சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஆலியாவுக்கு தமிழ்ல ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா?”

பிரம்மாஸ்திரம் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரம்மாஸ்திரம் படத்தில்

சினிமாங்கறதே ஒரு பெரிய திரையில் நமக்குக் கிடைக்கிற அனுபவம்தான். எனக்கும் அப்படியானதொரு ஃபேன்டஸி, அட்வென்சர் படத்தை எடுக்க ஆசை.

இந்த செப்டம்பர் மாதம், இரண்டு பிரமாண்டங்கள் இந்தியத் திரையுலகில் வெளியாகவிருக்கின்றன. இரண்டுமே பேன் இந்திய சினிமாக்கள். மிகப்பெரிய பட்ஜெட் செலவில் பொன்னியின் செல்வன், பிரம்மாஸ்திரம் என இரு படங்களின் முதல் பாகமும் ஒரே மாதத்தில் திரைக்கு வர இருக்கின்றன. இந்தியப் புராணங்களை அடிப்படையாக வைத்து உருவான பிரம்மாஸ்திரம் படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி, நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட்டிடம் பேசியதில் இருந்து,

“ஆலியாவுக்கு தமிழ்ல ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா?”

‘‘ஐந்து தலைமுறையாக சினிமாவில் கோலோச்சும் கபூர் குடும்பத்தின் தற்போதைய சூப்பர் ஸ்டார் நீங்கள் தான். ரன்பீர் கபூர் படம் என்றாலே இந்தியா முழுக்க வரவேற்பு இருக்கிறது. ஒரு நடிகராக நீங்கள் உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஒரு சின்ன கதை சொல்றேன். தாத்தா ராஜ் கபூர் ஒவ்வொரு படம் முடிச்சுட்டும், ‘எப்படி நடிச்சிருக்கேன்’னு அவரோட அப்பா ப்ரித்விராஜ் கபூர்கிட்ட கேட்பாராம். என் தாத்தா ராஜ் கபூருக்கு, ப்ரித்விராஜ் கபூர் சொன்ன கதை இது. ஒரு ஊர்ல, கயித்துல நடந்து காசு சம்பாதிக்கற குடும்பம் ஒண்ணு இருந்துச்சாம். ஒவ்வொரு முறை கயித்துல நடந்ததும், ஊரே கைத்தட்டல்ல ஆர்ப்பரிக்குமாம். நல்லா பண்ணினேன்தானன்னு கயித்துல நடந்த மகன் கேட்டதும், அவன் அப்பா, ‘நீ இன்னும் நல்லா பண்ணலாம்’னு சொல்வாராம். இப்படியே ஒவ்வொரு முறையும் அப்பா சொல்லியிருக்கார். ஊர் முழுக்க அவங்க புகழ் பரவி, பல இடங்கள்ல கூட்டம் போட்டுக் காசு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும், அவங்க அப்பா இதையேதான் சொல்லியிருக்கார். ஒருநாள் மகன் கடுப்பாகி, ‘இன்னும் என்னதான் எதிர்பார்க்கறீங்க’ன்னு கேட்டுட்டார். அதுக்கு அப்பா, ‘இல்ல, இது போதும்னு நீ நினைச்சுட்டா, தேங்கிப்போயிடுவ. அதன் மேல வைக்கற கவனம் குறைஞ்சுடும்’னு சொன்னாராம். இன்னிக்கு நான் ஒரு ஸ்டாரா இருக்கலாம். ஆலியாபட் ஒரு ஸ்டாரா இருக்கலாம். ஆனா, நம்ம பெஸ்ட்ட கொடுத்துட்டோம்னு நினைக்க ஆரம்பிச்சுட்டா, தேங்கிப்போயிடுவோம். சினிமாவோ, வாழ்க்கையோ, அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கணும். என்னோட குடும்பமும், ஆலியாவும் எனக்கு மிகப்பெரிய ஊன்றுகோலா பல சமயங்கள்ல இருந்திருக்காங்க. நான்ங்கறதே இவங்க எல்லாம் சேர்ந்ததுதான். பிரம்மாஸ்திரம் படத்தை அயன் எனக்கு முதல்ல சொன்னப்ப, அதோட தலைப்பு டிராகன். அதுல இருந்து இப்பவரை அது நிறைய உருமாறியிருக்கு. நான், ஆலியா, அமிதாப் பச்சன், நாகார்ஜுனான்னு பெரிய டீம் நடிச்சிருக்கோம். தீயைத் தொட்டாலும் ஒண்ணும் ஆகாதுங்கற சக்தி இருக்குற நபரா நான் நடிச்சிருக்கேன். வாழ்க்கையை லயிச்சு வாழ்ற ஒரு கதாபாத்திரம். இன்னும் நிறைய இருக்கு. ஆனா, இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்.’’

“ஆலியாவுக்கு தமிழ்ல ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா?”

‘‘ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து, மினிமம் பட்ஜெட்டில் இரண்டு படங்கள் எடுத்தவர் நீங்கள். இவ்வளவு பெரிய படம் எப்படி அமைந்தது அயன்?’’

