தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...

பசுமைப் பெண் விருது பெற்ற தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமைப் பெண் விருது பெற்ற தமிழ்ச்செல்வி

இது சாதனைப் பெண்களின் சங்கமம்

 • பார் போற்றும் சாதனைகள் புரிந்துவரும் பெண் களையும், கூடவே உலகத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாமல் சாதித்துவரும் பெண்களையும் மேடையேற்றி, ‘பெண்ணென்று கொட்டு முரசே’ என கௌரவப்படுத்தும் கொண்டாட்டம்தான் அவள் விகடனின் விருது மேடை. பிப்ரவரி 15 அன்று, சென்னை ஃபெதர்ஸ் எ ராதா ஹோட்டலில் நடந்த அவள் விகடனின் மூன்றாவது விருது விழாவில், விருதுபெற்ற பெண்களின் போராட்டம், தியாகம், வீரம், நெகிழ்ச்சி என உணர்ச்சிக்குவியல்கள் மேடையை அலங்கரித்தன. விழாவின் ஆளுமைத் தருணங்கள் இதோ உங்களுக்காக...

 • தொகுப்பாளர்கள் அஞ்சனாவும் மிர்ச்சி விஜய்யும் அனைவரையும் வரவேற்க, ‘அடிமுறை’ கலைஞர் செல்வராஜ் - ஐரின் குழுவினரின் கலக்கல் ஆட்டத்துடன் ஆரம்பித்தது விழா. சிலம்பம், சாட்டை, வேல் எனச் சுழற்றியபடி சிறுவர் சிறுமியர் ஆட, ‘சம்திங் நியூ’ என அரங்கம் ஆர்ப்பரித்தது.

 • `மாண்புமிகு அதிகாரி' விருதினை நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு வழங்கினார்கள், தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் திலகவதியும் தமிழகத்தின் முதல் பெண் டி.எஸ்.பி வனிதா ஐ.பி.எஸ்ஸும். தன்னுடைய பயிற்சிக் காலத்தில் தான் மட்டுமே பெண், மற்ற 17 பேரும் ஆண்கள் என்கிற சுவாரஸ்யமான தகவலைச் சொன்னார் வனிதா ஐ.பி.எஸ். தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு, வன விரிவாக்கம், பழங்குடியினர் நலன் என்று ஆட்சிப் பணியை லட்சியப் பணியாகக்கொண்டு செயல்பட்டு வரும் இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ், ‘`சம்பளம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசாங்க வேலை. இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அதை விரயம் செய்துவிடக் கூடாது’’ என்றதோடு, ‘`நீலகிரிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கும் அதை பிளாஸ்டிக் ஃப்ரீயாக, சுத்தமாக வைத்துக்கொள்கிற பொறுப்பு இருக்கிறது’’ என்று அழுத்தம் திருத்தமாகவே பதிவுசெய்தார்.

 • ‘தமிழன்னை' விருதினை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சேர்மன், 93 வயதாகும் டாக்டர் சாந்தாவுக்கு, மூத்த மருத்துவர்கள் ஹண்டே, செரியன் மற்றும் மல்லிகா திருவதனன் வழங்கினார்கள். தனக்கென ஒரு வாழ்க்கையை யோசிக்காமல், கடந்த 63 ஆண்டுகளாகப் புற்றுநோயாளிகளுக்காகவே வாழ்ந்துவரும் இந்தச் சமகால வரலாற்றுக்கு, அரங்கமே எழுந்து நின்று மரியாதை செலுத்தியது. “டாக்டர் சாந்தா கடவுளின் மனித உருவம். அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும்’’ என்று ஹண்டே கூற, டாக்டர் செரியன், ‘`90-களைக் கடந்த இந்த இரு லெஜண்ட்களை ஒருசேரப் பார்க்க வாய்ப்பளித்ததற்கு நன்றி’’ என நெகிழ்ந்தார்.

அபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...
 • “1954-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக அழுதிருக்கிறேன். இன்றைக்குப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். வந்தால் குணப்படுத்தவும் முடியும். பாதிக்கப்பட்டவர்களே... உங்களைக் காப்பாற்ற எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் தர்மசாலாவில் இலவச சிகிச்சையும் அளிக்கிறோம்” என டாக்டர் சாந்தா பேசி முடிக்க, அவர் தந்த சிகிச்சையால் புற்றுநோயை வென்ற மூன்று பேர் மேடையேறி சாந்தாம்மாவின் பாதம் தொட்டு வணங்கினார்கள். சாந்தாம்மாவின் உயரிய பணியைப் பாராட்டி விகடன் மேலாண் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு வழங்கினார்.

 • இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மரைன் பைலட் ரேஷ்மா நிலோஃபருக்கு ‘சாகச மங்கை’ விருது வழங்கினார் நடிகர் பரத். கொல்கத்தாவின் ஹூக்ளி நதியில் கப்பலோட்டும் சவாலை, ஒரு கலையெனச் செய்துகொண்டிருக்கும் ரேஷ்மா, “ஆண் பெண் வித்தியாசமில்லாமல் உங்கள் குழந்தைகளை வளருங்கள். அவர்களால் இது முடியும், இது முடியாது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளாதீர்கள். அவர்கள் செய்து பார்த்து விட்டு முடிவு செய்யட்டும்” என்றார். நடிகர் பரத், ‘`இங்கு விருதுபெறும் பெண்களைப் பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும் மரியாதையாகவும் உள்ளது’’ என்றார்.

 • நர்த்தகி நடராஜுக்கு ‘கலைநாயகி’ விருதினை, பாடகி நித்யஸ்ரீ மகாதேவனும் நடிகை அர்ச்சனாவும் வழங்கினார்கள். “திருநங்கைகளின் உணர்வுகளும் உரிமைகளும் கண்டுகொள்ளப்படாத 1980-களிலேயே, விகடன், தன் அட்டைப்படத்தில் என்னைப் பிரசுரித்தது’’ என்று பூரித்தார் நர்த்தகி நடராஜ். தொடர்ந்து பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே’வை நித்யஸ்ரீ பாட, அந்தப் பாடலுக்கும், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடலுக்கும் நர்த்தகி நடராஜ் நடனமாட, மேடை பேரழகானது.

 • பழங்குடி மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து வரும் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னாவுக்கு ‘சேவை தேவதை’ விருதினை, மூத்த மருத்துவர்கள் டாக்டர் ஜீவானந்தமும் டாக்டர் கமலா செல்வராஜும் வழங்கினார்கள். “பழங்குடி மக்களின் தண்ணீர் பிரச்னை தீர நான் போராடிக் கொண்டிருந்ததை, ஆனந்த விகடனின் ‘தெய்வத்தால் ஆகாதெதினும்’ பகுதியில் எழுதினார்கள். அதன் பிறகுதான் தனியார் நிறுவனமொன்று அந்தப் பழங்குடி மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தது” என்றார் டாக்டர் அனுரத்னா, நன்றியும் நெகிழ்ச்சியுமாக.

 • ‘பெஸ்ட் மாம்’ விருதினைப் பெற்றார், ‘கலைச்செல்வி. பிறவியிலேயே மூளை வளர்ச்சியில் சிக்கல், பார்வைச் சவாலுடன் பிறந்த ஜோதியை சிங்கிள் பேரன்டாக வளர்த்து இந்த நிலைக்கு உயர்த்தியவர் கலைச்செல்வி. அவருக்கான விருதினை இயக்குநர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி கஸ்தூரிராஜா மற்றும் லட்சுமி ரவிச்சந்தர் வழங்கினார்கள். தான் பெற்ற விருதினை மகளிடம் கொடுத்தவர், “என்னைப் போன்ற சிங்கிள் பேரன்ட்ஸ் பயப்படக் கூடாது. எனக்குப் பிறகு ஜோதிக்கு நல்ல உறவுகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறேன்’’ என்று கண்ணீருடன் சொல்ல, அரங்கமும் சில நொடிகள் கலங்கியது. ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா’ எனப் பாடி, அரங்கத்தை ரசனை மோடுக்கு மாற்றினார் ஜோதி.

 • நியூரோ மஸ்குலர் பிரச்னையால் வீல் சேரில் முடங்கினாலும், தன்னைப் போன்றவர்களுக்கு உதவி செய்துவரும் ஸ்வர்ணலதாவுக்கு ‘செயல் புயல்’ விருதினை நீதியரசர் சந்துரு வழங்க, ஸ்வர்ணலதாவின் கணவர் அதைப் பெற்றுக்கொண்டார். ஸ்வர்ணலதாவின் சேவைகளுக்கு உதவியாக, பிரித்வி இன்னர்வேர் நிறுவனம் 25,000 ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கியது.

