார்.

நாடே சுதந்திரம் அடைந்த பின்னரும், ஆங்கிலேயரிடம் மாட்டிக்கொண்டிருக்கும் தனியொரு கிராமத்தின் போராட்டமே இந்த ‘ஆகஸ்ட் 16, 1947.'

வெளியுலகத் தொடர்பற்ற செங்காடு கிராமத்தில் பருத்தி உற்பத்திக்காக மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். ஆங்கிலேயர் ராபர்ட் கிளைவ் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்க, அவர் மகன் ஜஸ்டின் அந்த ஊர்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறான். அதே ஊரிலிருக்கும் பரமனுக்கு (கௌதம் கார்த்திக்) ஜமீன்தாரின் மகள்மீது காதல். இந்த நிலையில் சுதந்திரம் கிடைத்துவிட்டதை மறைத்து கிராமத்தையே சிதைக்க நினைக்கிறான் ராபர்ட். இந்த ஆபத்திலிருந்து கிராம மக்கள் தப்பினார்களா என்பதே படத்தின் கதை.

ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்
ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்

துள்ளல் உடல்மொழியுடன் ஏட்டிக்குப்போட்டி வசனங்கள் பேசும் பரமனாக வசீகரிக்கிறார் கௌதம் கார்த்திக். ஆங்காங்கே வெளிப்படும் சமகால வார்த்தை உச்சரிப்புகளை மட்டும் கவனித்திருக்கலாம். நாயகி ரேவதி சர்மாவுக்கு வழக்கமான பெரிய இடத்துப் பெண் வேடம். நாக்கு அறுபட்ட நிலையில் சுதந்திரம் கிடைத்த செய்தியைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சியில் புகழின் நடிப்பு, சிறப்பு!

ரிச்சர்ட் அஷ்டனும், ஜேஷன் ஷாவும் படு செயற்கையாக எழுதப்பட்ட ஆங்கிலேய வில்லன்கள் பாத்திரங்களுக்கு மிகை நடிப்பை அள்ளி வீசியிருக்கின்றனர். ஜமீனாக வரும் மதுசூதன் ராவ், இந்திய அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், கிராம மக்கள் என அனைவரின் நடிப்பிலும் குறையேதும் இல்லை.

செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் சுதர்சன். ஆர்-இன் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாகப் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன. மறைந்த கலை இயக்குநர் டி.சந்தானத்தின் உழைப்பு ஒரு பழங்கால கிராமத்தையே நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஆறுதல், ஆனால் முதல் பாடல் தவிர்த்து மற்றவை மனதில் நிற்கவில்லை.

ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்
ஆகஸ்ட் 16, 1947 - சினிமா விமர்சனம்

சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்த அறிமுக இயக்குநர் பொன்குமார், முதல் பாதிக் கதையை நிதானமாக, அதே சமயம் குறைகளின்றி நகர்த்தியிருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் யூகிக்கக் கூடிய காட்சிகளுடன் திசை தெரியாமல் திணறுகிறது திரைக்கதை. க்ளைமாக்ஸ் காட்சியிலும் நம்பகத்தன்மை இல்லாததால் எவ்வித உணர்ச்சி களும் நமக்குக் கடத்தப்பட வில்லை.

ஒரு ஏகாதிபத்திய நாடால் ஒரு குக்கிராமத்தில் உழைப்புச் சுரண்டல் நடக்கிறது என்ற துயரத்தை நமக்குக் கடத்த, பாலியல் வன்கொடுமைகளைமட்டுமே முதன்மைப்படுத்து கிறது கதைக்களம். அதனாலேயே இது ஒரு வழக்கமான கதையாகி விடுகிறது.

வித்தியாசமான ஒன்லைன், நல்லதொரு மேக்கிங், இவற்றுடன் இரண்டாம் பாதியில் கொஞ்சம் புதுமையும் இருந்திருந்தால் சுதந்திரக் கொடி வெற்றிக் கொடியாகவும் மாறியிருக்கும்.