‘‘சினிமாங்கறதே ஒரு பெரிய திரையில் நமக்குக் கிடைக்கிற அனுபவம்தான். எனக்கும் அப்படியானதொரு ஃபேன்டஸி, அட்வென்சர் படத்தை எடுக்க ஆசை. இதற்கான பட்ஜெட்டையும் தாண்டி, இப்படி ஒரு படம் என்னால் எடுக்க முடியுமாங்கற கேள்வியும் இருந்துச்சு. என் இரண்டாம் படமான ‘ஏ ஜவானி ஹே தீவானி’ சமயத்திலேயே இந்தக் கதையை எடுக்க முடிவு செய்துட்டேன். மூன்று பாகங்கள் கொண்ட களம், முதல் பாகத்தில் ரன்பீர், ஆலியாதான் ஜோடி என்பது வரை தீர்மானித்திருந்தேன். ஹாரி பாட்டர் படங்களின் தீவிர விசிறியாக சிறு வயதில் இருந்திருக்கேன். இந்தியப் புராணங்களைக் கொண்டு அப்படியானதொரு கதையை எடுக்க யோசிச்சு எழுதினதுதான் பிரம்மாஸ்திரம்.’’

“ஆலியாவுக்கு தமிழ்ல ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா?”

‘‘இதயங்களைக் கொள்ளை கொள்ளும் நாயகனாக சாவரியாவில் அறிமுகமானதில் இருந்து பல தூரங்கள் சென்றுவிட்டார். ரன்பீரின் வளர்ச்சியை ஒரு நெருங்கிய நண்பராக எப்படிப் பார்க்கிறீர்கள் அயன்?’’

‘‘ரன்பீரின் எல்லா ஏற்ற இறக்கங்களையும் உடனிருந்து கவனிச்சிருக்கேன். ஒரு சமயம் ரன்பீரின் சில படங்கள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. ஆனால், அதைப்பற்றி எல்லாம் ரன்பீர் பெரிதாகக் கவலைப்படலை. ரன்பீர் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. சஞ்சய் தத் பயோபிக் படத்தின் முதல் காட்சியில் ரன்பீரைப் பார்த்தபோது அவ்வளவு பெருமையாக இருந்தது.

Good is not good enough என்பார்கள். அதுதான் ரன்பீருக்கு நான் எப்போதும் சொல்வது. இன்னும் இன்னும் சிறப்பான பெர்பாமன்ஸ்களை ரன்பீர் தர முடியும். முதல் படத்தில் இருந்தே ஆலியாவின் மேல் எங்கள் எல்லோருக்கும் ஒரு ஆச்சர்யம் இருந்தது. அவருக்குள் ஏதோவொரு அபூர்வ திறமை இருக்கிறது என்பதை நாங்கள் அனைவருமே யூகித்திருந்தோம். ஆலியாவின் இரண்டாம் படமான ஹைவேயைப் பார்த்துவிட்டு வந்து, ‘தான் பார்த்த சிறந்த ஐந்து பெர்பாமன்ஸ்களில் இதுவும் ஒன்று’ என ரன்பீர் என்னிடம் தெரிவித்தார்.’’

“ஆலியாவுக்கு தமிழ்ல ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா?”

‘‘தெலுங்கு வரைக்கும் வந்துட்டீங்க, எப்போ தமிழ்ப் படம் பண்ணப் போறீங்க ஆலியா?’’

‘‘எனக்கான வாய்ப்புகள் எல்லாமே அதுவா அமைஞ்சதுதான். பிரம்மாஸ்திரம் வாய்ப்புகூட எனக்கு 2012-ல வந்துச்சு. அப்ப நான் ஸ்டார்கூட கிடையாது. ‘இப்படி ஒரு ரோல் இருக்கு, நீதான் பண்ணணும்’னு அயன் சொல்வார். RRR படத்துக்காக தெலுங்கு கத்துக்கவே எனக்கு ஒன்றரை வருஷம் ஆச்சு. தமிழ் கத்துக்கறது இன்னுமே கஷ்டம்னு சொல்றாங்க. யாராவது வாய்ப்பு கொடுத்தா நிச்சயம் தமிழ்லயும் நடிப்பேன். தமிழ்ப்பொண்ணா இந்திப் படத்துல (2 States) நடிச்ச அனுபவம் இருக்குற ஆலியாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க மாட்டீங்களா என்ன?’’ என ஆலியா செல்லமாகக் கேட்க, ‘‘பிரம்மாஸ்திரம்னு படத்தையே தமிழ்லயும்தான் ரிலீஸ் பண்றோம். எல்லா மொழிலயும் படம் வருது’’ என படத்தை புரொமோட் செய்ய ஆரம்பித்துவிட்டார் அயன்.

‘‘எந்த மொழிப் படம்னு கிடையாது. ஒரு படம் ரிலீஸானாலே பார்த்துவிடுவேன். நாங்க எல்லோருமே ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தோம். சூர்யாவோட சூரரைப் போற்று. சூர்யாவோட கண்கள் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. ‘கொரோனா காலத்துல என்ன பண்ணீங்க, லாக்டௌன்ல எப்படி காலம் கழிச்சீங்க’ன்னு நிறைய கேள்விகள எதிர்கொள்றேன். நாங்க சினிமா பார்க்கலாம், கேம்ஸ் விளையாடலாம். வசதி இருக்கு. ஆனா, உலகத்துக்கு அது ரொம்பவே கஷ்டமானதொரு காலம். நாங்க எல்லாம் ஜாலியா வீட்டுல உட்கார்ந்து படம் பார்த்தோம்னு சொல்றதுகூட ஒருவகைல தப்பு தான்’’ ரன்பீரின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு பக்குவம்.