 • ‘குடி’மகன்கள் வந்துபோகிற இடமாக இருந்த சென்னை முகப்பேர் புளியமரப் பள்ளிக்கூடத்தை ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்கள் கொண்ட பள்ளியாக மாற்றிக்காட்டிய ஆசிரியர் கிருஷ்ணவேணிக்கு நடிகை நதியா ‘கல்வி தேவதை’ விருதினை வழங்கினார். தன் மாணவர்களின் பறையிசையுடன் மேடையேறிய கிருஷ்ணவேணி, ‘`ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கும். அவற்றை ஆசிரியர்களே தேட வேண்டும்’’ என்றார். கிருஷ்ணவேணியின் பேச்சைக் கேட்ட நதியா, ‘`தினம் ஒரு ரோல் மாடலை சந்தித்துக்கொண்டிருக்கும் எனக்கு இன்று நீங்கள்’’ என்றார். ஆசிரியர் கிருஷ்ணவேணியின் விருது வீடியோவை எடிட் செய்த விகடனைச் சேர்ந்த குணா, அவருடைய மாணவர் என்பது ஹைலைட். தன் பள்ளி ஆசிரியரின் பாதங்களில் குணா விழுந்து வணங்க, தன் மாணவரை கிருஷ்ணவேணி அள்ளி அணைத்துக்கொள்ள, நெகிழ்ச்சித் தருணம் அது.

 • ‘எவர்கிரீன் நாயகி’ விருதினை நடிகை குஷ்புவுக்கு வழங்கினார்கள், அவரை ‘தர்மத்தின் தலைவ'னில் அறிமுகப்படுத்திய இயக்குநர் எஸ்பி.முத்துராமனும், ‘ஒத்த ரூபா தாரேன்’ மூலம் குஷ்புவின் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துவைத்த இயக்குநர் கஸ்தூரிராஜாவும், அவர் மனைவி விஜயலட்சுமியும்.

 • ‘` ‘எவர்கிரீன் நாயகி’ என்றால் அது நதியாதான். திரைக்குப் பின்னால் எத்தனையோ நாயகிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் உண்மையான ஹீரோயின்ஸ்’’ என்றார் குஷ்பு. இயக்குநர் முத்துராமன், ‘`தர்மத்தின் தலைவனி’ல் நான் குஷ்புவை அறிமுகப்படுத்தும்போது, ஓர் ஆசிரியரை நியமித்து அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர், நாங்கள் பேசப் பயப்படுகிற கலைஞர் முன்னிலையில் மேடையிலேயே பேசிவிட்டார். குஷ்பு இன்னும் மேலே மேலே வளர வேண்டும்’’ என வாழ்த்தினார்.

 • இயக்குநர் கஸ்தூரி ராஜா, ‘` ‘ஒத்த ரூபா’பாடலுக்காக, 36 மணி நேரம் தலையில் கரகத்தை வைத்து ஆடினார் குஷ்பு. கரகம் விழாமல் இருக்கத் தலையில் கம்பிகளாலான கொக்கிப் போட்டுவிடுவோம். அது தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறார் குஷ்பு’’ என மனம் திறந்து பாராட்டினார். சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக மேடையேறிய டான்ஸ் மாஸ்டர் கலா, ‘`குஷ் மனசாட்சியைத் தவிர வேறெதுக்கும் பயப்பட மாட்டா. எங்க வீட்டுல அவ எட்டாவது பொண்ணு’’ எனக் கொஞ்ச, ‘`நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டான்ஸ் ப்ளீஸ்’’ எனக் கோரிக்கை வைத்தார்கள் தொகுப்பாளர்கள். ‘ரம் பம் பம்’ பாடலுக்கு சகோதரிகள் இருவரும் ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் வைக்க... வாவ்!

 • மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பில் சாதித்துக் கொண்டிருக்கும் ஈரோடு விவசாயி தமிழ்ச்செல்விக்கு ‘பசுமைப் பெண்’ விருதினை வழங்கினார்கள் நடிகை சீதாவும் ரம்யா பாண்டியனும். ‘`உங்கள் வீட்டுக் குழந்தைகளை மாதம் ஒருமுறையாவது தோட்டம், வயல், கால்நடை வளர்ப்பு என்று பார்க்க விடுங்கள். இல்லையென்றால், அவர்கள் பால் கொடுப்பது பால் பாக்கெட்தான் என்று நம்பிவிடுவார்கள்’’ என்று தமிழ்ச்செல்வி சொல்ல, அரங்கம் அவருக்கு தம்ஸ் அப் சொல்லியது!

 • ‘குயின்’ வெப் சீரிஸில், `சக்தி சேஷாத்ரி'யாக வாழ்ந்துகாட்டிய அஞ்சனா ஜெயப்ரகாஷுக்கு ‘யூத் ஸ்டார்’ விருதினை நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவும், ‘குயின்’ இயக்குநர் பிரசாத் முருகேசனும் வழங்கினார்கள். ‘`ஒரு ஐகானிக் லேடியின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சின்ன போர்ஷனில் நான் இருந்தேன் என்பதே எனக்குப் பெருமை’’ என்று நெகிழ்ந்தார் அஞ்சனா. வெண்ணிற ஆடை நிர்மலா, ‘`ஜானகி அம்மா சொன்னதால், ஒரு முறை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்றேன். அதைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா, பிறகு என்னை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொண்டார்’’ என மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

 • ‘லிட்டில் சாம்பியன்’ விருதினை பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு வழங்கினார்கள் நடிகர் சாந்தனுவும் அவர் மனைவி கீர்த்தியும். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் உள்ள ஜெர்லின் அனிகா, மாற்றுத்திறனாளிக்கான 2019-ம் ஆண்டின் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் வென்றவர். சாந்தனு, ‘`இங்கே இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறோம்’’ என சைன் லாங்வேஜில் வாழ்த்த, லிட்டில் சாம்பியன் முகத்தில் பரவச மழை. ஜெர்லினின் அப்பா, ‘`கடவுள் எல்லோருக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளைக் கொடுப்பதில்லை. நல்ல அப்பாக்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பைத் தருகிறார். அடுத்த வருடம் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்காக என் மகள் செல்லவிருக்கிறார். அவளுக்கு உங்கள் எல்லோருடைய வாழ்த்தும் தேவை’’ என்று கேட்க, அரங்கத்தின் அத்தனை திசைகளில் இருந்தும் வாழ்த்தொலிகள் எழும்பின.

தொகுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாந்தனு ‘உன்னோட சிரிப்பால மப்பு ஏறுது’ என்று பாட, ‘டார்லிங் டம்பக்கு’ பாடலுக்கு அவரோடு சேர்ந்து கீர்த்தியும் ஆட... லவ்லி டைம்!

 • ‘பிசினஸ் குயின்’ விருதினை கலைப்புலி எஸ்.தாணுவும் தீபா வெங்கட்டும் வழங்க, மது சரண் பெற்றுக்கொண்டார். தாணு, தான் தயாரித்த படங்களின் லாபங்களை விவரிக்க, ‘என்னா மைக்கேலு, பிரியாணி சாப்பிடாம வந்துட்டியாமே’ என்று நயன்தாராவுக்கு தான் டப்பிங் பேசிய வசனங்களைப் பேசி கைதட்டல்களை அள்ளினார் தீபா வெங்கட்.

10 நிறுவனங்கள், ஆண்டுக்கு 120 கோடிக்கும் மேல் டர்ன் ஓவர், 5,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியவர் மது சரண். ‘`என்னுடைய இந்த 18 வருடப் பயணம் அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள். அம்மா, கணவர், என் மகள் என எல்லோருக்கும் என் வெற்றிக்குப் பின்னால் இருக்கிறார்கள்’’ என்றார் மது சரண்.

பிசினஸ் குயின் விருதினைத் தொடர்ந்து, நாணயம் விகடன் மற்றும் மார்க்கெட் ஆஃப் இந்தியா இணைந்து வழங்கும் ‘டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ் 2020’-ன் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்டந்தோறும் சிறந்த வர்த்தகர்களுக்கு இந்த டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ் வழங்கப்படவுள்ளன.

