
இருவேறு கதைகளாகக் காட்டிவிட்டு அவை ஒன்றிணையும் இடத்தில், முக்கியமான மூன்றாவது கதை தொடங்குவது சுவாரஸ்யம்தான் என்றாலும்...
திருடுவதற்காக அஞ்சாமல் படுகொலைகள் செய்யும் கொலைகாரனின் பாதையில் புத்திசாலி விஞ்ஞானி ஒருவன் குறுக்கே வந்தால் என்னவாகும் என்பதே இந்த ‘ஐங்கரன்.’
புதிய கண்டுபிடிப்புகளைச் சாத்தியப்படுத்தினாலும் அதற்கான காப்புரிமைகள் பெற முடியாமல் தவிக்கிறார் இளம் விஞ்ஞானி ஜி.வி.பிரகாஷ். ஊரில் தவறு செய்யும் தொழிலதிபரைத் தன் டெக்னாலஜி மூளை மூலம் அம்பலப்படுத்திச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அங்கிருந்து தப்பித்து, விதிவசத்தால் கொள்ளைக்காரக் கூட்டம் ஒன்றின் பாதையில் குறுக்கே போகிறார். தமிழகத்தின் முக்கிய நகரங்களின் நகைக்கடைகளில் திருடிவிட்டுத் தப்பிவரும் அந்தக் கூட்டம் தாங்கள் கொள்ளையடித்த நகைகளைத் தெரியாமல் ஒரு போர்வெல் குழியில் போட்டுவிட, அதை மீட்க அவர்கள் போடும் குரூரத் திட்டமும், அதை விஞ்ஞானி ஜி.வி.பிரகாஷ் ‘ஐங்கரனாக’ நின்று சமாளிக்கும் பரபர நிகழ்வுகளுமே படத்தின் கதை.
இளம் விஞ்ஞானி மதியாக ஜி.வி.பிரகாஷ். நடிகராகச் சற்றே மெருகேறியிருப்பது அந்த க்ளைமாக்ஸ் பிரஸ்மீட் காட்சியில் புலப்படுகிறது. காளி வெங்கட், சரவண சுப்பையா, அருள் தாஸ், ஹரீஷ் பேரடி, அழகம் பெருமாள் எனப் படம் முழுக்கவே துணைநடிகர்கள் பட்டாளம். இவர்களுக்கிடையில் சம்பிரதாயத்துக்கு மட்டும் வந்துபோகிறார் நாயகி மகிமா நம்பியார். ஜி.வி-யின் அப்பாவாக, எப்படியேனும் இன்ஸ்பெக்டர் ஆகிவிடவேண்டுமென்று போராடும் நேர்மையான காவல் அதிகாரியாக ஆடுகளம் நரேனின் பாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

‘ஈட்டி’ இயக்குநர் ரவியரசு, இதில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். நகைக்கடைக் காவலாளிகள் இரவு நேர ரவுண்ட்ஸில் சிக்னல் கொடுத்துக்கொள்ள ஆடும் அந்த விளையாட்டு, ஹேக்கிங்கை நம்பும்படியாகக் காட்சிப்படுத்த எடுத்துக்கொண்ட மெனக்கெடல், ஜி.வி.பிரகாஷ் டெக்னிக்கலாகச் செய்யும் சாகசங்கள், வில்லன் இருக்கும் இடத்தை அவர் அறிந்துகொள்ளும் அந்த ஷாட் என நிறைய ஒரிஜினலான விஷயங்களைத் தன் திரைக்கதையில் திறம்படக் கோத்திருக்கிறார்.
“வாழ்க்கையில் உருப்படியா ஏதாவது பண்ணு, இல்லன்னா உருப்படவாது ஏதாவது பண்ணு”, “நம்ம கன்ட்ரோல்ல இருக்கற ஏரியாவுல க்ரைம் நடக்கக்கூடாது. அப்படி நடந்தா அது நம்ம கன்ட்ரோல்லதான் நடக்கணும்” என்பதுபோன்ற பன்ச் வசனங்களைப் படம் நெடுக அள்ளித் தெளித்திருக்கிறார்கள் ஆனந்த குமரேசன் மற்றும் இயக்குநர் ரவியரசு. சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும், ராஜா முகமதின் படத்தொகுப்பும் பரபர ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்கு ஏற்ற டெம்போவைக் கொடுத்திருக்கின்றன.
இருவேறு கதைகளாகக் காட்டிவிட்டு அவை ஒன்றிணையும் இடத்தில், முக்கியமான மூன்றாவது கதை தொடங்குவது சுவாரஸ்யம்தான் என்றாலும், இது படம் மூன்று தனித்தனி எபிசோடுகளாகப் பிரிந்திருக்கும் உணர்வையே தருகிறது. இரண்டாம் பாதியில் அனைத்துக் கதாபாத்திரங்களும் ஒன்றுகூடும் இடம் மற்றும் க்ளைமாக்ஸ் போன்றவற்றில் சில லாஜிக் மீறல்களும் இருப்பது படம் அத்தனை நேரம் சம்பாதித்த நம்பகத்தன்மையைச் சிதைத்து விடுகிறது.
புதிய கதைக் களத்துடன், புதிய ஐடியாக்களையும் கொண்டு வந்திருக்கும் இந்த ‘ஐங்கரன்’ குறைகளை மறந்து கொண்டாடப்பட வேண்டியவன்தான்.