மொழிப் புரியாத ஊரில் திக்கற்று நிற்கும் குடும்பத்துக்கு ஆதரவாக மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தும் படமே இந்த `அயோத்தி'.
அயோத்தியில் வாழும் யஷ்பால் சர்மா தீபாவளியன்று புனித யாத்திரையாக தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் வருகிறார். மதுரை டு ராமேஸ்வரம் டாக்ஸி பயணத்தின்போது யஷ்பால் சர்மாவின் பொறுப்பில்லாத தனத்தால் பெரும் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் அவரின் மனைவி இறந்துவிட, மொழிப் புரியாத இடத்தில் திக்கற்று நிற்கிறது குடும்பம். மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு உதவ முன்வருகிறார் சசிகுமார். தன் நண்பர்களின் ஆதரவுடன் சசிகுமார் அந்தக் குடும்பத்தைச் சிக்கலிலிருந்து மீட்டாரா, பொது மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சட்டம், சமயத்தில் அவர்களை எப்படியெல்லாம் நெருக்குகிறது, சுழற்றியடிக்கிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி.

அடிதடி சண்டை, நட்பு மற்றும் சொந்தங்களின் துரோகம் போன்ற தன் வழக்கமான பார்முலாவிலிருந்து விலகி, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யும் நடிகனாகத் தன்னை முன்னிறுத்தியிருக்கிறார் சசிகுமார். ஹீரோயிஸம் காட்டுவதற்கான வெளியிருந்தும் அந்தப் பக்கம் செல்லாமல், யதார்த்தமாகவே அவரின் பாத்திரம் பயணித்திருப்பது சிறப்பு. கதையின் நாயகியாக வரும் பிரீத்தி அஸ்ரானி தன் நடிப்பால் அசரடிக்கிறார். 'வென்டிலேட்டருடன் கூடிய ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியுமா' என்று கலங்கியவாறே சசிகுமாரிடம் அவர் கேட்கும் காட்சி ஒரு சோற்றுப் பதம். இறுதியில் அதுவரை தன்னை ஒடுக்கியே வைக்கும் தந்தையின் பிடிவாத குணம், ஆண் என்னும் திமிர் போன்றவற்றை எதிர்க்கும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். பிரீத்தி, தமிழ் சினிமாவுக்கு நல்வரவு!
சற்றே வில்லத்தனம் கலந்த பாத்திரத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா. பிறரைக் கீழாக எண்ணும் மதவாதியாக, ஆண் என்னும் திமிரால் மனைவி, மக்களை அடக்கியே வைத்திருக்கும் கணவனாக மிரட்டுகிறார். மனைவியின் இறப்புக்குக் கொஞ்சம்கூட கண்ணீர் சிந்தாமல், அப்போதும் தன் மத வழக்கத்தைத் தூக்கிப்பிடிக்கும் கொடூரனாக நம் வெறுப்பைச் சிறப்பாகச் சம்பாதித்துக் கொள்கிறார். புகழ் காமெடி ஏரியா பக்கம் ஒதுங்காமல் ஒரு துணை நடிகராகத் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். யஷ்பால் சர்மாவின் மனைவியாக வரும் அஞ்சு அஸ்ரானி, மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் அத்வைத், போஸ் வெங்கட் என அனைவருமே மிகை நடிப்பில்லாமல் படத்துக்குத் தேவையானவற்றைச் செய்திருக்கின்றனர்.

'அயோத்தி' என்று டைட்டில் இருந்தாலும், மதவாதம் உள்ளிட்ட பிரச்னைகளை ஆழமாகப் பேசுவதற்கான இடமிருந்தும், அந்தப் பக்கம் பெரிதாகச் செல்லாமல், மனிதம் பற்றிய ஒரு எமோஷனல் கதையாக மட்டுமே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். அதனுடன் சட்டச் சிக்கல்கள், அதனால் அவதியுறும் எளிய மக்கள், சிக்கலான விதிமுறைகள் இருந்தாலும் அதையும் கடந்து துளிர்க்கும் மனிதம் என உணர்வுபூர்வமான காட்சிகள் படம் நெடுகவே நிரம்பிக் கிடக்கின்றன. சில இடங்களில் நாடகத்தனமும் சினிமாத்தனமும் வெளிப்பட்டாலும் பரபரப்பான திரைக்கதை அந்தக் குறையை மறக்கடிக்கச் செய்திருக்கிறது.
என்.ஆர்.ரகுநந்தனின் 'காற்றோடு பட்டம்போலே' பாடல் நெஞ்சைக் கனமாக்குகிறது. பின்னணி இசை ரீப்பீட் மோடில் செல்வதைச் சற்றே குறைத்திருக்கலாம். மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா கதையை மட்டுமே பிரதானமாக வைத்து அதற்குத் தேவையானவற்றைச் செய்திருக்கிறது. சான் லோகேஷின் படத்தொகுப்பு இரண்டு மணிநேரப் படத்தை அதன் பரபரப்பு குறையாமல் தொகுத்திருக்கிறது.

அதுவரை கதைக்கு வெளியே செல்லாத காட்சிகளால் படம் நிரம்பியிருக்க, இரண்டாம் பாதியில் வரும் காவல்நிலைய காதல் பாடல் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. கல்லூரி மாணவியான நாயகி பிரீத்தி அஸ்ரானி, மொழிப் பிரச்னையால் தவிக்கும்போது ஒருமுறைகூட ஆங்கிலம் பேச முற்படாதது ஏன் எனத் தெரியவில்லை. க்ளைமாக்ஸில் வரும் ஏர்போர்ட் காட்சிகள் உருக்கமாகவே இருந்தாலும் 'இது சாத்தியமா' என்ற கேள்வியையும் எழுப்பவே செய்கிறது.
சொல்ல வந்த கருத்துக்காகவும், பரபரப்பான திரைக்கதைக்காகவும், நடிகர்களின் சிறப்பான நடிப்புக்காகவும் இந்த `அயோத்தி'யை நிச்சயம் தரிசிக்கலாம்.