 • ‘சூப்பர் வுமன்’ விருதினை நடிகைகள் அம்பிகா மற்றும் ரேகாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார் பேராசிரியர் சோ.மோகனா. புற்றுநோயிலிருந்து மீண்டவர், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் தோறும் சராசரியாக 12,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த 72 வயதிலும் புற்றுநோய் ஆராய்ச்சியில் முனைவர் பட்டத்துக்காகப் படித்து வருபவர், இந்தியாவிலேயே தாய்ச்சி கலையில் பட்டயம் வாங்கிய முதல் பெண், எளிய மக்களின் கல்விக்கு உதவுபவர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். ‘`அரசாங்கம் கேன்சருக்கு மலிவு விலையில் மருந்துகள் தர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார் மோகனா.

 • ‘டிக்டாக்’ வீடியோக்களில் தன் க்யூட் எக்ஸ்பிரஷன் களால் கொள்ளையடித்த சகாய பிரிகிடாவுக்கு ‘வைரல் ஸ்டார்’ விருதினை, ‘மிஸ் இந்தியா’ அனுக்ரீத்திவாஸ், வனிதா விஜயகுமார் மற்றும் ‘நக்கலைட்ஸ்’ தனம் வழங்கினார்கள். ‘`எங்க ஐயா தோள் மேலே உட்கார்ந்துக்கிட்டா மொத்த சித்திரைத் திருவிழாவும் தெரியும். இந்த சாதனைப் பெண்களை அவள் விகடன் தன் தோள் மேலே ஏற்றி உலகத்துக்கு அறிமுகப்படுத்துது’’ என்றார் தனம். நிறம் குறித்த கேள்விக்கு அனுக்ரீத்தி வாஸ், ‘`மாடல், மிஸ் இந்தியா என்றாலே நார்த் இந்தியன் பெண்கள் என்று நாமே முடிவு செய்துவிட்டோம். அதை முதலில் தூக்கிப்போடுங்கள்’’ என்றார். பிரிகிடா, ‘`பொதுவாக நடிப்பதற்கு எல்லா வீடுகளிலும் தடைதான் விதிப்பார்கள். ஆனால், என் வீட்டில் முழு சப்போர்ட் கிடைத்தது. இந்த அவள் விருதுக்குப் பின்னால் இருக்கிற ‘அவள்’, என் அம்மாதான்’’ என்றார். பிறகு நால்வரும் மேடையில் கேட் வாக் செய்து காண்பிக்க, ‘`சரி, இதை ஏன் கேட் வாக்னு சொல்லணும்? லயனஸ் வாக் (பெண் சிங்கங்களின் நடை)னு ஏன் சொல்லக் கூடாது’’ என்று வழக்கம்போல ராக் செய்தார் வனிதா.

அபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...

‘சத்யா’ சீரியலின் விஷ்ணுவும் ஆயிஷாவும் ரீல் ஜோடியா, ரியல் ஜோடியா என கலகல ஆராய்ச்சியொன்று நடந்தது. அவர்களுடன் மேடையேறினார்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனாவும் அவர் கணவர் வினீத்தும். கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருப்பதற்கான டிப்ஸை தன் குறும்பு பாணியில் அர்ச்சனா சொல்லச் சொல்ல, வெடித்துச் சிரித்தார்கள் பார்வையாளர்கள்.

 • ‘இலக்கிய ஆளுமை’ விருதினை, இயக்குநர் வசந்தபாலன், எழுத்தாளர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் மு.ராஜேந்திரனிடமிருந்து பெற்றுக்கொண்டார் ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா. ‘`கவிஞரின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். அவருடைய மூன்று குழந்தைகளும் அரசு பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள்’’ என்று பாராட்டினார் மு.ராஜேந்திரன். ‘`எழுத்தாளர்களின் திறமையை திரையில் பார்ப்பது அழகியலின் உச்சம். கதைகள் திரைப்படங்களாகும்போதுதான் அதில் நம் கலாசாரமும் மொழியும் வாழும்’’ என்றார் வசந்தபாலன். கவிஞர் வெண்ணிலா, ‘`ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒரு பெண்ணை விகடன் சாதனைப் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கும்போது, அந்தத் துறையில் பணியாற்றுகிற மற்ற பெண்களுக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்கும்’’ என்று அவள் விகடனின் நோக்கத்தைத் தன் பேச்சில் அழகாக எடுத்துரைத்துவிட்டார்.

ஆம்... அடுத்த அவள் விகடன் விருதினைப் பெற தயாராகுங்கள் பெண்களே!