“பொண்ணுங்களுக்கு உடம்புதான் உலகமா, அதத்தாண்டி எதையுமே யோசிக்கக்கூடாதா?”-அயலி அபியின் ஆனந்தக்கண்ணீர்!

கெளதம் மேனன் சார், சேது மாமா, துல்கர் சல்மான் அண்ணா தொடங்கி பெரிய டைரக்டர்ஸ், புரொடியூஸர்ஸ், கேமராமேன்னு பலரும் ‘அயலி’ பார்த்துட்டு என்னைப் பாராட்டறாங்க
‘அயலி’... கடந்த சில வாரங்களாக பெண்கள் உலகின் பேசுபொருளாகியிருக்கிறாள். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸான ‘அயலி’ பெண் கல்வி, தீட்டு என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் அநீதி என பல விஷயங்களைப் பேசுகிறது. படத்தின் ஒவ்வொரு கேரக்டருமே கவனம் ஈர்த்தாலும், தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா கூடுதலாக கவனிக்க வைக் கிறார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.டெக், டேட்டா சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறார் அபி நட்சத்திரா. ‘அயலி’ ரிலீசாகி சில வாரங் களைக் கடந்துவிட்ட நிலையிலும் ஓயாத அழைப்புகள், வாழ்த்துகள், பாராட்டுகள் என பிசியாக இருக்கிறார் அபி. அத்தனைக்கும் இடையில் நமக்கும் நேரம் ஒதுக்கினார்.
“நான் கிளாசிகல் டான்ஸர். டான்ஸ் மூலமாதான் எனக்கு விளம்பரங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அது மூலமா ‘ரஜினி முருகன்’ படத்துல நடிச்சேன். எங்கப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்கிட்ட இணை இயக்குநரா இருந்தவர். அப்புறம் அவர் பிசினஸ் பக்கம் வந்துட்டாரு. சினிமாவுல அப்பா விட்டதை நான் பண்றதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம்” என்பவர் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகின்றனவாம்.
“ `மூக்குத்தி அம்மன்' படத்தோட இணை இயக்குநர் ஆண்ட்ரூஸ் அங்கிள் ‘அயலி’ பத்தி எனக்கு சொன்னார். போட்டோஷூட் பண்ணபோதுதான் எனக்கு தமிழ்ச்செல்வி கேரக்டர் பத்தி சொல்லி, அதை நான்தான் பண்றேன்னும் சொன்னார். தமிழ்ச்செல்வி கேரக்டர் சேலன்ஜிங்கா இருந்தது. படத்துல மத்த கேரக்டர்களுக்கு டல் மேக்கப் இருக்கும். எனக்கு மேக்கப்பே இல்லை. வெயில்ல நிக்க வச்சுதான் அந்த டல் ஸ்கின் டோன் கொண்டு வந்தாங்க. கண்டிப்பா இந்தக் கதையும் என் கேரக்டரும் அதிகமா பேசப்படும்னு தெரியும். ஆனா, இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைக் கும்னு எதிர்பார்க்கல. வசனங்கள்தான் அயலி யோட ப்ளஸ். ஒவ்வொரு வசனத்தையும் நான் ஃபீல் பண்ணி பேசினேன். அயலி ரிலீஸான பிறகு காலேஜ் போனபோது எல்லாரும் வந்து என்கூட செல்ஃபி எடுத்துகிட்டாங்க” சிலிர்ப் போடு சொல்கிறார் அபி.

‘அயலி’ வெப் தொடரின் இறுதி எபிசோடின் ஒரு காட்சியில் வில்லன் கேரக்டர், தமிழ்ச் செல்விக்கு கட்டாயத் தாலி கட்டுவார். அடுத்த நொடியே அதைக் கழற்றி வீசுவார் தமிழ்ச்செல்வி. சமூக வலைதளங்களில் பெரி தும் பேசப்பட்ட இந்தக் காட்சி குறித்தும் தமிழ்ச்செல்வியின் மாதவிடாய் காட்சிகள் குறித்தும் சொல்ல அபிக்கு சில விஷயங்கள் இருக்கின்றன.
“அந்த சீன் பத்தி முதல்ல டைரக்டர் சொன்னபோது ஒரு மாதிரி இருந்தது. தாலி கட்டியே ஆகணுமானு தோனுச்சு. இந்த சீன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு டைரக்டர் சொன்னதால சம்மதிச்சேன். அவர் சொன்ன மாதிரியே, அதுக்கு செம ரெஸ்பான்ஸ். பீரியட்ஸ் தொடர்பான சீன்ஸ் பண்ணபோதும் ஒரு மாதிரி கெத்தா ஃபீல் பண்ணினேன். ஒவ் வொரு வசனத்தையும் என்ஜாய் பண்ணிப் பேசினேன். குறிப்பா, ‘வேலை வெட்டி இல்லா தவன்தான் அடுத்தவன் முதுக எட்டிப் பார்ப்பான், முதுகுக்கு பின்னாடியே பார்த்துட்டு இருந்தா முன்னாடி போக முடியாது. பொண்ணுங்களுக்கு உடம்புதான் உலகமா, அதத் தாண்டி எதையுமே யோசிக்கக் கூடாதா...’ - இந்த டயலாக் எனக்கு ஃபேவரைட். கதைப்படி அப்பா கேரக்டர் என்னை அடிக்கிற மாதிரி ஒரு சீன் வரும். பயங்கர எமோஷனால அந்த சீனை சிங்கிள் டேக்ல எடுத்தாங்க. ஸ்கிரீன்ல பார்த்தப்போ அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு...’’ அபியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்
‘தர்மதுரை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘கைதி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘நவரசா’ உட்பட பலவற்றில் நடித்திருக்கிறார் அபி. ஒவ்வொரு படமும் அவருக்கு ஓர் அனுபவத்தைத் தந்திருக்கிறது.
“தர்மதுரையில நடிச்சதுலேருந்து சேது மாமா (விஜய் சேதுபதி) எங்க ஃபேமிலி ஃபிரெண்டாவே ஆயிட்டார். ‘கைதி’ ரிலீஸுக்குப் பிறகு ‘நீ கைதில நடிச்ச பொண்ணுதானே’ன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. ‘மூக்குத்தி அம்மன்’ படம் முழுக்கவே செம ஃபன்னா போச்சு. ‘நெஞ்சுக்கு நீதி’யில பெண் கல்வி பத்தி பேசற கேரக்டர். இப்போ ‘அயலி’ லயும் அதே மாதிரி ஒரு கேரக்டர். ரொம்ப ஹேப்பியா இருக்கு. அடுத்து ‘பீட்ஸா 3’ல முக்கியமான கேரக்டர் பண்றேன். பெண்கள் தொடர்பான இன்னொரு புராஜெக்ட்டுலயும் நடிக் கிறேன்...’’ சிலாகிப்பவருக்கு எதிர்காலத் திட்டங்கள் என பெரிதாக எதுவும் இல்லையாம்.
“கெளதம் மேனன் சார், சேது மாமா, துல்கர் சல்மான் அண்ணா தொடங்கி பெரிய டைரக்டர்ஸ், புரொடியூஸர்ஸ், கேமராமேன்னு பலரும் ‘அயலி’ பார்த்துட்டு என்னைப் பாராட்டறாங்க. அது எதையும் தலையில ஏத்திக்காம, ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் நடிப்புனு இருக்கேன். பெருசா ப்ளானெல்லாம் வெச்சுக்காம, இந்த நொடியை என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்’’ - கள்ளமில்லா சிரிப்பில் கொள்ளை கொள்கிறார் அபி.